எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, June 13, 2016

மணிப்பூரிலிருந்து நாகாலாந்து – இரண்டாம் சகோதரி


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 17இம்ஃபால் நகரிலிருந்து Tata Winger வண்டியில் 12 பன்னிரெண்டு பேரோடு எங்கள் பயணம் துவங்கியது என சென்ற பகுதியில் பார்த்தோம்.  எங்கள் அடுத்த இலக்கான நாகாலாந்து மாநில தலைநகர் கொஹிமாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தோம். அந்த வண்டியில் பயணித்த போது பன்னிரெண்டு பேரையும் ஒரு சிறு தீப்பெட்டிக்குள் அடைக்கப்பட்ட உணர்வு.  சின்ன வண்டியை அதி வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தார் வண்டியின் ஓட்டுனர்.  இம்ஃபால் நகரிலிருந்து கொஹிமா வரை எங்கும் நிறுத்தம் கிடையாது.

கிட்டத்தட்ட 140 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும். வழியில் வரும் எந்த ஊர்/சிற்றூர் பேரும் கேள்விப்பட்டதாக நினைவில் இல்லை.  பொதுவாய் எனக்கு ஒரு பழக்கம் – பயணிக்கும் போது பாதையில் வரும் ஊர்களின் பெயரை, பார்த்த சில காட்சிகளை ஒரு குறிப்பாக எனது அலைபேசியில் சேமித்துக் கொண்டே வருவேன். அதுவும், வலைப்பூவில் எழுத ஆரம்பித்த பிறகு, பயணக் கட்டுரைகள் எழுதினால் பயன்படும் என்று சேமித்துக் கொள்வது வழக்கமாகி இருக்கிறது. இந்த தீப்பெட்டிப் பயணத்திலும் குறித்து வைத்துக் கொண்டேன்.

காங்லாடோங்பி, மொட்புங், கைதல்மன்பி, காலாபஹாட், டெய்லி, மகான் குமான், சாங்சாங், குசாமா, விஸ்வேமா, கிக்வேமா என பல வித்தியாசமான பெயர்களை எனது அலைபேசி சேமிப்பிலிருந்து இங்கே பயன்படுதும்போது அவற்றை எழுதி வைத்தது நல்லதாகப் போயிற்று என்று தோன்றுகிறது. சில பெயர்கள் எழுதும்போதே குழப்பம்! நாகாலாந்து நகர் செல்வதற்கு முன்னரே அங்கே அடிக்கடி நடக்கும் சண்டைகள், பழங்குடி மக்களுக்குள் நடக்கும் அடிதடி சண்டைகள், வெட்டு குத்துகள், எதையும் சாப்பிடும் அவர்களது பழக்கம் என ஒரு வித எதிர்மறை விஷயங்கள் மட்டுமே கேட்டிருந்ததால் ஒரு வித பயத்தோடும், எதிர்பார்ப்புகளுடனும் தான் பயணித்தோம்.

செல்லும் வழியில் பார்த்த சிற்பங்கள்......

அங்கே செல்வதற்கு முன்னரே நண்பர் பிரமோத் அங்கே வசிக்கும் ஒரு கேரள நண்பரிடம் பேசி எங்களுக்குத் தங்குமிடங்களை ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.  அந்த கேரள நண்பர் நாகாலாந்து அரசில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர். மாலை ஏழு மணிக்குள் அங்கே வந்து சேர்ந்து விடுவது நல்லது என்பதை இரண்டு மூன்று முறை சொல்லி இருந்தார். இரவில் பல வித சண்டைகள் திடீர் திடீர் என வெடிக்கும், வெளியாட்கள் அந்த இரவில் நடமாடுவது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல என்றும் சொல்லி இருந்தார்.

நாங்கள் மணிப்பூர் மாநிலத்தின் இம்ஃபால் நகரிலிருந்து புறப்பட்டபோதே நான்கு மணிக்கு மேல் ஆகிவிட்டது! 140 கிலோமீட்டர் பயணித்து ஏழு மணிக்குள் சேர்ந்து விடுவோமா என்ற ஒரு பதட்டத்துடன் பயணித்துக் கொண்டிருந்தோம். வண்டியின் ஓட்டுனர் வேகமாக ஓட்டினாலும், பயணம் செய்த பாதை முழுவதும் பல இடங்கள் பாதுகாப்பு சோதனைகளுக்காக வண்டியை நிறுத்த வேண்டியிருந்தது. ஒவ்வொரு இடத்திலும் பத்து நிமிடங்களுக்குக் குறைவில்லாமல் சோதனைகள், பயணிகளிடம் கேள்விகள் முடிந்த பிறகே வண்டியை மேலே செல்ல அனுமதித்தார்கள்.

