எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, July 9, 2016

நாய் நேசன் – நாய்க்காகவே வாங்கிய கடன்......

படத்தில் இருப்பது இந்தப் பகிர்வில் சொல்லி இருக்கும் நண்பர் இல்லை...
இது வேறு நண்பர், வேறு இடம்.....
படம் எடுத்த இடம்: ஷிங்சூ, அருணாச்சலப் பிரதேசம் 

பசு நேசன் ராமராஜைத் தெரியும், நாய் நேசன் யாரு?  ஒருவேளை “நாய்கள் ஜாக்கிரதைபடத்தில் நடித்த சிபிராஜோ? சிபிராஜ் – நாய்கள் ஜாக்கிரதை என்ற படம் பெயர் நினைவில் வந்தாலும், அப்படத்தில் நடித்த [?] இவர் பெயரே மறந்து போய் இணையத்தில் தேடி எடுக்க வேண்டியிருந்தது.... அவர் நடிப்பு அப்படி என்று சொல்வதை விட, சினிமா பற்றிய எனது அறிவு அப்படி என்று தான் நான் சொல்ல வேண்டும்! இன்றைக்கு பார்க்கப் போகும் கதை மாந்தர் அந்த அளவு பிரபலமல்ல....  அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு நபரைப் பற்றியது தான் இந்தப் பகிர்வு.

எனது அலுவலகத்தில் ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கு நாய்கள் மேல் அதீதமான பாசம் – அதுவும் தெரு நாய்கள் மீது ரொம்பவுமே பாசம் அதிகம். மாலை நேரங்களில் வீட்டில் இருப்பதை விட்டு தெருவில் தான் இருப்பார். அவரது வீடு இருக்கும் பகுதியில் இருக்கும் கறிக்கடைக்காரர்களிடம் சொல்லி வைத்து இந்த தெரு நாய்களுக்காகவே கிலோ கணக்கில் இறைச்சி வாங்கி வந்து அவற்றை தெருவில் இருக்கும் நாய்களுக்கு உணவாக அளிப்பது இவரது வழக்கம்.

நல்ல விஷயம் தான்.  தெரு நாய்களுக்கு உணவளிப்பது நல்ல விஷயம் என்றாலும் இப்படி எல்லா நாளும் இறைச்சி வாங்கி அளிக்க நிறைய செலவாகுமே – அதை எப்படி சமாளிப்பது?  சம்பளத்தில் ஒரு பகுதி தெரு நாய்களின் கவனத்திற்கே, அவர்களின் உணவிற்கே செலவானது.  நடுவே ஒரு நாய்க்கு ஏதோ உடல் நிலை சரியில்லாமல் போக, அந்த தெரு நாயை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கே அதற்கு எல்லாவித சோதனைகள், ஸ்கான், ஊசி என நிறையவே செலவு – ஸ்கானுக்கு மட்டுமே 2000 ரூபாய்க்கு மேல் கொடுத்திருக்கிறார் இவர். 

நாள்பட, நாள்பட, இவரால் கவனிக்கப்படும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. இவர் இப்படி இரவில் தெரு நாய்களுக்கு கறி வாங்கிப் போட்டுக் கொண்டிருக்க, அவர் வீடு இருக்கும் பகுதியில் நிறைய தெரு நாய்கள். அவற்றால், அந்த ஏரியாவில் தங்கி இருக்கும் மற்ற நபர்களுக்குத் தொல்லை – இவரைத் தவிர மற்ற யாரைப் பார்த்தாலும் தெருநாய்கள் ஒரு குழுவாக குலைக்க ஆரம்பித்து விடும்.  இதில் யாரையாவது கடித்து விட்டால் இவர் தலை தான் உருளும்.  போலவே எந்த நாய் குட்டி போட்டாலும், இவரிடம் வந்து தகவல் சொல்ல ஆர்ம்பித்தார்கள் – எங்க வீட்டுக்குப் பக்கத்தில நாய் குட்டி போட்டு இருக்கு. வீட்டுக்கு வர போக கஷ்டமா இருக்கு, எல்லாம் உன்னால தான் – அந்த நாயை நீயே விரட்டறியா இல்லை நாங்கள் எல்லாம் சேர்ந்த் உன்னை விரட்டவா? என்ற மிரட்டல்களும். 

