வியாழன், 7 ஜூலை, 2016

உப்பு கருவாடு ஊறவச்ச சோறு...

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 23 

இந்தப் பயணக் கட்டுரையின் முதல் 22 பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu.....



சாலை விதிகளை மதிக்கும் வாகன ஓட்டிகள்....

டென்னிஸ் கோர்ட் யுத்தம் மற்றும் கொஹிமா யுத்தத்தில் உயிரிழந்த பல வீரர்களின் கல்லறைகளையும், நினைவுச் சின்னங்களையும் பார்த்த பிறகு நண்பர்கள் ஐவருமே போர், அதன் விளைவுகள், உயிரிழப்புகள், சேதங்கள் ஆகியவற்றைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். போரில் ஒரு நொடியில், குண்டுவெடிப்பிலோ, ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததாலோ, அல்லது துப்பாக்கிச் சூட்டிலோ இறக்கும் அந்த வேளையில் வீரர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்பது பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். தாங்கள் விட்டுச் செல்லும் குடும்பத்தினர் என்ன செய்வார்களோ என்று கவலைப் படக் கூட நேரமிருந்திருக்காது என்று பேசிக் கொண்டிருந்தோம்.

ஒழுங்கான வாகன ஓட்டிகளும் வாகனங்களும்....

வண்டி நாங்கள் தங்கியிருந்த இடத்தினைத் தாண்டி போய்க் கொண்டிருந்தது. இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டும். அந்த சாலை ஒருவழிச் சாலை. ஒரு பக்கத்தில் வாகனங்கள் நிறுத்தி இருக்க, வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன. வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதித்து ஒழுங்காகச் செல்வதனால் சாலையில் தடங்கல்கள், Jam இல்லை. நிறுத்தும் வாகனங்களுக்கு Parking Ticket கொடுக்க நிறைய இளைஞர்களும்/இளைஞிகளும் கையில் ரசீது புத்தகங்களோடு காத்திருந்தார்கள்.  அவர்களுக்குள் ஒரு போட்டி – யார் சீட்டு கொடுப்பது என... ஓடி ஓடி சீட்டு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.  இதையெல்லாம் பார்த்தபடியே பயணித்துக் கொண்டிருந்தோம்.   

காய்கறிக் கடை....  நடத்துவது பீஹார் மாநிலத்தவர்....

 வெங்காயமா?  பூண்டா?

நண்பர் எங்களுடன் அனுப்பி வைத்த ஓட்டுனர் நாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாரோ இல்லையோ, அடுத்து எங்கே போக வேண்டும் என எங்களிடம் கேட்கவே இல்லை. அவர் எங்கே போவார் என்பதை அந்த இடத்திற்குச் சென்ற பிறகு தான் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. பேச்சுக்கு நடுவில், அவரிடம் அடுத்தது எங்கே என்று கேட்கவும், இதோ வந்துவிட்டது, இறங்க வேண்டும் என அவர் சொல்லவும் சரியாக இருந்தது.  பார்த்தால் மீண்டும் ஒரு கடைத் தெரு!  அட என்னடா இது அங்கே சுற்றி இங்கே சுற்றி மீண்டும் ஒரு மார்க்கெட்டுக்கு வந்து விட்டாரே என்று யோசித்தபடியே வெளியே இறங்கினோம்.

உப்புக் கருவாடு ஊற வச்ச சோறு....
கடையில் வித்தியாசமான இரும்பு அடுப்புகளைப் பார்த்தீர்களா?

பாம்பு கருவாடோ?....
பார்க்கவே ஒரு மாதிரி இருக்குல்ல?

இந்த கடைத்தெருவில் காய்கறிக் கடைகளும் இருந்தன என்றாலும் பெரும்பாலான கடைகளில் இருந்தது விதம் விதமான கருவாடு – எந்த மிருகங்களின் காய்ந்த கருவாடு என்பது தெரியவில்லை – சிலவற்றைப் பார்த்தால் ஏதோ பாம்பை வெட்டி வைத்தது போல இருந்தது. பார்க்கும்போதே வயிற்றுக்குள் ஏதோ கலவரம் வெடிப்பது போல ஒரு உணர்வு! சில கடைகள் முழுவதுமே கருவாடு இருக்க, சில கடைகளில் காய்கறிகளும் கருவாடும் கலந்து கட்டி இருந்தது.

