வெள்ளி, 18 நவம்பர், 2016

ஃப்ரூட் சாலட் 184 – காசு, பணம், துட்டு, மணி மணி!



இந்த வார செய்தி:



நெல்லை : ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாங்க மாட்டோம். ஆனா காசில்லாம சாப்பிடலாம். முடிஞ்சா அப்புறம் பணம் கொடுங்க. இல்லைன்னாலும் பரவாயில்லை," என அறிவித்து சேவையாற்றி வருகிறது நெல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்று.

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் பணம் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. அத்துடன், நேற்று ஒருநாள் வங்கிகள் மூடப்பட்டதுடன், ஏ.டி.எம் மையங்களும் செயல்படவில்லை. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினார்கள். கையில் ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் கரன்சிகள் இருந்தபோதிலும், அவற்றை வர்த்தக நிறுவனங்களும் ஹோட்டல்களும் வாங்க மறுத்ததால் மக்கள் செய்வது அறியாமல் திகைத்தார்கள். வெளியூர்களைச் சேர்ந்த சிலர் சாப்பிடக் கூட பணம் இல்லாமல் தவித்தார்கள்.

தமிழகம் முழுவதும் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெறப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். பெரும்பாலான ஹோட்டல்களில் இதே நிலை நீடித்ததால் பலர் உணவு உட்கொள்ள முடியாமல் தவித்தனர். சில ஹோட்டல்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெறப்பட்டன.

ஆனால் நெல்லையில் உள்ள ஒரு ஹோட்டலில் ரூ.500, ரூ.1000 ஆயிரம் நோட்டுகள் பெறப்படவில்லை. அதே நேரத்தில் பணம் இல்லாவிட்டாலும் சாப்பிட்டுச்செல்லலாம் என புதுவிதமாய் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது அந்த ஹோட்டல் நிர்வாகம். நெல்லை என்.ஜி.ஓ காலனியில் உள்ள ஹோட்டல் ஶ்ரீ பாலாஜி நிர்வாகம், தங்களது ஹோட்டலில் நேற்றும், இன்றும் யார் வேண்டுமானாலும் சாப்பிட்டுச் செல்லலாம் என அறிவித்து, அதை செயல்படுத்தியும் வருகிறது.

இதற்கான அறிவிப்பு பலகை ஹோட்டலின் முன்புறம் மட்டுமல்லாது, அரசு மருத்துவமனை வளாகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் வைக்கப்பட்டு உள்ளதால், சில்லறை இல்லாமல் அவதிப்பட்டு வந்த பலர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார்கள்.

இது பற்றி ஹோட்டலின் உரிமையாளரான கோவி என்கிற கோவிந்தனிடம் பேசினோம். ‘‘திடீரென 500, 1000 ரூபாய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதுடன் ஏ.டி.எம் மையங்களும் மூடப்பட்டதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். குறிப்பாக, பையில் பணம் இருந்த போதிலும் அதனை யாரும் வாங்காததால் செலவு செய்ய முடியாத நிலைமை உருவானது. அரசு மருத்துவமனையில் நோயாளிகளாக இருப்பவர்களுக்கு உதவுவதற்காக வெளியூர்களில் இருந்து வந்தவர்களிடம் 500, 1000 ரூபாய்கள் இருந்தபோதிலும் அதனை செலவு செய்ய முடியவில்லை. அதனால் உணவு சப்பிட முடியாமல் சிரமப்படும் தகவல் எனக்கு தெரிய வந்தது.

அதனால் அவர்களுக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என யோசித்தேன். நான் ஹோட்டல் வைத்து இருப்பதால் அவர்களுக்கு உணவு கொடுக்க முடிவு செய்தேன். அதனால் இன்றும் நாளையும் யார் வேண்டுமானாலும் வந்து சாப்பிடலாம். அவர்களிடம் ‘பில்’ எதுவும் கேட்க மாட்டோம். அவர்களிடம் பணம் இருந்து, கொடுத்தால் மட்டுமே வாங்கிக் கொள்கிறோம். அவர்கள் சாப்பிடுவதற்கான தொகையை எப்போது பணம் கிடைக்கிறதோ அப்போது வந்து கொடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை தராமல் போனாலும் பரவாயில்லை என முடிவு செய்து உள்ளோம்.

