எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, December 6, 2016

சிரபுஞ்சி – ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிக்கூடம் – Eco Park….


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 73

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

ராமகிருஷ்ணா மிஷன்

சென்ற பகுதியில் Noh Ka Likai நீர்வீழ்ச்சி பற்றியும் அதற்கு பெயர்க்காரணமும் பார்த்தோம் – சோகமான பெயர்க்காரணம் தான். அந்த காரணம் கேட்டபிறகு நீர்வீழ்ச்சியின் அழகையோ, இயற்கையின் எழிலையோ ரசிக்க முடியவில்லை என்பது உண்மை.  அந்த நினைவுகளோடு நாங்கள் அடுத்ததாய் சென்றது ஒரு ஆஸ்ரமம்/பள்ளிக்கூடம். ராமகிருஷ்ணா மிஷன் Khகாசி மக்களுக்காக, அவர்களின் பாரம்பரியத்தினைக் காப்பாற்றவும், அவர்களுக்கு படிப்பறிவு சொல்லிக் கொடுக்கவும் ஏற்படுத்திய ஒரு பள்ளிக்கூடம் ஒன்று இருக்கிறது.

எப்போ வருவாரோ… எந்தன் கலி தீர்க்க!
பயணிகளுக்காகக் காத்திருக்கும் கடைக்காரப் பெண்….
இடம்: பூங்கா….

1924-ஆம் ஆண்டு ஸ்வாமி விவேகாநந்தரின் சீடர்களுள் ஒருவரான கேதகி மஹாராஜ் என்பவர் Khகாசி மக்களின் முன்னேற்றத்திற்காக, ஷெல்லா கிராமத்தில் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடமும் ஒரு சுகாதார மையமும் ஆரம்பித்தார். ராமகிருஷ்ணா மிஷன் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட அந்தப் பள்ளி தொடர்ந்து khகாசி மலைப் பகுதி கிராமங்களில் பல முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது.  அங்கே கல்வி நிறுவனங்கள், சுகாதார மையம், ஆஸ்ரமம் என பலவும் தொடங்கப்பட்டது. சிரபுஞ்சியில் அமைக்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் 1934-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அங்கே தான் நாங்கள் சென்றிருந்தோம்.


பூங்கா – ஒரு பகுதி…

கடந்த 90 வருடங்களுக்கும் மேலாக இந்தப் பகுதியில் கல்வி, சுகாதாரம் ஆகிய பணிகளில் ராமகிருஷ்ணா மிஷன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.  அங்கே ஒரு சிறிய அருங்காட்சியகமும் உண்டு. அங்கே சென்று khகாசி பழங்குடி மக்களின் பாரம்பர்யம், அவர்களது நடவடிக்கைகள் ஆகிய பற்றிய காட்சிப்பொருட்களையும், ராமகிருஷ்ணா மிஷன் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையும் கண்டோம்.  அங்கேயும் சில கடைகள் உண்டு. அப்பகுதி மக்கள் தங்கள் கைவினைப் பொருட்களையும், உணவுப் பொருட்களையும் விற்பனை செய்கிறார்கள்.

பூங்கா – கூழாங்கற்களால் அறிவிப்பு….

பூங்காவிலிருந்து ஒரு காட்சி…..

பிறகு அங்கிருந்து அடுத்த இடம் நோக்கி பயணித்தோம்.  அந்த இடம் சிரபுஞ்சி Eco Park - மேகாலயா அரசாங்கத்தினால் 14 ஹெக்டேர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்தப் பூங்கா இங்கே வரும் சுற்றுலாப் பயணிகள் பசுமை மலைக்கணவாய் கண்டு ரசிக்க ஏதுவாய் அமைக்கப்பட்ட ஒரு பூங்கா. இந்த பூங்காவினுள் சென்று ரசிக்க, நுழைவுக்கட்டணம், காமிரா கட்டணம் என வாங்குவார்கள். அவற்றைக் கொடுத்து ரசீது வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால் சோஹ்ரா என அழைக்கப்படும் இந்த சிரபுஞ்சி பகுதியில் உள்ள இயற்கை அழகை ரசிக்க முடியும். சில நீர்வீழ்ச்சிகளும் இங்கே உள்ள View Point-ல் நின்று ரசிக்க முடியும்.  இந்தப் பூங்காவின் பெயர் – மாஸ்மாய் நோங்க்திமாய் எகோ பார்க்!  Nasal voice-ல படிச்சுப் பாருங்க!

