எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, July 2, 2016

கொலையுதிர் காலம்......

படம் இணையத்திலிருந்து.....

தலைநகர் தில்லி.  தில்லி வாசிகளுக்கும் பொறுமைக்கும் பல காத தூரம். குறிப்பாக வாகன ஓட்டிகளுக்கு பொறுமை என்பதே தெரியாத வார்த்தை. சிக்னலில் அவருக்கு முன்னாடி 100 வண்டிகள் இருக்கும். பச்சை விளக்கு விழுந்து அந்த 100 வண்டிகள் நகர்வதற்கு முன்னர் 101-வது வண்டியில் இருப்பவர் ஒலிப்பானை அழுத்தத் துவங்கிவிடுவார். அவரைத் தொடர்ந்து பல நூறு வண்டிகள் ஒலிப்பான்களை கதறக் கதற அடித்துக் கொண்டிருப்பார்கள். சின்னச் சின்ன பிரச்சனைகளுக்கும் அடி தடி தான்.  அனைவருக்குமே ஏதோ அவர்கள் சென்றால் தான் ஏதோ நாட்டை முன்னேற்ற முடியும் என்பது போன்ற ஒரு அவசரம்.

ஒருவரது வண்டி வேறு யாராவது வண்டி மேல் இடித்துவிட்டால் சண்டை ஆரம்பிக்கும். சில வாய் வார்த்தை தகறாறுகள் கைகலப்பில் முடியும். சில சண்டைகள் துப்பாக்கிச் சூட்டில் முடிகின்றன.  இங்கே பலரும் “கட்டாஎன அழைக்கப்படும் நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள். தில்லியை அடுத்த மாநிலங்களின் பல கிராமங்களில் இப்படி நாட்டுத் துப்பாக்கிகள் சல்லிசாகக் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தி யாரையாவது போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். 

இறந்த சிறுவன்....

இந்த வாரம் தில்லியின் கிழக்குப் பகுதியான மயூர் விஹார் பகுதியில் ஒரு 15 வயது சிறுவன் மரணம் – மலையாளி. தனது ஸ்கூட்டியில் சென்று கொண்டிருக்கும்போது அவருக்குத் தெரிந்த பான் கடையில் இருக்கும் இளைஞர்களுக்கும் சிறுவனுக்கும் ஏதோ தகறாறு.  அதில் அந்த பான் கடை இளைஞர்கள் சிறுவனை பலமாக அடித்து, அதுவும் நெஞ்சு, அந்தரங்கப் பகுதிகள் ஆகியவற்றில் அடிக்க அங்கேயே சுயநினைவின்றி விழுந்து விட்டான். பயந்து போன பான் கடை இளைஞர்கள், அதுவும் அந்த சிறுவனை அடித்த அதே இளைஞர்கள் பக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அங்கேயிருந்து திருப்பி அனுப்பி விட்டார்கள். இரண்டு மூன்று மருத்துவமனைகளுக்குச் சென்று அனுமதி மறுக்கப்பட, கடைசியில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அங்கிருக்கும் மருத்துவர்கள் சோதனை செய்து, சிறுவன் இறந்து போனதை உறுதிப் படுத்தி இருக்கிறார்கள். 

இதற்கு இரண்டு வாரத்திற்கு முன்னர், தில்லியின் இன்னுமொரு பகுதியில் ஒரு அப்பாவும் மகனும் காலை நேரத்தில் வெளியே வந்திருக்க, அவர்களை காரில் வந்த சிலர் துப்பாக்கியால் சுட, தந்தை சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.  தப்பித்து ஓடிய மகனையும் விடாது சுட்டுக் கொண்டு தொடர, கால்களில் மூன்று குண்டுகள் பாய்ந்து விட்டது. சம்பவ இடத்தில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த சில சாதாரணர்களுக்கும் ரணம் – குண்டடி.  தப்பித்த மகனுக்குக் காலில் பாய்ந்த குண்டுகள் காரணமாக இரண்டு கால்களையும் வெட்டி எடுக்க வேண்டிய கட்டாயம்.  கராத்தேவில் மாநில அளவு போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற அந்த இளைஞன் இன்று கால்களில்லாமல் வேதனையில்.....

