எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, July 27, 2016

முதல் கலப்பை – பீஹார் மாநில கதைமுண்ட கலப்பைஎன்று சிலர் திட்டுவார்கள்.  ஏன் அப்படி திட்டுகிறார்கள் என்று யாரும் யோசித்ததில்லை. எப்படி வந்தது இந்த வாக்கியம்?  ஆனால் இன்று பார்க்கப் போகும் கதைக்கும் இந்த வாக்கியத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முதல் கலப்பை உருவான கதை!

பீஹார் மாநிலத்தில் [தற்போதைய ஜார்க்கண்ட் மாநிலத்தில்] முண்டா எனும் பழங்குடியினர்கள் உண்டு. பீஹார், ஜார்க்கண்ட் தவிர மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களிலும் முண்டா பழங்குடியினர் வசித்து வருகிறார்கள்.  நமது நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களுள் ஒருவரான பீர்சா முண்டா பற்றி நீங்கள் படித்திருக்கலாம். இந்த முண்டா பழங்குடியினர் கதை ஒன்று தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

மனிதனைப் படைத்து அவனுக்கு உயிரூட்டிய பிறகு கடவுள் நிலத்தை உழுது பயிரிட்டு அவன் வாழ்வதற்கு உகந்ததோர் கருவியும் கொடுக்க உளம் கொண்டார். எனவே கடவுள் கலப்பை உருவில் அதை அளிக்கும் முயற்சியில் வெகுகாலம் ஈடுபட்டார். ஒரு பெரிய மரத்தை எடுத்து அதை ஒரு கலப்பையாக, உழுமுனை, பற்றும் பகுதி, பிடி எல்லாம் கொண்ட ஒரே பகுதியாகச் செதுக்கினார். அவர் மும்மரமாக இதில் ஈடுபட்டிருந்ததால் வீடு திரும்பி மனைவியைப் பார்க்கவும் மறந்து போனார்.

அவர் துணைவி ஒரு கொசுவை அவரை அழைத்துவர ஏவினாள். கொசு அவரிடம் சென்று காதைச் சுற்றி ரீங்காரமிட்டது. ஆனால் கடவுள் அசைந்து கொடுக்காமல் வேலையில் மூழ்கிப் போயிருந்தார். இதனால் மிகவும் சினம் கொண்டு ஒரு புலியை அனுப்பினாள். புலி அவரருகில் சென்று இலைகளை அசைத்துச் சல சலக்கச் செய்து அவரைக் கவர்ந்தது. கடவுள் சிறு செதுகுத் துண்டை அதன் மீது எறிந்து, “ஓடிப் போ காட்டு நாயே!என்றார். அந்தச் செதுக்குத் துண்டு உடனே காட்டு நாயாக மாறிப் புலியைத் துரத்திற்று. அதன் காரணமாகவே இன்றும் புலி காட்டு நாய்க்கு அஞ்சுகிறது.

கடவுள் வெகு நாட்கள் சென்றபின் கலப்பையை முடித்துக் கொண்டு வீடு சென்று மனைவியிடம் பெருமையுடன் அதைக் காட்டினார். மனைவி நகைத்து, அவர் அதைச் செய்து முடிக்கப் பல நாட்கள் ஆனதால் மக்களுக்கு அது உதவாது என்றாள். அவர் காரணத்தை விளக்கக் கோரியபோது, அது போல் கலப்பை செய்வதற்குகந்த பெரிய மரத்தைத் தேடுவது கடினம் என்றும், அதை ஒரே துண்டாக எல்லாப் பகுதிகளுமுள்ள கலைப்பையாகச் செய்வதும் கடினம் என்றும், மேலும் அதற்காக இவ்வளவு காலம் எடுத்துக் கொள்வது இயலாததென்றும் மொழிந்தாள்.

கடவுள் ஒத்துக் கொள்ளவில்லை. அப்போது மனைவி, “கலப்பையைப் பூமியில் போடுங்கள். என்ன ஆகிறதென்று பார்ப்போம்என்றாள். அதை அவர் பூமியில் போட்டதும் அது துண்டுகளாக உடைந்து போயிற்று. கடவுள் கலப்பை உடைந்தது கண்டு மிகுந்த கோபம் கொண்டார். ஆனால், மனைவி தான் அதைவிட நல்ல கலப்பை செய்ய முடியும் என்றும், பெரிய மரம் அதற்குத் தேவை இல்லை என்றும், நிலத்தில் விழுந்தால் அது உடையாது என்றும் கூறி, அவரை அமைதி கொள்ளச் செய்தாள். கடவுள் அதற்கு இசைய, வானுலகத் துணைவி, கலப்பை செய்யத் தொடங்கினாள். அவள் கலப்பையைச் செய்தாள். உழுமுனைப்பிடி – பற்றுப் பகுதி எனத் தனித்தனிப் பகுதிகளாகச் செய்து கலப்பையில் துளைகள் அமைத்து, மிகக் குறுகிய காலத்தில் அவற்றை ஒன்றாகப் பொருத்தி விட்டாள்.