தொடர்ந்து தெரு நாய்களுக்காக செலவு செய்வது என்பது – அதுவும் தனி ஒருவராய் இப்படிச் செலவு செய்வது கொஞ்சம் கடினமான விஷயம்.  சேமிப்பு எல்லாம் செலவாகிவிட, நாய்களுக்கு இறைச்சி வழங்குவதற்காகவே அவர் வங்கிகளில் கடன் வாங்க ஆரம்பித்தார் – அதுவும் Personal Loan – இந்த வகைக் கடன்களுக்கு அதிகமான வட்டி செலுத்த வேண்டியிருக்கும் என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.  அப்படி கடன் வாங்கி செலவு செய்து, அதைத் திரும்பக் கட்ட முடியாமல் போனதும், அந்தக் கடனை அடைக்க வேறு ஒரு வங்கியில் இன்னும் அதிகக் கடன் வாங்குவார்...... ஒரு சமயத்தில் வங்கிக் கடன் மிகவும் அதிகமானது. கடைசியாக ஐந்து லட்சம் ரூபாய் Personal Loan வாங்கினார்.

நாய்களுக்கு உணவளிப்பதை அவரது மனைவி ஆட்சேபிக்கவில்லை என்றாலும், செலவைக் கட்டுப் படுத்தச் சொல்லி அவர் ஆட்சேபம் செய்திருக்கலாம்.  இவரும் செலவு பற்றி மனைவியிடம் சொல்வதே இல்லை.  இருவரும் சம்பாதிக்கிறார்கள் என்பதால், இந்த அதிக செலவு பற்றி மனைவிக்குத் தெரியாமலேயே இருந்திருக்கிறது. மாதத்திற்கு இருபதாயிரம் இருபத்தி ஐந்தாயிரம் வரை இறைச்சிக்கும் வங்கிக் கடனை திருப்பவுமே செலவு! இவரது மொத்த வருமானமே நாற்பதாயிரம் தான்.  ஒரு கட்டத்தில் விழி பிதுங்கி நிற்க, மனைவிக்கு இத்தனை கடன் இருப்பது தெரிய வந்தது. வீட்டில் பிரச்சனையும் ஆரம்பித்தது.

நாய்களின் மேல் பாசம் வைப்பது பிடித்த விஷயமாக இருக்கலாம், அதற்காக இப்படி கடன் வாங்கியாவது உணவளிப்பது நல்ல விஷயமாக இல்லையே என்று மனைவி அவரைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார். அலுவலகத்திற்கு வந்த பின்னும் ஏதோ ஒரு வங்கியிலிருந்து கடனைக் கேட்டு அழைப்பு வந்த வண்ணமே இருக்கும். நாய்களுக்கு உணவளிப்பது, அவற்றை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கான் எடுப்பது ஆகியவற்றை வைத்து இவரை சக பணியாளர்கள் அனைவருமே கிண்டல் செய்வதும் உண்டு. கடன் அதிகமாக இருப்பது தெரிந்த பிறகு அவரை நினைத்துப் பரிதாபப் படுவதா அல்லது கோபப்படுவதா என்று புரியவில்லை.

நாய்களுக்கு உணவளிப்பதைக் படிப்படியாக குறைத்து, முடிந்த அளவு கடன்களை அடைத்திருக்கிறார் இப்போது. சுமார் ஒரு லட்சம் வரை இப்போதும் கடன் இருக்கிறது. மாதத்திற்கு ஏழாயிரம் வரை இறைச்சிக்கு இப்போதும் செலவு செய்கிறார் – வேகவைத்த இறைச்சியே கிடைக்கிறதாம் – கடையில் வாங்கி அந்த ஏரியாவில் இருக்கும் நாய்களுக்குப் போட்டு விட்டு வீடு செல்கிறார் – அதுவும் மனைவிக்குத் தெரியாமல்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் இவருக்கு மகன் பிறந்திருக்கிறான் –கல்யாணம் முடிந்து எட்டு வருடங்களுக்குப் பிறகு...  உங்கள் மகனின் படிப்பிற்கும், அவனது வளர்ப்பிற்கும் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். தெரு நாய்கள் மேல் பாசம் வைப்பதில் தவறில்லை, ஆனால் “தனக்கு மிஞ்சி தான் தான தர்மம்”, அதுவும் கடன் வாங்கி தர்மம் செய்வது நிச்சயம் தகாத செயல் என்றெல்லாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம் – ஒவ்வொரு முறை வீடு செல்லும் போதும் அவர் மனைவி இவரைப் பற்றி புலம்புவதால்.....

