எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, December 13, 2016

கருப்புக் கண்ணாடி ரகசியம் – த்ரில் பயணம்ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 78

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


ஷில்லாங்க் மலையுச்சியிலிருந்து ஷில்லாங்க் நகருக்கு வந்து சில நினைவுப் பரிசுகளை வாங்க மார்க்கெட் சென்றோம். அங்கே மூங்கிலால் ஆன, கைக்கு அடக்கமான, சிறிய பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு மார்க்கெட்டில் கொஞ்சம் சுற்றினோம். எங்கு பார்த்தாலும் பெண்கள் பான் கடைகள் வைத்திருந்தார்கள் – ஒரு ஸ்டூல், ஒரு சிறிய மேஜை, அதன் மேல் வெற்றிலை, சுண்ணாம்பு தடவி, லாகிரி வஸ்துக்கள் சேர்த்து பான்! பான் விற்கும் பெண்களும் பான் சாப்பிட்ட வாயுடன் தான் இருக்கிறார்கள். 

சில இடங்களில் உயிருடன் முயல்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.  நாங்கள் புகைப்படம் எடுப்பதைப் பார்த்தால் உடனே முயல்களை மூடிக்கொண்டு இடத்தினை விட்டு அகன்றார்கள். ஏனென்று புரியவில்லை. இப்படியாக மார்க்கெட் காட்சிகளைப் பார்த்தபடியே வண்டி நிறுத்தி இருக்கும் இடத்திற்கு வந்தால் ஓட்டுனர் ராஜேஷ் “ஏன் இவ்வளவு லேட், சீக்கிரம் போகணும் வாங்க!” என்று சொல்ல, வாங்கிய பொருட்களை டிக்கியில் வைத்து ஷில்லாங்க் நகருக்கு Bye Bye சொன்னோம்.

எப்போதும் போல, ஓட்டுனருக்குப் பக்கத்து இருக்கையில், அதாவது அவருக்கு இடது புற இருக்கையில் நான் அமர்ந்து கொள்ள, நண்பர்கள் பின் இருக்கைகளில் அமர்ந்து கொள்ள கௌஹாத்தி நோக்கிப் பயணிக்கத் துவங்கினோம்.  எல்லாம் சரியாகத் தான் போய்க்கொண்டிருந்தது. வேகமாகச் செலுத்திக் கொண்டிருந்தார் ஓட்டுனர் ராஜேஷ்.  ஒவ்வொரு முறை முன்னால் செல்லும் வாகனத்தினை Overtake செய்யும்போதும் இடது புறம் இடித்து விடுமோ என்ற அளவுக்குத் தான் ஓட்டினார்.  என்னடா இது என்று அவரைப் பார்த்தால் எனக்கு பயங்கர அதிர்ச்சி….

கௌஹாத்தி நகரிலிருந்து புறப்பட்டது காலை ஐந்து மணிக்கு. அந்த விடிகாலை நேரத்திலும் எங்களுக்கு வந்த வண்டியின் ஓட்டுனர் ராஜேஷ் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தார். ஒருவேளை Madras Eye இருக்குமாயிருக்கும் என நினைத்துக் கொண்டோம். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை.  நாள் முழுவதும் கண்ணாடியோடு இருந்தவர் நான் அப்போது பார்த்தபோது கண்ணாடியை கழட்டி இருந்தார். இடது கண் இருக்க வேண்டிய இடத்தில் கண் இல்லை! அதாவது அவருக்கு இடது கண்ணே இல்லை! ஒற்றைக் கண்ணோடு தான் வாகனத்தினை ஓட்டிக் கொண்டிருக்கிறார். 

அதனால் வலது பக்கம் ஒழுங்காகத் தெரிய, இடது பக்கம் அவ்வளவாக தெரிவதில்லை.  இடது பக்கம் பார்க்க வேண்டுமெனில், தலையை திருப்பித் தான் பார்க்க வேண்டும். அதனால் தான் இடது பக்க வாகனங்கள் தெரிகிறதோ இல்லையோ, குத்துமதிப்பாக வாகனங்களை overtake செய்கிறார். இது தெரிந்ததும், எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பின்னால் அமர்ந்திருந்த நண்பர்களைப் பார்த்தால் அனைவரும் நல்ல உறக்கத்தில்! ஒற்றைக் கண் ஓட்டுனர் கையில் அவர்கள் உயிர் இருப்பது தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள். 

