திங்கள், 25 ஜூலை, 2016

காமாக்யா தேவி கோவில் – புகைப்படங்கள் மற்றும் அனுபவங்கள்



ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 29

இந்தப் பயணக் கட்டுரையின் முதல் 28 பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu.....





எங்களை அழைத்துச் சென்ற ஓட்டுனர் கோவிலிலிருந்து சற்றே தள்ளி வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இறக்கி விட்டு, அங்கேயே காத்திருப்பதாகவும், கோவிலுக்கு நடந்து செல்லுமாறும் சொல்ல, கேமராவோடு நாங்கள் ஐவரும் நடந்தோம். எல்லா ஊர்களைப் போல கோவிலுக்குச் செல்லும் வழி முழுவதும், இரு பக்கங்களிலும் பூஜைப் பொருட்களை விற்கும் கடைகள், அவற்றை வாங்கிக் கொண்டு போகும்படி வற்புறுத்தும் வியாபாரிகள் என ஜேஜே கூட்டமாக இருந்தது. அனைத்தையும் பார்த்தபடியே நடந்தோம்.





மா காமாக்யா தேவிக்கு செம்பருத்தி மாலை தான் அணிவிக்கிறார்கள் – அது தான் ஸ்பெஷல்.  108 செம்பருத்தி மலர்களை மாலையாகக் கோர்த்து பத்து ரூபாய்க்கு விற்கிறார்கள். இதற்காகவே செம்பருத்திச் செடிகளை கோவில் பக்கத்து ஊர்களில் வளர்ப்பார்கள் போலும்.  பத்து ரூபாய் என்பது வெகுவும் குறைவாகவே தோன்றியது.  சில மலர் மாலைகளை வாங்கிக் கொண்டோம்.  வடக்கே இருக்கும் பல கோவில்களைப் போலவே, கோவிலுக்கு வெளியே சிவப்பு உடை அணிந்த பல நபர்கள் இங்கேயும் பக்தர்களுக்காகக் காத்திருக்கிறார்கள். 



உள்ளே நீண்ட வரிசை இருக்கிறது.  தேவியைப் பார்க்க இரண்டு மணி நேரத்திற்கு மேலாகும், என்னோடு வந்தால், நேராக உங்களை தேவியின் கர்பக்கிரஹத்துக்கு அருகில் அழைத்துச் செல்கிறேன் – இவ்வளவு காசு கொடுங்கள் என்று வருபவர்கள் அனைவரையும் கேட்கிறார்கள். நீங்கள் உடனடியாக ஒப்புக் கொண்டு விட்டால், ஒவ்வொரு இடத்திலும், இந்தப் பூஜை செய்தால் நல்லது, அந்தப் பூஜை செய்தால் நல்லது, இங்கே இந்தப் பொருள் தானம் செய்வது நல்லது என வரிசையாக ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பர்சின் கனத்தைக் குறைப்பது இவர்கள் வழக்கம்.




அவர்களுக்கு இது தான் தொழில் என்பதால் அவர்களைக் குறை சொல்ல முடியாது! உங்களுக்குப் பிடித்தால் செய்யுங்கள், இல்லை எனில் அவர்கள் சொல்வதைக் கேட்காது நேராகச் சென்று வரிசையில் நின்று தேவியைத் தரிசித்து வாருங்கள்.  நாங்கள் யாரிடமும் எதுவும் கேட்காது, பூமாலைகள் வாங்கிய கடையின் வாயிலில் காலணிகளைக் கழற்றி விட்டு, கேமராக்களோடு கோவிலுக்குள் நுழைந்தோம். 





51 சக்தி பீடங்களில் மிகவும் பழமையான இக்கோவிலில் மொத்தம் நான்கு பகுதிகள் – மா காமாக்யா தேவி கோவில் அமைந்திருக்கும் நீலாச்சல் மலைப்பகுதியில் மஹாவித்யாக்கள் என அழைக்கப்படும் காளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேஷ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமவதி, பகுளாமுகி, மாதங்கி, கமலா ஆகிய பத்து தேவிகளுக்கும் கோவில்கள் உண்டு. இவற்றில்,  
திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா ஆகிய தேவியர்களுக்கு மா காமாக்யா கோவிலின் உள்ளேயே தனிக் கோவில்கள் இருக்க, மற்ற ஏழு தேவியர்களுக்கும் கோவில்கள் நீலாச்சல் மலைப்பகுதியில் இருக்கின்றன.





