எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, November 29, 2016

அலுவலகத் தொல்லைகளில் இருந்து விடுபட….கடந்த சில வாரங்களாகவே அலுவலகத்தில் அதிகமான பணிச்சுமை – பதிவுகள் கூட ஒரு வாரம் எழுதவில்லை – மற்ற நண்பர்களின் பதிவுகளும் படிக்கவில்லை. சில நாட்கள் காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்குச் சென்றால் வீடு திரும்பும்போது இரவு ஒன்பதரை மணிக்கு மேல் ஆகிவிடும். ஒவ்வொரு நாளும் பன்னிரெண்டு மணிக்கு மேல் அலுவலகத்தில் இருந்தால் மற்ற வேலைகள் – சமைப்பது, வீட்டு வேலைகள் ஆகிய அனைத்துமே தடைபட்டு விடுகின்றன.  ஒன்பதரை மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து சமைத்து சாப்பிட்டு படுக்க நள்ளிரவு ஆகிவிடுகிறது!

இப்படி எல்லாம் வேலை செய்து கொண்டிருந்தபோது அலுவலகத்தில் ஒரு நாள் இது பற்றி பேச்சு வந்தது. தொடர்ந்து தொல்லைகள் இருந்தால் எப்படி சமாளிப்பது, ஏதாவது செய்ய முடியுமா என்ற பேச்சு வந்தபோது பழைய அனுபவங்கள், நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன.  அவற்றை இங்கேயும் பார்க்கலாம்….

நிகழ்வு-1: எனக்குத் தெரிந்த நபர் வேலை பார்த்துக் கொண்டிருந்த அலுவலகத்தில் [அரசு அலுவலகம் தான்] அவருடைய மேலதிகாரி ரொம்பவே படுத்திக் கொண்டிருந்தார்.  தினம் தினம் இரவு வெகு நேரம் வரை உட்கார வைப்பது, செய்யும் வேலைகளில் குறை சொல்வது, தட்டச்சு செய்து கொடுக்கும் கோப்புகளில் மீண்டும், மீண்டும் மாற்றங்கள் செய்வது என ரொம்பவே படுத்தல். ஒவ்வொரு நாளும் பகல் நேரங்களில் பல்வேறு நபர்களுடனான Meetings வைத்துக் கொண்டு, அவருக்கு வரும் கோப்புகள் அனைத்தையுமே மாலை 06.00 மணிக்கு மேல் தான் கையில் எடுப்பார். அதன் பிறகு அந்த கோப்புகள் சம்பந்தமான வேலைகள் முடிய இரவு ஒன்பது மணியாகிவிடும்.  ஒவ்வொரு நாளும் இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தது. 

சனிக்கிழமைகள்/அலுவலக விடுமுறை நாட்களிலும் அலுவலகம் வந்து உட்கார்ந்து கொண்டு, நண்பரை ரொம்பவே படுத்துவார்.  எத்தனையோ முறை மேலதிகாரிகளிடம் முறையீடு செய்தாலும் எந்த மாற்று ஏற்பாடுகளோ, இவரது பணியிடம் மாற்றவோ இல்லை.  ஆறேழு மாதம் இப்படியே தொல்லைகள் தொடர, நண்பர் ஒரு முடிவு செய்தார். இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது, ஏதாவது செய்து இவரை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.  அவருக்கு ஒரு யோசனை தோன்ற உடனே செயல்படுத்திவிட்டார். அந்த யோசனை – அதிகாரி வீட்டின் அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு தொலைபேசியில் அழைத்து, இந்த வீட்டில் இருக்கும் அதிகாரி இறந்து விட்டார், உடனே பிரேத ஊர்தி அனுப்பி வையுங்கள் எனச் சொல்லி முகவரியும் கொடுத்துவிட்டார் – தான் யார் என்பதைச் சொல்லவில்லை.