கடையைப் பார்த்துக் கொள்ளும் மூதாட்டி....

வடகிழக்கு மாநிலங்களில் பார்த்த ஒரு விஷயம் – ஏழு சகோதரி மாநிலங்களில் எல்லா மாநிலங்களிலுமே பெண்கள் தான் வேலை செய்கிறார்கள். வேலை செய்யும் ஆண்களைப் பார்ப்பது கடினமாக இருந்தது. எந்தக் கடையைப் பார்த்தாலும் கடைகளைப் பார்த்துக் கொள்வது பெண்கள் தான். சில காய்கறிக் கடைகளில் ஆண்கள் இருந்தார்கள் – ஆனால் அந்தக் கடைகளை வைத்திருப்பது வெளி மாநில ஆட்கள் – அதாவது பீஹார் மாநிலத்தவர்கள்.  முன்பெல்லாம் மலையாளிகள் எல்லா மாநிலங்களிலும்/நாடுகளிலும் சென்று வசிப்பார்கள் என்று சொல்வது போல, இப்போது பீஹார் மாநிலத்தவர்கள். எங்கும் அவர்கள் இருக்கிறார்கள்.

முதுகுக் குழந்தையை திரும்பிப் பார்க்கும் அம்மா....... 
இவரும் கடை வைத்திருப்பவர் தான்...

பெண்கள் தான் இங்கே குடும்பத்தினை தாங்குகின்ற தூண்கள்.  வீட்டு வேலைகளையும் முடித்துவிட்டு, கைக்குழந்தைகளை முதுகில் கட்டிக் கொண்டு கடைகளுக்கு வியாபாரம் செய்ய வந்து விடுகிறார்கள்.  ஒரு சில கடைகளில் இப்படி இருக்கும் பெண்களைப் பார்க்கும்போது அவர்கள் எத்தனை கடின உழைப்பாளிகளாக இருக்க வேண்டியிருக்கிறதே என்று மனதுக்குள் தோன்றியது.  குறிப்பாக ஒரு பெண், வியாபாரத்தினை கவனித்தபடியே முதுகில் கட்டி இருக்கும் குழந்தை விழித்திருக்கிறானா, தூங்குகிறானா என்று பார்த்தபடியே இருந்தார். 

கடைத்தெருவில் நடக்கும் போது....

நாகாலாந்து நகரில் ஓர் இரவு, ஒரு பகல் மட்டுமே தங்குவதாக எங்கள் திட்டத்தினை அமைத்திருந்தோம்.  வந்த இடத்தில் ஞாபகார்த்தமாக எதையும் வாங்குவது எங்களுக்கு பழக்கமில்லை. குறிப்பாக ஷாப்பிங் செய்வதற்காகவே கடைத்தெருப் பக்கம் போவது எப்போதுமில்லை. சரி வந்திருக்கிறோமே எதையாவது வாங்கலாம் என்று பார்த்தால் காய்கறி, கருவாடு கடைகள் தவிர மற்ற கடைகள் மூடி இருந்தன. கடைத் தெருவை அப்படியே சுற்றி வந்தோம்.  சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம். 

முதுகுக் கூடையோடு கடைத்தெருவிற்கு....

நாகாலாந்து – கொஹிமாவில் பார்த்த இன்னுமொரு விஷயத்தினையும் இங்கே சொல்ல வேண்டும்.  நமது ஊரில் கடைத்தெருவிற்குச் சென்றால் மஞ்சப் பை, கட்டைப் பை என ஏதோ பைகளை எடுத்துச் செல்கிறோம், இங்கே முதுகில் ஒரு மூங்கில் கூடையைக் கட்டிக் கொண்டு வந்து விடுகிறார்கள்.   வாங்குவதையெல்லாம் முதுகுக் கூடையில் போட்டுக்கொண்டு சுமந்து செல்கிறார்கள்.  சிலிண்டரைக் கூட இப்படி முதுகுக் கூடையில் வைத்து எடுத்துச் செல்லும் ஒரு பெண்மணியைப் பார்க்க முடிந்தது. படம் தான் எடுக்க முடியவில்லை..

