எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, August 29, 2016

போம்டிலா – மார்க்கெட் மூதாட்டி


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 42

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


சிங்ஷூவிலிருந்து போம்டிலா...


சிங்ஷுவிலிருந்து போம்டிலா....
வரைபடம்: இணையத்திலிருந்து....

காலை உணவை சிங்ஷூவில் முடித்துக் கொண்டு நாங்கள் தவாங் நோக்கி புறப்பட்ட அந்த காலை நேரத்திலேயே கொஞ்சம் குளிர் இருந்தது. தவாங் இன்னும் அதிக உயரத்தில் இருக்கும் ஒரு இடம். மார்ச் மாதத்திலும் அங்கே பனிப்பொழிவும் மழையும் இருக்கலாம். பனிப்பொழிவு இல்லை என்றாலும் குளிர் இருக்கும் என்று சிங்ஷூ நண்பர்களும் சொல்லி இருந்தார்கள். தில்லியில் இருப்பதால் குளிர் எனக்குப் பழகிய விஷயம் என்றாலும் இந்த மாதிரி இடங்களுக்குச் செல்லும்போது தகுந்த குளிர்கால உடைகளோடு செல்வது நலம்.  எங்கள் குழுவில் இருந்த ஆறு பேரில் ஐந்து பேரிடம் குளிர்கால உடைகள் இருந்தன என்றாலும் ஒருவரிடம் மட்டும் இல்லை.பயணித்த பாதை....
சிங்ஷுவிலிருந்து போம்டிலா....

முந்தைய நாள் ஓட்டுனராக இருந்த டோர்ஜிக்கு பதிலாக வேறு ஒரு ஓட்டுனர் வந்திருந்தார் என்று சொல்லி இருந்தேன். அந்த ஓட்டுனர் பெயர் கொஞ்சம் வித்தியாசமாக உச்சரித்தார் – முதலில் கேட்ட போது புரியவில்லை. மீண்டும் கேட்க “சொம்புஎன்றார்! வித்தியாசமான பெயராக இருக்கிறதே என நினைத்து இரண்டு மூன்று முறை கேட்ட பிறகு தான் புரிந்தது ஷம்பு என்ற பெயரைத்தான் இப்படி உச்சரிக்கிறார் என்று! அவர் சொன்னபடியே வைத்துக்கொள்ளாலாமே. ஓட்டுனர் ஷம்புவிடம் நண்பருக்கு குளிருக்கு இதமாய் ஜாக்கெட் வாங்க வேண்டும் எனச் சொல்ல, வழியில் வாங்கலாம் என்று சொன்னார்.


போம்டிலா நுழைவாயில்....

சிங்ஷூவிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊர் போம்டிலா....  அங்கே தான் கொஞ்சம் பெரிய மார்க்கெட் இருக்கிறது.  சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பல கிராமங்களிலிருந்தும் இங்கே வந்து தான் தேவையான பொருட்களை வாங்குகிறார்கள்.  தவாங் செல்லும் பலரும் இந்த போம்டிலாவில் தான் ஒரு இரவு தங்கிச் செல்கிறார்கள் என்பதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கிற இடம். அங்கே சென்றால் தேவையானவற்றை வாங்கிக் கொள்ளலாம் என்று ஓட்டுனர் ஷம்பு சொன்னது மட்டுமல்லாது அங்கே சென்று வண்டியை கடைத்தெருவில் நிறுத்தினார்.  பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த கடைத்தெரு. நிறைய கடைகளில் குளிர்கால உடைகள் இருக்க, நண்பர்கள் இருவர் Winter Jacket வாங்கச் செல்ல, நானும் நண்பர் பிரமோத்-உம் மார்க்கெட் பகுதியில் உலவிக் கொண்டிருந்தோம்.


மூதாட்டியின் கடை முன்னர்...

வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றில் பருப்பு, தானிய வகைகள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் கட்டி வைத்திருக்கிறார்கள். தேவயான அளவுகளில் கட்டி வைத்திருப்பதை வாங்கிக் கொண்டு செல்ல ஒரு வசதி. மளிகைப் பொருட்கள், வீட்டிற்குத் தேவையான மற்ற பொருட்கள் என அனைத்தும் ஒரே கடையில் கிடைக்கின்றன.  எல்லா இடங்களைப் போலவே இங்கேயும் கடைகளை நடத்துவது பெண்கள் தான். நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு மூதாட்டிதான் கடை வைத்திருந்தார். தள்ளாத வயது, முகத்தில் நிறைய சுருக்கங்கள்.....


