எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, November 28, 2016

மேகாலயா - எங்கெங்கும் நீர்வீழ்ச்சி….ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 70

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

பிஷப் நீர்வீழ்ச்சி

சென்ற பகுதியில் ஷில்லாங்க் நகரின் அருகே உள்ள உமியம் ஏரியைப் பற்றிப் பார்த்தோம்.  அதன் பிறகு வலைப்பதிவுகளில் சற்றே இடைவெளி! இப்போது மீண்டும் பயணத்தினைத் தொடர்வோம்.  இந்தப் பகுதியில் மேகாலயா மாநிலத்தில் உள்ள பல்வேறு நீர்வீழ்ச்சிகளைப் பற்றிப் பார்க்கலாம்.  அதிகமான மழை பெய்யும் சீரபுஞ்சி இருக்கும் மாநிலம் என்பதாலோ என்னவோ, இம்மாநிலத்தில் எங்கெங்கு பார்த்தாலும் நீர்வீழ்ச்சிகள் – பத்துக்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் இங்கே இருக்கின்றன.  அதில் நாங்கள் பார்த்த நீர்வீழ்ச்சிகள் வெகு சில மட்டுமே.  காரணம் நாங்கள் சென்றபோது இந்த நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து இல்லை! – இங்கே தான் நீர்வீழ்ச்சி இருக்கிறது என்பதை மட்டுமே பார்க்க முடிந்தது.  அப்படிப் பார்த்த, பார்க்காத நீர்வீழ்ச்சிகள் பற்றிய குறிப்புகள் இப்பகுதியிலும் வரும் பகுதிகளிலும் பார்க்கலாம்!


பேடன் நீர்வீழ்ச்சி

Bishop and Beadon Falls: இந்த நீர்வீழ்ச்சிகள் இரண்டுமே ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவிகள் – பக்கத்துப் பக்கத்திலே இருப்பதால் இவற்றை Twin Waterfalls என்றும் அழைக்கிறார்கள்.  கிழக்கு khகாசி மலைப்பகுதிகளில் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சிகள் இரண்டுமே கிட்டத்தட்ட 135 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது.  அதாவது சுமார் 443 அடி உயரத்திலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகள். இவை இருக்கும் பகுதி மேகாலயாவின் மாப்ரேம் எனும் பகுதி.  நாங்கள் சென்றபோது இந்த இரண்டு நீர்வீழ்ச்சிகளிலிருந்து மெலிதாக தண்ணீர் ஒழுகிக்கொண்டு இருந்தது.  இவை இரண்டையுமே ஒரு இடத்திலிருந்து பார்க்கும்படி மேடை அமைத்து வைத்திருக்கிறார்கள். தண்ணீர் முழுதாகக் கொட்டும்போது எப்படி இருக்கும் என்று மனக்கண்ணில் பார்த்து விட்டு அடுத்த நீர்வீழ்ச்சியை நோக்கி முன்னேறினோம். 


யானை நீர்வீழ்ச்சி


யானை நீர்வீழ்ச்சி பெயர்க்காரணப் பலகையும் நாங்களும்

Elephant Falls: இந்த யானை நீர்வீழ்ச்சி Upper Shillong என அழைக்கப்படும் பகுதியில் அமைந்திருக்கிறது.  இப்பகுதியில் வசிக்கும் khகாசி மக்கள் இந்த நீர்வீழ்ச்சிக்கு வைத்த பெயர் KA KSHAID LAI PATENG KHOHSIEW அதாவது THREE STEPS WATER FALS – இது ஒரு காரணப் பெயர். இந்த நீர்வீழ்ச்சி மூன்று நிலைகளில் வீழ்ந்து ஓடுவதால் இப்படி பெயர் வைத்திருந்தார்கள்.  ஆனாலும் இந்தப் பெயர் அழிந்து யானை நீர்வீழ்ச்சி ஆகிவிட்டது! ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்டுகொண்டிருந்தபோது, இந்த நீர்வீழ்ச்சிக்கு வந்து பார்க்கையில், அங்கே யானை உருவில் ஒரு பாறை இருக்க, இந்த நீர்வீழ்ச்சிக்கு Elephant Falls என பெயர் வைத்துவிட்டார்கள்.  இப்போது அந்த யானை வடிவ பாறையும் இல்லை – 1897-ஆம் ஆண்டு வந்த நிலநடுக்கத்தில் அந்த யானை வடிவப் பாறை அழிந்து விட்டது!  இப்போது பெயரில் மட்டுமே யானை!