இப்படியும் சில மனிதர்கள்....... 

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

30 comments:

 1. அளவுக்கு மிஞ்சினால்....?

  இவர் மட்டும் தனியாக செய்ய நினைக்காமல் கூட்டு முயற்சியாக இன்னும் சிலரைச் சேர்த்துக் கொண்டிருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. அதே தான். ஒத்த கருத்துடையவர்களுடன் சேர்ந்து இந்தப் பாதையில் பயணிப்பது நல்லது. இல்லையேல் தொல்லைகள் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  2. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. இவ்வாறான நிலையில் என் நண்பர் ஒருவர் இருக்கிறார். திருத்த முயற்சித்தேன், தோற்றுவிட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. அவர்களாகவே உணர்ந்து கொண்டால் தான் உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 3. உண்மையில் முழுமையாக பாராட்ட முடியவில்லை. அவர் நாய் காப்பகம் நடத்தலாம்.

  ReplyDelete
  Replies
  1. நாய் காப்பகம் - நல்ல ஐடியா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 4. தனது கொள்கையில் விடாப்பிடியாக இருக்கின்றார்..
  ஆனாலும் குடும்ப சூழ்நிலை கருதி அனுசரித்து தான் நடந்து கொள்ளவேண்டும்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 5. குடும்பம் முதன்மையானதுதானே....

  ReplyDelete
  Replies
  1. குடும்பமே முதன்மை.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 6. அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத உதவி மனபான்மை வேண்டும்.
  நாய்க்கு பிஸ்கட் போடலாம், கறி வாங்கி போட்டு அது பிறரை கடித்தால் இன்னும் மோசம் அல்லவா?

  உயிர்களின் மேல் இரக்கம் வேண்டும் தான், ஆனால் கடன் வாங்கி செய்வது அதிகப்படி.

  மதுரையில் சார் தினம் காலையில் நடைபயிற்சி செல்லும் போது காலை 6.30க்கு ஒருவர் ஒரு வாளி நிறைய கறி கொண்டு வருவராம், அங்கு காத்து இருக்கும் 10, 15 நாய்களுக்கு போட்டு செல்வாராம்.. உங்கள் பதிவை படித்தவுடன் அவர் நிலை வீட்டில் என்னவோ என்ற நினைப்பு வருகிறது.

  வலங்கைமான் பக்கம் பாடகச்சேரி என்ற ஊரில் ராமலிங்க சுவாமிகள் என்று ஒருவர் இருந்தார் அவர் நாய்களுக்கு தினம் இலை போட்டு சாப்பாடு வைப்பாராம். அவர் இலை போட்டவுடன் எத்தனை இலை போட்டாரோ அத்தனை நாய்கள் வந்து இலை முன்பு அமர்ந்து சண்டை இடாமல் சாப்பிட்டு செல்லுமாம். அவர் தபோவனத்திற்கு சென்று வந்தோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 7. அவர் இந்த பணியை குழுவாக சிலருடன் சேர்ந்து செய்தால் பிரச்சினை குறையும் ..spca ,போன்றோர் உதவி கிடைக்கலாம் .

  ReplyDelete
  Replies
  1. அப்படியும் சொல்லிப் பார்த்தோம். யாரையும் கூட்டுச் சேர்த்துக் கொள்ள அவருக்கு இஷ்டமில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.

