எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, December 14, 2016

திரிபுரா – ஆறாம் சகோதரி


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 79

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

படம்: இணையத்திலிருந்து.....

முதல் நாள் இரவு கிடைத்த த்ரில் அனுபவத்திற்குப் பிறகு கௌஹாத்தியில் தங்குமிடத்தில் நல்ல உறக்கம். அன்றைய பொழுது நடந்த விஷயங்கள், பார்த்த இடங்கள் ஆகியவற்றின் குறிப்புகளைக் கூட எழுதி வைத்துக்கொள்ளாமல் உறக்கத்தின் மடியில் வீழ்ந்தோம். முதல் நாள் இரவு எந்த சேதாரமும் இல்லாமல் வந்து சேர்ந்தது இறைவன் அருள். அதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தி அடுத்த நாள் கௌஹாத்தியில் தங்குமிடத்தினை விட்டு, உரிய கட்டணம் செலுத்திய பிறகு விமான நிலையம் நோக்கி புறப்பட்டோம். 

கௌஹாத்தியிலிருந்து திரிபுரா தலைநகரமான அகர்தலா சுமார் 600 கிலோமீட்டர் தொலைவு. சாலைப் பயணம் என்றால் சுமார் 18 மணி நேரம் எடுக்கலாம். மலைப்பகுதி மற்றும் காட்டுப் பகுதி என்பதால் வேகமாக பயணிக்க இயலாது. சாலையும் அத்தனை நல்ல சாலை அல்ல! ஆகவே நாங்கள் தேர்ந்தெடுத்தது ஆகாய மார்க்கம். விமானத்தில் பயணித்தால் ஐம்பது நிமிடங்கள் மட்டுமே பறந்து அகர்தலா சென்று சேர முடியும். விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரம், மற்ற விஷயங்கள் இந்த ஐம்பதில் வராது! ஆனாலும் சாலைப் பயணத்தினை விட ஆகாய மார்க்கமாகச் செல்வதே சாலச் சிறந்தது.

விமான நிலையம் வருவதற்கு முதல் நாள் வந்த ஓட்டுனர் நிச்சயம் வேண்டாம் என நண்பர்கள் அனைவருமே ஒரு சேர சொல்லி விட்டார்கள்.  நானும் நண்பர் பிரமோத்-உம் தங்குமிடத்தின் வாயிலில் இருந்த Taxi Stand சென்று அங்கே விமான நிலையம் செல்ல வாகனம் கேட்க, ஒருவர் தான் வருவதாகச் சொல்லி கட்டணத்தினைச் சொன்னார். கொஞ்சம் குறைத்துக் கொண்டு அவரையே வரச் சொல்லி விட்டோம். ஆனால் முந்தைய நாள் போலவே அவருக்கு பதில் வேறொருவர் தான் வாகனத்தோடு வந்திருந்தார். இங்கே எல்லாவற்றுக்கும் கமிஷன். பேசி விட்ட நபர் நூறு ரூபாய் எடுத்துக் கொண்டு வேறு ஒரு ஓட்டுனரோடு அனுப்பி வைக்கிறார். எங்கும் கமிஷன், எதிலும் கமிஷன்.  கமிஷன் வாங்காது எந்த வேலையும் நடப்பதில்லை இங்கே!சுமார் ஒன்றை மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்த பிறகு எங்களுக்கான விமானத்தின் அழைப்பு வந்தது. விமான நிலையத்தில் காத்திருந்த நேரத்தில் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தோம். அந்த களைப்பில் விமானத்தில் அமர்ந்து சற்றே கண்ணயர, திரிபுரா வந்துவிட்டதை அறிவித்தார் விமானி. Singerbill Airport என அழைக்கப்படும் இந்த சிறிய விமான நிலையம் அகர்தலா நகரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  விமானம் தரையிரங்கியதும், நடந்தே விமான நிலையத்திற்குள் வந்து எங்கள் உடைமைகளைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்தோம். 

திரிபுரா செல்வது முதல் முறை என்றாலும், அங்கே சென்ற பிறகே தங்குமிடம் தேடிக்கொள்ளலாம் என முடிவு செய்திருந்தோம். முதலில் வெளியே வந்து ஒரு வாகனத்தினை அமர்த்திக் கொண்டு தங்குமிடத்தினைத் தேடுவோம் என வாகனத்திற்கான வேட்டையில் இறங்கினோம். அங்கே பல வாகன ஓட்டிகள் இருக்க, நாங்கள் தேர்ந்தெடுத்தது ஷாந்தனு எனும் இளைஞரை. அவரிடம் இருந்தது Maruti Eeco வண்டிதான் என்றாலும் அவரையே தேர்ந்தெடுத்தோம். இளைஞர், மற்றும் கொஞ்சம் நல்லவராகவும் தெரிந்ததால் அவரையே தேர்ந்தெடுத்தோம்.

எங்கள் தேவையைச் சொல்ல, அவரும் சில தங்குமிடங்களுக்கு அழைத்துச் சென்றார். பார்த்த பல இடங்கள் எங்களுக்கு ஒத்து வரவில்லை. சுத்தம் இல்லை, சுத்தம் இருந்தால் தங்குவதற்கான வாடகை அதிகமாக இருந்தது. கடைசியாக ஒரு தங்குமிடத்தினை முடிவு செய்தோம்.  ஆனாலும் எங்களுக்கு அவ்வளவு திருப்திகரமாக இல்லை. சரி பணம் கொடுத்தாயிற்று, உடைமைகளை வைத்து விட்டு, முதலில் வெளியே சென்று சுற்றி, மதிய உணவினை முடித்துக் கொண்டு வருவோம் – வரும் வழியில் வேறு நல்ல தங்குமிடத்தினைப் பார்த்து முடிவு செய்வோம் என உடமைகளை அந்த இடத்தில் வைத்து புறப்பட்டோம். எங்கே சென்றோம், என்ன சாப்பிட்டோம் என்பதையும், வேறு தங்குமிடம் தேர்ந்தெடுத்தது எத்தனை நல்லதாகப் போயிற்று என்பதையும் அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

14 comments:

 1. எங்கும் கமிஷனா? உங்களின் ஒவ்வொரு அனுபவமும் வித்தியாசமாக இருப்பதை உணரமுடிகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 2. தொடருங்கள் ஐயா தொடர்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து பதிவுகளை வாசித்து வருவது மகிழ்ச்சி தருகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. திரிபுராவின் அழகைக் காண காத்திருக்கின்றேன்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 4. Replies
  1. தங்களது தொடர் வருகைக்கு மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. திரிபுராப்ப்ர்றி தெரிந்து கொள்ளவும், வேறு நல்ல தங்குமிடம் கிடைத்ததா? என்று தெரிந்து கொள்ளவும் ஆவல்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 6. கமிஷன் இல்லாத ஊரே இல்லை போலும்....திரிபுரா பற்றி அறியவும் தங்கள் அனுபவங்களை அறியவும் தொடர்கின்றோம்...நல்லதாயிற்று அந்த டெரர் ஓற்றைக் கண்ணன் வேண்டாம் என்று முடிவு செய்தது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 7. கமிஷன் இல்லாத இடமே இல்லை இல்லையா...
  அருமை... தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....