பணம் இருந்தும் சாப்பிட முடியாமல் பசியோடு யாரும் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். அதே சமயம், இலவசமாக சப்பாடு கொடுக்கிறோம் என்று சொல்லி அவர்களை கொச்சைப்படுத்தவும் விரும்பவில்லை. அதனால் தான், அவர்களாகவே எப்போது வேண்டுமானாலும் பணம் கொடுக்கலாம் என்று தெரிவித்து உள்ளோம்’’ என்றார்.

சமூக அக்கறையுடன் செயல்படும் இந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் பாராட்டுக்கு உரியவர்கள்!

இந்த வார முகப்புத்தக இற்றை:



இந்த வார குறுஞ்செய்தி:

பணத்திற்கு கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும்.

இந்த வார காணொளி:

பணம் அச்சடிப்பது எப்படி? பாருங்களேன்!


இந்த வார புகைப்படம்:


இது எல்லாம் உங்களுக்குத் தான். யார் வேணும்னாலும் எடுத்துக்கோங்க!

படித்ததில் பிடித்தது:

பணம் என்னும் மாயை:

இரவு படுக்கும்போது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. திடீரென்று இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லை என்று அறிவித்துவிட்டார்கள்.

காலையில் எல்லாம் மாறிவிட்டன. பால் பாக்கெட் இல்லை. பேப்பர் இல்லை. இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லையென்றால் எதைக் கொடுத்து அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது?

மக்கள் எல்லோரும் சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைக்காரரைப் போய்ப் பார்க்க… 'எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா, எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிக்கிட்டோம்' என்று உணவுப்பொருட்களைப் பதுக்கிக்கொண்டார்கள்.

வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச நாளில் காலியாக விட, நாடு முழுவதும் உணவுப்பொருட்களைத் தேடி ஓட ஆரம்பித்தார்கள். ஐ.டி. நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், போக்குவரத்து நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன.

கொஞ்சம் ரயில்களும், அரசு பஸ்களும் மட்டும் இயங்குகின்றன. அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் மாதம் 25 கிலோ அரிசியும், 10 கிலோ கோதுமையும் சம்பளமாக வழங்கப் பட்டது. பெட்ரோல் பங்க்குகளில் ஒரு கிராம் தங்கத்துக்கு 10 லிட்டர் பெட்ரோல் தரப்பட்டது.

எல்லோரும் சைக்கிள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ரயில் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்வோரிடமும், மின்சாரம் மற்றும் டெலிபோன் பயன்படுத்துவோரிடமும் மாதக் கட்டணமாகத் தங்கம் பெறப்பட்டது.

நாடே போர்க்களம் போல் அல்லோலப்பட்டுக் கொண்டு இருக்க… விவசாயிகள் மட்டும் எந்தவித பதற்றமோ சலனமோ இன்றி எப்போதும்போல் கோழி கூவியதும் கலப்பையுடன் உழவுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். வாரச் சந்தைகளில் விவசாயிகளிடம் அரிசி, பருப்பு வாங்க, நகைக்கடை அதிபர்களும் பெரிய செல்வந்தர்களும் அடகுக்கடை சேட்டுகளும் தங்கத்தோடு வரிசையில் நின்றார்கள். உணவுப் பொருட்களுக்காக பங்களா, கார் போன்றவை எல்லாம் விவசாயிகளிடம் விற்கப்பட்டது.

வேலை தேடி எல்லோரும் கிராமங்களுக்குச் செல்ல... மூன்று வேளை உணவுடன் மாதந்தோறும் குடும்பத்துக்குத் தேவையான உணவுப்பொருட்கள் சம்பளமாக வழங்கப்பட்டன.

ஒட்டுமொத்த தனியார் கல்வி நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு, அரசுப் பள்ளிகளும் கல்லூரிகளும் மட்டுமே இயங்கின. அரசுக்குத் தங்கம் பற்றாக்குறையாகும் போதெல்லாம் விவசாயிகளிடம் கடனாகப் பெற்றார்கள். நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் அரை ஏக்கர் விவசாய நிலம் வாங்குவதே வாழ்நாள் லட்சியமாக மாறிப்போனது.

விவசாயத்தின் முக்கியத்துவத்தை எல்லோரும் உணர்ந்ததால், நிலத்தடி நீர் சேகரிக்கப்பட்டது. வறண்ட பூமியெல்லாம் தவறாது மழை பெய்ததால் விவசாய நிலங்களாக மாறின. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான உணவுப்பொருட்கள் போதுமான அளவு கிடைத்ததால், மீதி இருந்த உணவுப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, போதுமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டன!