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.  ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு பகுதியில் Road Rage கொலைகள், சொத்துத் தகராறு காரணமாக கொலைகள், காதல் தோல்வி காரணமாகக் கொலைகள் என கொலையுதிர் காலம் தான். தனியாக வீட்டில் வசிக்கும் முதியவர்களை அவர்களது சொத்துக்காகவும், வீட்டில் இருக்கும் பொருட்களை அபகரிக்கவும் வீட்டில் வேலை செய்பவர்களே கொன்று விடுவது தலைநகர் தில்லியில் அடிக்கடி நடக்கிற விஷயம்.  நேற்று கூட தில்லியின் ஒரு பகுதியில் இப்படி ஒரு கொலை. 

சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட கொலை செய்யத் தயங்குவதில்லை.  சட்டம் பற்றிய பயம் யாருக்கும் இல்லை.  முன்னுதாரணமான தண்டனைகள் இங்கே கிடையாது. கொலை நடந்து பல வருடங்களுக்கு விசாரணைகளும்,  வழக்குகளும், தள்ளி வைப்புகளும் தொடருமே தவிர விரைவான தண்டனை கிடைக்கப் போவதில்லை. சில வருடங்களுக்கு முன்னர் நடந்த நிர்பயா கொலைக்கான நியாயம் இன்னும் கிடைக்கவில்லை. நிர்பயா போன்று பல பெண்கள் தொடர்ந்து சீரழிக்கப் படுகிறார்கள்.

அந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட 18 வயதுக்குக் குறைவான குற்றவாளி, அந்தக் காரணத்துக்காகவே விடுதலை ஆகி விட்டார். அவருக்கும் தீவிரவாதக் கும்பலுக்கும் தொடர்பு இப்போது தொடர்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று காவல்துறை வட்டாரத்தினர் சந்தேகப்படுவதாக நாளிதழ்களில் செய்தி வருகிறது.  ஒவ்வொரு நாளும் நாளிதழைத் திறந்தாலே இப்படி கொலை பற்றிய செய்திகள் காண முடிகிறது. 

இந்தியாவின் தலைநகரிலேயே இந்த நிலை. இரண்டு அரசாங்கங்கள் – இரண்டுமே தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன – காவல் துறை யாருக்கு என்பதில் காட்டும் அக்கறையை, பணியிடங்கள் நிரப்புவதில் காட்டுவதில்லை.  காவல் துறையினரில் பாதிக்கு மேல் அரசியல்வாதிகளின் பந்தோபஸ்துக்கு போய்விட குற்றவாளிகளுக்குக் கொண்டாட்டம். கொலைகள் தவிர வழிப்பறிக் கொள்ளைகள், சிறு தகறாறுகள் ஆகியவை நடந்து கொண்டே இருக்கின்றன. அவை கணக்கிலேயே வருவதில்லை என்பது நிதர்சனம்.

Crime Graph மேல் நோக்கிச் சென்றபடியே இருக்கிறது இந்தியத் தலைநகரில்.....  தலைநகரிலேயே இப்படி என்றால் மற்ற இடங்களில் சொல்லத் தேவையில்லை.....

ஒவ்வொரு கொலைக்குப் பின்னும் சில அதிரடி நடவடிக்கைகள் எடுத்து பின்பு பழைய நிலைக்கு வந்து சேர்கிறது காவல் துறையும் அரசும்.......

என்னவோ போங்க, என்னத்த சொல்றது.... என்னத்த செய்யறது?

மீண்டும் சந்திப்போம்....

வெங்கட்

புது தில்லி.

42 comments:

 1. Replies
  1. கொடுமையே தான்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. தமிழகத் தலைநகரில் மட்டும் என்ன வாழ்கிறது ?அதுவும் ,உங்க மாமியார் ஊர் பொண்ணு கோழி செய்யப் பட்டிருக்காரே !

  ReplyDelete
  Replies
  1. இந்தியா முழுவதுமே இந்நிலை தான்.......

   திருவரங்கம் எனது மாமியார் ஊர் இல்லை..... :) எனக்கு யாதும் ஊரே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
  2. கோழி என்பதை கொலை என்று திருத்தி வாசிக்கவும் !

   Delete
  3. நீங்கள் கோழி என்று எழுதி இருந்தாலும், நான் கொலை என்றே படித்தேன்.....

