எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, April 20, 2017

Anti Romeo Squad of the Eightees – நெய்வேலியில்

படம்: இணையத்திலிருந்து...

சமீபத்தில் பொறுப்பேற்ற உத்திரப் பிரதேச அரசு, தனது தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்த பல விஷயங்களில் ஒன்றான Anti Romeo Squad அமைப்பதை உடனடியாக செய்திருக்கிறது. Anti Romeo Squad என்பது என்ன, எதற்காக என்பதைக் கீழே தந்திருக்கிறேன்.ஒவ்வொரு அணியிலும் இரண்டு காவலர்கள் இருப்பார்கள் – பெரும்பாலும் ஒரு ஆண், ஒரு பெண் காவலர்.

ஒவ்வொரு காவல் நிலையத்திலும், இப்படி இரண்டு அல்லது மூன்று அணிகள் அமைக்கப்படும்.

காவல் நிலையத்தின் கீழே வரும் பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து இந்த அணியின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

பெண்கள் நிறைய படிக்கும் கல்லூரிகள், பள்ளிகள் அருகே இந்த அணியினர் பணியில் இருப்பார்கள்.

காவலர்கள் சீருடையிலோ, அல்லது மஃப்டியிலோ இருக்கலாம்! அணியில் இருக்கும் காவலர்கள் எந்தப் பதவியில் இருப்பவர்களாகவும் இருக்கலாம்! அதாவது காவல்துறையில் உயர் அதிகாரியாகக் கூட இருக்கலாம்!

அப்பகுதியில் பெண்களுக்குத் தொந்தரவு தருபவர்கள், கிண்டல் செய்பவர்களை இக்குழு கவனிக்கும். அவர்ளுக்கு தகுந்த எச்சரிக்கை தரவோ, அல்லது அவர்களின் பெற்றோருக்கு தகவல் தருவது, பிரச்சனை பெரியதாக இருந்தால், அந்த நபர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதும் அவர்களது வேலை.பொதுவாகவே, உத்திரப் பிரதேசம், பீஹார், ஹரியானா, உத்திராகண்ட் போன்ற வட மாநிலங்களில் பெண்களுக்கு மதிப்பில்லை. அவர்களை போகப்பொருளாக மட்டுமே பார்ப்பது இங்கே கொஞ்சம் அதிகம். பெண்களுக்கு பாதுகாப்பு ரொம்பவே குறைவு. இரவு நேரங்களை விடுங்கள், பகல் நேரத்தில் கூட பெண் தனியாகச் சென்று வருவது கொஞ்சம் கடினம் தான். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எண்ணிக்கையில் மிக அதிகமாக இருப்பது இங்கே தான்.  அப்படி இருக்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக இந்த செயல் என்று சொன்னாலும், அக்குழுவினர் அத்து மீறாமல் இருப்பார்களா என்பது சந்தேகமே.பதவியேற்ற உடனே இதற்கான ஆணை பிறப்பித்து, அவர்களும் செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள். காவல்துறையினரை விட தனி நபர்கள் தான் அதிக மும்மரமாக Anti Romeo Squad என்ற பெயரில் காதலர்களைத் தொந்தரவு செய்கிறார்கள், காதலிக்க விடுவதில்லை, ஆண்களையும், பெண்களையும் தொந்தரவு செய்கிறார்கள், கற்காலத்திற்குப் போய்விட்டோம் என்றெல்லாம் நிறைய செய்திகள். இது இப்படி இருக்க, இந்த Anti Romeo Squad செய்திகள் எனது நெய்வேலி நினைவுகளைக் கொஞ்சம் மீட்டெடுக்க உதவியது.

எனது ஊரான நெய்வேலி பற்றி எழுதும்போது பலமுறை எனது வீடானது நெய்வேலி நிறுவனம் நடத்திய NLC Girls Higher Secondary School அருகே [இரண்டாவது வீடு!] என்பது பற்றி சொல்லி இருக்கிறேன். ஆறாவது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் பெண்களுக்கான பள்ளி அது. கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பெண்களுக்கு மேல் படிக்கும் பள்ளி. காலையிலும் மாலையிலும் பள்ளிக்குச் செல்லும் பெண்களை சைட் அடிப்பதற்கென்றே அப்பகுதியில் ரோமியோக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். பெரும்பாலான இளைஞர்களுக்கு பள்ளி ஆரம்பிக்கும் நேரம், முடியும் நேரம் ஆகிய இரு சமயங்களிலும் இங்கே வந்து நின்று அவர்களைப் பார்ப்பது தான் தலையாய கடமையாக இருந்தது.  சிலர் பக்கத்து கடைகளில் சிகரெட் வாங்கி புகைப்பது போல சைட் அடிக்க, சிலர் மர நிழலில் கும்பலாக நின்று பள்ளிக்குச் செல்லும் பெண்களை பார்த்து இன்புறுவார்கள். விதம் விதமாக கமெண்டுகள் பறக்கும்!

