எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, October 26, 2016

அதிகாலை சுப வேளை!அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து, பல் துலக்கும் போது சில்லென்ற தண்ணீர் பட, பல் மட்டுமல்லாது உடம்பும் கூசியது! சரி குளிக்க வென்னீர் தான் தேவைப்படும் போல என வென்னீரில் குளித்து ரெடியாகவும் சொல்லி இருந்த நான்கு சக்கர வாகனத்தின் ஓட்டுனர் அழைக்கவும் சரியாக இருந்தது! வீட்டைப் பூட்டிக் கொண்டு முதுகுச் சுமையோடு கீழே இறங்க, என் காலணியின் ஓசை நித்திரையில் இருந்த இரு பைரவர்களை தொந்தரவு படுத்தியது போலும்! அதில் ஒன்று தன் எதிர்ப்பை  சிம்மக் குரலில் காட்டியது, உடனே மற்றதும் பக்கவாத்தியம் வாசித்தது – பைரவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியபடியே நடந்தேன். வாசல் கேட் திறந்திருக்க, அதன் அருகே காவலாளி நல்ல தூக்கத்தில் இருந்தார் – அவரைத் தொந்தரவு செய்யாது வெளியே வந்து வண்டியில் அமர்ந்தேன்.

அதிகாலை நேரத்து தில்லி சாலைகள் ஒரு வித மயான அமைதியில் இருக்கும். பகல் நேர கும்பலோ, வாகன நெரிசலோ இல்லாது அமைதியான அந்த நேரத்தில் பயணிப்பது ஒரு சுகானுபவம்.... நான்கு மணிக்கு மந்திர் மார்க் சாலையில் ஒரு பெரியவர் நடக்கிறாரா, Jogging செய்கிறாரா எனச் சொல்ல முடியாத ஒரு நடை/ஓட்டம்....  அவரின் சுறுசுறுப்பை மனதுக்குள் பாராட்டியபடி பயணத்தினைத் தொடர்ந்தேன். மதர் தெரசா க்ரெஸெண்ட் சாலையில் வண்டி தொடர்ந்து பயணித்தது. எங்கள் வண்டியின் முன்னர் ஒரு DTC சிவப்பு நிற பேருந்து – அதாவது குளிரூட்டப்பட்ட பேருந்து சென்று கொண்டிருந்தது. இரவு நேரப் பேருந்து - அதிகாலை நேரமாக இருந்தாலும் நல்ல கும்பல். 

நிறுத்தம் ஒன்றில் ஒரு DTC ஜீப் நின்று கொண்டிருந்தது. பயணச் சீட்டு பரிசோதகர்கள் இரண்டு பேர், அங்கே நின்று இரவு நேரப் பயணம் செய்பவர்களின் பயணச் சீட்டுகளை பரிசோதனை செய்து கொண்டிருந்தார்கள். பகல் நேரத்திலேயே தில்லி பேருந்துகளில் பலர் பயணச்சீட்டு வாங்குவதில்லை! அந்த இரவு நேரத்தில் யார் சோதனை செய்யப் போகிறார்கள் என சிலர் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தார்கள் போலும். அவர்களை ஜீப்பில் ஏற்றிக் கொண்டிருந்தார் இன்னுமொருவர். “உங்க கடமைக்கு ஒரு அளவே இல்லையாடாஎன நினைத்துக் கொண்டேன்.  

இப்படியாக யாருமில்லா சாலைகளில் பயணித்து விமான நிலையத்தினை சமீபத்தபோது வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. நிலையத்திற்குள் நுழைய பெரிய வரிசை. தீபாவளியை வரவேற்கும் விதமாக பல விளக்கு அலங்காரங்கள் செய்திருந்தார்கள். உள்ளே நுழைந்தால் ஒவ்வொரு விமான சேவை நிறுவனங்களின் சேவை மையங்களிலும் பெரிய வரிசை.  ஒவ்வொரு வரிசையாகக் கடந்து சோதனைகளை முடித்துக் கொண்டு உள்ளே நுழைய தூக்கம் கண்களைச் சொக்கிற்று. உட்கார இடம் கிடைக்கிறதா எனப் பார்த்தால், கிடைத்த இடம் The Cellar என அழைக்கப்படும் சரக்கு விற்கும் இடத்திற்கு அருகே....

