எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, May 24, 2016

தை பூரி – ஸ்வீட் எடு கொண்டாடு – மதுவும் மாதுவும்

முகப் புத்தகத்தில் நான் – 7

தை பூரி – 18 மே 2016

படம்: இணையத்திலிருந்து.....

திருவரங்கம் - தெற்குச் சித்திரை வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தேன். அங்கே சில மாதங்கள் முன்னர் தான் ஒரு புதிய உணவகம் திறந்திருக்கிறார்கள். தென்னந்திய உணவு வகைகள் தவிர வட இந்திய உணவுகளும் கிடைக்கும் போல. வாசலில் ஒரு பெரிய பதாகை.... அதிலிருந்த ஒரு உணவின் பெயர் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சி.... அப்படி என்ன பெயர்?

தை பூரி......

சித்திரை பூரி, வைகாசி பூரி என ஏதாவது பூரி வகை இருக்கிறதோ என பார்வையை ஓட விட்டேன்.... இல்லை. ஆனால் பானி பூரி என இருந்ததைப் பார்த்ததும் தான் அவர்கள் தை பூரிஎன எழுதி இருப்பது என்ன என்பது புரிந்தது.....

அது என்ன உணவு என உங்களுக்குப் புரிகிறதா?
..
..
..
..
..
..
..
..
..
..
அது Dhahi Puri அதாவது தயிர் பூரி. ஹிந்தியில் தயிரை [Dh]தஹி என அழைப்பார்கள். [Dh]தஹி பூரியைத் தான் தமிழில் தை பூரி என எழுதி இருக்கிறார்கள்.......:)

நல்ல வேளை சித்திரை பூரி இருக்கிறதா என அங்கே சென்று கேட்காமலிருந்தேன்....

ஸ்வீட் எடு......... கொண்டாடு........ – 19 மே 2016சமீபத்தில் ஒரு வலைப்பதிவில் திருச்சியில் இருக்கும் ஒரு மிகப்பழமையான கடை பற்றி படித்தேன்.  அந்த பழமையான கடை – மத்தியப் பேருந்து நிலையம் அருகே இருக்கிறது. அக்கடைக்கு நான் பலமுறை சென்றிருக்கும் என்.எஸ்.பி. சாலையிலும் ஒரு கிளை இருக்கிறது.  திருச்சியில் பல இடங்களுக்கும் சுற்றி இருக்கிறேன் என்றாலும் இக்கடை பற்றி நான் அறிந்ததில்லை.  நண்பரின் வலைப்பதிவில் பார்த்தபிறகு தான் அக்கடைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

நேற்று என்.எஸ்.பி. சாலை செல்ல வேண்டிய வேலை இருந்தது. கடை பற்றிய நினைவு வரவும், அக்கடையைப் பார்க்கவும் சரியாக இருந்தது. உள்ளே நுழைந்துவிட்டேன்.  கடை கடை என சொல்கிறேனே, என்ன கடை என்று இதுவரை சொல்லவில்லையே..... கடல் பயணங்கள் வலைப்பூவில் எழுதும் நண்பர் சுரேஷ் குமார் அவர்கள் சொன்ன “மயில் மார்க் மிட்டாய் கடைதான் அது. 1953-ஆம் வருடம் திறக்கப்பட்ட கடை அது. 

அந்த கடையில் பலவிதமான இனிப்பு மற்றும் கார வகைகள் கிடைக்கிறது என்றாலும், நேற்று நான் வாங்கியது – Kaju Maadhulai, Mango Burfi, Ellu Murukku, Bangalore Murukku, Karasev, Maida Biscuit – அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சம் – விலையும் அதிகமில்லை....... இங்கே இணைத்திருக்கும் படங்கள் – காஜு மாதுளை, மாங்கோ பர்ஃபி மற்றும் எள்ளு முறுக்கு!  Bangalore Murukku –அரிசி மாவு மற்றும் ராகி மாவு, பச்சை மிளகாய் சேர்த்து செய்வார்களாம். 

ஸ்வீட் எடு....  கொண்டாடு...... 

தலைப்பைப் பார்த்து தேர்தல் முடிவுகளுக்கும் இப்பதிவுக்கும் சம்பந்தம் இருக்கிறது என தப்பான முடிவு எடுக்க வேண்டாம்.... :)  நமக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்.....
  
மதுவும் மாதுவும்..... 22 மே 2016

படம்: இணையத்திலிருந்து.....

