திங்கள், 6 பிப்ரவரி, 2017

காளி Gகாட், கொல்கத்தா – சின்னம்மா - மிருக பலி….


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 97

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


காளி Gகாட் கோவில்...

கொல்கத்தாவின் ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதா தேவி மற்றும் விவேகானந்தர், ஆகியோரின் நினைவிடங்கள் அமைந்திருக்கும் பேலூர் மட் பார்த்த பிறகு நாங்கள் சென்றது கொல்கத்தாவின் புகழ்பெற்ற காளி Gகாட்! ஆமாம் காளி கோவில் தான்…. தேவியின் சக்தி பீடங்களில் காளி Gகாட்-உம் ஒன்று.  இங்கே சதி தேவியின் வலது கால் விரல்கள் விழுந்ததாகச் சொல்கிறார்கள்.  கோவில் என்றாலே கதைகள் இல்லாமலா? நிறைய கதைகள் உண்டு.  ஒரு விஷயம் – கதை உண்மையா, பொய்யா என்ற ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை.  கதையை மட்டும் ரசிப்போமா….

காளி Gகாட் கோவில் பின் பகுதியில்...
நண்பர்களுடன்

நதியின் உள்ளிருந்து ஒரு ஒளிப்பிழம்பு வெளி வருவதைப் பார்த்த பக்தர் ஒருவர் எங்கிருந்து இந்த ஒளிப்பிழம்பு வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ள நதியின் கீழே சென்று பார்க்க அங்கே வலது கால் விரல் உருவத்தில் ஒரு சிலை கிடைக்கிறது. அந்த சிலையிலிருந்து தான் ஒளிப்பிழம்பு வருவதைக் காண்கிறார்.  பக்கத்திலேயே நகுலேஷ்வர் பைரவ், லிங்க உருவச் சிலையும் கிடைக்கிறது. இரண்டு சிலைகளையும் நதியிலிருந்து வெளியே எடுத்து வந்து அந்த காட்டுப் பகுதிக்குள் வைத்து பூஜிக்க ஆரம்பிக்கிறார்.  இந்தக் காட்டுப் பகுதிக்குள் இன்னுமொரு கதைக்கான விதை வந்து சேர்கிறது….. அது என்ன கதை…..



காளி Gகாட் கோவில்...
மாலைகள் காளிக்கு..... 

பெங்கால் பகுதியை ஆண்டு வந்த தேவபாலா எனும் அரசன் தனது மனைவி, மற்றும் குழந்தை சௌரிங்கி நாதா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். அவரது மனைவி இறந்து போக, ராஜா இன்னுமொரு திருமணம் செய்து கொள்கிறார். தாயை இழந்த சௌரிங்கி நாதா சின்னம்மாவின் வளர்ப்பில்… [தலைப்பில் சின்னம்மா எனப் பார்த்து அரசியல் பதிவோ என நினைத்தவர்களுக்கு…. இந்த சின்னம்மா வேற!] சின்னம்மா பொறுப்பில் வந்த சௌரிங்கி நாதாவுக்கு பிரச்சனைகள் ஆரம்பிக்கிறது. சின்னம்மாவுக்கும் குழந்தை பிறக்க, திட்டம் தீட்டுகிறார் சின்னம்மா… சௌரிங்கி நாதா இருந்தால் ராஜாவுக்குப் பிறகு தனது மகன் ராஜ பொறுப்பில் வர முடியாது என்பதால் சௌரிங்கி நாதாவினைத் தீர்த்துக் கட்ட வேண்டும்…..

காளி Gகாட் கோவில்...
வெளியே நடக்கும் பூஜைகள்.... 

சௌரிங்கி நாதா காட்டுக்குள் – மேலே சொன்ன அதே காடுதான் – அழைத்துச் செல்லப்பட்டு, தனிமைப் படுத்தப் படுகிறார். அது மட்டுமல்லாது, கைகள், கால்கள் என நான்கு அங்கங்களும் துண்டிக்கப்படுகின்றன.  கை, கால்கள் இல்லாமல் இருக்க அவரை காட்டு விலங்குகளிகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள இயலாது என்பதால் இந்த கொடூர செயல்! அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது காலகாலமாக நடப்பது தானே…. ஆனால் சௌரிங்கி நாதாவின் நல்லகாலம், அவர் காட்டுப்பகுதியில் மத்யேஸ்ந்திர நாதா கண்களில் படுகிறார் சௌரிங்கி நாதா.  கோரக்நாதா என்பவரின் பொறுப்பில் சௌரிங்கி நாதா விடப்பட, அவருக்கு, யோகா முதல் பல விஷயங்கள் சொல்லிக் கொடுக்கிறார்.


காளி Gகாட் கோவில்...
குங்கும விற்பனை....


காளி Gகாட் கோவில்...
சிவப்பில் எத்தனை வகை.... 