அப்போதெல்லாம் தொலைபேசி தான் – அலைபேசி கிடையாது. யார் அழைத்தார் என்பதெல்லாம் கண்டுபிடிக்க வசதி இல்லை! சிறிது நேரத்தில், அந்த அதிகாரி வீட்டுக்கு பிரேத ஊர்தி ஊளையிட்ட படியே விரைந்து சென்றது. ஓட்டுனரும் வண்டியை நிறுத்திவிட்டு, அந்த முகவரியில் உள்ள வீட்டுக்குச் சென்றால் வெளியே ஆள் நடமாட்டமே இல்லை. அவருக்குச் சந்தேகம் வந்தாலும் கேட்டுவிடுவோம் என, கதவைத் தட்டி “வண்டி வந்தாச்சு….” என்று சொல்ல, கதவைத் திறந்த அதிகாரி கேட்டிருக்கிறார் – “என்ன வண்டி, நான் சொல்லவே இல்லையே?” 

பிரேத ஊர்தியின் ஓட்டுனரும், அதிகாரியின் பெயரைச் சொல்லி, அவர் இறந்து விட்டார் என தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது, அதனால் தான் வந்தேன், இந்த முகவரி தானே தந்தார்கள்” எனச் சொல்ல, அந்த அதிகாரிக்கு பயங்கர குழப்பம். ஓட்டுனரிடம் ”இறந்ததாகச் சொன்னது என்னைத் தான், நான் உயிருடன் தான் இருக்கிறேன்” என்று சொல்லி, அவரை திருப்பி அனுப்ப, ஓட்டுனரோ, ”நான் பிரேதம் எடுக்க வந்துவிட்டேனே, எனக்கு காசு யார் கொடுப்பார்?” எனக் கேட்க, அவருக்கு அதிகாரியே கொஞ்சம் காசு கொடுத்து திருப்பி அனுப்பி இருக்கிறார்.  அந்த அதிகாரிக்கு பயங்கரக் கோபம், தன்னை யாரோ இப்படி இறந்தவனாக ஆக்கிவிட்டார்களே என்று! அடுத்த நாள் அலுவலகம் வரும்போது சுரத்தில்லாமல் வந்திருக்கிறார்.  அவரைப் பார்த்து நண்பருக்கு பயங்கர சிரிப்பு – ஆனாலும் கட்டுப்படுத்திக் கொண்டு வணக்கம் சொல்லி இருக்கிறார். நாள் முழுவதும் தொல்லையே தரவில்லை. மாலையிலும் வீட்டுக்கு சீக்கிரமே திரும்பி விட்டாராம்.  தொடர்ந்து இப்படி ஒரு வாரம் நடந்திருக்கிறது.  கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களைத் தொந்தரவு செய்வது குறைந்து விட்டதாம் இந்த அதிர்ச்சி வைத்தியத்தில்!

நிகழ்வு-2: இதே மாதிரி ஒரு நபரை அலுவலகத்தில் படுத்திக் கொண்டிருக்க, அவர், தன்னை வேறு அரசு அலுவலகத்திற்கு மாற்றி விடும்படி பலமுறை எழுதிக் கொடுத்து இருக்கிறார். ஆனால் அதற்கு உயர் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் படுத்துவது தொடர்ந்து கொண்டிருந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த நபர் ஒரு நாள் நள்ளிரவு சமயத்தில், அந்த அலுவலகத்தின் மூத்த அதிகாரி – அவர் தான் அலுவலகத்திலேயே பெரிய அதிகாரி – வீட்டு தொலைபேசிக்கு அழைத்து, தான் இன்னார் பேசுகிறேன் என்றும், தனது அதிகாரியின் தொலைபேசி எண் இருக்கிறதா என்றும் கேட்டிருக்கிறார். எதற்கு என அந்த பெரிய அதிகாரி கேட்க, நாளைக்கு நான் வரமாட்டேன், எனக்கு லீவு சொல்லணும், நெட்ல தேடினா, உங்க வீட்டு எண் தான் கிடைத்தது, சரி உங்க கிட்ட எல்லா தொலைபேசி எண்களும் இருக்குமே என உங்களை அழைத்தேன் என்று சொல்லி இருக்கிறார் அந்த நபர். 

அடுத்த நாள் நல்ல ஜாலி மூடில் அலுவலகம் செல்ல, அவருக்கு மாற்றல் உத்தரவு மதியத்திற்குள் கிடைத்தது! அந்த அலுவலகத்திலிருந்து வேறு கட்டிடத்தில் இருக்கும் வேறு ஒரு அரசு அலுவலத்திற்கு!