மெதுவாக ஓட்டுனர் ராஜேஷிடம் பேச்சுக் கொடுத்தேன். இடது பக்கம் தெரிவதில்லையே, எப்படி ஓட்டுகிறீர்கள்? யார் உங்களுக்கு ஓட்டுனர் உரிமம் கொடுத்தது? என்று வரிசையாகக் கேள்விகள் கேட்க, ஆரம்பத்திலிருந்தே வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறேன். பிரச்சனைகள் இல்லை. ஒன்றிரண்டு முறை விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன என்று சர்வ சாதாரணமாகச் சொல்ல, எனக்குள் கிலி அதிகரித்தது.  சரி கௌஹாத்தி வரை நீங்கள் பின்னால் அமர்ந்து கொள்ளுங்கள், எங்களில் யாராவது வண்டியை ஓட்டுகிறோம் என்றால், “அதெல்லாம் ஒன்றும் ஆகாது, வண்டியை நானே ஓட்டுகிறேன். உங்களை பத்திரமாகக் கொண்டு சேர்ப்பது என் பொறுப்பு!” என்கிறார்.

கொண்டு சேர்ப்பது கௌஹாத்தியிலா இல்லை மருத்துவமனையிலா என்பது புரியவில்லை.  அதுவும் ஒவ்வொரு முறை Overtake செய்யும்போதும் நான் அமர்ந்திருக்கும் இடது பக்க இருக்கைக்கும், அடுத்த வாகனத்திற்குமான இடைவெளி மயிரிழைக்கும் குறைவு. ஒரு சில வாகன ஓட்டிகள் தலையை வெளியே நீட்டி, எங்கள் ஓட்டுனரை கெட்ட வார்த்தைகளால் திட்டியதையும் பார்க்க முடிந்தது.  உயிரைக் கையில் பிடித்தபடி பயணித்தது அந்த பயணத்தில் தான். 

நடுவே ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி தேநீர் அருந்தும் போது, நண்பர்களிடம் ஓட்டுனரின் கறுப்புக் கண்ணாடி ரகசியத்தினைச் சொல்லி, அவருக்கு ஒரு கண் மட்டுமே இருப்பதைச் சொல்ல, அவர்களுக்கும் அதிர்ச்சி. மீண்டும் நாங்களே ஓட்டுகிறோம் எனச் சொல்ல, ஓடிப்போய் அவரே ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.  நாங்கள் இருந்ததோ, ஒரு அத்துவானக் காட்டில் – கௌஹாத்திக்கு இன்னும் ஒரு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். வேறு வழியில்லை. எங்கள் ஐந்து பேர் உயிரும் ஒற்றைக் கண் ஓட்டுனர் கையில்! இறைவன் மீது பாரத்தினைப் போட்டு, நானும் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

ஒவ்வொரு முறை வண்டி இடது புற வண்டி பக்கத்தில் வரும்போது ஓட்டுனருக்குச் சொல்லிக் கொண்டே இருந்தேன். அவரும் ஒரு மாதிரி வானகத்தினைச் செலுத்தி எங்களை கௌஹாத்தி தங்குமிடம் முன்னர் இறக்கி விட்டார். கட்டணத்தினைக் கொடுத்து, அவரிடம் இப்படி அடுத்தவர் உயிரோடு விளையாடுவது சரியில்லை – இனிமேலாவது வேறு தொழில் செய்யுங்கள் – ஒற்றைக் கண்ணோடு வாகனம் ஓட்டுவது உங்களுக்கும் நல்லதல்ல, உங்களை நம்பி பயணிப்பவர்களுக்கும் நல்லதல்ல என்று எடுத்துரைத்தோம். எந்தவித ஆபத்தும் இல்லாமல் எங்களை கௌஹாத்தி வரை கொண்டு வந்து சேர்த்த ஆண்டவனுக்கும் நன்றி சொல்லி அன்றைய பயணத்தினை முடித்துக் கொண்டோம். 

அடுத்த நாள் வேறொரு பயணம், அடுத்த சகோதரி மாநிலத்திற்கு… அங்கே கிடைத்த அனுபவங்கள் வரும் பகுதிகளில்….