பக்தர்களின் வரங்கள் அனைத்தையும் தரும் சக்தி படைத்தவள் இந்த காமாக்யா தேவி என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை. பெரும்பாலான சமயங்களில் இங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். நவராத்திரி சமயத்திலும், திருவிழா சமயங்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் இங்கே வருவது வழக்கம்.  கோவிலுக்கு வந்து மா காமாக்யா தேவியின் அருளைப் பெற பலரும் வருகிறார்கள்.  நாங்கள் சென்ற சமயத்திலும் நிறையவே மக்கள் கூட்டம்.  கோவிலைச் சுற்றி வந்து தேவியை மனதார வேண்டிக்கொண்டு வாங்கிச் சென்ற மாலைகளைச் சமர்பித்தோம். 





கோவிலின் வெளிப்பிரகாரத்தில் இருக்கும் சிலைகளில் பல சிதிலப்பட்டு இருந்தாலும், இருக்கும் சிற்பங்கள் ஒவ்வொன்றும் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருப்பதைக் காண முடிந்தது. ஒவ்வொரு பகுதியாக, ஒவ்வொரு சிற்பமாக புகைப்படம் எடுத்துக் கொண்டே நாங்களும் கோவிலை வலம் வந்தோம்.  கோவிலின் வாயிலுக்கு வருவதற்கு முன்னர், பலரும் அங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.  நாங்களும் கோவிலை பின்புலமாக வைத்து சில படங்களை எடுத்துக் கொண்டோம். 






சுற்றுச் சுவர் சிலைகளில் ஆனைமுகத்தோனுக்கும் சிலை உண்டு. சிவப்பு வண்ணம்/குங்குமம் பூசி வைத்திருக்கிறார்கள் பிள்ளையாருக்கு. அது மட்டுமல்லாது கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருமே பிள்ளையாரின் சிலையில் நாணயங்களை ஒட்டி வைக்கிறார்கள் – யார் ஆரம்பித்து வைத்த பழக்கமோ தெரியவில்லை. அங்கே நிறைய நாணயங்கள் இருக்கின்றன. கீழேயும் நிறைய நாணயங்கள் சிதறிக்கிடக்கின்றன. ஒவ்வொரு கோவிலிலும் இப்படி விதம் விதமான பழக்கங்கள்.





கோவிலுக்கு வெளியே வந்து காலணிகளை அணிந்து கொண்டு கடைகளைப் பார்த்தபடியே வந்தோம். மா காமாக்யா தேவியின் படங்கள், சிறு சிலைகள் என அனைத்தும் விற்பனைக்கு இருந்தன.  எல்லாவற்றையும் பார்த்தபடியே வெளியே வந்தோம். வழியில் மூன்று கண் தெரியாதவர்கள் வரிசையாக அமர்ந்து மா காமாக்யா தேவியின் பெருமைகளை அசாமி மொழியில் பாடலாக பாடிக்கொண்டிருந்தார்கள். மூவரும் ஒவ்வொரு இசைக் கருவியையும் இசைத்தபடியே பாடிக் கொண்டிருந்தார்கள். அவரவர் முன்னே ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பா.



மிக அருமையாக பாடிக் கொண்டிருந்தார்கள்.  மொழி தெரியாவிட்டாலும், இசையையும் அவர்கள் குரலையும் ரசிக்க முடிந்தது. சில நிமிடங்கள் நின்று நிதானித்து அவர்களது இன்னிசைக் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தோம். அனைவரது பிளாஸ்டிக் டப்பாவிலும் சில ரூபாய் நோட்டுகளைப் போட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். நாங்கள் புறப்பட்டாலும், அந்த மூவரின் இசை மட்டும் எங்களைத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. மா காமாக்யா தேவி அவர்களுக்கும் நல்ல வாழ்வினைத் தரட்டும் என்று மனதில் வேண்டிக்கொண்டு நகர்ந்தோம். 



