எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, November 15, 2016

ஐந்தாம் சகோதரி - மேகாலயா….


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 68

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.
ஷில்லாங்க் போகலாம் வாங்க….


Gauhati to Shillong map...
படம்: இணையத்திலிருந்து….


சாலையோரத்தில் பார்த்த ஒரு வீடு/கடை

முதல் நாள் தேஸ்பூரிலிருந்து கௌஹாத்தி வந்து முன்பு தங்கிய அதே ஹோட்டல் மயூர் என்ற இடத்தில் தங்கினோம்.  அடுத்த நாள் கௌஹாத்தியிலிருந்து மேகாலாயா மாநிலத்தின் ஷில்லாங்க் நகரம் மற்றும் சிரபுஞ்சி ஆகிய இடங்களுக்கு ஒரு நாள் பயணம் சென்று மீண்டும் கௌஹாத்தி வருவதாக எங்கள் திட்டம்.  எங்களுடைய இந்தப் பயணத்தில் எங்களுடைய முக்கிய நோக்கமே அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்க் செல்வது மற்றும் இந்திய-சீன எல்லை செல்வது என்பதால் அந்த இடத்திற்குச் செல்ல ஏற்ப தட்பவெட்ப நிலை பார்த்து தான் திட்டமிட்டோம். 


பொருட்களை இப்படியும் எடுத்துச் செல்லலாம்….


சாலையில் நடந்து செல்லும் ஒரு பழங்குடிப் பெண்…..

ஆனால் அதற்கு உகந்த நிலையாக இருந்தாலும் சீரபுஞ்சி/மேகாலாயா ஆகிய இடங்களில் பார்க்க இருக்கும் நிறைய அருவிகளில் நாங்கள் சென்ற சீசனில் அத்தனை நீர் வரத்து இருக்காது என்பது ஒரு பெரிய குறை.  என்றாலும், சில இடங்களுக்குச் சென்று வர முடிவு செய்து ஒரு நாள் பயணம் போதும் என ஒரு வாகனத்தினை அமர்த்திக் கொண்டு புறப்பட்டோம். முதல் நாளே வாகனத்திற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டதால் அந்த வாகனத்துடன் ஓட்டுனர் வந்தார் – ஆனால் அவர் நாங்கள் பேசிய ஆள் அல்ல.


நாங்கள் பார்த்த அருவி ஒன்றின் க்ளோஸ் அப்!….

அந்த அதிகாலை நேரத்திலேயே கண்களில் கருப்புக் கண்ணாடி அணிந்து வந்திருந்தார்.  சரி ஸ்டைல் போலும் என நாங்கள் பேசிய ஆள் இல்லையே அவர் அங்கே எனக் கேட்க, அவர் என்னுடைய சகோதரர் தான், அவருக்கு வேறு பயணம் முன்னரே புக் ஆகியிருப்பதால் என்னை உங்களுடன் சென்று வர அனுப்பி இருக்கிறார் என்றார். சரி இளைஞராக இருக்கிறார், வாகனமும் ஒழுங்காகவே ஓட்டுவார் என்று நம்பி உட்கார்ந்தோம்.  நாங்கள் புறப்பட்டது காலை ஐந்து மணிக்கு.  அதிகாலையிலேயே எழுந்து குளித்து தயாரானதால், என்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பின் இருக்கைகளில் அமர்ந்து உறங்கி விட்டனர்.  நான் அந்த ஓட்டுனருடன் பேசியபடியே பயணித்துக் கொண்டிருந்தேன். 


பூவா… இல்லை காயா?….

சாலையைக் கவனித்தபடியே வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தார் அந்த ஓட்டுனர் – அவர் பெயர் ராஜேஷ்.  அதிகமாக பேச ஒன்றும் இல்லாததால் நானும் சாலையைக் கவனித்தபடி வந்தேன்.  கௌஹாத்தி நகரிலிருந்து மேகாலயா தலை நகரம் ஷில்லாங்க் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவு. சீரான வேகத்தில் பயணித்தால் இரண்டரை மணி நேரத்திற்குள் சென்று விடலாம் – நடுவே இருக்கும் சாலைப் போக்குவரத்தினைப் பொறுத்து! காலை நேரமாக இருந்தாலும் நிறைய வாகனங்கள் இருந்தன.  அந்த தேசிய நெடுஞ்சாலை 6-ல் எப்போதும் போக்குவரத்து தான்....
பூப் பூவா பறந்து போகலாம்…….

சிறப்பாக இருக்கும் அச்சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும்போதே ஷில்லாங்/மேகாலயா செல்ல உகந்த மாதங்களையும் பார்க்கலாம்.  ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நல்ல நாட்கள். அப்போது தான் மழைக்காலம் – மேகாலயாவில் இருக்கும் பல்வேறு அருவிகளிலும் நல்ல நீர்வரத்து இருக்கும் என்பதால் அந்தச் சமயத்தில் செல்வது நல்லது.  நாங்கள் சென்றது மார்ச் மாதம் என்பதால் பெரும்பாலான அருவிகளில் தண்ணீரே இல்லை. இந்த இடத்தில் தான் அருவியில் தண்ணீர் கொட்டும் என்று கற்பனையில் தான் பார்க்க வேண்டியிருந்தது. என்றாலும் ஐந்தாம் சகோதரியான மேகாலயாவிற்கும் சென்றே தீருவோம் என்று சென்று வந்த பயணம் இது.