பல இடங்களில் இவர்களின் பாதுகாப்பு சோதனைச் சாவடிகள்.....

வழியெங்கிலும் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள், அவர்களது தங்குமிடங்கள் போன்றவற்றை பார்க்க முடிந்தது.  சில இடங்களில் பாதுகாப்பு சோதனையின் போது அனைவருடைய அடையாள அட்டையும் பார்த்த பிறகே மேலே செல்ல அனுமதிக்கிறார்கள்.  இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தாலும், இந்தியர்களுக்கும் இங்கே செல்லுமுன் அனுமதி வாங்க வேண்டும் என்ற நிலை இருந்திருக்கிறது – அரசு அலுவலர்கள் அல்லாதோர் நிச்சயம் வாங்க வேண்டும் என்றும் சொன்னார்கள்.

பலவித பாதுகாப்பு சோதனைச் சாவடிகளைக் கடந்து நாங்கள் கொஹிமா நகரின் உள்ளே நுழையும் போது இரவு பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.  நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த தங்குமிடம் பெயர் சொல்லி ஓட்டுனரிடம் அதன் அருகே விடச் சொல்ல, நாங்கள் பேசிய ஹிந்தி அவருக்கு புரியவில்லை – அல்லது புரியாத மாதிரி நடித்தார்! எங்களுடன் பயணித்த ராஜஸ்தானி நபர் அந்த ஓட்டுனருக்கு அவரது மணிப்பூரி மொழியில் விளக்க அதன் பிறகு ஹோட்டல் அருகே இருக்கும் சாலையில் விட்டு விடுவதாய்ச் சொன்னார்.

நகரின் முக்கிய சாலை சந்திப்பின் அருகே விட்டுச் செல்ல, அங்கே நிறைய வாடகைச் சிற்றுந்துகள் நின்று கொண்டிருந்தன. அவர்கள் அனைவரும் எங்களை மொய்த்துக்கொள்ள, ஒருவரிடம் ஹிந்தியில் பேச்சுக் கொடுத்தேன். தங்குமிடத்தின் பெயரைச் சொன்னதும், பக்கத்தில் தான் இருக்கிறது என்று சொன்னார். நடந்தே சென்றுவிடலாம் என நானும் நண்பர் பிரமோதும் சொல்ல, மற்ற மூவரும் வண்டியிலேயே போகலாம் என்று சொன்னார்கள் – அவர்கள் அவசரம் அவர்களுக்கு! என்ன அவசரம் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்!

அந்த வாகன ஓட்டியிடம் எங்களை தங்குமிடம் வரை அழைத்துச் செல்லக் கூறினோம். உடைமைகளை வைத்துக் கொண்டு நாங்கள் உட்கார இரண்டு நிமிடங்களில் தங்குமிடத்தின் வாயிலில் இருந்தோம். இரண்டு நிமிட பயணத்திற்கு 100 ரூபாய்! சரி பாதுகாப்பாக வந்து சேர்ந்தோம் என நினைத்தபடியே தங்குமிடத்தின் படிக்கட்டுகளில் மேலே ஏறினோம்.  அங்கே நாங்கள் பார்த்தது யார், தங்குமிடத்தில் கிடைத்த இரவு அனுபவம் ஆகியவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன்....

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

28 comments:

 1. காத்திருக்கிறேன் ஐயா
  தம1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. தேவையில்லாத இடங்களில் கெடுபிடியும் ,
  கெடுபிடி தேவையுள்ள இடங்களில் எளிதாயும்
  இருப்பதையும் நான் கண்டு இருக்கிறேன்.

  அது என்ன அவசரம் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது.
  என்ன என்று சொல்லிவிடுவேன். இந்த தாத்தா ஒரு
  அவசரக்குடுக்கை என்று நீங்களும் ஒரு பட்டப்பெயர்
  தந்து விடுவீர்கள்.

  எனிவே, ஆபத்தான பயனங்கள் சில.
  அதில் ஆபத் பாந்தவர்கள் இருப்பார்கள் என்று
  நம்பித்தான் தீர வேண்டி இருக்கிறது.

  சுப்பு தாத்தா.

  www.subbuthatha.blogspot.com
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. //ஆபத்தான பயனங்கள் சில.
   அதில் ஆபத் பாந்தவர்கள் இருப்பார்கள் என்று
   நம்பித்தான் தீர வேண்டி இருக்கிறது. //

   உண்மை தான். நல்லதே நடக்கும் என்ற எண்ணத்தில் தான் வாழ்க்கைப் பயணமும் சென்று கொண்டிருக்கிறோம்.