கடைத் தெரு....

எனக்கும் நண்பர் பிரமோத்-க்கும் அந்த மூதாட்டியை ஒரு புகைப்படம் எடுக்கலாம் எனத் தோன்றியது. கைகளில் கேமராவுடன் இருப்பதைப் பார்த்த உடனேயே அந்த மூதாட்டிக்கு முகத்தில் கொஞ்சம் கோபம் தெரிந்தது. தனியாக முணுமுணுக்கவும் செய்தார் என்பதால் அவரிடம் கேட்பதற்குத் தயக்கமாக இருந்தது. சாலையிலிருந்து செய்து படமெடுக்க முயற்சிக்கலாம் என கேமராவுடன் நகர, அந்த மூதாட்டி, வரவங்க எல்லாம் புகைப்படம் மட்டும் எடுக்கறீங்க, ஒண்ணும் வாங்க மாட்டீங்க! உங்களுக்கெல்லாம் வேற வேலையில்லையாஎன்று ஹிந்தியில் திட்டியபடியே கடைக்குள் மறைந்து கொண்டார்.


வேறொரு கோணத்தில் கடைத் தெரு....

இரண்டு மூன்று முறை முயற்சித்தும் பலனில்லை. அவரிடம் வாங்குவதற்கு எங்களுக்குத் தேவையான பொருள் ஏதும் இல்லை – மளிகைச் சாமான்களும், அது போன்ற பொருட்களும் இங்கே இருந்து வாங்கி என்ன செய்வது? அதையும் தூக்கிக் கொண்டு அலைய முடியாது என்பதால் வாங்க வில்லை. சரி என்று மூதாட்டியிடம் அப்படியே சொல்ல, அவர் முகத்தில் இன்னும் அதிக கோபம்! அவரிடம் இப்படி நிறைய பேர் சொல்லி இருப்பார்கள் போலும்! எதற்கு வம்பு என சாலைக் காட்சிகளை மட்டும் படம் பிடித்துக் கொண்டு நண்பர்களுக்காகக் காத்திருந்தோம்.


காத்திருக்கும்போது ரிப்போர்ட்டிங்....

காத்திருக்கும் நேரத்தில் இந்த போம்டிலா பற்றியும் கொஞ்சம் பார்க்கலாமா... அருணாச்சலப் பிரதேசத்தில் புத்தர்களை வழிபடுபவர்கள் தான் அதிகம். வழியெங்கும் சிறு சிறு மண்டபங்கள் கட்டி அதில் வெளியே புத்தர் கோவில்களில் இருக்கும் சிறு உருளைகளை அமைத்திருப்பதைப் பார்க்க முடியும். அந்த உருளைகளை உருட்டி பிரார்த்தனை செய்வது இவர்களது வழக்கம்.  போம்டிலாவிலும் Monastery இருக்கிறது. புத்தர் கோவிலும், புத்த மதம் பற்றி சீடர்களுக்குச் சொல்லித் தரும் Gகொம்பாக்களும் இங்கே உண்டு.


வழியில் ஒரு இரும்புப் பாலம்....

கடல் மட்டத்திலிருந்து சுமார் 8500 அடி உயரத்தில் இருக்கும் போம்டிலா, கிழக்கு காமெங்க் மாவட்டத்தின் தலைநகர். தேஸ்பூர், பலூக்பாங்கிலிருந்து திராங்க், தவாங் செல்லும்போது வரும் முக்கியமான மற்றும் பெரிய ஊர் இது தான். இங்கே மிதமான தட்பவெப்ப நிலை இருக்கும். இங்கிருந்து ஹிமாலய மலைத்தொடரையும், பனிபடர்ந்த மலைச் சிகரங்களையும் காண முடியும் என்பது கூடுதல் வசதி. 1965-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட Buddhist Monastery திபெத்தில் இருக்கும் Tsona Gontse Monastery போலவே அமைக்கப்பட்டது.  போம்டிலாவில் இருக்கும் முக்கியமான சுற்றுலா தளமும் இது தான்.

இதோ நண்பர்களும் வந்து விட்டார்கள்....  தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்.....

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து....

24 comments:

 1. உங்கள் பயணங்களின் சிறப்பே...படங்கள் தான்..
  அருமை..மொழிவளம் மிக அழகாயிருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி செல்வா.....

   Delete
 2. படங்கள்லாம் பார்க்கும்போது, இந்த அருமையான பிரதேசத்தில் வாழக் கொடுத்துவைத்தவர்கள் என்று தோன்றுகிறது. ஆனால் அவர்களுக்கு, எப்போப்பார்த்தாலும் குளிர், மழை என்று எண்ணி, சமவெளியில் வாழ்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள் என்று நினைத்துக்கொள்வார்கள்.