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

26 comments:

 1. உண்மையிலேயே திகில் பயணம்தான் ஐயா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா. இப்போது நினைத்தாலும் திகில் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. அட ராமா......... ஒற்றைக் கண்ணோடு வண்டி ஓட்டுவது சிரமம். அதுவும் தாற்காலிகமா ஒரு கண் இல்லை என்னும்போதே! இதில் நிரந்தரமா ஒரு கண் இல்லை என்றால்.... ஐயோ.... பயங்கர ரிஸ்க் :-(

  ReplyDelete
  Replies
  1. பயங்கர ரிஸ்க்.... அதே தான். இப்போது வடிவேலு மாதிரி “ரிஸ்க் எடுக்கறது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி”ன்னு நினைத்தாலும் அந்த நேரம் பக் பக் தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
  2. வரூஉம் ஆனா வராது..

   Delete
  3. வரும் ஆனா வராது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராகவேந்திரன்.

   Delete
 3. >>> ஒற்றைக் கண்ணோடு வாகனம் ஓட்டுவது உங்களுக்கும் நல்லதல்ல, உங்களை நம்பி பயணிப்பவர்களுக்கும் நல்லதல்ல என்று எடுத்துரைத்தோம்... <<<

  அவர் சரியென்று கேட்டுக் கொண்டரா?..

  ஒரு கண்ணை இழந்த ஓட்டுனருடன் - அதிர்ச்சி அனுபவம் புதியது..

  எப்படியோ நல்லபடியாக வந்து சேர்ந்தது மகிழ்ச்சிக்குரியது..

  ReplyDelete
  Replies
  1. அதிர்ச்சி அனுபவம் தான்.... நல்லபடியாக வந்து சேர்ந்தது இறைவன் செயல் என்று தான் தோன்றுகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 4. Replies
  1. திகிலே தான்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

   Delete
 5. இனி மேல் ,கூலிங் கிளாஸ் போட்ட ஓட்டுனர்களைத் தவிர்க்க வேண்டும் போலிருக்கே :)

  ReplyDelete
  Replies
  1. தவிர்ப்பது நல்லது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 6. திகில் பயணம்! பயங்கரமான அனுபவம்தான்.

  ReplyDelete
  Replies
  1. இப்போது நினைத்தாலும் திகில் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. ஒற்றைக் கண்ணோடு வாகனம் ஓட்டியதை படிக்கும் போதே பயமாய் இருக்கிறது, அருகில் உட்கார்ந்து வந்த உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும்?

  உங்கள் அறிவுரையை கேட்டு நடந்தால் நல்லது.

  ReplyDelete
  Replies
  1. அறிவுரையைக் கேட்டு நடந்தால் நல்லது - செய்தாரா என்பது தெரியாது. தொடர்ந்து வாகனம் ஓட்டினால்.... யோசிக்கவே பயமாக இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 8. //உண்மையிலேயே திகில் பயணம்தான் ஐயா// ஆம்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

   Delete
 9. தெரியாமல் இருந்திருந்தால்
  பிரச்சனையில்லை
  தெரிந்தபின் வண்டியில் அமர்ந்திருப்பவர்களுக்கு
  ஏற்படும் கிலியினைப் பகிர்ந்த விதம் அருமை
  தொடர்கிறோம்.. வாழ்த்துக்களுடன்..

  ReplyDelete
  Replies
  1. தெரிந்தபின் வண்டியில் அமர்ந்திருப்பவர்களுக்கு ஏற்படும் கிலி.... உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 10. Ignorance is bliss.. தெரிந்தபின் பயம்தான்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 11. காலையிலிருந்து ஷில்லாங்கிலிருந்துப் புறப்படும் வரை தெரிந்திருக்கவில்லை...அப்போது இல்லாத பயம் தெரிந்தவுடன் வந்திருக்கும் போது நினைத்தாலே நடுங்குகிறது. தெரியாத போது கூட உங்கள் எல்லோரது உயிரும் தப்பியதே!!! ஹப்பா....நினைத்தாலே நடுங்குகிறது ஜி. அதுவும் உரசுவது போல ஓவர்டேக் மலைப்பிரதேசத்தில்!! சத்தியமாக நீங்கள் எல்லோரும் தப்பித்து வந்திருக்கிறீர்கள்! உங்களின் நிலை அப்போது எப்படி இருந்திருக்கும்...நடுங்குகிறது!ஜி கறுப்புக் கண்ணாடி ரகசியம் உயிருக்கே வேட்டு வைப்பது போலல்லவ்வா இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 12. ஒற்றைக் கண் டிரைவரா...?
  ஆத்தாடி... நல்லவேளை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....