இந்த நிகழ்வுகள் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது இந்த இரண்டில் எது எனக்கு ஒத்து வரும் என யோசித்துக் கொண்டிருக்கிறேன்! இரண்டுமே சரி வராது – இன்றைய சூழலில்!  முதல் நிகழ்வு கொஞ்சம் ஓவர்.  இரண்டாவது நிகழ்வுப் படி செய்தால் அது பாதகமாகவும் முடியலாம்!

வேறு ஏதாவது வழி இருக்கிறதா என யோசிக்கிறேன் – நீங்களும் யோசித்து ஒரு வழி சொல்லுங்களேன்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

34 comments:

 1. ரொம்ப தொந்தரவு பண்ணினால் ஆள்வைத்து கையை காலை உடைத்து விட வேண்டியதுதான் ஆனால் அதற்கு கொஞ்சம் செலவாகும்

  ReplyDelete
  Replies
  1. கை காலை உடைத்து விட வேண்டியது தான்! :)))) அந்த அளவிற்குத் தேவையில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 2. நல்ல நேரம் வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான். இல்லையா, தைரியமாக போர்க்கொடி உயர்த்தி செய்ய மாட்டேன், மிச்ச வேலை இனி நாளைக்குத்தான் என்று சொல்லி விட வேண்டியதுதான்.

  ReplyDelete
  Replies
  1. போர்க்கொடி உயர்த்தி போராட்டம்..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. போர்க் கொடி உயர்த்திவிட வேண்டியதுதான்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. எதிர்த்து போர்க்கொடி தூக்குவதுதான் சரியான முறை. இப்போதுதான் எந்த அலுவலகத்திலும் மேலதிகாரிகளை அவ்வளவாக மதிப்பதில்லையே. சிலர் சமூக வலைத்தளங்களில் தங்கள் மேலதிகாரியைப் பற்றி அவதூறாக எழுதி பழிதீர்த்துக் கொள்கிறார்கள்.
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. எத்தனை எத்தனை வழிமுறைகள்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   Delete
 5. தங்களுக்குத் தெரியாததல்ல..
  நேரிடையாக பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்..

  சமயத்தில் நாய் வால் கூட நிமிர்ந்து விடும்..
  சில மனிதர்கள் எப்போதும் திருந்துவதில்லை..

  இங்கே - எனக்கு வாய்த்திருப்பது போல!..

  நல்லவை சீக்கிரம் நடக்கட்டும்..

  ReplyDelete
  Replies
  1. சில மனிதர்கள் எப்போதும் திருந்துவதில்லை! :) அதே தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 6. நான் மேலதிகாரிகளிடம் நேரடியாக வேலை பார்த்த வரையில் அலுவலக வேலை நேரம் வரை தான் இருக்க முடியும், அதற்குள் வேலைகளை முடித்து விடுவேன், முடிக்காத வேலைகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று, வீட்டில் கணிணியில் முடித்து விடுவேன் என்று சொல்லி விடுவேன். செய்தும் காட்டியிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சில சமயங்களில் இப்படித்தான். விரைவில் சரியாகிவிடும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

   Delete
 7. உங்கள் மேல் அதிகாரியிடம், காலை 9 மணிக்கே அலுவலகம் வருவதால் மாலை 6 மணிக்கு கிளம்பவேண்டும் என்று கறாராக சொல்லிவிடுங்கள். அதுபோலவே மாலை 6 மணிக்கு கிளம்பிவிடுங்கள். அவரை எதிர்ப்பதோ அல்லது அவருக்கு தொந்தரவு தரும் வகையில் நடப்பதோ சரியான தீர்வாகாது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது ஆலோசனைக்கு நன்றி. விரைவில் நிலை சரியாகும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 8. வெங்கட்ஜி கேரள முறைதான்...அதான் ஹர்தால் என்று எப்போதும் கொடி பிடிப்பதுதானே வழக்கம்...அப்படி நீங்களும் கொடி பிடியுங்கள்!!! அறப்போராட்டம்...அமைதிப்போராட்டம்!!!

