வெள்ளி, 28 அக்டோபர், 2016

ஃப்ரூட் சாலட் 181 – நம்ம ஊரு திருச்சி – ரங்கோலி – மரம் நடுவோம்.....


இந்த வார செய்தி:

நல்ல ம(ன)ரம் வாழ்க...



அது ஒரு வேப்பமரம். பதினைந்து ஆண்டு காலம் கிடைத்த தண்ணீரை வாங்கிக்கொண்டு நிழலும் நல்ல காற்றும் தந்து திருப்பூரின் ஒரு இடத்தில் வளர்ந்து கொண்டு இருந்தது.

அந்த இடத்தில் ஒரு கட்டிடம் கட்டவேண்டிய தேவை ஏற்பட்டது, கட்டிடம் கட்டுவதற்கு இருந்த ஒரே இடையூறு இந்த வேப்பமரம்தான்.உண்மையைச் சொல்வதானால் அது இடையூறு இல்லை வைத்த இடத்தில் அது பாட்டுக்கு வளர்ந்து தன் கடமையை செய்து வந்தது அந்த இடத்தைவிட்டு அப்புறப்படுத்தவேண்டிய தவிர்க்கமுடியாத சூழ்நிலை.

யாரையாவது கூப்பிட்டு 'வெட்டி எடுத்துட்டு போ' என்று சொன்னால் இரண்டு மணி நேரத்தில் இப்படி ஒரு மரம் இங்கு இருந்தது என்பதற்கான சுவடே இல்லாமல் செதில் செதிலாய், விறகு விறகாக வெட்டி எடுத்துக்கொண்டு போக நுாறு பேர் காத்திருந்தனர். அதுதான் வழக்கமான நடைமுறை என்று பலரும் ஆலோசனை தந்தனர். ஆனால் இடத்தின் மரத்தின் உரிமையாளர் நிர்மலாவிற்கு ஏனோ மனம் அதற்கு உடன்படவில்லை. திருப்பூரை வனமாக மாற்றிவரும் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவராமை தொடர்புகொண்ட போது பலருடன் கலந்துகொண்டு ஒரு ஆலோசனை சொன்னார்.

அந்த ஆலோசனை, மரத்தை அப்படியே வேருடன் பிடுங்கிக் கொண்டு போய் வேறு இடத்தில் நட்டு வளர்ப்பது என்பதாகும். இந்த முயற்சியில் ஐம்பது சதவீதம் மரம் பிழைக்கவும் வழி இருக்கிறது ஐம்பது சதவீதம் மரம் பிழைக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.
பிழைக்க ஐம்பது சதவீதம் வாய்ப்பு இருக்கிறது அல்லவா அப்படியானால் முயற்சித்துவிடுவோம் என்று நிர்மலா முடிவு எடுத்தார்.

இது போன்ற முயற்சி இதற்கு முன் திருப்பூரில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை, இருந்தாலும் மரம் வெட்டக்கூடாது என்பதில் நிர்மலா உறுதியாக இருந்ததால் ஒரு குழந்தையை காப்பாற்றும் முனைப்போடு அனைவரும் களமிறங்கினர்.

இதற்காக வனத்திற்குள் திருப்பூர் மகேந்திரன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.மரத்தை சுற்றி பத்து அடிக்கு குழி வெட்டவேண்டும், ஆனி வேர் அடிபட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், மரம் காயப்பட்டுவிடாமல் சாக்கு சுற்றி அதன் மீது இரும்பு சங்கிலி போட்டு கிரேன் மூலம் துாக்கவேண்டும்,துாக்கிய பிறகு அங்கு இருந்து பதினைந்து கிலோமீட்டர் துாரத்தில் உள்ள நிர்மலாவிற்கு சொந்தமான பல்லடம் மகாஆர்கானிக் பண்ணையில் கொண்டுபோய் நடவேண்டும், பொறுமையாகவும் செய்யவேண்டும் அதே நேரம் வேகமாகவும் செய்யவேண்டும்.