   தங்களது மீள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 3. நான் டெல்லியில் இருந்தபோது இது மாதிரி நிகழ்வுகள் நடந்தன . தேவையில்லாமல் வாய் திறக்கக் கூடாது என்று கூடப் பணி புரிந்தவர்களால் அறிவுறுத்தப்பட்டேன்

  ReplyDelete
  Replies
  1. இப்படி நிகழும்போதெல்லாம் அதைப் பற்றி பேசக் கூடாது என்று சொல்லித் தருவார்கள் சக பணியாளர்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 4. சமூக ஒழுக்கநெறிகள், தனிமனித ஒழுக்கங்கள் என்பனவெல்லாம் இப்போதெல்லாம் நாட்டில் காகிதத்தில்தான் காணக்கிடைக்கின்றன. தொடரும் இந்த வன்மத்துக்கு நமது visual media-சினிமா, டிவி போன்றவைகளில் காண்பிக்கப்படும் வன்மங்கள், வக்கரிப்புகள், அபத்தங்கள்- முக்கிய காரணம். அங்கே காண்பிக்கப்படுபவை நிஜ வாழ்வில் பிரதிபலிக்கின்றன போலும்.

  ReplyDelete
  Replies
  1. Visual Media காண்பிக்கும் பல காட்சிகள் நிஜ வாழ்விலும்.... அது தான் கொடுமையான விஷயம். காசுக்காக வேடமிடும் நபர்கள் செய்வது அனைத்துமே தாங்களும் செய்து பார்க்கிறார்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏகாந்தன் ஜி!

   Delete
 5. முதலில் தலைப்பிற்குப் பாராட்டுகள் வெங்கட்ஜி

  இந்தியா இப்போது கொலை பூமியாக மாறி வருகின்றது..

  //சட்டம் பற்றிய பயம் யாருக்கும் இல்லை. முன்னுதாரணமான தண்டனைகள் இங்கே கிடையாது. கொலை நடந்து பல வருடங்களுக்கு விசாரணைகளும், வழக்குகளும், தள்ளி வைப்புகளும் தொடருமே தவிர விரைவான தண்டனை கிடைக்கப் போவதில்லை. சில வருடங்களுக்கு முன்னர் நடந்த நிர்பயா கொலைக்கான நியாயம் இன்னும் கிடைக்கவில்லை. நிர்பயா போன்று பல பெண்கள் தொடர்ந்து சீரழிக்கப் படுகிறார்கள்.// 100 அக்மார்க் வரிகள்.

  சுற்றுப்பயணம் பற்றி எழுதும் அமைதியான வெங்கட்ஜியிடமிருந்து, ஆதங்கத்திலிருந்து சற்றுக் கோபம் வரை வெளிப்படும் இப்படியான ஒரு பதிவைப் பார்க்கும் போது உங்கள் மனதை இந்நிகழ்வுகள் எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பது தெரிகிறது.

  கொஞ்சம் பாதுகாப்பானது தமிழ்நாடு என்று நினைத்தால் இங்கும் கொலைகள் இதோ இப்போது நிகழ்கின்றன அதுவும் தலைநகரில்...கொடுமை, வேதனை

  நம் மக்களின் வளர்ச்சி என்பது எதை நோக்கி என்று தெரியவில்லை....தனி மனித ஒழுக்கம் அற்றுப் போகிறது.பள்ளியிலும் மாரல் வகுப்புகள், பெர்சனாலிட்டி டெவெலெப்மென்ட் வகுப்புகள் இவை எதுவும் இல்லை. மதிப்பெண் எடுப்பது எப்படி என்பதற்கான வகுப்புகளே. சில சமயம் தோன்றும் நமது சட்டமும் அரபுநாடுகளின் சட்டம் போல் ஆனால் என்ன என்று.

  பல காரணங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம்...நல்ல பதிவு எங்கள் எல்லோர் மனத்து வேதனைகளும் உங்கள் பதிவில் வந்து விட்டது..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வேதனையான விஷயம் தான்.... தலைநகரில் இப்படி அவ்வப்போது நடப்பதும் அதை மக்கள் உடனே மறந்து விடுவதும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 6. எதிர்காலம் என்பது கேள்விக் குறியாகி விட்டது..

  நாம் எவ்வளவு நல்லவராக வாழ்ந்தாலும் எங்கிருந்து ஆபத்து வருமோ - தெரியாது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 7. எதிர்கால சந்ததியினரை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.