நேற்றிரவு திருவரங்கம் பேருந்து நிறுத்தத்தின் அருகே காத்திருந்தேன். அங்கே ஒரு பூக்கடை. பூ விற்றுக் கொண்டிருந்தார் ஒரு பெண். அப்போது அவர் அருகே ஒரு டி.வி.எஸ். 50 வந்து நின்றது – வண்டியில் வந்தது அப்பெண்ணின் கணவர் போலும்.  வண்டியில் முன்னால் வைத்திருந்த சாரதாஸ் கட்டைப் பையிலிருந்து சாப்பாட்டுப் பொட்டலம் ஒன்றை எடுத்து அப்பெண்ணிடம் கொடுத்தார்.  வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தவும், “டப்என்ற ஒரு சத்தத்தோடு கட்டைப் பை கீழே விழவும் சரியாக இருந்தது..... பூக்கடையில் இருக்கும் பூக்களின் வாசத்தினை மீறி மதுவின் வீச்சம் அடித்தது... 

அவசரம் அவசரமாக பூக்கடையில் இருந்த பக்கெட்டிலிருந்து தண்ணீர் எடுத்து ஓடி வரும் மதுவின் மீது ஊற்றி வாசம் நீக்கப் போராடினார் அந்தக் குடிமகன். முகம் மது வீணாகி விட்டதே என்ற வாட்டத்திலும் கோபத்திலும்....  மனைவியின் அருகே அமர்ந்து கொண்டு அவரை ஏக வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தார் – ஏற்கனவே ஒன்றிரண்டு ரவுண்டு உள்ளே சென்றிருந்தது புரிந்தது.  மனைவியிடம் உன்னால் தான் இப்படி கீழே விழுந்து கொட்டி விட்டது. எனக்கு நஷ்டம் என்று திட்ட, மனைவியோ, நீ பையை ஒழுங்கா வைக்கவில்லை, அது உன் தப்பு... உடம்பு கெட்டுப்போவுதே அது தெரியலையே உனக்கு என திட்டிக் கொண்டிருந்தார்.

மாற்றி மாற்றி இருவரும் திட்டிக் கொண்டார்கள். அவர்கள் திட்டிக்கொண்டதை இங்கே எழுத முடியாது..... அத்தனையும் பீப் சவுண்டு தான்!  மனைவி பூ விற்று வைத்திருந்த பணத்திலிருந்து மீண்டும் கொஞ்சம் காசு எடுத்துக் கொண்டு வண்டியில் பறந்தார். அவர் போனதும், பூ விற்றுக் கொண்டிருந்த பெண்மணி, “பாருங்க சார், அவன் தப்புக்கு என்ன என்னமா திட்டறான்.... அவன் உடம்பு கெடுதேன்னு சொன்னா எங்கே கேட்கிறான்.... சம்பாதிக்கிற காசும் வீணா போகுதுஎன்று என்னிடம் புலம்பினார்.  சொல்வதறியாது நானும் தலையை ஆட்டி வைத்தேன்.

சிறிது நேரம் கழித்து குடிமகன் திரும்பி வந்தார். இந்த முறை கட்டைப்பை சர்வ ஜாக்கிரதையாக முன்பக்கத்தில் மாட்டப் பட்டிருந்தது. அதற்குள் அந்தப் பெண்மணி மீதமிருந்த பூக்களை நாளை விற்பதற்காக எடுத்து பைக்குள் வைத்து கடையைக் கட்டிக் கொண்டிருந்தார்.  குடிமகன் விடுவிடுவென, அவ்விடத்தைச் சுத்தம் செய்ய, சிறிது நேரத்தில் கணவன், மனைவி இருவரும் டி.வி.எஸ்-ஸில் ஜோடியாக புறப்பட்டனர். நானும் பேருந்தில் புறப்பட்டேன்......

மதுவரக்கன் இன்னும் எத்தனை அழிவுகளைத் தரப் போகிறானோ.....

என்ன நண்பர்களே, என்னுடைய சமீபத்திய முகப்புத்தக இற்றைகளை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.....

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து.....

26 comments:

 1. ஸ்நாக்ஸ் பதிவு.

  உங்கள் வருத்தத்தைப் பார்த்து டாஸ்மாக் நேரத்தைக் குறைத்து விட்டாரே !!!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. மதுக் கொடுமை. வேதனை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 3. நேரத்தை குறைத்து விட்டார்கள் அப்படியே முற்றிலும் ஆச்சுன்னா பரவாயில்லை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   Delete
 4. மது ஆலைகளை எப்போது மூடுவார்களோ :)

  ReplyDelete
  Replies
  1. மது ஆலைகள் மூடப்பட்டால் தான் நல்லது. அது நடக்கும் எனத் தோன்றவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 5. ஒரு பதிவில் மூன்று நிகழ்வுகள்
  மதுவும் மாதுவும்தான் வேதனை...
  ரசித்தேன் நண்பரே..

