எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, August 13, 2016

காசிரங்கா – ஜீப் சஃபாரி – துரத்திய யானைஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 35

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான Drop Down Menu.....

 


காசிரங்கா – மிஹிமுக் நுழைவாயில்...

காலை உணவை முடித்துக் கொண்ட பிறகு மீண்டும் எங்கள் பயணம் துவங்கியது. இம்முறையும் பயணம் காசிரங்கா வனத்திற்குள் தான். அதிகாலையில் யானையில் சவாரி செய்தோம் என்றால் இம்முறை சவாரி அதாவது சஃபாரி – ஓட்டுனர் ராய் அவர்களுடைய ஜீப்பில்.  லாவகமாக வண்டியை தேசிய நெடுஞ்சாலை வழியே செலுத்தி வனத்தின் மற்றொரு நுழைவாயிலான மிஹிமுக் [Mihimukh] வாயிலுக்கு அழைத்துச் சென்றார். நுழைவாயில் கேட்டில் மிக அழகாய் திறக்கும் நேரமும் மூடும் நேரமும் வரைந்து வைத்திருக்கிறார்கள்.


முதுகில் கூடையோடு தேயிலை பறிக்கப் போகும் பெண்கள்...


வனத்திற்குள் போவதற்குத் தயாராக.....

வாயிலில் இருக்கும் வன இலாகா அலுவலகத்தில் வனத்தினுள் நுழைவதற்கான கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டு வருகிறார் ஓட்டுனர் ராய். அதற்குள் நுழைவாயிலில் ஜீப்பில் நின்றபடி சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம். வனத்திற்குள் செல்வது எப்போதுமே மிகவும் பிடித்தமான ஒன்று. இதுவரை இந்தியாவின் மூன்று நான்கு மாநிலங்களில் வனப்பயணம் செய்துள்ளேன் என்றாலும் ஒவ்வொருமுறை வனத்தினுள் செல்லும்போதும் ஒருவித மகிழ்ச்சியும் குதூகலமும் மனதில் உண்டாகும்.  இன்னும் அலுப்பு வரவில்லை. தொடர்ந்து வனப்பகுதிக்குள் செல்லும் ஆவல் உண்டு!


வனப்பாதை.....


யானையும் குட்டிகளும்....


மான் கூட்டம்.....

வனப்பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறோம். காட்டுக்கு வெளியே தார் சாலைகள் என்றாலும் வனத்தினுள் எப்போதும் மண் சாலைகள் தான். இரண்டு புறமும் மரங்கள் வரிசையாக இருக்க, ஜீப்பில் சவாரி செல்வது ஒரு வித சுகானுபவம். சாலையின் இரு பக்கங்களிலும் பார்வையைச் செலுத்தி மிருகங்கள் தெரிகிறதா, பறவைகள் தெரிகிறதா எனப் பார்த்தபடியே செல்ல வேண்டும். ஓட்டுனர் ராய் அவர்களும் சுற்றிலும் பார்த்தபடியே வந்தார். எங்காவது கண்களுக்குப் புலப்பட்டால் உடனே வாகனத்தினை நிறுத்தி மிருகங்களைச் சுட்டிக் காட்டுவார். நுழைந்த சில நிமிடங்களுக்குள் ஒரு யானையும் இரண்டு குட்டி யானைகளும் பக்கத்து நீர்நிலையில் நின்று கொண்டிருந்தன. சற்றே தூரத்தில் ஒரு மான் கூட்டம் அமர்ந்திருந்தது.


நீர்ப் பறவைகள்.....


காட்டு எருமைக் கூட்டம்


மரப்பாலம்...

வனத்திற்குள் நிறைய நீர் நிலைகளும், சிற்றோடைகளும் உண்டு. அதனைக் கடப்பதற்கு மரக்கட்டைகளால் பாலங்கள் அமைத்திருப்பார்கள். அதன் மேல் ஜீப்பில் பயணிக்கும் போது வரும் சத்தம்.... அப்பப்பா, நெஞ்சில் கொஞ்சம் பயமும் வரும்.....  எடை தாங்காது உடைந்து விடுமோ? என்ற பயமும்! ஆனாலும் அப்படி எல்லாம் ஆகாது என்ற நம்பிக்கையும் வந்து சேரும். பயணித்தபடியே இருந்தோம். ஒரு பக்கத்தில் காட்டு எருமைகள் கூட்டமாக நின்று மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தது. வனப்பாதையில் நிறுத்தி சத்தமில்லாமல் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.


ஒற்றை யானை...


யானை மேல் சவாரி செய்யும் பறவைகள்....