பன்னிரெண்டு வருடங்களில் யோகா மூலம் அவருக்கு கைகளும் கால்களும் வளர்கின்றன.  அந்த யோகாவிற்கு கண்ட மண்ட யோகா என்ற பெயரும் சொல்கிறார்கள். சௌரிங்கி என்ற வார்த்தைக்கு நான்கு அங்கம் என்ற அர்த்தம் உண்டு…. கொல்கத்தாவின் வடக்கினையும் கிழக்கினையும் இணைக்கும் நால்வழிப் பகுதிக்கு சௌரிங்கி என்ற பெயர் உண்டு என்பதையும் இங்கே சொல்ல வேண்டும்.  இப்போதைய காளி Gகாட் அமைக்கப்பட்டது இந்த சௌரிங்கி நாதா அவர்களால் என்பதையும் சொல்லி விடுகிறேன்…. 

காளி Gகாட் கோவில் செல்லும் பாதையில்...

முதலில் ஒரு சிறிய கோவிலாக, ஒரு குடிசை போல இருந்த கோவில், பல்வேறு ராஜாக்கள், மஹாராஜாக்கள் வழி வழியாக தந்த ஆதரவினால் பெரிதாக கட்டப்பட்டன.  இப்போதைய கோவில் சுமார் இரு நூறு ஆண்டுகள் பழமையானது என்று சொல்கிறார்கள்.  


காளி Gகாட் கோவில்...
காத்திருக்கும் பண்டாக்களும் மக்களும்....

கோவில் பகுதிக்குச் சென்ற போது, வாயிலில் அத்தனை பண்டாக்கள்…. வரும் பக்தர்களை ஈ மொய்ப்பது போல மொய்த்துக் கொள்கிறார்கள்.  நேரடியாக காளியிடம் உங்களை அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைக்கிறேன் என வலை வீசுகிறார்கள். மாட்டினால் சுரண்டி விடுவார்கள்….


காளி Gகாட் கோவில்...
இந்தப் புன்னகை என்ன விலை.... 
குங்குமம் விற்பவரின் பெண்....

காளி Gகாட் கோவில்...
மேலே இருக்கும் நான் எடுத்த குழந்தையின் படம் காண்பித்த போது மகிழ்ச்சியில் அந்தக் குடும்பம்....

பொதுவாகவே இம்மாதிரி இடங்களுக்குச் செல்லும்போது கொஞ்சம் ஜாக்கிரதையுடன் இருப்பது நல்லது. கொஞ்சம் விட்டாலும் பிரித்து மேய்ந்து விடுவார்கள். வரும்போது சட்டை, பேண்ட் பாக்கெட் காலியாக நிறையவே வாய்ப்பு உண்டு. முன்பே தெரியும் என்பது மட்டுமல்லாது, பெங்காலி நண்பரும் எச்சரிக்கை செய்திருந்ததால் ஜாக்கிரதையாக எவர் கையிலும் மாட்டாது தப்பித்தோம்.


காளி Gகாட் கோவில்...

நேற்றைய பதிவுக்கு இந்தப் படமும் பொருத்தமாக இருந்திருக்கலாம்....  கட்டிலில் படுத்திருக்கும் நபர் இல்லாதிருந்தால்.... 

கோவிலின் பின் பகுதியில் மிருகபலி உண்டு! ஆடுகள் நிறைய காத்திருந்தது. சில இடங்களில் மாலை போட்டுக்கொண்டு வெட்டுப்பட காத்திருந்த ஆடுகளைப் பார்த்ததும் அங்கிருந்து புறப்பட்டோம் – வெட்டுப்படுவதைப் பார்க்கும் சக்தி மனதுக்கு இல்லை. மிருக பலி தவறென்று சொல்லும் பலரும் இறைச்சி சாப்பிடுவதை மட்டும் தவறாக நினைப்பதில்லை என்பதையும் நினைக்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது.  இந்த பலி பற்றி நண்பர் விவரித்ததை சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன்…


காளி Gகாட் கோவில்...
பலியிடப்பட்ட ஆடுகள்....

பெரும்பாலும் ஆடுகளை மட்டுமே இங்கே பலி கொடுக்கிறார்கள். ஆட்டின் பின்பக்கத்தில் சிலர் ஆட்டைப் பிடித்துக் கொள்ள பெரிய கத்தியால் ஒரே வெட்டு… கழுத்தும் உடலும் தனியாகும். வெட்டிய பிறகு சில நிமிடங்கள் வரை துடிக்கும் உடலைப் பார்க்காமல் வெளியே வருவார்கள் அனைவரும் – ஆடு இறந்தது உறுதியான பிறகு அந்த ஆட்டின் தலை மீது சூடம் வைத்து காளிக்கு ஒரு ஆரத்தி…. அதன் பிறகு ஆட்டின் தலை பூஜாரிக்கு – உடல் பகுதி முழுவதும் பலி கொடுத்தவருக்கு… அதை அவர் கிராமத்து மக்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கிறார். இப்படித்தான் மிருக பலி நடக்கும் என்பதை விவரித்து நண்பர் சொன்னதைக் கேட்டு சில நிமிடங்கள் ஆடிப்போயிருந்தேன் நான்.  கொடுமையான விஷயம்……


மேலுள்ள கொடூர படத்தினை மறக்க.....
கொல்கத்தா நகரின் சாலை சந்திப்பொன்றில் இருக்கும் பசுமைச் சிலை.....