   Delete
 8. விசுவாசம் உள்ளது நாய் என்றாலும் ,இவரது மனைவி ,பிள்ளைக்கும் நாய் சோறு போடுமா :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 9. ஆச்சரியமான மனிதர்தான். ஆனாலும் கடன் வாங்கி தெருநாய்களுக்கு இறைச்சி வாங்கிப் போடுவது என்பது சற்று ஓவராகத்தான் தெரிகிறது.

  நானும் எங்கள் வீதியில் உள்ள தெரு நாய்களை நேசிப்பவன். பிஸ்கட், ரொட்டி, வருக்கி என்று தினமும் வாங்கிப் போடுகிறேன். இதனால் என்னை நேரடியாக திட்டியவர்களும், என் கண்ணெதிரிலேயே வேண்டுமென்றே நாய்களை கல்லால் அடித்தவர்களும் உண்டு. நான் யாரையும் ஒன்றும் சொல்வதில்லை. இந்த நாய்கள் இருப்பதால் இரவில் சாலையில் பாம்புகள் நடமாட்டமும், முகம் தெரியாத அன்னியர்கள் ஊடுருவலும் இல்லை. நாய்கள் இறந்தால் அவற்றை எடுத்து ஊருக்கு வெளியே அடக்கம் செய்ய கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கு செலவு செய்வதும் நான்தான். இவை யாவும் ஒரு தகவலுக்காக மட்டும்தான்.

  ReplyDelete
  Replies
  1. உயிரினங்கள் மீது பாசம் வைப்பதில் தவறில்லை தான். கடன் வாங்கியாவது அவற்றுக்குத் தீனி கொடுப்பது, நீங்கள் சொன்ன மாதிரி சற்று ஓவராகத் தான் இருக்கிறது....

   உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 10. அவர் மனைவிக்கு ரொம்ப கஷ்டம் தான். என்ன செய்ய முடியும்?
  அவரே தான் நாய் செலவை கொஞ்சம் குறைக்க வேண்டும். விதவிதமான மனிதர்கள்.
  சுதா த்வாரகாநாதன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

   Delete
 11. தனக்கு மிஞ்சியதுதான் தருமம் என்பதை மறந்துவிட்டார் போலிருக்கிறது! இப்படி தெருநாய்களை வளர்த்துவிட்டால் போகிற வருகிறவர்களை எல்லாம் கடித்து அவரை இன்னும் கஷ்டப்பட வைக்கும்! இப்போதாவது திருந்தினாரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 12. விலங்குகளை நேசிப்பது தவறில்லை விஜயவாடாவில் நாங்கள் இருந்த போது என் மகன் பின்னே ஒரு நாய்ப்பட்டாளமே வரும் இவனுக்குத் தின்னக் கொடுப்பதை நாய்களுக்குப் போடுவான் இப்போது அவன் மகனும் அதேபோல் இருந்தாலும் எதையும் ஒரு கட்டுக்குள் வைப்பதே சிறந்தது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 13. வித்தியாசமான மனிதர்தான். ஆனால் இது கொஞ்சம் அதீதமாக இருக்கிறது. அவருடைய எண்ணம் மிகச் சிறந்தது ஆனால் அதை முறைப்படுத்தி காப்பகம், அல்லது விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு, குழுவாகச் செயல்பட்டால் அவருக்கும் திருப்தி உண்டாகும், வீட்டிலும் பிரச்சனைகள் வராது. என்னதான் உதவ நினைத்தாலும் நம் வாழ்க்கையையும் பார்த்துக் கொள்ள வேண்டுமே..

  நாங்களும் உதவுவது உண்டு ஆனால் ஒரு கட்டுப்பாடு உண்டு...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். ஒத்த கருத்துடைய நபர்களோடு கூட்டு சேர்ந்து நல்ல விஷயத்தினை தொடரலாம். அவருக்கும் நல்லது அவரது குடும்பத்தினருக்கும் நல்லது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 14. தனக்கு மிஞ்சி தான் தான தருமம் என்பதை அவர் ஒருவேளை மறந்திருக்கலாம். ஆனால் அவர் மனைவி ஆரம்பத்திலேயே கண்டித்திருக்கலாமே? உண்மையில் இவர் ஒரு வித்தியாசமான் மனிதர் தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....