பூங்கா ஓரத்திலிருந்து மலைப்பகுதி….

பங்க்ளாதேஷ் சாலை ஒன்று….

பூங்காவின் உள்ளேயே சிறு நீரோடை ஒன்றும் அதனைக் கடக்க பாலமும் உண்டு.  பூங்காவின் உள்ளே இருக்கும் மரங்கள், பூச் செடிகள் என அனைத்தையும் கண்டு ரசித்தவாறே பூங்காவின் ஓரத்திற்குச் சென்றால், அங்கே இருந்து பங்க்ளாதேஷ் கிராமங்களையும், சில சாலைகளையும் பார்க்க முடியும்.  இரவு நேரத்தில் சென்றால், அந்த ஊர்களை ஒளிவிளக்கில் பார்க்கமுடியும். பூங்காவில் சிறுவர்களுக்காக சறுக்கு மரம், ஊஞ்சல் போன்ற விளையாட்டு வசதிகளும் உண்டு.


சறுக்கு மரத்தில் விளையாடும் சிறுமி…. 
சிறுமியின் முகத்தில் தெரியும் எதிர்பார்ப்பு பிடித்திருக்கிறதா?

சில நிமிடங்கள் அங்கே இருந்த பிறகு அங்கேயிருந்து புறப்பட்டோம்.  அதற்கு அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் மிக அருமையான இடம்.  இந்த இரண்டு இடங்களுக்குச் சென்றதற்கு பதிலாக அடுத்த இடத்திற்கு முன்னரே சென்றிருந்தால் இன்னும் அதிக நேரம் அங்கே இருந்திருக்கலாம் என்று தோன்ற வைத்த இடம் அடுத்த இடம்…..  அது எந்த இடம் என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

18 comments:

 1. ஆஹா! மழை அதிகம் பொழியும் இடத்திற்கும் சென்று அங்கிருந்து பங்களாதேஷையும் எட்டிப்பார்த்துவிட்டு வந்தீர்களா! படங்கள் அழகு! மூக்கால் உச்சரித்தும் பார்த்தோம்!!

  அடுத்த இடத்தைப் பற்றிய ஆவல் அதிகரிக்கிறது. தொடர்கிறோம்..ஜி

  பழையபதிவுகளையும் வாசித்து வருகின்றோம்..ஜி

  ReplyDelete
  Replies
  1. விடுபட்ட பதிவுகளையும் ஒவ்வொன்றாக படித்து வருவது அறிந்து மகிழ்ச்சி. முடிந்த போது படியுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 2. இயற்கை அழகு படங்களை ரசித்தேன் !ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி இல்லாத மாநிலமே இந்தியாவில் இல்லை போலிருக்கே :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 3. வணக்கம் சகோதரரே

  நலமா? அழகான வர்ணனை! பனி போர்த்திய மலைகளின் அழகு மனதை கவர்கிறது. படங்கள் அனைத்தும் அழகு. இதுவரை படிக்க இயலாமல் போனதற்கு
  வருந்துகிறேன். நேரம் கிடைக்கும் போது விடுபட்ட பகுதிகளை படிக்கிறேன்.
  என் தளம் வந்து கருத்துரைகள் தந்தமைக்கு என்மனமார்ந்த நன்றிகள்.

  நன்றியீடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 4. பூங்காவை ரசித்தோம் நாங்களும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 5. படங்கள் அந்த இடத்தின் அழகைச் சொல்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 6. பள்ளிப் பாடங்களில் படித்தவை இன்று உங்களால் எங்கள் முன்பு. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 7. படங்கள் ரசிக்க வைத்தன! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 8. படங்கள் அழகு அண்ணா..
  பங்களாதேஷை வேறு கழுகுப் பார்வை பார்த்திருக்கிறீரகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 9. பூங்காவின் அழகும், கடைக்காரபெண்ணின் எதிர்ப்பார்ப்பும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....