எப்போதுமே பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது இந்த காளி Gகாட் கோவில். காலை ஐந்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரையும், மாலை ஐந்து மணி மணி முதல் இரவு பத்தரை மணி வரையும் கோவில் திறந்திருக்கும். முடிந்த போது பார்த்து வரலாம். கோவில், கோவில் பகுதிகளில் இப்படி பல விதக் காட்சிகளைப் பார்த்து அங்கிருந்து புறப்பட்டோம்.  அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்…..

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

22 கருத்துகள்:

  1. உங்கள் பயண ஆர்வம் எங்களுக்கு புதுப் புது தகவல்களை அள்ளித் தரும் அமுதசுரபி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  2. உங்களுடன் அனைவரின் புன்னகையோடு உள்ள குடும்ப புகைப்படம் மிகவும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. பார்க்கவேண்டிய கோவில், பலி பகுதியைத் தவிர்த்து. ஆவலுடன் தொடர்கிறேன்

    எந்தக் கோவிலிலும் அவசர தரிசனத்துக்கு உதவி பணம் பார்க்கும் இடைத்தரகர்களைத் தவிர்க்க முடியவில்லை. நியாயமான காரணம் இல்லாமல் குறுக்குவழி தரிசனம் பலன் தருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறுக்கு வழி தரிசனம் பலன் தருமா? எனக்குப் பிடிக்காத விஷயம் இந்த குறுக்கு வழி தரிசனம். இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்று சொல்லிவிட்டு இந்த முறை ஏன்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. பல வருடங்களுக்கு முன் போனது. ஞாயிறு அன்று காலை கடைத்தெரு பக்கம் போய்விடக் கூடாது.கறி கடைகளில் ஆடு வெட்டப்பட்டு தொங்கும். அதை வாங்க கூட்டம் அலை மோதும்.
    முன்பு கொல்க்கத்தா காளிக்கு எருமை மாடு பலி கொடுப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் இப்போது ஆடு மட்டும் தான்.

    படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எருமை மாடு பலி இப்போதும் தெரியாமல் நடத்துவதுண்டு - கோவிலுக்கு வெளியே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  5. அழகிய போட்டோக்களுடன் அருமையான பதிவு அண்ணா...
    அந்தக் குழந்தை குங்குமமாய்... என்ன அழகான புன்னகை...
    அருமை அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  6. நல்ல தகவல்கள்! தகவல்கள் + படங்களில் அந்த பலி படம் பார்க்கவில்லை அதைத்தவிர மற்றவை எல்லாம் அழகு என்றாலும் மிகவும் பிடித்த படம் நீங்கள் இருக்கும் அந்தக் குடும்பப் படம் மிக அருமை!!! ஜி! குழந்தையின் சிரிப்பு கள்ளமற்ற அழகுச் சிரிப்பு. மிருகபலி மட்டும் மனதை வேதனைப்படுத்தியது. கொடுமை கொடுமை..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலி பற்றிய படம் ரொம்ப யோசித்த பிறகு தான் சேர்த்தேன். அதுவும் விழித்திருக்கும் கண்கள் ரொம்பவே பாதித்தது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. அந்த குடும்ப புகைப்படத்தில், அந்தக் குழந்தையின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி - எமக்கும் மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @ நொரண்டு.

      நீக்கு
  9. இவ்ளோ குங்குமத்தை இப்போதான் பார்க்கிறேன் ! எல்லாம் அவரவர் நம்பிக்கை ! பல தகவல்கள் ! குழந்தையின் சிரிப்பு அழகு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.....

      நீக்கு
  10. கோவில்கள் என்றாலேயே கதைகள் இருக்கும் ஆனால் இக்கதைகளையே நம்பும் பலர் நம்மோடு இருக்கிறார்கள் இந்த பலி என்பதெல்லாம் இம்மாதிரிக் கதைகள் மூலமும் வந்திருகலாம் அறியாமையே பலம் போல் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  11. தட்சிணேஸ்வரம் காளி கோவிலில் பலி வழிபாடு உண்டா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே கோவில் வளாகத்தில் பலி இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மணி ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....