வியாழன், 12 ஜனவரி, 2017

51 கிலோ லட்டு – சவாமணி - சாலாசர் பாலாஜி

சாலாசர் பாலாஜி....

நீங்கள் தாடி மீசையோடு ஹனுமான் உருவத்தினை படத்தில் பார்த்ததுண்டா? பார்த்திருக்க வாய்ப்பில்லை. வட இந்தியாவில் ஹனுமான்ஜிக்கு பாலாஜி என்ற பெயரும் உண்டு.  தமிழகத்தில் பாலாஜி என்றால் திருப்பதி பாலாஜி தான்! ஆனால் வடக்கே, குறிப்பாக ஹரியானா, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளவர்களுக்கு பாலாஜி என்றால் ஹனுமான்ஜி. தில்லிக்கு அருகேயும், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் சில பிரபலமான பாலாஜி கோவில்கள் உண்டு. மெஹந்திபூர் மற்றும் சாலாசர் என இரு பாலாஜி கோவில்கள் ராஜஸ்தானில் மிகவும் பிரபலம். 

சென்ற வாரத்தில் அலுவலக நண்பர் ஒருவர் சாலாசர் பாலாஜி கோவில் செல்லப் போவதாகச் சொல்லி, என்னையும் அவருடன் அழைத்தார். சில காரணங்களால் என்னால் வர இயலாது என்று சொல்லி விட்டேன். நான் வராதது அவருக்குக் கொஞ்சம் வருத்தம் தான் என்றாலும், இரண்டு நாட்கள் அலுவலகத்திலிருந்து விடுமுறை கேட்க வேண்டும். அதுவும் வருடத்தின் ஆரம்பத்திலேயே விடுமுறை எடுத்து விட்டால், வருடம் முழுவதற்கென இருக்கும் எட்டே எட்டு லீவில் [Casual Leave] மீதி ஆறை வைத்து வருடம் முழுவதும் சமாளிக்க வேண்டும்! போவதற்கு ஆசை இருந்தாலும் செல்ல முடியாத சூழல் – ஒரு வேளை சாலாசர் பாலாஜியின் அழைப்பு வரவில்லையோ என நினைத்துக் கொள்ள வேண்டியது தான்….

அப்படிச் சென்றிருந்தால் நிறைய விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பேன் என்றாலும், இந்த பாலாஜி கோவில் பற்றி எனக்குத் தெரிந்த விவரங்கள் என்ன என்பதையாவது உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு. தில்லியிலிருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த சாலாசர் பாலாஜி கோவில்.  இதன் கதை என்ன என்பதைப் பார்க்கலாம்….

ராஜஸ்தான் மாநிலத்தின் நாகோர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் அசோட்டா. இந்த அசோட்டா கிராமத்தில் வசித்து வந்த ஒரு விவசாயி தனது நிலத்தினை உழுத போது ஏதோ தடங்கல். ஏர் மேலே செல்லாமல் ஏதோ தடுக்க, அந்த இடத்தில் தோண்டிப் பார்க்க அங்கே அவருக்குக் கிடைத்தது ஒரு சிலை. விவசாயியின் மனைவி உணவு எடுத்து வர, அவருக்கு சிலையைக் காண்பித்திருக்கிறார் விவசாயி. தனது சேலைத் தலைப்பில் துடைத்த பின் பார்த்தால் அது ஹனுமான்ஜியின் சிலை. நிலத்தில் கிடைத்த சிலயை பாலாஜியாக பாவித்து அவரை வணங்கினார்கள் விவசாயியும் அவரது மனைவியும். 

சிலை கிடைத்த விவரம் கிராமம் முழுவதிலும் பரவியது. கிராமத்தின் தலைவருக்கு அந்த விஷயம் எட்டியது. சிலையை இரு காளைகள் பூட்டிய வண்டியில் வைத்து அதை விரட்ட, காளை வண்டி எங்கே நிற்கிறதோ அங்கே கோவில் கட்டவேண்டும் என கிராமியத் தலைவர் நினைத்தார் என்றும், வண்டி நின்ற இடம் ராஜஸ்தானின் chசுரு மாவட்டத்தில் உள்ள சாலாசர் என்று ஒரு கதை. இதற்கு வேறு ஒரு version – சாலாசர் கிராமத்தில் உள்ள மோகன்தாஸ் என்பவருக்கு கனவில் பாலாஜி தரிசனம் தந்து, தன்னுடைய சிலை அசோட்டாவில் கிடைத்திருக்கும் தகவலைச் சொல்லி, அங்கிருந்து சாலாசர் கொண்டு வந்து கோவில் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தினைச் சொன்னதாகவும் ஒரு Version!

எது எப்படியோ, இப்போது ஹனுமான்ஜியான பாலாஜி கோவில் கொண்டிருப்பது சாலாசர் என்ற இடத்தில்.  வட இந்தியர்கள் பலரும் இக்கோவிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டு இருக்கிறார்கள்.  மிகவும் பிரபலமான இக்கோவிலில் ஹனுமத் ஜெயந்தி சமயங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள். சாலாசர் பாலாஜி கோவில் இருக்கும் இடத்தில் பல தர்மசாலைகள், தங்குமிடங்கள் உண்டு. தங்கள் மூதாதையர்களின் நினைவாக இங்கே பல தர்மசாலைகளைக் கட்டி இங்கே வரும் பக்தர்கள் தங்க வசதி செய்வதோடு, வரும் பக்தர்களுக்கு இலவசமாக உணவளிப்பவர்களும் உண்டு. 

