வியாழன், 17 நவம்பர், 2016

கண்ணீரால் உருவான உமியம் ஏரி - மேகாலயா….


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 69

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

ஷில்லாங்க் உமியம் ஏரி
படம்: இணையத்திலிருந்து....

ஷில்லாங்க் நகரில் உள்ளே நுழைந்ததும் அந்த காலை நேரத்திலேயே நாங்கள் சென்ற முதல் இடம் நகரின் முக்கியமான இடமான உமியம் ஏரிக்குத் தான்! ஷில்லாங்க் நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த ஏரி. அத்தனை அழகான ஏரியை சாலையில் இருந்தே பார்க்கும்படி வசதி இருக்கிறது.  ஏரிக்கரைக்குச் சென்று அந்த காலை நேரத்தில் செய்யப்போவது ஒன்றும் இல்லை என்பதால் சாலை ஓரத்தில் வண்டியை நிறுத்தி அங்கே சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தோம். அந்த ஏரி இயற்கையாக உருவானது இல்லை, செயற்கையாக உருவானது என்பதும் ஒரு செய்தி! எப்படி உருவானது என்பதற்கு ஒரு கதை உண்டு….


படம்: இணையத்திலிருந்து....

உமியம் என்பதற்கு மேகாலயாவின் பாரம்பரிய மொழியில் ”கண்ணீரால் உருவான தண்ணீர்” என்ற அர்த்தமாம்….  அதாவது ஏரி உருவானதே கண்ணீரால் என்பது தான் இந்தப் பெயர் சொல்லும் செய்தி! அதுவும் ஒரு பெண்ணின் கண்ணீரால் உருவானதாம் இந்த ஏரி. அழுதே காரியம் சாதிக்கிறார்கள் என்று பல பெண்கள் பற்றிச் சொல்லுவார்கள். ஆனால் ஒரு பெண் அழுது ஒரு ஏரியே உருவாகும் அளவிற்கு அழுவாளா? அழுதிருக்கிறாள் என்று சொல்கிறார்கள்.  எதற்காக அழுதாள், அது என்ன கதை, என்பதைப் பார்க்கலாமா?


 சாலையிலிருந்து பார்த்த உமியம் ஏரி...

இரண்டு தேவலோகப் பெண்கள் தேவலோகத்திலிருந்து பூமியைச் சுற்றிப்பார்க்க வருகிறார்கள்.  அவர்களும் பயணப் பிரியர்கள் போல! ஆனால் என்னவொரு வசதி – பேருந்து, விமானம் என எதுவும் இல்லாமல் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்குப் பயணம் செய்யும் சக்தி அவர்களுக்கு உண்டே…. அப்படி ஒரு சக்தி இருந்தால் பாதி நேரம் நானும் சுற்றிக் கொண்டிருப்பேன்.  சரி என் விருப்பம் விடுங்கள், அந்த தேவலோகப் பெண்களின் கதைக்கு வருவோம்!  அப்படி பூமியைச் சுற்றி வந்து கொண்டிருந்தபோது, இருவரில் ஒரு பெண் காணாமல் போய்விடுகிறார். எங்கே சென்றார், அதுவும் தனது தோழியிடம் சொல்லாமல் கொள்ளாமல் எங்கே சென்றார், அவருக்கு என்ன ஆனது, யாரேனும் கடத்தி விட்டார்களா? என்று எதுவும் மற்றவருக்குத் தெரியாது.


காலை நேரத்தில் உமியம் ஏரி - என்னவொரு அமைதி! 

தொலைந்து போன தேவலோகப் பெண்ணைத் தேடி மற்றவர் அங்கும் இங்கும் அலைகிறார். அப்படி அலைந்து திரிந்து அவர் வந்து சேர்ந்த இடம் மேகாலயா! தேடித்தேடிக் களைத்து இதற்கு மேல் தேடமுடியாது என்ற நிலையில் மேகாலயாவில் வந்து சேர்ந்த இடத்தில் அவரால் தோழியைப் பிரிந்ததை தாங்கவே முடியவில்லை.  கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிகிறது.  இடைவிடாத கண்ணீர்!  அந்த தேவலோகப் பெண்மணியின் கண்ணீரை நிறுத்தவே முடியவில்லை! அப்படித் தொடர்ந்து அந்தப் பெண் அழுததில், அவரது கண்ணீரால் உருவானது தானாம் இந்த உமியம் ஏரி!


படம்: படகு இல்லத்திற்கு ஒரு விளம்பரம்

அழகான ஏரி – எதிரே KHகாசி மலைத்தொடர், ஏரிக்கரையில் புல்வெளி என ரம்மியமான சூழல். ஏரிக்கு நடுவே ஒரு சிறிய தீவு – பெயர் லும்பாங்டெங்… அங்கே ஒரு சிறிய படகு இல்லமும் உண்டு. அங்கே தங்கும் வசதிகளும் உண்டு. ஏரிக்கரையில் அமர்ந்து இயற்கையை ரசித்தபடி இருக்கலாம்.  ஷில்லாங் நகர் வாசிகளுக்கு பொழுதுபோக்கே இந்த ஏரிக்கரையில் அமர்ந்து கொண்டு இருப்பது தானாம். இயற்கைச் சூழலில் இருக்க யாருக்குத் தான் பிடிக்காது! இந்த ஏரிக்கு இன்னுமொரு பெயரும் உண்டு! அது படாபானி – ஹிந்தியில் படா என்றால் பெரிய என்ற அர்த்தமுண்டு – இதற்கும் அதே அர்த்தம் – நிறைய தண்ணீர்!


ஏரிக்கரையின் மேலே....