இவ்வளவையும் திட்டம் போட்டபிறகு வேப்பமரத்திடம் குனிந்து 'தாயே தவிர்க்கமுடியாமல் உன்னை இடமாற்றம் செய்கிறோம், நீ போகிற இடம் உன் சகாக்கள் நிறைந்த அருமையான இடம் ஆகவே சந்தோஷமாக சம்மதம் கொடுக்கணும்' என்று மானசீகமாக சொல்லி அனுமதி வாங்கிக்கொண்டு வேலையை ஆரம்பித்தனர்.

திட்டமிட்டபடி எல்லாம் நடந்து மண்ணைவிட்டு அலேக்காக துாக்கும் போதும், அதை அடிபடாமல் கிரேனில் இருந்து லாரிக்கு மாற்றம் செய்யும் போதும், ஒரு பெரிய கூட்டமே சுற்றி நின்று கொண்டு சமுதாயத்திற்கு உழைத்த ஒரு பெரிய மனிதரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவதைப் போல 'பார்த்து பார்த்து' என்றெல்லாம் குரல் கொடுத்தனர்.

லாரி மூலம் வேப்பமரம் பண்ணைக்கு கொண்டு செல்லப்பட்டதும் அங்கே திட்டமிட்டபடி தோண்டி வைக்கப்பட்டிருந்த அகலமான குழியில் மரம் நடப்பட்டது, உரம் கலந்த மண் போட்டு மூடப்பட்டது.மரங்களின் பட்டைகளில் ஈரம் போகாதிருக்க அரிசி சாக்குகள் சுற்றப்பட்டது,வெட்டும் போது தவிர்க்கமுடியாமல் காயம்பட்ட மரத்தின் அனைத்து இடங்களிலும் மருந்து போல பசுஞ்சாணம் வைக்கப்பட்டது,'பிழைச்சு வரணும் தாயி' என்று கும்பிட்டபடி தண்ணீர் விடப்பட்டது.

இந்த மரத்தை இருந்த இடத்திலேயே வெட்டி விற்று இருந்தால் இரண்டாயிரம் ரூபாயோ மூன்றாம் ரூபாயோ கிடைத்திருக்கும் ஆனால் இப்படி மாற்று இடத்தில் நடுவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிக்கு முப்பதாயிரம் ரூபாயாகும், 'அவ்வளவு ரூபாய்க்கு மரம் மதிப்பு இல்லையேம்மா'? என்ற போது முப்பதாயிரம் அல்ல அறுபது ஆயிரம் ரூபாய் ஆனாலும் அதை காப்பாற்றியே தீருவேன் என்று சொல்லி பணத்தையும் நேரத்தையும் மட்டுமின்றி யாரும் கொடுக்கமுடியாத மதிப்பையும் மரத்திற்கு கொடுத்த நிர்மலாதான் முதல் சொம்பு தண்ணீரை விட்டார்.

முதல் நாள் இரண்டாம் நாள் மூன்றாம் நாள் எதுவும் தெரியவில்லை, தண்ணீர் விடுவதும் சாணியை மாற்றி அப்புவதும் மட்டும் தொடர்ந்தது.ஐசியுவில் இருக்கும் குழந்தையை பார்ப்பது போல பலரும் மரத்தை சுற்றி சுற்றி வந்து பார்த்து ஏதாவது மாற்றம் தெரிகிறதா என பார்வையிட்டனர்.

நான்காம் நாளும் போய் ஐந்தாம் நாளும் வந்துவிட்டது மாற்றம் தெரியவில்லை பலருக்கும் கண்ணீரே வந்துவிட்டது.சாப்பிடக்கூட பிடிக்கவில்லை.இவ்வளவு பேரின் பாசத்திற்காகவாவது மரம் பிழைத்து விடவேண்டும் என்று பார்த்தவர்கள் வேண்டிக்கொண்டனர்.