இங்கே தினம் தினமும் லட்டு, சூர்மா, பர்ஃபி என பாலாஜிக்கு பிரசாதமாக படைக்கப்பட்டு பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த பிரசாதங்களில் ஒரு சிறப்பு உண்டு. இங்கே வரும் பக்தர்கள் பாலாஜியிடம் வேண்டுதல்கள் வைத்துச் சென்ற பிறகு அது நிறைவேறினால் சவாமணி என்ற வழிபாடு செய்வதாக மனதில் நினைத்துக் கொள்வதுண்டு.  அது என்ன சவாமணி? பார்க்கலாமா….

சவாமணி - ஹிந்தி மொழியில் சவா என்றால் ஒன்றே கால்! மன் அல்லது மான்ட் என்றால் 40 கிலோ அளவு. சவா மன் அதாவது சவாமணி என்றால் 50 கிலோ! லட்டு அல்லது சூர்மா, அல்லது பர்ஃபி அல்லது மூன்றும் கலந்து 50 கிலோ [அ] 51 கிலோ பிரசாதமாக பாலாஜிக்கு படைப்பது சவாமணி!

ஒவ்வொரு நாளும் இப்படி சவாமணி பிரசாதம் தருவதாக வேண்டிக் கொள்பவர்கள் வந்த வண்ணமே இருக்கிறார்கள் இந்தக் கோவிலுக்கு! சராசரியாக நாளொன்றுக்கு 7000 கிலோ முதல் 8000 கிலோ வரை சவாமணி பிரசாதம் இங்கே படைக்கப்படுகிறது. திருவிழா நாட்களில் 15000-20000 கிலோ வரை கூட பிரசாதம் இங்கே பல பக்தர்களால் படைக்கப்படுகிறது.  சவாமணி பிரசாதம் விற்பதெற்கென்றே பல கடைகள் இங்கே உண்டு. தற்போதைய நிலவரப்படி சவாமணி பிரசாதத்திற்கான கட்டணம் 11000/- ரூபாய் [அதாவது 50 கிலோவிற்கு 11000/- ரூபாய். 

அலைபேசி மூலம் சொல்லி விட்டால் போதும், உங்கள் தங்குமிடத்திற்கே 51 கிலோ லட்டு, அல்லது சூர்மா, அல்லது பர்ஃபி அல்லது மூன்றும் கலந்து 51 கிலோ பிரசாதம் வந்து சேர்ந்து விடும்.  தங்குமிடத்திலேயே வந்து அதற்குரிய கட்டணத்தையும் வாங்கிக் கொண்டு செல்வார்கள் கடைக்காரர்கள்.  ஒவ்வொரு கடையின் தினசரி சராசரி விற்பனை பல லட்சங்களில் இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டுமா….  அத்தனையும் பணம் கொடுத்து தான் – Cashless transaction/Cheque Transaction கிடையாது என்பதையும் சொல்லி விடுகிறேன்!

இப்பகுதிகளில் இந்த பாலாஜி எல்லா நலன்களையும் அருளும் ஒரு தெய்வமாக பலராலும் பூஜிக்கப்படுபவர்.  என்னை அழைத்த எனது அலுவலக நண்பரும் சென்ற வாரக் கடைசியில் சாலாசர் பாலாஜி கோவிலுக்குச் சென்று சவாமணி பிரசாதம் பாலாஜி மஹாராஜ்க்கு படைத்து, அங்கே பலருக்கும் விநியோகம் செய்தபிறகு எங்களுக்கும் கொண்டு வந்து கொடுத்தார். லட்டு, சூர்மா என இரண்டுமே கிடைத்தது.  லட்டு உங்கள் அனைவருக்கும் தெரிந்தது தான் – சூர்மா என்றால் என்ன என்பதை வேறு ஒரு பதிவில் சொல்கிறேன்!

புதியதோர் கோவில், புதியதோர் வழக்கம் பற்றி உங்களுக்குச் சொல்ல முடிந்ததில் மகிழ்ச்சி. வேறொரு பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

18 கருத்துகள்:

  1. சூர்மா என்றால் என்ன என்று அறியக் காத்திருக்கிறேன்! நல்ல தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூர்மா பற்றி விரைவில் எழுதுகிறேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. தம இன்னும் சப்மிட் செய்யப்படவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் லேட்! :)

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. சாலாசர் பாலாஜி கோவில் பற்றிய தகவல் அறியாதது... நன்றி...

    சவாமணி விளக்கம் உட்பட அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  5. சவாமணி பிரசாதம் பற்றிய
    அருமையான தகவலை
    இன்று தான் அறிய முடிந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. நல்ல தகவலுடன் தித்திக்கும் பதிவு!..

    அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  7. புதிய தகவல், கோயில் பற்றி சுவாரஸ்யமான கதைகளுடன் அருமை ஜி!

    கீதா: சுர்மா பற்றி சொல்லியிருந்தீர்கள் இல்லையோ முன்பே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. dhதால் bபாட்டி சூர்மா பற்றி முன்னொரு பதிவில் சொல்லி இருந்தேன். இது இனிப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  8. அந்த பாலாஜி (ஹநுமான்ஜி) பிரசாதத்தில் எனக்கும் இரண்டு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

      நீக்கு
  9. கோவில் கதைகளெல்லாம் ஏறத்தாழ ஒரே மாதிரி இருப்பது எதைக்காட்டுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....