  விதவிதமான இலுப்புச்சட்டி, கரண்டிகள், பைகள் இருக்கின்றன அந்தக் கடையில். அது சரி.. ஸ்ரீரங்கத்தில் இல்லாததா?

  ReplyDelete
  Replies
  1. அவர்களுக்கு குளிர் பழகி இருந்தாலும் சில சமயங்களில் இப்படித் தோன்றுமாக இருக்கும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி....

   Delete
 4. அந்த மூதாட்டியிடம் ஐம்பது ரூபாய்க்கு முந்திரிப் பருப்பு வாங்கிச் சாப்பிட்டிருக்கலாமே...!!

  ReplyDelete
  Replies
  1. அட இது அப்ப எங்களுக்குத் தோணலையே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. எழிலான படங்கள்.. அழகிய நேர்முக வர்ணனை.. இனிய பயணம்..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 6. அருமை!நண்பரே! ஊர் சுற்ற எனக்கும் ஆசைதான்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 7. கோவில் உருளைகள் படம் எதிர்பார்த்தோம்
  அடுத்த பதிவில் எதிர்பார்க்கிறோம்
  சுவாரஸ்யமாகச் செல்கிறது பயணத் தொடர்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தவாங் பற்றி எழுதும் போது கோவில் உருளைகள் படம் போடுகிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 8. வணக்கம் சகோதரரே

  அழகிய பயணம். போம்டிலா ஊரும், மார்க்கெட்டும், கடை வீதிகளும் தங்கள் அருமையான புகைப்படங்களால், கண்ணை கவருகின்றன. பைகளில் கட்டிவைத்திருக்கும், பருப்பு வகைகள் சீராக அடுக்கி வைத்திருப்பது அழகு. மேலும் தொடருங்கள்.. நாங்களும் உடன் பயணிக்கிறோம். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 9. எளிமையான நடையில் அழகிய படங்களுடன் பதிவை படிக்க மிகவும் சுவராஸ்யமாக இருக்கிறது உங்கள் பயணக் கட்டுரைகளை படிக்கும் போது மனதில் தோன்றுவது இவ்வளவு அழகிய இடங்கள் இந்தியாவில் பார்க்க இருக்கும் போது அரசாங்கம் அதை சுற்றுலா இடங்களாக மாற்றினால் இந்தியாவிற்கு வருமானம் மிக அதிகரிக்குமே என்ற எண்ணம்தான் தோன்ருகிறது இங்கு ஒன்றுமில்லா இடங்களை சுற்றுலா தளங்களாக்கி அதன் மூலம் அரசாங்கத்திற்கு வருமானத்தையும் மக்களுக்கு வேலை வாய்ப்பையும் தருகிறார்கள் ஹும்ம்ம் இந்தியாவில் எல்லாம் இருந்தும் அதை முறையாக பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மனதில் வேதனை தோன்றுகிறது... வெங்க்ட் உங்கள் பகிர்விற்கும் முயற்சிக்கும் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல வைக்க அரசும் சில முயற்சிகளை மேற்கொள்கிறது என்றாலும் மிகவும் குறைவு. போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமை, உணவுப் பிரச்சனை ஆகியவை அங்கே செல்ல நினைத்தாலும் பலரையும் தடுக்கின்றன. நல்ல ஏற்பாடுகள் இருந்தால் சுற்றுலா மூலம் நல்ல பொருள் ஈட்டலாம்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 10. # தில்லியில் இருப்பதால் குளிர் எனக்குப் பழகிய விஷயம்#
  குளிர் விட்டுப் போச்சுன்னு சொல்லுங்க :)

  ReplyDelete
  Replies
  1. குளிர் எப்பவோ விட்டுப் போச்சு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 11. படங்களும் விவரங்களும் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவகுமாரன்.

   Delete
 12. அருமையான படங்கள் ஜி! பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த இடங்களை எல்லாம் உங்கள் வழி இப்போது பார்க்கின்றோம்...நேரில் பார்த்து அனுபவிக்க நேரம் வர வேண்டும்.

  செம சுவாரஸ்ய குறிப்புகள். அந்தப் பெண்மணி பாவம் ஏதேனும் வாங்கியிருக்கலாமோ....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்கி இருக்கலாம்... உண்மை தான். இப்போது தோன்றினாலும் அந்த நேரத்தில் தோன்றவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....