வேண்டுதல் வீண் போகவில்லை தீவிர சிகிச்சைக்கு பின் பிழைத்த குழந்தை கண்ணைத்திறந்து கையை அசைத்தால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுமோ அவ்வளவு மகிழ்ச்சி ஏழாம் நாளில் ஏற்ப்பட்டது காரணம் அப்பிய சாணத்தை மீறிக்கொண்டு சில வேப்பிலை கொளுந்துகள் மலர்ந்து வளர்ந்து சிரித்தபடி எங்களைப்பாரேன் என்றபடி எட்டிப்பார்த்தன.

கொஞ்ச நேரத்தில் மரம் பிழைத்துவிட்டதற்கு அடையாளமாக ஆங்காங்கே மேலும் சில கொளுந்துகள் துளிர்த்திட பார்த்தவர்கள் அனைவரது கண்களிலும் ஆனந்த கண்ணீர்,நிர்மலாவின் கண்களில் கொஞ்சம் கூடுதலாக...

எல்.முருகராஜ், தினமலர்.....

இந்த வார முகப்புத்தக இற்றை:

அப்பா: ஏண்டா மவனே, உங்கம்மா இன்னிக்கு பேசாம உட்கார்ந்து இருக்கா?

மகன்: அம்மா லிப்ஸ்டிக் கேட்டாங்க, என் காதுல ஃபெவிஸ்டிக்-னு விழுந்துடுச்சுப்பா....  :)

இந்த வார ஓவியம்:

ஓவியம் என்று சொல்வதா இல்லை ரங்கோலி என்று சொல்வதா?  ரங்கோலியில் ராமாயணம் என ஒரு காட்சி பார்த்தேன் தில்லியில். முழு பதிவாக ஞாயிறன்று வெளியிடுகிறேன். இந்த ஃப்ரூட் சாலட் பகுதியில் அதற்கு ஒரு முன்னோட்டமாக இந்தப் படம்.....




இந்த வார காணொளி:

நம்ம ஊரு திருச்சி – திருச்சி பற்றிய ஒரு காணொளி....  பாருங்களேன்!




இந்த வார ரங்கோலி:

தில்லியில் சமீபத்தில் இரண்டாவது தேசிய கலாச்சார விழா நடந்தது. ஒவ்வொரு நாளும், நிகழ்ச்சி நடந்த இடத்தில், ஒரு ரங்கோலி போடுவார்கள்.  நாங்கள் சென்ற ஒரு தினத்தில் போட்ட ரங்கோலி இன்றைய பகிர்வில்.....



ராஜா காது கழுதைக் காது:

ரொம்ப வாரமா இந்த பகுதி இணைக்கவில்லை! இந்தப் பகுதிக்கென்றே தனியாக ரசிகர்கள் இருப்பதை தெரிந்து வைத்திருக்கிறேன் – இருந்தாலும் எழுத இயலவில்லை.  இன்று மீண்டும் ராஜா காது கழுதைக் காது!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் – அங்கே ஒரு இளம்பெண்ணும், ஒரு இளைஞனும் – காதலர்களா, நண்பர்களா இல்லை கணவன் மனைவியா என்பது தெரியாது – தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமுமில்லை – என்ன பேசினார்கள் என்பது மட்டுமே இப்பகுதிக்கு அவசியம்!

இளம்பெண்:  “ஏண்டா இடியட், Data On பண்ணினா, அதை Off பண்றதில்லையா? பாரு மொத்தமும் போயிடுச்சு.......

இளைஞன்:  அய்யோ, கத்தாத....  ஆயிரம் ரூபாய்க்கு Data top up பண்றேன்... போதுமா!

இந்த வார WhatsApp செய்தி:

வாழ்ந்து காட்டுவோம்:

பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது.

ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால் கொல்லப்படுகின்ற நிலையில் உயிர் வாழும் மான் கூட பிரச்சனைகளை சமாளிக்கின்றது.

பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன.

மனிதர்களால் எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன.

ஒவ்வொரு நாளும் ஆகாரத்திற்காக பல மைல்கள் தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல் முயற்சி செய்கின்றன.

சிறியதான உடலையும், பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன.

தண்ணீரே இல்லாத பாலைவனத்தில் உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன.

ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும், அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன.