கடைத்தெருவிற்கு வந்திருந்த ஒரு மூதாட்டி....

வாகனம் நிறுத்தி இருக்கும் இடத்திற்கு வந்தால் அதன் அருகே ஒரு விளையாட்டு மைதானம்...  பொதுவாகவே வடகிழக்கு மாநிலங்களில் கால்பந்து, குத்துச் சண்டை ஆகிய விளையாட்டுகள் பிரபலம்.  ஆனால் அந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. கிரிக்கெட் பூதம் இங்கேயும் வந்துவிட்டதைப் பற்றி பேசியபடியே வாகனம் நோக்கி நகர்ந்தோம். அடுத்ததாய் பயணித்தது எங்கே என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

20 கருத்துகள்:

  1. நல்லாத்தேங்... இருக்கு நாகாலாந்து!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  2. நாகாலாந்து கடைத்தெரு நன்றாக இருக்கிறது.
    முதுகில் சுமப்பது தான் அவர்களுக்கு நல்லது,மலை ஏறுவது போல் இருக்கும் இடங்களுக்கு அது வசதி.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலைப்பகுதியில் இது தான் நல்லது..... சிலிண்டர் கூட அப்படித் தூக்கிப் போவது கொஞ்சம் கடினம் என்று தோன்றுகிறது..

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  3. முதுகில் கூடையோடு போவதும் நல்லாத்தான் இருக்கு சுமை தெரியாது...

    ஜி இன்றைய பதிவு நான் முருங்கைக்காய் நீங்க உப்புக்கருவாடு புகைப்படங்கள் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்ல... அங்கே முருங்கை இங்கே கருவாடு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  4. காய்கறிகள் (மட்டும் இருக்கும்) படம் கண்களை நிறைக்கிறது! தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்காகவே அந்த படத்தினை பதிவில் சேர்த்தேன் ஸ்ரீராம்... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. அவர்களின் சாலை பண்பாடு அருமை...இங்கும் அது போல் இருந்தால்...ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாலைப் பண்பாடு - அனைத்து இடங்களிலும் இருந்தால்.... நல்லது தான்.ஆனால்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

      நீக்கு
  6. மறக்க முடியாத மார்க்கெட் காட்சிகள். தொடர்கிறேன் அம்மக்களில் வாழ்வு முறையில் முன் நிறுத்தப்படுவதும் பெண்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்வு முறையில் ஆண்களுக்கே முதலிடம் என்பது தான் நான் அறிந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  7. சின்ன வயதில் இந்த மாதிரி அடுப்பு பார்த்திருக்கிறேன் . இதில் குமுட்டி அடுப்பை விட சீக்கிரம் நெருப்பு பிடித்துக் கொள்ளும் ஆனால் தீ வெளி வழியாகவும் பரவுவதால் கரி சீக்கிரம் தீர்ந்து விடும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த அடுப்பு பற்றிய மேலதிகத் தகவல்களுக்கும் மிக்க நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி..

      நீக்கு
  8. ஆஹா... ஒரே கருவாட்டு மயமா இருக்கே...

    படமும் பகிர்வு அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்கும் போதே பிடிச்சுடுச்சா குமார்.... பார்த்து ரசியுங்க!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே.குமார்.

      நீக்கு
  9. முதுகில் பை சுமந்தபடி பொருட்களை வாங்கிச் செல்வது வித்தியாசம்தான்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. // சரி வந்திருக்கிறோமே எதையாவது வாங்கலாம் என்று பார்த்தால் காய்கறி, கருவாடு கடைகள் தவிர மற்ற கடைகள் மூடி இருந்தன//

    அதற்குப் பதிலாகத்தான் புகைப்படம் எடுத்து வந்துவிட்டீர்களே!

    இரசித்தேன்! தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....