ஃபோட்டோ-ல நாம அழகா வந்துருக்கோமா……


நீர்வீழ்ச்சியில் இருந்து வீழ்ந்த நீர் தேங்கி இருக்கும் இடம்

மூன்று நிலைகளில் விழும் நீர்வீழ்ச்சிகளைப் பார்க்க கொஞ்சம் படிகளில் இறங்கி நடக்க வேண்டும்! உள்ளே செல்ல கட்டணமும் உண்டு என்பதை சொல்லி விடுகிறேன்.  பல ஜோடிகளைப் பார்க்க முடிந்தது. டிஜிட்டல் கேமரா கொண்டு செல்ஃபி எடுக்க முயன்ற ஒரு ஜோடி படும் கஷ்டம் பார்த்து நான் அவர்களது கேமராவில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொடுத்தேன்! என்னுடைய காமிராவிலும் அவர்களது படம் எடுத்திருக்கிறேன் – Long Shot! – நான் அவர்கள் காமிராவில் எடுத்த படத்தினைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தபோது!


ஃபோட்டோ செஷன்…..

Wah Kaba Falls:

Shillong – Sohra பாதையில் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சியைப் பார்க்க ஒரு மேடை அமைத்திருக்கிறார்கள்.  அங்கிருந்து தான் நாங்கள் பார்த்தோம்.  இங்கே அருகில் சென்று பார்க்க வேண்டுமெனில் கொஞ்சம் ட்ரெக் செய்ய வேண்டும். தண்ணீர் வரத்து அதிகம் இருந்திருந்தால் ஒரு வேளை சென்றிருக்கலாம்.  அத்தனை தண்ணீர் வரத்து இல்லாதபோது மேடையிலிருந்தே பார்த்து – தண்ணீர் இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனையிலேயே அதை ரசித்து முடித்தோம்.  அங்கே கொஞ்சம் நேரம் இருந்து அந்த இயற்கைக்காட்சிகளையும், மலைகளையும் பார்த்து ரசித்தோம். 


தயாராகும் மில்க்மெய்ட் டீ!

எதிரே ஒன்றிரண்டு கடைகள் – அங்கே சுடச்சுட தேநீரும் மேகியும் விற்பனை நடந்து கொண்டிருந்தது. சரி தேநீர் குடிக்கலாமே என அங்கே சென்றோம். ஒரு குடும்பமே அந்த கடையை நிர்வாகம் செய்து கொண்டிருந்தது. பதினைந்து, பதினாறு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தான் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தார்.  எங்கள் தேவையைச் சொல்ல – அதாவது இரண்டு ப்ளாக் டீ, மூன்று பால் டீ எனச் சொல்ல, ஐந்து ப்ளாக் டீ தயாரித்தார் அப்பெண்.  இரண்டு ப்ளாக் டீ கொடுத்த பிறகு, மீதி இருந்ததில் இரண்டு மூன்று ஸ்பூன் மில்க் மெய்ட் விட்டு ஒரு கலக்கு – அது தான் பால் டீ!  பாலுக்கு பதிலாக மில்க் மெய்ட் – அதுவும் ஏதோ ஒரு லோக்கல் சரக்கு! மில்க் மெயிட் இனிப்பும், ஏற்கனவே போட்ட சர்க்கரை இனிப்பும் சேர்ந்து அதீத இனிப்பில் இருந்தது அந்த பால் டீ எனும் திரவம்!  அதற்கு ப்ளாக் டீயே குடித்திருக்கலாம் என பிறகு தான் தோன்றியது – எப்போதுமே கண் கெட்ட பிறகு தானே சூர்ய நமஸ்காரம்!

அந்த டீயை வேண்டா வெறுப்பாகக் குடித்து முடித்தோம்! அதற்குப் பிறகு மேகாலயாவில் எங்கே தேநீர் குடித்தாலும், மில்க் மெய்ட் சேர்க்காமல், பால் சேர்த்தால் தான் எங்களுக்கு வேண்டும் என்பதை முன்னெச்சரிக்கையாக சொல்லி விடுவது வழக்கமாகி இருந்தது. இப்படியாக தேநீர் குடித்து அங்கிருந்து புறப்பட்டோம் – காலை நேர உணவுக்காக வயிறு கதற ஆரம்பித்திருந்தது.  அடுத்ததாக உணவு சாப்பிட்ட பிறகு தான் மற்ற வேலைகள் என்ற முடிவோடு அங்கிருந்து புறப்பட்டோம்.  அந்த அனுபவம் அடுத்த பகுதியில்…..

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

26 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. பள்ளியில் படித்த சிரபுஞ்சியை நினைவுபடுத்தி -
  அழகான அருவிகளின் படங்களை வழங்கியிருக்கின்றீர்கள்..

  உலகில் அதிக மழை பெறும் சிரபுஞ்சியிலும் மழை குறைந்து விட்டது - காலத்தின் கொடுமை..

  இனிய பதிவு கண்டு மகிழ்ச்சி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 3. யானை நீர்வீழ்ச்சி ரொம்பவே அழகாக உள்ளது உயரம் கம்மி yet looks so beautiful.