விற்பனைக்கு வைத்திருந்த பொம்மைகள்….

பள்ளியில் படித்த சமயத்தில் நம்மில் பலரும் படித்த ஒரு இடம் இந்த மேகாலயாவில் தான் இருக்கிறது. அதிகமான மழை பெய்யும் இடம் என்று நாம் படித்த சீராபுஞ்சி இந்த மாநிலத்தில் தான் இருக்கிறது. பெரும்பாலும் மழை பெய்த அளவை மில்லிமீட்டரில் தான் சொல்வார்கள் – ஆனால் இங்கே பெய்யும் மழையை அடிக்கணக்கில் சொல்ல வேண்டியிருக்கும். அதிக மழை பெய்யும் இடம் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இடம் இந்த மாநிலத்தில் தான் இருக்கிறது.  எங்களது ஒரு நாள் பயணத்தில் நாங்கள் சீராபுஞ்சிக்கும் சென்று வந்தோம். 


அருவியிலிருந்து வந்த தண்ணீர்….

அந்த ஒரு நாள் பயணத்திலும் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் மிகவும் ருசிகரமானவை.  அன்றைய நாள் எங்கள் வடகிழக்குப் பயணத்தின் பதினொன்றாம் நாள்! அந்த நாளின் பயணமே கடைசி நாள் பயணம் மட்டுமல்ல, வாழ்க்கையின் கடைசி பயணமாகவும் மாறி இருக்கக்கூடும் அபாயம் இருந்தது! அதற்குக் காரணம் என்ன, ஏன் இப்படி எழுதுகிறேன் என்பதை எல்லாம் ஒரு நாள் பயணத்தில் நாங்கள் பார்த்த இடங்கள் பற்றியெல்லாம் சொல்லிய பின்னர் சொல்கிறேன்.  முதலில் பார்த்த இடங்கள், அங்கே கிடைத்த அனுபவங்கள் பற்றிச் சொல்லி விடுகிறேன்.


நாங்கள் பார்த்த ஏரி….


இது என்ன என்பதைச் சொல்லுங்களேன்……

கௌஹாத்தியிலிருந்து பயணித்து நாங்கள் மேகாலயாவில் நுழைந்து பார்த்த முதல் இடம் ஒரு ஏரி. அது என்ன ஏரி, அங்கே என்ன அனுபவங்கள் கிடைத்தது என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்....

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

18 comments:

 1. ஓட்டுனருக்கு கண் சரியில்லையோ? கறுப்புக் கண்ணாடி? தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கண் சரியில்லையோ? வரும் பதிவுகளில் சொல்லி விடுவேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. தொடர்ந்து வருகிறோம். ஏரியைக் காண காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. இது என்ன? குப்பைத்தொட்டி. சரியா?

  ReplyDelete
  Replies
  1. குப்பைத் தொட்டி - அதே தான்.... சரியான விடை சொல்லி விட்டீர்கள் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.

   Delete
 5. பூக்கள் போட்டோ அழகாக உள்ளது . அந்தக் கூம்பு வடிவக் கூடை எதற்க்கென்று யோசித்ததில் மூளை ....... ஆகி விட்டது. there is an apt pic in the google where brain in inserted in a cone , but all my efforts to paste in the comment went in vain.
  .

  ReplyDelete
  Replies
  1. கருத்துகளில் படங்கள் சேர்க்க இயலாது - என் வலைப்பூவில்! சேர்ப்பதற்கு சில மாற்றங்கள் செய்ய வேண்டும் - சாந்தி மாரியப்பன் அவர்களின் தளத்தில் சேர்க்க முடியும்!

   குப்பைத் தொட்டி தான் அது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 6. சீராபுஞ்சியை காண காத்திருக்கிறோம்...

  கடைசி நாள் பயணம் ..திகில் அனுபவமோ...

  ReplyDelete
  Replies
  1. திகில் அனுபவமே தான்......

   அனுபவங்கள் ஒவ்வொன்றாக வெளிவரும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 7. தீ அணைப்புக்கான மண் வைக்கும் கூடை (நம் ஊரில் வாளி வைத்திருப்பதுபோல்). அல்லது குப்பைத் தொட்டி. (உணவுக்கடை போல் தெரிவதால்)

  ReplyDelete
  Replies
  1. குப்பைத் தொட்டி தான்.... நீங்களும் ப. கந்தசாமி ஐயாவும் சரியாக சொல்லிவிட்டீர்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்....

   Delete
 8. சஸ்பென்ஸோட முடிச்சிருக்கீங்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 9. கறுப்புக் கண்ணாடி ரகசியம் முன்பு கூட வந்தது போல! இது வேறோ...அந்தக் கூடை குப்பைக் கூடைதானே ஜி?? அது வைக்கப்பட்டிருக்கும் ஸ்டான்ட் அப்படித்தான் சொல்லுகிறது!!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கறுப்புக் கண்ணாடி ரகசியம் பற்றி இரண்டு, மூன்று பதிவுகளில் உள்ளது. ரகசியத்தினையும் இப்போது வெளியிட்டாயிற்று!

   குப்பைக்கூடையே தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....