இந்தப் பகுதியில் நிறைய காட்டு யானைகளும் உண்டு.  யானைச் சவாரி செய்ய பயன்படும் யானைகள் பழக்கப்பட்டவை என்றால் இவைகள் தன்னிச்சையாக சுற்றுபவை. கூட்டமாக இருக்கும் யானைகளை விட, ஒற்றையாக திரியும் யானைகளிடம் சற்றே கவனமாக இருக்க வேண்டும். இப்படி நிறைய ஒற்றை யானைகளை இங்கே பார்க்க முடிந்தது. எருமைக் கூட்டம் பார்த்த சிறிது நேரத்திற்குள்ளேயே நன்கு வளர்ந்திருக்கும் யானைப் புற்களின் நடுவே ஓர் ஒற்றை யானையைப் பார்க்க முடிந்தது. மற்றொரு இடத்தில் ஒரு யானை மீது பறவைகள் அமர்ந்து சவாரி செய்து கொண்டிருந்தன.


ஒற்றை மரம்....


அமைதியான நீர்நிலை....


நீர்நிலை அருகே மேய்ந்து கொண்டிருக்கும் காண்டாமிருகம்

வழி நெடுக பயணிக்கையில் பக்கவாட்டில் நீர்நிலைகளையும் காண முடியும். வனத்தில் இருக்கும் மிருகங்களுக்குத் தண்ணீரும் வேண்டுமே.  அந்த நீர்நிலைகளின் அருகே சில மான்களையும் சில நீர்ப்பறவைகளையும் காண முடிந்தது. பெரும்பாலான வனங்களில் மற்ற மிருகங்களை விட மான்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கின்றன. இங்கேயும் அப்படியே. காட்டுச் சேவல்களையும், பல்வேறு பறவைகளையும் இங்கே காண முடிந்தது. நாம் பயணிக்கும் ஜீப் மிக குறைந்த வேகத்தில் செல்ல, ஒவ்வொரு விலங்குகளையும் பார்த்துப் பார்த்து, ரசித்து, புகைப்படம் எடுத்துப் பயணிப்பது நல்லதோர் அனுபவம். அனைவரும் சென்று வர வேண்டிய பயணம்.


வனத்தில் எங்களுக்கு முன்னே செல்லும் ஜீப்.....


Watch Tower மேலே ஒரு நண்பர்

வனத்தில் ஜீப் மூலம் பயணிக்கும் போது யானைச்சவாரி போல மிருகங்களுக்கு வெகு அருகில் செல்ல முடியாது. சற்று தொலைவில் இருந்தே பார்க்க வேண்டியிருக்கும். இந்த ஜீப் பயணத்திலும் அப்படித்தான். காண்டாமிருகங்களையும், மற்ற விலங்குகளையும் 50/100 மீட்டர் இடைவெளியில் தான் பார்க்க முடிந்தது.  சில இடங்களில் வனத்துறையினர் Watch Tower அமைத்திருக்கிறார்கள். அங்கே நின்றபடி வனத்தின் பல பகுதிகளையும் காண முடியும். வனத்தினுள் செல்லும்போது கேமரா மறக்காது எடுத்துக் கொள்வதைப் போலவே நல்லதொரு Binocular எடுத்துச் செல்வதும் நல்லது. இம்மாதிரி Watch Tower லிருந்து Binocular மூலம் விலங்குகளைக் காண்பது எளிது.


சாலையைக் கடக்கும் மான்கள்....

இப்படி ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டு வந்தோம். ஒரு இடத்தில் பெரிய யானை ஒன்று சற்று தூரத்தில் இருக்க, அதைப் புகைப்படம் எடுக்கும் நோக்கத்தில் ஓட்டுனர் ராய் அவர்கள் வண்டியை நிறுத்தினார். சற்று தொலைவில் தான் நின்றிருந்தது அந்த ஆண் யானை. ஓட்டுனர் ராய் வாகனத்திலிருந்து கீழே இறங்கி, சக்கரத்தில் காற்று இருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டிருந்தார். நாங்கள் ஜீப்பின் மேல் நின்றபடி காமிராவில் கோணம் பார்த்துக் கொண்டிருந்தோம். சத்தம் எதுவுமே போடவில்லை என்றாலும், அந்த யானைக்கு நாங்கள் இருப்பதும், கவனிப்பதும் தெரிந்துவிட்டது.


காண்டாமிருகம் – Zoom போட்டு ஒரு க்ளோஸ் அப்....

நாங்கள் புகைப்படம் எடுப்பதற்குள் அப்படி ஒரு வேகத்தில் எங்கள் வாகனம் நோக்கி ஓடி வந்தது. ஓட்டுனர் ராய் கீழே அமர்ந்திருக்க, அவருக்கு யானை ஓடி வருவது தெரியவில்லை. அவரை அவசரமாய் விளித்து யானை வருவதைச் சொல்ல, சில நொடிக்குள் வாகனத்தினை அங்கிருந்து விரைவாகச் செலுத்தினார். சற்று தொலைவு வரை வாகனத்தின் பின்னே ஓடி வந்தது அந்த யானை! அது துரத்த நாங்கள் வாகனத்தில் ஓட..... ஒரே ரகளை. இந்த களேபரத்தில் புகைப்படம் எங்கே எடுப்பது! அதுவும் பின்புறம் திரும்பி எடுக்க வேண்டும்!நீர் அருந்தும் மான்....