   என்ன அவசரம் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   Delete
 3. மணிப்பூரிலிருந்து நாகாலாந்து – இரண்டாம் சகோதரி - இந்த பகிர்வு மிகவும் சுவாரஸ்யமாக தொடர் கதை படிப்பது போல் உள்ளது. காத்திருக்கிறேன் நண்பரே. வாழ்த்துக்கள்.
  டில்லி விஜயராகவன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 4. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சித்ரா.

   Delete
 5. இந்த மாதிரிப் பயணங்களுக்கு ஒத்த எண்ணமுடைய, அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் மனமுடைய நண்பர்கள் தேவை. குறிப்பாக ஹிந்திமொழி தேவை. அறியாத இடங்களுக்கும் உங்களுடன் பயணிக்கிறோம். சாப்பாட்டுக் கதையையும் எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. சாப்பாட்டுக் கதைகளும் உண்டு! நடுநடுவே அதுவும் வரும்.

   ஒத்த எண்ணமுடைய நண்பர்கள் இல்லை எனில் பயணம் கசப்பான அனுபவங்களைத் தரும் என்பது உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 6. நாகாலாந்து பழங்குடி மக்களை பற்றி மணிமேகலையில் வரும். சாதுவன் பழங்குடியினரிடம் மாட்டிக் கொண்ட பின் நாகர் மொழி பேசியாதால் அவனை கொல்லாமல் விட்டுவிடுவார்கள்.அது நினைவுக்கு வந்தது. இன்னும் அந்த நாட்டினரைப்பற்றி அச்சம் இருக்கிறதா?
  பயண அனுபவங்களை படிக்க தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 7. என்ன அவசரமாக இருக்கும் என்கிற என் யூகம் சரிதானா என்று பின்னர் வந்து பார்க்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் யூகம் எப்படி இருந்திருக்கும் என நானும் யூகித்துக் கொண்டிருக்கிறேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. நாகலாந்து போன்ற இடங்களில் சோதனைச் சாவடிகள் அவசியம்தான். இல்லாவிட்டால் தீவிரவாதம் என்ற பெயரில் அப்பாவிகளையும் சாவடிப்பனுங்களே! நல்ல தில் பயணம்தான் மேற்கொண்டிருக்கிறீர்கள்.அனுபவங்கள் அறிய காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 9. மணிப்பூர் - பயணத் தொடர் விறுவிறுப்பாக இருக்கின்றது..
  நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ளமுடிந்தது..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 10. நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 11. சுவாரஸ்யமான இடத்தில் தொடரும் போட்டுவிட்டீர்கள்! தொடர்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 12. எதிர் பார்ப்பில் தொடர்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 13. துப்பறியும் கதையைப் படிப்பதுபோல் இருக்கிறது. அடுத்து நடந்ததை அறிய காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 14. அவசரம் புரிகிறது!!! இருந்தாலும் அடுத்த பதிவிற்குச் சென்று தெரிந்து கொள்கின்றோம். ஒவ்வொரு பயணமும் த்ரில்லிங்காக இருக்கிறது. இதோ அடுத்த பகுதிக்குச் செல்கின்றோம்..

  கீதா : //பயணிக்கும் போது பாதையில் வரும் ஊர்களின் பெயரை, பார்த்த சில காட்சிகளை ஒரு குறிப்பாக எனது அலைபேசியில் சேமித்துக் கொண்டே வருவேன். அதுவும், வலைப்பூவில் எழுத ஆரம்பித்த பிறகு, பயணக் கட்டுரைகள் எழுதினால் பயன்படும் என்று சேமித்துக் கொள்வது வழக்கமாகி இருக்கிறது// அதே வெங்கட்ஜி! நானும் குறித்து வைத்துக் கொள்ளும் வழக்கம். செல்லும் இடம், தூரம், வழியில் வரும் ஊர்கள், எல்லா விவரங்களும். அருமையாக இருக்கிறது. நாங்கள் செல்ல நினைத்திருந்த ஒரு பயணம். இறுதியில் செல்ல முடியாமல் ஆனது. கணவர் நாகாலாந்தில் உள்ள ரீஜனல் இஞ்சினியரிங்க் கல்லூரியில் ட்ரெயினிங்க் கொடுக்கச் சென்றிருந்தார். ஒரு மாதம். ஆனால் கல்லூரி வேலைப் பணி என்பதால் மாலையில் தான் வெளியில் செல்ல முடியும் ஆனால் மாலையில் செல்ல தடை இருந்ததால் (நீங்கள் சொல்லியிருக்கும் அதே காரணம்தான்...) எங்கும் செல்ல முடியவில்லை. ஆனால், மிக அழகாக இருக்கும் என்று சொன்னார்.

  சரி அவசரம் இருக்கட்டும் ...நீங்கள் பார்த்த நபர் யாராக இருக்கும் என்று மண்டை குடைகிறது இதோ அடுத்த பதிவிற்கு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....