பணம் எனும் மாய வலையில் சிக்கியிருந்த நாமெல்லாம் இயந்திரங்கள் இல்லை, மனிதர்கள் எனும் உணர்வுகள் நிறைந்த உன்னதப் பிறவிகள் என்பது புரிய ஆரம்பித்தது.

தயவுசெய்து குறட்டையை நிறுத்திவிட்டுக் கொஞ்சம் கண்விழித்துப் பாருங்கள்… இது கனவுதான். ஆனால், எல்லா கனவுகளும் சந்தோஷத்தை மட்டுமே தருவதில்லை. சில கனவுகள் நம் தூக்கத்தையே கலைக்கும் சக்திகொண்டவை

இந்தக் கனவும் அப்படித்தான்...

உயிரற்ற காகிதத்தால் ஆன காசிற்காக,

உயிருள்ள
மனித இனமே,
மனித
இனத்தை அழித்து
கொண்டிருக்கிறது.
எங்கும் கலப்படம்,
எதிலும் கலப்படம்.

பணம் என்பது எந்த மனதையும் மயக்கும் மாயப் பேய். பணம் நம்மிடம் அடிமைப்பட்டு இருக்க வேண்டுமே ஒழிய, பணத்துக்கு நாம் அடிமையாகக் கூடாது!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

26 கருத்துகள்:

  1. அருமை.கோவிந்தன் போன்றவர்களால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். இது போன்ற பிரச்சனைகள் இருக்கும் நேரத்தில் செய்யும் உதவி மறக்க முடியாதது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  2. குறுஞ்செய்தி சொல்லும் செய்தி உண்மை!

    பபி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறுஞ்செய்தி - உண்மை தான். நிறைய இருந்தாலும் இன்னும் தேவை என்பவர் தானே அதிகம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. திருவாளர் கோவிந்தன் பாராட்டுக்கு உரியவர்
    போற்றுவோம் பாராட்டுவோம்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்குரியவரைப் போற்றுவோம்.... அதே தான் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. கோவிந்தன் போன்றவர்கள் பாராட்ட தக்கவர்கள்.
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

      நீக்கு
  5. வணக்கம்
    ஐயா
    பாராட்டுக்கு உரியவர் படித்து மகிழ்ந்தேன் ஐயா த.ம 5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிஞர் த. ரூபன்.

      நீக்கு
  6. பாலாஜி பவன் பாராட்டுக்கு உரியது
    இருக்கிற மனநிலையில் ரூபாய் நோட்டுக்களைப் பார்த்தாலே ஜேன் மனநிலைக்கு போய்விடுகிறேன் ...
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜென் மனநிலைக்கு போய்விடுகிறேன்! - :) அனுபவங்கள் நமக்கு நிறைய பாடங்கள் கற்றுத் தருகின்றன அல்லவா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  7. பதில்கள்
    1. சற்றே தாமதமாக - மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  8. வழக்கம்போல் தாங்கள் தரும் பழக்கலவையின் சுவையை ருசித்தேன்!
    நெல்லையில் உள்ள ஹோட்டல் ஶ்ரீ பாலாஜி யின் உரிமையாரான திரு கோவிந்தன் அவர்களின் தன்னலமற்ற சேவைக்கு பாராட்டுக்கள்! இந்த வார முகப்பு இற்றை அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழக்கலவையின் சுவையை ருசித்தமைக்கு நன்றி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே.நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  9. கோவிந்தன் போன்றவர் எத்தனை நாளைக்குச் சோறு போடமுடியும் அவருக்கும் கொள் முதல் செய்யப் பணம் தேவைதானே நிலைமை சீரடையும் என்று நம்புவோம் நம்பிக்கைதானே வாழ்க்கை. சாலட் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிந்தன் போன்ற பலரும் இங்கே இருக்க வேண்டும். இருப்பார்கள் என நம்புவோம்.... நம்பிக்கை தானே எல்லாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  10. பணம்....ம் அருமையான தொகுப்பு......

    பணம் என்னும் மாயை...கதை மிகவும் அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கையே மாயை - பணமும் தான்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  12. ஓட்டல் உரிமையாளரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! குட்டிக்கதை அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  13. ரூபாய் மாற்றங்கள் கொஞ்சம் கசந்தாலும் ஃப்ரூட் சாலர் இனிமை!

    குறுஞ்செய்தி உண்மையை உரைக்கிறது.

    படித்ததில் பிடித்தது அருமை!

    கோவிந்தன் வாழ்க!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....