இது நடந்த பின்னர் மேலும் சில மான் கூட்டங்களையும், காண்டாமிருகங்களையும் பார்த்து வனத்தினுள் இருக்க வேண்டிய நேரத்தினை முடித்துக் கொண்டு வெளியே வந்தோம்.  மொத்தத்தில் இந்த வனத்திற்குள் இரண்டு முறை சென்று வந்து பல மிருகங்களையும் பார்த்து வந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.  அடுத்ததாய் என்ன வனத்திற்குச் செல்லலாம் என்ற மனவோட்டத்துடன் திரும்பினோம். அதற்கு பிறகு எங்கே பயணித்தோம், என்ன செய்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.....

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.20 comments:

 1. பரபரப்பான நிமிடங்கள்..
  நல்லவேளை..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. பரபரப்பான நிமிடங்கள் - உண்மை தான். ஒரு சில நொடிகளில் தப்பித்தோம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 2. சுவாரஸ்யம். யானையால் துரத்தப்பட்ட போது திகில் எப்படி இருந்தது?

  ReplyDelete
  Replies
  1. திகில் தான். தப்பித்து விடுவோம் என்ற நம்பிக்கை ஓட்டுனர் ராய் அவரது இருக்கையில் வரும் வரை இல்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. காசிரங்கா சென்று பார்க்க வேண்டும் எனக்கு ஸ்கூல் படிக்கும் பொது ஆசை இருந்தது . அவ்வளவு தூரம் நடக்கணும் என்று புரிந்ததும் மனம் மாறி விட்டது . பரவாயில்லை ஓசியிலேயே பார்த்துவிட்டேன் .

  ReplyDelete
  Replies
  1. இப்போதெல்லாம் உள்ளே செல்ல அவ்வளவு நடை இல்லை..... அதுவும் ஜீப் சஃபாரி என்றால் நடையே இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 4. படங்களுடன் பதிவு
  மிக மிக் அருமை
  உடன் பயணிக்கிற திருப்தியை
  தருகிற அளவு மிகச் சிறப்பாகச்
  சொல்லிச் சென்றதுமனம் கவர்ந்தது
  பகிருக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 5. யானை துரத்தியதா? செம த்ரில் போல! அழகான படங்கள் வனத்தின் அழகை கூட்டியது! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 6. வனத்தில், வாகன வலம் நாங்களும் சென்று வந்தது போலிருக்கிறது :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 7. ஒருமுறை நீலகிரிக்குக் காரில் சென்று திரும்பும்போது வரும் பாதையில் ஒருஒற்றைக்காட்டு யானை நின்றிருந்தது சற்றுத் தொலைவில் இருந்தே பார்த்து விட்டதால் வண்டியை நிறுத்தி யானாஇ போகும் வரை காத்திருந்தோம் நல்ல வேளை யானை எங்களைக் கண்டுகொள்ளவேயில்லை எதேச்சையான பயம் நிறைந்த அனுபவம்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அனுபவத்தினையும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 8. த்ர்ல்லிங்கான அனுபவம் அதுவும் யானை கடைசில துரத்தினது...அம்மாடி ..படிக்கவெ பயமா இருந்ததே ,..

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். அதுவொரு மெய்சிலிர்க்க வைத்த அனுபவம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷைலஜா ஜி!

   Delete
 9. 'படங்கள் நன்றாக இருக்கு. அனுபவமும் நன்றாக இருந்திருக்கும். இந்த மாதிரி வனங்களில், மிருகங்களுக்கு உப்பு வேண்டும் என்று, சில இடங்களில் உப்பை மூட்டை மூட்டையாகத் தூவி வைத்திருப்பார்கள்.

  ஓட்டுனர், சமயத்தில் வண்டிக்குள் வராமல் இருந்திருந்தால், ஜுராசிக் பார்க் அனுபவம் கிடைத்திருக்கும். இந்த மாதிரி அவசர அவசரமா வண்டில ஏறும்போது, அவசரத்துக்கு ஸ்டார்ட் செய்யக்கூட கை வராது. தப்பிச்சீங்க.

  ReplyDelete
  Replies
  1. இவ்வனத்தில் உப்பு தூவி இருந்ததைப் பார்க்கவில்லை.....

   ஓட்டுனர் மட்டும் வராமல் இருந்திருந்தால்!..... யோசித்துப் பார்த்தேன். என்ன செய்திருப்போம் என்று!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   Delete
 10. படங்கள் அழகு வெங்கட்ஜி. யானை துரத்தி நீங்கள் தப்பித்தது செம திரில் அனுபவம் தான் இல்லையா. பக் பக் என்று நொடியில் தப்பித்திருக்கிறீர்கள். நினைத்துப் பார்த்தால் நடுங்குகிறது...ஆனால் நீங்கள் நேரில் எப்படி இருந்திருக்கும்...

  இன்னும் சுவாரஸ்யங்கள் திகில்கள் இருக்கும் உங்கள் பயணத்தில் ...தொடர்கின்றோம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசித்ரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....