ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

பராய் மரமும் கல்யாணமும்


 பராய் மரம் - ஸ்தல விருக்ஷம்

திருப்பராய்த்துறை பற்றியும் அங்கே இருக்கும் பராய்த்துறைநாதர் கோவில் பற்றியும் முன்னரே சில முறை எனது பதிவில் எழுதி இருக்கிறேன். முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே...




பராய் மரத்தின் கீழே சிவலிங்கம்

அந்த ஊர் பற்றியும் சமீபத்திய பயணத்தின் போது எடுத்த சில புகைப்படங்கள் பகிரவும் மீண்டும் ஒரு பகிர்வு! பராய் மரம் தான் பராய்த்துறைநாதர் கோவிலின் ஸ்தல விருக்ஷம். அம்மையின் பெயர் பசும்பொன் மயிலாம்பிகை.  பாடல் பெற்ற ஸ்தலங்களில் திருப்பராய்த்துறையும் ஒன்று. நால்வர் தவிர அருணகிரிநாதரும் இத்தலம் பற்றி திருப்புகழில் பாடி இருக்கிறார். மிகவும் பழமையான கோவில் என்றாலும் மிகவும் குறைவான மக்களே இங்கே வருகிறார்கள் – பிரதோஷம் போன்ற விசேஷ நாட்களில் கொஞ்சம் அதிகமான மக்கள் வருகை உண்டு.   திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களில் இரண்டினைப் பார்க்கலாம்....

விடையும் ஏறுவர் வெண்பொடிப் பூசுவர்
சடையில் கங்கை தரித்தவர்
படைகொள் வெண்மழு வாளர்பராய்த்துறை
அடைய நின்ற அடிகளே.

தருக்கின்மிக்க தசக்கிரீவன்தனை
நெருக்கினார்விரல் ஒன்றினால்
பருக்கினார் அவர் போலும் பராய்த்துறை
அரக்கன்தன்னை அடிகளே.....

     திருஞானசம்பந்தர்....

பாடலுக்கான பொருளுரை:

திருப்பராய்த்துறையிற் பொருந்தி விளங்கும் இறைவர், விடையேற்றினை ஊர்ந்து வருபவர். வெண்மையான திருநீற்றைப் பூசுபவர். சடையின்மேல் கங்கையைத் தரித்தவர். வெண்மையான மழுவைப் படைக்கருவியாகக் கொண்டவர். 

திருப்பராய்த்துறையில் எழுந்தருளிய இறைவர், வலிமைமிக்க பத்துத் தலைகளை உடைய இராவணனைத் தம் கால்விரல் ஒன்றினால் நெரித்தவர். தக்கன் வேள்வியில் கதிரவனின் பற்களைத் தகர்த்தவர்.

டிஸ்கி: பொருளுரை – இணையத்திலிருந்து.....

சமீபத்தில் ஏதோ ஒரு தமிழ் இதழில் இந்தக் கோவில் பற்றியும் அங்கே ஸ்தல விருக்ஷமான பராய் மரம் பற்றியும் அந்த மரத்திற்கு பன்னிரெண்டு குடம் தண்ணீர் விட்டால் திருமணம் நடக்கும் என்றும் எழுதிய பிறகு தினம் தினம் வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது! இது ஒரு புறம் இருக்க, பராய் மரத்தின் இலை, குச்சி, பட்டை ஆகியவை மருத்துவ குணங்கள் உடையது என்பதால் சிலர் அதன் பட்டைகளையும் எடுத்துக் கொள்கிறார்கள்.  விரைவில் பட்டையை உரித்து மரத்தை பாழடிக்காமல் இருந்தால் சரி! ராசி மரங்கள் போலவே, நட்சத்திரங்களுக்குரிய மரங்களும் உண்டு. பராய் மரம் கேட்டை நட்சத்திரத்திற்கு உரிய மரம்.

சப்த கன்னியர்கள்


 நால்வர் அணி!

திருப்பராய்த்துறை கோவிலின் உள்ளே நாயன்மார்கள், சப்தகன்னியர்கள், கால பைரவர் ஆகியோருக்கும் பிரகாரத்தில் சிலைகள் உண்டு. சப்த கன்னியர்களை நினைவில் வைத்துக் கொள்ள ஏதுவாய் ஒரு பாடல் எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த பாடல் கீழே.....

நாமம் பிராம்மி மஹேஸ்வரியாம்
நன்மை செய்யும் கௌமாரி
சேமம் வளர்க்கும் வைஷ்ணவியும்
சீரார் தேவி வராஹியுமாய்
மேவும் தெய்வம் இந்திராணி
வீரசாமுண்டேஸ்வரியாம்
ஏமம் நமக்குச் செயவல்ல
எழுவர் – தம்மைப் பணிவோமே....

சரி இந்த ஞாயிறில் கோவிலில் எடுத்த சில சிற்பங்களின் படங்கள், மற்ற படங்களும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்......


வலம்புரி விநாயகர்


தக்ஷிணாமூர்த்தி


கங்காள மூர்த்தி


துர்கா லக்ஷ்மி


ஆறுமுகன் - வள்ளி தெய்வானையுடன்


தில்லையம்பலவாணன் - உலோகச் சிலை


கோவிலுக்கு வந்திருந்த எதிர்காலம்....