  ReplyDelete
  Replies
  1. மூன்று நிலைகளில் உள்ள நீர்வீழ்ச்சி இது.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 4. என்னவொரு அழகான இடம்... ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. அருமையான பயணப் பதிவு. நானும் இவற்றை நேரில் பார்த்து பரவசப்பட்டிருக்கிறேன்.
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 6. நீர்வீழ்ச்சி அழகு.
  மில்க் மெய்ட் டீ நல்ல அனுபவம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 7. இத்தனை அருவிகளிருந்தாலும் நம்ம குற்றால அருவியில் குளித்த சுகம் போல் வருமா :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 8. வழக்கம் போல சுவாரஸ்யமான தகவல்களுடன் அருமையான படங்களின் அணிவகுப்பு! ரசித்தேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 9. அட! நீர்வீழ்சிகள்! நல்ல அனுபவம். படங்களும் அருமை.

  இருவரும் இன்னும் பழைய பயணத் தொடரையும் வாசிக்க வேண்டும்.

  கீதா: குறித்துக் கொண்டாயிற்று. ஜி. அருவிகள் என்றாலே மிகவும் பிடிக்கும். அழகான இடம். மிக மிக அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். தங்களிடமிருந்தும் (சகோ செந்தில் மற்றும் துளசி கோபால் அவர்களிடமிருந்தும்..) பயணக் கட்டுரைகள் எழுதும் விதத்தைக் கற்று மேம்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.

  இன்று வெளியாகவிருக்கும் (பெரும்பாலும் இரவில் தான் இருக்கும்) எங்கள் தளப் பதிவும் ஓர் அருவியைப் பற்றியதுதான்!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... உங்கள் பக்கத்திலும் ஒரு அருவி பற்றிய தகவல்களா.... படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 10. கண்களுக்கும் மனதிற்கும் குளிர்சியூட்டிப்போகுது
  படங்களும் பதிவும்
  தொடர வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 11. மில்க் மெய்ட் டீ செய்யும் போது நாங்கள் சீனி சேர்ப்பதில்லை. மில்க்மெய்ட்டில் இருக்கும் இனிப்பே போதுமாயிருக்கும், அதை முன்னரே சொல்லி விடலாம்.எங்க பக்கம் மில்க்மெய்ட் டீ எனில் தான் ஸ்பெஷல் டீ, பால் விட்டால் அது சாதாரண டீ.ஆனால் மில்க் மெய்ட் டீயை சாயாவோடு கல்ந்து உயரமாய் தூக்கி ஒரு ஆத்து ஆத்தணும், அப்போதான் டீ ருசிக்கும், சும்மா கரண்டியால் கலக்கினால் ஆகாது.

  ஏரிகளும் படங்களும் அழகு

  ReplyDelete
  Replies
  1. ஆஹா மில்க் மெய்ட் டீ நீங்களும் செய்வீர்களா.... நான் அங்கே செல்லும் வரை இப்படி ஒரு டீ அருந்தியதில்லை. நீங்கள் சொன்ன படி செய்து பார்க்க வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
  2. மில்க்மெய்ட் டீ எப்படி போடுவது என இந்த பதிவை படித்தபின் விபரம் சொல்ல வேண்டும் என இருந்தேன்.மறந்து விட்டேன். மில்க் மெய்ட் பால் டீ எப்போதும் ஸ்பெஷல் டீ. பால் டீயை விட விலை அதிகமானது. அதற்கு நர்மலான போடும் பிளாக் டீ டிகாசனை விட இரண்டு மடங்கு கடுமையாக இட்டு சுகர் சேர்க்காமல் மில்ஸ்மெய்ட் பால் கொஞ்சமே கொஞ்சம் இட்டு உயர்த்தி ஆற்றி எடுக்கணும்,இரண்டு தடவை ஆற்றி எடுத்தால் டீ ஆறி நுரைத்து குடிக்கும் பதத்தில் வந்து விடும். உங்களுக்கு அந்த கடையில் சாதாரண தேநீர் டிகாசனில் போட்டதால் தான் வயிற்றை பிரட்டுவது போல் இருந்திருக்கும்,டீ க்குரிய தண்ணீர் கொதி நிலையில் இருக்கும் போதே மில்க் மெய்ட்டை விட்டு ஆத்தனும்.

   Delete
  3. மில்க்மெய்ட் டீ எப்படி தயாரிப்பது என்பதை குறிப்பாக இங்கே கொடுத்தமைக்கு நன்றி. செய்து பார்க்கிறேன்.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா....

   Delete
 12. நீர்வீழ்ச்சிகளையோ ஆற்றையோ கண்டால் எனக்குக் குளிக்கும் ஆவல் வரும் போகுமிடங்களை எல்லாம் குறிப்பெடுத்துக் கொள்வீர்களா பதிவிடுவதற்கு

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு இடத்திலிருந்து அடுத்த இடம் வருவதற்குள் தேவையான ஹிண்ட்ஸ் அலைபேசியில் சேமித்துக் கொள்வேன். மேலும் எடுக்கும் படங்களும் தகவல்கள் தரும் விதமாக இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....