இப்படி பலகோடி உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் நம்மால் வாழ முடியாதா?

*எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய வாழ்க்கை.*
*அதை ஏன் புலம்பிக்கொண்டு வாழ வேண்டும்?*
*அதை ஏன் வெறுத்துக்கொண்டு வாழ வேண்டும்?*
*அதை ஏன் தப்பிக்கப் பார்க்க வேண்டும்?*
*அதை ஏன் அழுதுகொண்டு வாழ வேண்டும்?*
*மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் வாழ்ந்து தான் பார்ப்போமே.!*

இது உன் வாழ்க்கை என்றபோது மிச்சம் இருப்பது ஆனந்தத்தை தவிர வேற என்ன இருக்கிறது. ஆகவே, ஆனந்தமாக வாழ்வோம், வாழ்ந்து காட்டுவோம் உலகுக்கு ஒரு சான்றாக.

படித்ததில் பிடித்தது:

டாக்டர்.. எனக்கு என்ன வயசுன்னு தெரியாதது தான் பிரச்சனை டாக்டர்.

மனோதத்துவ மருத்துவர்.. அப்படியா...!?

ஆமா டாக்டர் இப்ப பொண்டாட்டி புள்ள குட்டிகளோட வசதியாயிருந்தாலும் சின்ன வயசுல அப்பா அம்மா இல்லாமலயே வளந்துட்டதால வயசு தெரியல...

இப்ப என்ன உங்க வயசு தெரியனும் அவ்ளோதானே..?

ஆமா டாக்டர்... ஆமா...?

சரி இப்ப நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க கண்டுபிடிச்சிடலாம்... சிஸ்டர் இங்க வாங்க நான் சொல்றத எழுதிக்குங்க...

உங்க பேரென்ன... - ராமநாதன்...

என்ன தொழில் பண்றீங்க... - பைனான்ஸ்...

நைட்டு நல்லா தூங்குவீங்களா...? - கடவுள் புண்ணியத்துல படுத்தவுடனே தூங்கிடுறேன் டாக்டர்...

சந்தோஷம்... தூக்கத்துல கனவுலாம் வருமா...? நெறைய டாக்டர்....

அந்த கனவுல நடிகைகளெல்லாம் வர்றாங்களா...? ஆமா டாக்டர்...

எந்த மாதிரி நடிகைங்க... ரேவதி, அமலா மாதிரியான நடிகைங்க....
சிஸ்டர்... 45ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்...சரி வேற எந்த நடிகைகளும் வரமாட்டாங்களா...

சிலசமயம் அம்பிகா ராதா மாதிரியான வங்களும் வருவாங்க...

சந்தோஷம்... சிஸ்டர் 48 ன்னு நோட்பண்ணிக்குங்க... ம்... அப்புறம் வேற யாரெல்லாம் வருவாங்க...?

ஷகிலா...

உஹூம்... ஷகிலாலாம் எவர்கிரின்.. அதவெச்செல்லாம் வயச கணிக்க முடியாது... வேற...வேற...?

வேற... சிலசமயம் கனவுல ராதிகா வருவாங்க... திடீர்னு ஸ்ரீப்ரியா க்கூட வருவாங்க...

ம்ம்... சிஸ்டர் 54ன்னு நோட் பண்ணிக்குங்க.. ம்... அப்புறம் ராமநாதன்..
அப்புறம்... அப்புறம்... ம்... என்னைக்காவது நான் ரொம்ப உற்சாகமா இருந்தா அன்னைக்கு கனவுல சிம்ரன் வருவாங்க...

சிஸ்டர் 40 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம் சொல்லுங்க ராமநாதன்...
ம்ம்... அவ்ளோதான் டாக்டர்...

அவ்ளோதானா... சரி சிஸ்டர் நான் சொன்ன நம்பரை யெல்லாம் சொல்லுங்க... 45,48,54,41..

நாலு ரிசல்ட்டையும் கூட்டி நாலால வகுத்தா வர்ற ரிசல்ட் 47..  மிஸ்டர் ராமநாதன் உங்க வயசு நாற்பத்தேழு...