அடுக்கு நந்தியாவட்டை மொட்டுக்கள்


கொன்னைப் பூ மொட்டுகள்....

பாழடைந்த நிலையில் ஒரு சிற்பம்.... :(

என்ன நண்பர்களே, பகிர்வையும் படங்களையும் ரசித்தீர்களா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெஙகட்.
திருவரங்கத்திலிருந்து....


டிஸ்கி: படங்கள் மொபைல் கேமராவில் எடுத்தவை.....

28 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தகவல்களுடன் கண்ணைக் கவரும் படங்கள். குறிப்பாக நந்தியாவட்டை மொட்டுகள். பராய் மரம் என்பதை முதலில் பாய்மரம் என்று படித்தது மனம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாய் மரம்! ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. தகவல்கள் இக்கோயிலைப் பற்றி அறிய முடிந்தது. படங்கள் அருமை.குறிப்பாக மொட்டுகள் வெகு அழகு...பாய் மரம் என்று வாசித்துவிட்டோம் முடலில்...அப்புறம்தான் பராய்மரம் என்று வாசித்தோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நீங்களும் பாய்மரம் என வாசித்தீர்களா? :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  3. கோயில் உலாவின்போது பராய்த்துறை சென்றுள்ளேன். இருந்தாலும் தங்கள் பதிவின் வழியாக இன்று செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ நீங்களும் சென்றிருக்கிறீர்களா... மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  4. அழகான படங்களுடன் திருப்பராய்த்துறை தரிசனம் கண்டேன்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  5. போட்டோக்கள் சூப்பர். என்ன காமிரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய மொபைல் கேமராவில் எடுத்த படங்கள். LE ECO Mobile...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

      நீக்கு
  6. #பராய் மரம் பற்றியும் அந்த மரத்திற்கு பன்னிரெண்டு குடம் தண்ணீர் விட்டால் திருமணம் நடக்கும் என்றும் எழுதிய பிறகு தினம் தினம் வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது! #
    மக்களை வரவழைக்க எப்படி எல்லாம் ரீல் சுத்துறாங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரீலோ ரியலோ.... பிடித்தவர்கள் செய்து விட்டுப் போகட்டும். நம் வழி தனி வழி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  7. தம +
    வாவ் ..
    நல்ல பதிவு தோழர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.....

      நீக்கு
  8. இரண்டு வருடங்கள் முன்பு இந்த கோயிலுக்குச் சென்றிருந்தேன்! பராமரிப்பு கொஞ்சம் குறைவாகத்தான் உள்ளது. வெளிப்பிரகாரத்தில் ஒரு பள்ளி இயங்கி வருகிறது.பராய் மரம் கேள்விப்பட்டது இல்லை! ஆலயத்திற்கு சென்றபோது ஆச்சர்யத்துடன் பார்த்தேன். ஆலயங்களுக்கும் மார்க்கெட்டிங் செய்தால்தான் கூட்டம் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய கோவில். அரசின் கீழே இருப்பது. போதிய பராமரிப்பு இருப்பதில்லை. அங்கே உழைப்பவர்களுக்குக் கொடுக்கும் சம்பளமும் குறைவு. பராமரித்தால் நல்லது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  9. படங்கள் ஒவ்வொன்றும்கவிதையாய்அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. படங்கள் எல்லாம் அருமை. 'பராய் மரம்' என்றவுடன் வடகிழக்குப் பயணத்தில் பார்த்தவற்றைப் பற்றிய பதிவு என்று எண்ணிவிட்டேன். நமக்கு நம் வரலாற்றின் கலைப் பொக்கிஷங்களைப் பற்றிய பெருமை குறைவு.

    அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற சிலைகளுக்குக் கீழே 'நால்வர் அணி' என்று போட்டுள்ளதைப் பார்த்து சிரிப்பு வந்துவிட்டது. 'நால்வர் அணி' என்ற தலைப்பு, அதிமுக ஜெவின் தலைமைக்கு எதிராகக் கிளம்பின அணி அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் ஊரிலும் நிறைய விஷயங்கள் உண்டு. நமக்குத் தெரிவதில்லை.

      நால்வர் அணி! :) நான்கு பேர் என்பதால் தோன்றியது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    பலனுள்ள தகவல்களுடன், படங்களும், பதிவும் அருமை. பராய் மரம் இன்றுதான் கேள்விபடுகிறேன். நல்ல தகவல்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.எப்போதாவது அங்கு செல்லும் பாக்கியம கிடைத்தால் நன்று.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  12. திருப்பராய்த் துறைக்கு என் மனைவி சென்றிருக்கிறாள் அங்கு ஒரு ராமகிருஷ்ண மடம் இருப்பதாகக் கூறி இருக்கிறாள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராமகிருஷ்ண மடம், குடில் தவிர அவர்கள் நடத்தும் விவேகானந்தா பள்ளி, குருகுலம் போன்றவையும் அங்கே உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  13. படங்கள் அழகு அண்ணா...
    விபரம் அறியத் தந்தீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  14. அருமையான தகவல் தந்தமைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....