மா காமாக்யா தேவி கோவிலில் திவ்யமாய் தரிசனம் முடித்து அங்கே இருந்து நடந்தோம். எங்கள் வாகனம் நின்றிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்து வாகன ஓட்டியைத் தேடினோம். வேறு ஒரு வாகனத்தினுள் அமர்ந்திருந்த அவராகவே வந்து அடுத்து எங்கே போக வேண்டும் எனக் கேட்க, நாங்கள் பிரம்மபுத்திரா நதியின் மீது அமைந்திருக்கும் பாலத்திற்குச் செல்ல வேண்டும் எனச் சொன்னோம்.  அங்கே சென்ற போது எங்களை போலீஸ் பிடித்துக் கொண்டது! ஏன்......  அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

28 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஆமாம் சஸ்பென்ஸ்! இரண்டு நாளுக்கு மட்டும். அடுத்த பதிவு விரைவில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  2. காமாக்யா தேவி கோவிலுக்கு நேரில் சென்றது போல இருந்தது தங்களின் இந்த பகிர்வு. சூப்பர். வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் கட்டுரையை.
    விஜயராகவன்/டெல்லி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  3. ஆஹா.... உங்கள் பதிவின் மூலம் பயணம் செய்தேன். அருமையான தரிசனம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  4. கோவில் தகவல்கள் அருமை. பிள்ளையார் சிலையில், காசை வைப்பதற்காகவே பல வட்ட slotகள் இருக்கின்றன. நிறைய கோவில்களில் இது மாதிரி காசை ஒட்டி வைக்கிறார்கள் அல்லது விட்டெறிகிறார்கள். திருப்பதி கோவில் சுற்றுப்பிராகாரத்திலும் த்வஜஸ்தம்பத்தின் அருகிலும் காசை எறிகிறார்கள் (கூடாது என்று அறிவிப்பு இருந்தபோதிலும்). நம்முடைய நம்பிக்கைகள்தான் எத்தனை விதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைச் செய்யக் கூடாது என்று சொன்னால், அதைத் தான் முதலில் செய்வார்கள். அது தானே இங்கே வழக்கம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. அருமையான கோவில்...இந்த இடங்களை பற்றி எல்லாம் உங்கள் பதிவின் மூலமே அறிகிறோம்....

    பல ஊர்களை சுற்றி காண்பிபதர்க்கு மிகவும் நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

      நீக்கு
  6. ஸ்ரீ காமாக்யா தேவியைப் பற்றி நிறைய தகவல்கள்..

    தேவிக்கு எனது வணக்கங்கள்..

    பதிவினை வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த நன்றி.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  7. போலீஸா! ஏன்?

    அந்தக் கோவிலுக்குள் கேமிரா எடுத்துச் செல்லத் தடையில்லை போலும்.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போலீஸே தான்....

      சில இடங்களில் படம் எடுக்கலாம், சில இடங்களில் எடுக்க முடியாது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. கோவில் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி உண்டா.கோவிலைச் சுற்றிப் பார்க்கவும் படங்கள் பிடிக்கவும் நிறைய நேரம் ஆகி இருக்குமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில இடங்களில் உண்டு. சில பகுதிகளில் அனுமதி இல்லை. நேரம் ஆகத்தான் ஆகும்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  9. புகைப்படங்கள் அருமை ஜி
    போலீஸ் பிடித்துக்கொண்ட விடயம் அறிய ஆவல் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போலீஸ் - விஷயம் அடுத்த பதிவில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  10. நம்ம ஊர் சிலைகளைப் போலவே இருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  11. சிலைகளை பார்த்தால் நம்ம ஊர் சிற்பிகளின் கைவண்ணம் போல் உள்ளதே!

    போலீஸா! நல்லாத்தான் வைக்கிறாங்கய்யா சஸ்பென்சு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி...

      நீக்கு
  12. அருமையாக உங்களுடன் சுற்றி வந்தோம்.விரிவாக அறியவும் முடிந்தது தங்கள் புகைப்படங்களுடன். ..பிரம்மபுத்திரா நதி மிகப் பெரிய நதி அகலம் பாலமே 3, 4 கிலோமீட்டர் மேல் வரும் என்றும் கேள்விப்பட்டதுண்டு. பாலத்தில் செக் போஸ்டோ? அதான் போலீசோ? கேமரா?..சஸ்பென்ஸ் அறிய காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளை இத் தொடரின் அடுத்த பகுதி.... என்ன நடந்தது என உங்களுக்குத் தெரிந்து விடும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  13. படங்களும் பகிர்வும் அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முருகானந்தம் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....