அட கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க டாக்டர்...

என்ன கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டேனா...? அப்ப ஏற்கனவே உங்க வயசு தெரியுமா..?

தெரியும் டாக்டர்... பக்கத்து பார்பர் ஷாப்புக்கு முடிவெட்டிக்க வந்தேன், அங்கே ஒரே கூட்டம் ஒருமணிநேரமாகும்னுட்டாங்க திரும்ப வீட்டுக்கு போகவும் மனசில்ல பக்கத்துலயே மனோதத்துவ டாக்டர் நீங்க சும்மா உக்காந்திருந்நீங்களா... அதான் சும்மா ஒரு டைம்பாசுக்கு... ரொம்ப தேங்ஸ் டாக்டர்..!

அடப்பாவி...

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து...

20 கருத்துகள்:

  1. ரசித்தேன். இற்றை சிரிக்க வைத்து விட்டது! என்னவென்று பார்க்காமல் கூடப் போட்டுக் கொண்டு விடுவார்களா!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ நினைப்புல போட்டுட்டாங்க போல! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. நல்லா இருந்துச்சு. கழுதைக்காது பகுதிக்காக சுவாரசியமான பேச்சைக் கேட்டுக்கொண்டு ரயிலைத் தவறவிட்டுவிடப் போகிறீர்கள். உங்கள் லாஜிக்படி கணக்கு எடுத்தால் என் வயது 25ஐத் தாண்டவில்லை. டாக்டர் சொன்னாச் சரியாத்தான் இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் காரியத்தில் கண்ணாக இருப்போம்லா.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  3. கொளுந்துகள் துளிர்த்திட பார்த்தவர்கள் அனைவரது கண்களிலும் ஆனந்த கண்ணீர்,நிர்மலாவின் கண்களில் கொஞ்சம் கூடுதலாக...//

    என் கண்களிலும் . நிர்மலாவிற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
    வாழ்க வளமுடன்.

    அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. இந்த வார பழக் கலவை அனைத்தும் அருமை. வேப்ப மரத்தை வெட்டாமல் வேறு இடத்திற்கு மாற்றி அந்த நல்ல மனம் கொண்ட திருமதி நிர்மலா அவர்கட்கு பாராட்டுக்கள்! இரண்டு ரங்கோலியுமே அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  5. # பாரு மொத்தமும் போயிடுச்சு.......”#
    என்னமோ நீயா டாப்அப் பண்ணிக்கிற மாதிரி பேசுறீயே என்றும் கேட்டிருக்கணுமே,ராஜா காதில் விழ வில்லையோ :) :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  6. வேப்ப மரத்தை இடம் மாற்றிப் பிழைத்துக்கொண்டதில் மகிழ்ச்சி. புரூட் சாலட் சுவையாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞா கலையரசி ஜி!

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    நலமா? பழக்கலவையில் இடம் பெற்றவை அனைத்தும் அருமையாக இருந்தது.மிகவும் ரசித்துப் படித்தேன்.
    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  8. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் 💐🎁

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

      நீக்கு
  9. படித்தேன் முற்றும் சுவைதேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  10. இற்றை, படித்ததில் பிடித்ததும் ஹஹஹஹ ரகங்கள்.

    ராகாககா வில் கண்டிப்பாக அவர்கள் காதலர்களாகத்தான் இருக்க வேண்டும்!!!!! (இப்ப ட்ரெண்ட் காதலன் தான் டாப் அப் போட வேண்டும்..என்பது எழுதப்படாத சட்டம்!!!!) - கீதா

    வாட்ஸப் செய்தி அருமை! ஒரு செய்தி வந்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் உலகம் முழுவதும் சுற்றி விடுகிறதே!!! இங்கு வருவதற்கு நாளாகும் போல!!

    பதிலளிநீக்கு
  11. உங்கள் பின்னூட்டம் பார்த்த பிறகு, மீண்டும் எனது பதிவை ஒரு முறை படித்து நினைவு கொள்ள முடிகிறது! :)

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....