  ReplyDelete
  Replies
  1. அறப் போராட்டம்.... அமைதிப் போராட்டம்..... :) அவசியம் இருக்காது. விரைவில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 9. நல்ல நேரம் வரும் என்று நம்பி கடமைகளை செய்ய வேண்டியதுதான்.அதிகபடியான பணி என்றால் பணிகளை பிரித்துக் கொடுக்க கேட்டுக் கொள்ளலாம். வேறு என்ன செய்யமுடியும்?

  ReplyDelete
  Replies
  1. விரைவில் நிலை சீராகும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 10. என்ன சர்வ சாதாரணமாக போர்க்கொடி உயர்த்தலாம்னு சொல்லிடறாங்க... ஏதாவது சந்தர்ப்பம் வந்து தொல்லைகொடுப்பவரின் இரக்கத்தைப் பெற முடியுமான்னு பாருங்க. 'நேர சொல்லாட்டாலும், 'இன்னும் சாப்பிடலை.. இதோ சாப்பிட்டுட்டு வேலையைப் பார்க்கிறேன்... etc.'. மற்றவர்களெல்லாம், அரசு வேலைனால, கொடி பிடிக்கச் சொல்றாங்க போலிருக்கு.

  பெரும்பாலான ஆபீசுகள்ல, லைன் மேனேஜெரை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுத்தான் போகணும் மாதிரி இருக்கும். பொதுவா, எங்கேயும், வேலை தெரிந்தவருக்குத்தான் இன்னும் இன்னும் வேலை கொடுப்பார்கள். 'சுத்த வேஸ்டு'னா, அவருக்கு வேலை குறைவாயிடும். தனியார் கம்பெனினா, 'சுத்த வேஸ்டை' கழட்டிவிட்டுருவாங்க. அதிலயும் அவர்கள், மேலதிகாரிக்கு வேண்டப்பட்டவராயிருந்தா, சுத்தம்.. ஒழுங்கா வேலை செய்யறவங்களை வச்சுத்தான் வேலை வாங்கணும்.

  ReplyDelete
  Replies
  1. சில சமயங்களில் இப்படி பிரச்சனைகள் தான். விரைவில் நிலை சரியாகும் என்ற நம்பிக்கை உண்டு.

   வேலை செய்யாமல் ஓபி அடிப்பவர்களுக்கு பிரச்சனையில்லை. வேலை செய்பவர்களுக்கு அதிக வேலை கொடுப்பது தானே பழக்கம்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 11. எல்லாம் டிசம்பர் 31 வரை தான். மோடிஜி சொன்ன மாதிரி கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். இதுவும் கடந்து போகும்.
  --
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. இதுவும் கடந்து போகும்! :) அதே தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஜி!

   Delete
 12. இது தவிர்க்க முடியாது என்று தோன்றினால் அனுபவியுங்கள் எதையும் சமாளிக்கும் தைரியம் இருந்தால் அவரிடம் சொல்ல வேண்டியதுதான்

  ReplyDelete
  Replies
  1. விரைவில் நிலை சரியாகிவிடும் எனும் நம்பிக்கை உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 13. எதிலும் பொறுமை அவசியம்... இதுவும் கடந்து போகும்...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 14. முதலில் கஷ்டமாத்தான் இருக்கும் ,அப்புறம் பழகிப் போகும் !என் அனுபவம் இது :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 15. இரவு ஒன்பதரைக்கு வீடு திரும்பி அதன் பிறகு சாப்பாடு என்பது ரொம்பவும் கொடுமை தான்! விரைவில் அமைதியான நிலைமை வரவும் உங்களுக்கு போதுமான ஓய்வு கிடைக்கவும் நல்லதொரு வாய்ப்பு விரைவில் நிச்சயம் வரும்!!

  ReplyDelete
  Replies
  1. சில சமயங்கள் இப்படித்தான். விரைவில் நிலை சரியாகும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 16. எச்சூழலையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தைக் கொண்டால் அனைத்தையும் எதிர்கொண்டுவிடலாம் என்பது என் எண்ணம். நான் அதையே கடைபிடிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல அறிவுரை. பெரும்பாலும் இப்படித்தான். பிரச்சனை விரைவில் சரியாகும்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 17. நான் மேலாளராக இருந்தாலும் எனது சக ஊழியர்களை ஆறு மணிக்குமேல் இருக்கவே கூடாது என்றும் நேராக வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தி வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....