கலப்பை தயாரானதும் அவள் கணவனை விளித்து அதைத் தரையில் போட்டதும் உடைகிறதா என்றும் பார்க்கும்படி கோரினாள். பூமியிலுள்ள மனிதன் அதை எடுத்துக் கொண்டு உடனே உழத் தொடங்கிவிட்டான். கடவுள் மனைவியிடம், “நீ என்னை வென்று விட்டாய். ஆனால் இன்றிலிருந்து எந்தப் பெண்ணும் கலப்பை செய்யும் பணியை மேற்கொள்ளலாகாது. ஆணே செய்வான். பெண் அதைத் தொடவும் கூடாதுஎன்று விதித்தார். அந்நாளிலிருது பெண்கள் கலப்பையைத் தொடவும் தகாதவர்களாயினர்.”  

முண்டா பழங்குடியினரின் நம்பிக்கையான இந்த முதல் கலப்பை உருவான கதை மட்டுமல்லாது பல பீஹார் மாநிலக் கதைகளை வாசித்து ரசித்தது ஒரு புத்தகத்தில் தான். தில்லியின் புத்தகக் கண்காட்சி ஒன்றில் வாங்கிய புத்தகத்திலிருந்து இக்கதை இங்கே. புத்தகம் பற்றிய மற்ற தகவல்கள் கீழே......

புத்தகத் தலைப்பு – பீகார் மாநில நாட்டுக் கதைகள்.
ஆங்கிலத்தில் தொகுப்பு – திரு பி.சி. ராய் சௌத்ரி.
தமிழாக்கம் – திருமதி ராஜம் கிருஷ்ணன்.
வெளியீடு:  சாகித்ய அக்காதெமி.
முதல் பதிப்பு – 1979. இரண்டாம் பதிப்பு – 1994.
விலை ரூபாய் 65.

பீஹார் மாநிலத்தின் நாடோடிக் கதைகள், விலங்குக் கதைகள், தந்திரசாலிகளின் கதைகள் என பல கதைகள் இந்தப் புத்தகத்தில் உண்டு. பல கதைகள் எனக்குப் பிடித்திருந்தன.  உங்களுக்கும் பிடிக்கலாம்....  விரும்பியவர்கள் வாங்கிப் படிக்கலாம்....  இன்னும் சில ஸ்வாரஸ்யமான கதைகளை பிறிதொரு சமயத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

நாளை வேறொரு பகிர்வில் சந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

18 comments:

 1. அட! ஒவ்வொரு மாநிலம், ஒவ்வொரு நாட்டிற்கும் இது போன்று பல நாட்டுக் கதைகள், ஃபேன்டசி கதைகள் இருக்கத்தான் செய்கின்றன இல்லையா. இது போன்று வாசிப்பதில் இருக்கும் சுவாரஸ்யமும் சுவைதான். நல்ல சுவாரஸ்யமான கதை. பகிர்விற்கு மிக்க நன்றி வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. இந்தப் புத்தகத்தில் நிறையவே ஃபேண்டசி கதைகள். விலங்குகள் பேசுவது போலவும், மனிதர்களோடு திருமணம் செய்து கொள்வது போலவும் கதைகள் உண்டு. வித்தியாசமான கதைகள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 2. இப்படியொரு கதை இருக்கின்றதா?..

  சுவாரஸ்யமான பதிவு.. வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 3. கலப்பையின் கதை...சுவாரசியம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 4. பரவாயில்லையே.. நாட்டார் சிறுகதைகள் வாங்கிப் படிக்கிற பழக்கம் இருக்கே.. பீகார் மானிலத்தில் என்ன என்ன பார்த்தீர்கள்? தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. பல்வேறு மாநிலங்களின் கதைகளைத் தெரிந்து கொள்ளலாமே.... பீஹாரில் அதிகம் சுற்றியதில்லை. தலைநகர் பட்னா மட்டும் சென்றதுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 5. சுவாரஸ்யம்தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 6. அருமையான பகிர்வு,,, கலப்பை இந்த வார்த்தை இன்று பலருக்கு தெரியாத வார்த்தை,,,,
  வட்டாரக்கதைகள் கேட்க சுவரசியமானவை,,,
  நல்ல பகிர்வு,, வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வட்டாரக் கதைகள் சுவாரஸ்யமானவை. உண்மை தான். இப்புத்தகத்திலும் அப்படி நிறைய கதைகள் உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 7. சுவையான பதிவு! மற்ற மாநிலங்களின் நாட்டுப்புற கதைகளை அறிய முடிந்ததில் மகிழ்ச்சி!
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   Delete
 8. சுவாரஸ்யமான பதிவு ஜி வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 9. நாம பிடித்து வளர்ந்த கலப்பையினைப் பற்றி சுவராஸ்யமான பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....