அந்த அதிகாலை நேரத்திலும் பல பயணிகள் சரக்கு வாங்கிக் கொண்டிருந்தார்கள்.  சரக்கு விற்பனை செய்யும் அந்தக் கடையில், ஒரு இளம்பெண்ணையும்  பார்க்க முடிந்தது. விற்கும் சரக்குகளையும் அதன் விலையையும் ஒவ்வொரு குப்பியாக எடுத்துப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.  பக்கத்திலேயே Punjabi Grill என இன்னுமொரு கடை – அதில் உணவு தவிர சரக்கும் இருந்தது! மிகப் பெரிய பாட்டில் ஒன்றில் சரக்கு இருக்க அதிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து விற்பனை செய்கிறார்கள்! சரக்கு விற்பனையைக் கவனித்தபடியே இருந்த எனக்கே கொஞ்சம் மயக்கம் வந்தது! சற்றே கண்ணசர, பக்கத்தில் விசும்பும் ஓசை. அதுவும் ஒரு பெண் அழும் ஓசை என்றவுடன் கண்களைத் திறந்தேன்.

பக்கத்தில் ஒரு பெண் – அலைபேசியில் பேசியபடியே அழுது கொண்டிருந்தார். கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர். துடைக்கக்கூடத் தோன்றாமல் அழுது கொண்டிருக்க, மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. என்ன ஆயிற்றோ பாவம் என யோசித்தபடியே கவனித்தேன். “அம்மாவுக்கு சொல்லிட்டீங்களா? அவங்களை நினைத்தால் தான் பாவமா இருக்கு, அப்பாவின் இழப்பை எப்படித் தாங்குவாங்களோ?என்று சொன்னபோது தான் தெரிந்தது அவரின் அப்பா இறந்து விட்டார் என....  இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய மனதிலேயே பிரார்த்தனை செய்து, விட்ட தூக்கத்தினை தொடர நினைத்தேன்.

மீண்டும் பேச்சுச் சத்தம் – இம்முறை தமிழில் பேச்சு.... கண்களைத் திறந்து கவனிக்க, ஒரு பதினைந்து வயது சிறுவன் தன்னுடைய Tab-ல் விளையாடிக் கொண்டிருந்தான். சிறுவனின் அம்மா அவனிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு தான் நான் முழித்திருந்தேன். என்னதான் பேசுகிறார் என காது கொடுத்துக் கேட்டால், “டேய், எவ்வளவு நேரம் விளையாடுவே, கொஞ்சம் நேரம் நிறுத்தி வைடாஎன்று சொல்ல, அடுத்ததாய் சொன்னது கொஞ்சம் சிரிப்பை வரவைத்தது! “டேய், சீக்கிரம் போய் மூச்சா போயிட்டு வாடா, உள்ளே போறதுக்குள்ள மூச்சா போயிட்டு வந்துடுடா!”  என்று மூச்சாவுக்கு ஒரு போராட்டம்.... வந்தா போகமாட்டானா என்று கேட்கத் தோன்றிற்று!

விமானத்திற்கான அழைப்பு வர, பணிப்பெண்களின் பொய் புன்னகைகளை ஏற்றுக்கொண்டு பேருந்தில் ஏறி விமானத்தின் அருகே அவர்கள் இறக்கிவிட, விமானத்திற்குள் உள்ளே நுழைந்து எனக்கான ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தேன். எனக்கு அடுத்த இருக்கையும், அதற்கடுத்த இருக்கையும் ஒரு சிறுமி, மற்றும் அவருடன் வந்த ஒருவருக்கானது. சரி தூங்க ஆரம்பிக்கலாம் என முயற்சித்தபோது அந்த சிறுமி என்னைத் தாண்டி ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஜன்னலோர இருக்கைவேண்டுமா எனக் கேட்க, தலையை ஆட்டினார் சிறுமி! எனது இருக்கையை அவருக்குக் கொடுத்து நடு இருக்கைக்கு வந்து தூங்க ஆரம்பித்தேன். சற்று நேரத்தில் நல்ல உறக்கம். தோளில் ஏதோ அழுத்தம் – எடை அதிகரித்தது போல ஒரு உணர்வு. முழித்துப் பார்த்தால் அந்தச் சிறுமி என் தோள் மேல் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். அவர் உறக்கம் கலைக்காது நானும் உறங்க முயற்சித்தேன்.