  நண்பரே தங்களுக்கு ஒரு
  மின்னஞ்சல் அனுப்பினேன்...
  வந்ததா என்று சொல்லுங்கள்...
  காரணம் நான் அனுப்பிய
  முதல் மின்னஞ்சல் இதுவே....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய் சுனில்கர் ஜோசப் ஜி....

   உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது. பதிலும் அனுப்பி இருக்கிறேன். பாருங்கள்.

   Delete
 6. இனிப்புக்கடை வரையிலும் வழங்கிய செய்திகள் - சரி..

  மது - அதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை..இந்தக் குடிகாரனுக்கு TVS 50 வேறு.. இவனால் சாலையில் எத்தனை பேருக்கு இடையூறு ஏற்படும்?..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 7. தை பூரி - Super
  ஸ்வீட் எடு......... கொண்டாடு - the Super
  மதுவும் மாதுவும் - maha super.
  All the very best for your future blogs
  Vijay

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 8. முதலிரண்டும் முகப்புத்தகத்திலேயே வாசித்தேன்! மதுவரக்கனை இங்குதான் வாசிக்க முடிந்தது. இன்னும் எத்தனை காலங்கள் ஆகுமோ இவர்களை திருத்த?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 9. முகநூலில் படித்துவிட்டேன் இரண்டையும், இன்னும் மயில்மார்க்குக்கு விஜயம் செய்யலை! செய்யணும். :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 10. இடுகையைப் பார்த்த உடனேயே, ஏன் தாஹி (தஹி) பூரி என்று எழுதாமல் தை பூரி என்று எழுதியிருக்கிறார் என்று நினைத்தேன். படித்ததும் புரிந்தது.

  மயில் மார்க் கடையில், பூந்தி ('நாம் பொதுவாகச் சாப்பிடும் குஞ்சாலாடுபோல் உருண்டையாக இருக்காது) வாங்க விட்டுவிட்டீர்களே. அதுதானே அவர்களின் முக்கிய இனிப்பு. நீங்கள் திருச்சிக்கு ரயிலேறும்போது டெல்லியிலிருந்து வாங்கிவந்திருக்கவேண்டிய, வட நாட்டு இனிப்புகளை நம் ஊரில் வாங்கியிருக்கிறீர்களே..

  மதுக்கடைகளை நேரம் குறைப்பதாலோ, எண்ணிக்கை குறைவதாலோ இந்தப் பிரச்சனை தீரும் என்று தோன்றவில்லை. ஒன்றும் அறியாதவர்களுக்கு குடியைப் பழக வாய்ப்புக் கொடுத்தபின்பு எப்படி இந்தப் பிரச்சனையைத் தீர்க்கப்போகிறார்கள்? பரிதாபம்தான்.

  ReplyDelete
  Replies
  1. மயில் மார்க் கடை பூந்தி அங்கே கொஞ்சம் சாப்பிட்டேன் என்றாலும் வாங்கவில்லை. அடுத்த முறை வாங்கிவிடலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லத் தமிழன்.

   Delete


 11. ‘மதுவும் மாதுவும்’ படித்ததும், இந்த அவலம் இன்னும் எவ்வளவு ஆண்டுகள் நடக்க இருக்கிறதோ எண்ணிக்கொண்டேன்.

  முகநூலில் வெளியிட்ட பதிவுகள் அனைத்தும் அருமை. பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 12. இதுக்குத்தான் கண்ணாடி பாட்டில்களை ஒழிக்க வேண்டும் என்பது. கால் கடுக்க கடையில் நின்று வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் மனிதர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   Delete
 13. மனித குலம் மறைந்திடும் வரையிலும் மதுவை ஒழிக்க எந்த அரசாலும் முடியாது. தி.மு.கழகம் இந்த நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்கம் அமைத்திட முடியாமல் போனதற்கு மூல முதல் காரணமே, நாங்கள் ஆட்சியை பிடித்ததும் போடுகின்ற முதல் கையெழுத்து மதுவிலக்கு என்பதுதான், என்று மேடை தோறும் முழங்கிய ஒன்றுதான். இந்தப் பிரச்சினையை அவர்கள் கையில் எடுத்து பேசாமல் இருந்திருந்தால், இன்று ஆட்சி தி.மு.க.வின் கையில். கலைஞர் முதல்வராக அமர்ந்திருப்பார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாலகிருஷ்ணன் ராமசுவாமி. உங்கள் முதல் வருகை மகிழ்ச்சி தந்தது.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....