   Delete
 8. படிக்கும்போது வேதனையாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. வேதனை தான் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 9. வருத்தம் தரும் பதிவு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 10. நிகழ்வுகள் மனதை வேதனைபடுத்திக் கொண்டு இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வேதனை தரும் நிகழ்வுகள் தாம்மா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 11. இதற்கெல்லாம் காரணம் அதிக பட்ச நுகர்வுக் கலாச்சாரமும், தனிமனித ஒழுக்க மீறல்களும் தான். இதை அரசும் திரைப்படங்களும் வலிந்து திணிக்கின்றன. போலீஸ் தன் கடமையை செய்ய முடியாமல் பணமும், செல்வாக்கும், அரசியலும் கட்டிப் போடுகின்றன. போலீசையும் வாங்கிவிடுகிறார்கள். சட்டங்கள் சாமானியர்களுக்கே என்று எழுதப்பட்டுவிட்டது. நீதியும் கடைகளில் கூவி விற்கப்படுகிறது. இதனால் தான் சாமானிய மக்கள் குற்றம் நடக்கும் சமயங்களில் எதுவும் செய்யமுடியாமல் இருக்கிறார்கள். இங்கே சாட்சி சொல்பனுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. சாட்சியை படத்துடன் பெயர், முகவரி போட்டு காட்டியபிறகு கொலைகாரர்கள் சாட்சியையும் அவர்தம் குடும்பத்தாரையும் சும்மா விடுவானா. தன் பாதுகாப்பு கருதி சும்மாயிருந்துவிடுவார்கள். இல்லையென்றால் பணத்துக்காகவோ அல்லது மிரட்டலின் காரணமாகவோ பிறழ்சாட்சியாகி விடுகிறார்கள். இதற்கு உதாரணங்கள் பலவுண்டு. சட்டங்கள் அனைவருக்கும் சமமாக்கப்பட்டு அதை நிரூபிக்காதவரை இந்நிலையே தான் தொடரும்.
  விஜயன்.

  ReplyDelete
  Replies
  1. பல விஷயங்களில் மாற்றங்கள் தேவை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயன்.

   Delete
 12. சென்னையும் இப்போது கொலைநகரமாக மாறிவருகிறது! என்றுதான் மாறுமோ இந்த அவல நிலை?

  ReplyDelete
  Replies
  1. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இதே நிலை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 13. வேதனையான விடயம் ஜி தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகிவிட்டான்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 14. தினமும் தினசரிகளில் வரும் செய்திகள்தானேஇது எல்லோரையும் பாதிக்கிறது உங்கள் மன பாதிப்பு பதிவின் வடிவில். அனேகமாக எல்லோருக்கும் காரண காரியங்கள் தெரிகின்றன இருந்தாலும் ஏதும் செய்ய முடியாக் கையாலாகாத்தனம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 15. காட்டில் பல மிருகங்கள். அதே போல நாட்டிலும் பல மிருகங்கள். ஆனால் காட்டில் தேவையில்லாமல் கொலை நடப்பதில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   Delete
 16. டில்லியில் பாதுகாப்பு குறைவு என்று கேள்வி பட்டிருக்கிறேன். படிக்கும் பொழுது பகீரென்கிறது. மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற எல்லா பெரு நகரங்களுமே அந்த வரிசையில் சேர்ந்து கொண்டிருக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. வேதனை தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   Delete
 17. டில்லியில் பாதுகாப்பு குறைவு என்று கேள்விப் பட்டிருக்கிறேன். மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற மற்ற பெரு நகரங்களும் இதில் தொடர்வது வேதனை! ஒழுக்கத்தை கற்றுத் தராமல், வசதிகளை மட்டும் பெருக்கி கொள்வதால் நேரும் அவலம் இது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   Delete
 18. சுயநலத்தின் விளைவுதான் இப்படி அடுத்தவரை துன்புறுத்துவது. உங்கள் பதிவில் ஆதங்கம் பளிச்சிடுகிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அசோகன் குப்புசாமி ஜி!

   Delete
 19. கொடுமையாக இருக்கு என்று திருந்துவார்கள் இந்தநாட்டை???

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   Delete
 20. 1974 ஆம் ஆண்டு உ.பி யில் உள்ள மதுரா மாவட்டத்தில் உள்ள Sadabad என்ற ஊரில் இருந்த எங்களது வங்கியின் கிளைக்கு ஆய்வுக்கு சென்றபோது அங்கு வந்த பல வாடிக்கையாளர்கள் கையில் குண்டுகள் நிரப்பப்பட்ட நாட்டு கைத்துப்பாக்கிகள் இருப்பதை கண்டேன். ஏதேனும் சிறு தகராறு என்றால் உடனே துப்பாக்கி பிரயோகம் தான் என்று சொல்லக்கேட்டு அச்சமுற்றேன். . அப்போதே வடக்கே அப்படியென்றால் இப்போது சொல்லவே தேவையில்லை. விரைவாக அந்த கலாச்சாரமும் இங்கே நம் தமிழகத்தில் வந்து விட்டாதது என்பது தான் வேதனை.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அனுபவங்களையும் இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....