சென்னை விமான நிலையத்தில் நடராஜர் சிலை.....

விமானப் பணிப்பெண்கள் உணவு விற்பனை, பொருட்கள் விற்பனையைத் துவங்கி இருக்க, தூங்க முடியவில்லை. சிறிது நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்க, சென்னை என்னை வரவேற்றது! திருச்சிக்கு பேருந்தில் தான் பயணிக்க வேண்டும். பேருந்தில் புறப்பட, ஒரு பயணிக்கும் பேருந்தின் நடத்துனர்/ஓட்டுனர் இருவருடனும் தகராறு! வழியிலேயே நிறுத்தி விடுவார் எனத் தோன்றியது! என்ன பிரச்சனை – ஒன்றுமில்லை! ஓட்டுனர் மிகவும் மெதுவாக வண்டியை ஓட்டுகிறார் என்று பயணி சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அரசுப் பேருந்தினை 100-120 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்த வேண்டும் எனச் சொல்ல, நடத்துனருக்கும், பயணிக்கும் பயங்கர வாக்குவாதம். 60க்கு மேல் ஓட்டினாலே பாகங்கள் உதிர்ந்து கீழே விழுந்து விடும் போல ஒரு சத்தம்! இதை 100-120-ல் ஓட்டினால் என்னாவது! எங்காவது முட்டி அனைவரையும் மேலே அனுப்பச் சொல்லுகிறாயா என்று அவர் வாதம்.

காசு திருப்பிக் கொடு நான் வேறு பேருந்தில் போகிறேன் என விழுப்புரம் அருகே வரும்போது பயணி சொல்ல, தரமுடியாது எனச் சொன்னார் நடத்துனர். காலையிலே சாப்பிட்ட தோசையை அப்படியே தோசையா வயத்துல இருந்து வெளியே கொண்டு வா, அப்படி உன்னால் முடிந்தால், நீ கொடுத்த காசை திரும்பிக் கொடுக்கிறேன் என்கிறார் நடத்துனர்! ஓட்டுனரோ, இவர்களின் சண்டையை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே வாகனத்தை செலுத்த எந்த நேரமும் விபத்து ஏற்படும் நிலை! மற்ற பயணிகள் யாருமே வாயைத் திறக்கவில்லை. அரை மணிக்கு மேல் இதே மாதிரி இருக்க,  நானே களத்தில் இறங்க வேண்டியிருந்தது. சண்டை போட்டு மற்றவர்களை தொந்தரவு செய்யாதீர்கள் எனச் சொல்லி சமாதானம் செய்து, ஒரு வழியாக திருச்சி வந்தாயிற்று! வீட்டுக்கு வந்தால், வீட்டிலே விருந்தாளி! அட நம்ம பதிவுலகத்திலிருந்து தாங்க....  வலைப்பதிவாளர் துளசி கோபாலுடன் வந்திருந்தார்.

இரண்டு வருடத்திற்குப் பிறகு இந்த வருடம் குடும்பத்துடன் தீபாவளிக் கொண்டாட்டம்.....  அனைவருக்கும் இனிதாகவே அமையட்டும் இந்த தீபாவளி! அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்... கொஞ்சம் முன்னரே வாழ்த்து சொல்றேனோ?......

மீண்டும் ச[சி]ந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து.....40 comments:

 1. #காலையிலே சாப்பிட்ட தோசையை அப்படியே தோசையா வயத்துல இருந்து வெளியே கொண்டு வா#
  ஆகா,இது நியாயமான வாதம் :)

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் நியாயமாகவே பட்டது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 2. பயணத்தில் கலகலப்பு.. நல்லவேளை பேருந்திற்குள் கைகலப்பு இல்லை..

  தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. கைகலப்பு நடந்து விடும் அளவுக்குத் தான் இருந்தது... மாற்றி மாற்றி சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தார்கள் - அடித்துவிடுவேன் என!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 3. நீங்க வந்தாச்சுனு உடனேயே தெரிஞ்சுது! :) தீபாவளி வந்தாச்சுனு புரிஞ்சுண்டேன். :) நல்வரவு, நல்வரவு!

  ReplyDelete
  Replies
  1. பார்த்தவங்க சொல்லி இருப்பாங்களே! :))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 4. உண்மையைச் சொன்னால் இந்த மாதிரி சண்டைகள் தான் பஸ் பயணங்களை சுவாரஸ்யமாக்கும் . இல்லாட்டி செம போராக இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. பயணங்கள் ஸ்வாரஸ்யமாக்கும் விஷயங்கள் - உண்மை தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 5. ஆஹா... கிளம்பும் நேரத்தில் உங்க எண்ட்ரி 😁

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்.... அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகப் போய்விட்டது! அடுத்த நாள் திட்டமிட்டமிட்டபடி உங்களை சந்திக்க இயலாமல் போய்விட்டது. மீண்டும் பயணம் செய்ய வேண்டிய சூழல் வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிவீர்களே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 6. தீபாவளி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.

   Delete
 7. ஆஹா.... சுவாரஸ்யம்தாதான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. இந்த வருடம் குடும்பத்துடன் தீபாவளிக் கொண்டாட்டம்.//
  ஓ! மகிழ்ச்சி.
  ஆதி, ரோஷ்ணியை கேட்டதாக சொல்லுங்கள் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 9. ji thank god for your uninterrupted journey...
  which is a rare occurence nowadays...
  plane tyre burst... fellow passengers heart attack...
  pilots intoxication...
  bus break down...many more...
  deepawali wishes ji

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி Nat Chander.

   Delete
 10. இது போன்ற சுவாரஸ்யங்கள்தான் பயணங்களில். நிறைய...சில சமயங்களில் மறந்துவிடுகிறது அதனால் பதிவாக எழுதவும் முடியய்வில்லை....தொடரட்டும் தங்கள் பயணங்கள்...சுவாரஸ்யங்களுடன்...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  வேலைப்பளு காரணமாக வர இயலவில்லை. இதோ போகிறோம் தங்களின் பழைய பதிவுகளையும் வாசிக்க....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 11. சில சமயம் இது போல சண்டைகள் பேருந்தை எடுக்க விடாமல் கூடச் செய்துவிடும். நமக்குத்தான் பயணத்திட்டமே தடுமாறிவிடும். எனக்கும் நேர்ந்ததுண்டு.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். பயணத்திட்டம் மாறினால் பல இன்னல்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 12. அட என்ன ஸார் இப்படி பண்ணிட்டீங்க, தலைப்பை பார்த்து ஏதாவது சுவாரஸ்ய நிகழ்வா இருக்குமென்று பார்த்தால் இப்படி திருச்சிக்கு கூட்டிட்டு போய்டீங்க. நான் எப்படி சீர் திரும்ப Guwahati வர்றது!!!!! தீபாவளி முடிந்து உங்களோடுதான் வரணும் போல.
  உளம் கனிந்த தீபதிருநாள் வாழ்த்துகள் ஸார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சோமேஸ்வரன்!

   Delete
 13. திருவரங்கத்தில் தீபாவளியா? மிக்க மகிழ்ச்சி. தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 14. தீபாவளி வாழ்த்து கண்டோம். மகிழ்சசி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 15. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.

   Delete
 16. குடும்பத்தோடு தீபாவளியா
  வாழ்த்துக்கள் ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 17. உங்கள் பதிவை படிக்கும் போது உங்களுடன் பயணம் செய்வது போல ஒரு உணர்வு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 18. தோசைக்கதை நல்லாத்தான் இருக்கு.
  தங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 19. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

  ReplyDelete
 20. இது போல் பிரச்சினைகள் ஏற்படும்போது, பல சமயங்களில் மற்ற பயணிகள் வாயே திறக்காமல் நமக்கென்ன வந்தது என்பது போல் அமர்ந்திருப்பார்கள்! திருச்சியில் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட இனிய நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞா. கலையரசி ஜி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....