நகரின் மொத்த தண்ணீர் தேவையையும் இந்த ஏரிதான் பூர்த்தி செய்கிறது. தவிர ஊரில் உள்ள மக்களுக்குத் தேவையான மீன்களும் இந்த ஏரியில் இருந்து தான் பிடிக்கிறார்கள்.  கண்ணீரில் உருவான ஏரி என்றால் உப்பு கரிக்குமே அதை எப்படிக் குடிக்கிறார்கள் என்ற அறிவு பூர்வமான கேள்வி கேட்டீர்கள் என்றால் நான்கு நாட்களுக்கு உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காது! நகரின் குடிநீர் தேவைக்காக உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கத்தின் பகுதியாக உருவானது இந்த ஏரி என்றும் சொல்வதுண்டு. கண்ணீரால் உருவானதோ, இல்லை இயற்கையாக பெய்த மழையால் உருவானதோ, எப்படி இருந்தால் என்ன – ஏரியின் அழகையும், அந்தச் சூழலையும் ரசிப்போம்.


படம்: ஏரிக்கரையில் நான்!

இங்கே 9 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் மின்நிலையமும் அமைந்திருக்கிறது.  அரசின் இரு துறைகளும் சேர்ந்து இந்த இடத்தினை பராமரிக்கிறார்கள். அரசுத்துறையின் பராமரிப்பில் இருந்தாலும், இந்த ஏரிப்பகுதியில் சில தனியார் தங்குமிடங்கள், ரிசார்ட்டுகளும் உண்டு.  சுற்றுலாவாக வருபவர்கள் அந்த ரிசார்ட்டுகளில் தங்கி இயற்கையை ரசிக்கலாம். ஓய்வும் எடுக்கலாம்!


படம்: இணையத்திலிருந்து....

இந்த ஏரிப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு நிறைய வசதிகள் செய்து தருகிறது மேகாலயா சுற்றுலா வாரியம். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பலவித வசதிகள் – படகுப் பயணம் செய்யும் வசதிகள், தண்ணீரில் செல்லும் ஸ்கூட்டர்கள் தவிர விளையாட்டு வசதிகள் இங்கே உண்டு.  ஷில்லாங்க் நகருக்குச் சென்றால் இந்த உமியம் ஏரிக்குச் சென்று இரண்டு மணி நேரம் உல்லாசமாக இருந்து வரலாம். சாலையின் ஓரத்தில் இருக்கும் மேடைகளில் நின்றபடி நாங்களும் இயற்கையை ரசித்து சுத்தமான காற்றைச் சுவாசித்தோம்.  அப்பகுதியில் பார்த்தபோது நிறைய பேர் இங்கே உல்லாசமாக இருந்திருப்பார்கள் என்று தெரிந்து கொண்டோம் – எப்படி என்று தானே கேட்கிறீர்கள் – அங்கே அத்தனை சரக்கு பாட்டில்கள் கிடந்தன!


படம்: இணையத்திலிருந்து....

தவிர நகரின் கழிவுகளை ஏரியில் கலப்பது, தண்ணீர் வரும் வழிகளை அடைத்து வீடுகள் கட்டுவது, நகரமயமாக்கல் என முன்னேற்றப் பாதையில் செல்வதாய் நினைத்து செய்யும் பலவித கொடுஞ்செயல்களால் இந்த ஏரி இப்போது திணறிக்கொண்டிருக்கிறது. பல இடங்களைப் போலவே இந்த உமியம் ஏரியும் அழிந்து விடுமோ என்ற பயம் இயற்கைப் பிரியர்களுக்கு உண்டு. மேகாலயா அரசாங்கம் விழித்துக் கொள்ளுமா இல்லை மற்ற அரசாங்கம்/மக்களைப் போலவே இந்த ஏரியின் அழிவினைப் பார்த்து கொண்டு சும்மா இருப்பார்களா என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.


படம்: இணையத்திலிருந்து....

மேகாலயா பக்கம் சென்றால் நிச்சயம் இந்த ஏரிக்குச் சென்று இயற்கையை ரசியுங்கள்! படகுப் பயணம் செல்வது மட்டுமின்றி Water Sports வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! 

அடுத்ததாய் நாங்கள் எங்கே சென்றோம், அங்கே என்ன பார்த்தோம் என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

8 கருத்துகள்:

  1. மேகாலயா.. உமியம் ஏரி. படா பானி..தேவலோகப் பெண்கள். சுற்றிப் பார்த்தது போலக் குளுமையாக இருந்தது பகிர்வு. நன்றி வெங்கட் சகோ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் வலைப்பக்கம் உங்கள் வரவு.... மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

      நீக்கு
  2. //மேகாலயா அரசாங்கம் விழித்துக் கொள்ளுமா இல்லை மற்ற அரசாங்கம்/மக்களைப் போலவே இந்த ஏரியின் அழிவினைப் பார்த்து கொண்டு சும்மா இருப்பார்களா என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.//

    மேகாலயா அரசு விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஏரியின் அழிவை தடுக்கட்டும்.
    ஏரியின் கதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  3. ஏரிகளை ஒட்டிழ நகரங்கள் எப்போதும் அழகுதான் எனினும் உங்கள் எயுத்தில் இன்னும் அழகாய் தோன்றுகின்றது.அரசு விழித்தெழுந்து ஏரியை பராமரித்து காத்திடட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு
  4. இந்த ஏழு மாநிலங்களில் ஏதேனும் ஒரு சோகக் கதை இருக்கிறது இல்லையா வெங்கட் ஜி? அழகான இடம்...தகவல்களும் சுவாரஸ்யம்.

    கீதா: அழ்கான இடம். மிக் மிக அழகான இடம். குறித்துக் கொண்டுவிட்டேன் ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு சோகக் கதை. இருக்கலாம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....