பல காதல்கள் அரும்புவதும் இங்கே தான். நிறைய ஒருதலைக் காதல்கள். 27-வது பிளாக்கிலிருந்து பள்ளியின் வாசலுக்கு வந்து காத்திருந்து, பள்ளி விட்டதும் 4-வது பிளாக்கில் இருக்கும் பெண் வீடு வரை பின்னாலே சென்று பத்திரமாக வீடு சேர்ந்ததும், அங்கிருந்து திரும்பி 27-வது பிளாக் செல்லும் ஒருவரை எனக்குத் தெரியும்! கிட்டத்தட்ட பதினைந்து கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும் இந்த சைக்கிள் பயணம்! [போவதும் வருவதும் சேர்த்து!] கடமை தவறாது ஒவ்வொரு நாளும் இந்த வேலை செய்வார் அந்த நபர்! இத்தனைக்கும் அந்தப் பெண் இவரை கடைக்கண்ணால் கூட பார்க்க மாட்டார்! கிட்டத்தட்ட இரண்டு வருடம் இப்படி பின்தொடர்ந்து இருப்பார்! அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டது! கணவர் பின் தொடர்ந்தவர் அல்ல!

பெரும்பாலான பெண்கள் பள்ளிக்கு சைக்கிளில் தான் வருவார்கள். நெய்வேலியில் ஒவ்வொரு வீட்டிலும், அத்தனை பேருக்கும் தலா ஒரு சைக்கிள் இருக்கும். இப்படி சைக்கிளில் வரும்போது, அதுவும் தாவணி அணிந்து சைக்கிளைச் செலுத்துவது கொஞ்சம் கஷ்டமான வேலை. பலருக்கு சைக்கிளின் செயினில் தாவணி மாட்டிக்கொள்ளும்! கவனமாக இருந்து சைக்கிளைச் செலுத்தினாலும், பக்கத்தில் வேறு யாராவது மோதுவது போல வந்தால் தடுமாறுவார்கள். சிலர் சும்மா பார்ப்பதும், பின்னால் செல்வதும், கமெண்ட் செய்வதுமாக இருந்தால், சில துடுக்கு இளைஞர்கள் அப்படி சைக்கிளில் செல்லும் பெண்கள் அருகே வந்து சர்ரென்று ஒரு ப்ரேக் அடித்து, அவர்கள் இடுப்பை ஒரு பிடி பிடித்து பறக்க, அந்தப் பெண் நிலை தடுமாறி கீழே விழுவார். வேகமாகச் சென்று முதுகில் தட்டுவது, கேரியரைப் பிடிப்பது இப்படி எதையாவது செய்யும் இளைஞர்கள் நிறையவே.

பல சமயங்களில் பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் தரும் புகார்கள் காரணமாக நெய்வேலி நிர்வாகத்தின் Security பிரிவும், காவல் துறையும் கொஞ்சம் வேலை பார்க்கும். ஒரு ஜீப், ஒரு லாரி [நாய் பிடிக்கும் வண்டி என்ற பெயர் இளைஞர்கள் மத்தியில் அதற்குண்டு!] இரண்டும் வர, இளைஞர்கள் அனைவரும் காட்டு வேகத்தில் அவர்களிடமிருந்து தப்பிக்க சைக்கிளில் ஏறி பறப்பார்கள். மாட்டினால் தர்ம அடி தான். சைக்கிளோடு அப்படியே தூக்கி லாரியின் பின் புறத்தில் வீசி, காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்வார்கள். பெற்றோருக்குச் செய்தி போக, அவர்கள் வந்து அவர்களும் நாலு அடி கொடுப்பார்கள்! பெற்றோர்களுக்கும் “பையனை ஒழுங்கா வளருங்கள், இப்படி சுத்த விடறீங்களே” என்று சொல்லி அனுப்பி வைப்பார்கள். வாரத்திற்கு இரண்டு மூன்று முறையாவது இப்படி ஜீப், லாரி வரும்! எப்போது வரும், எப்படி வரும் என்று தெரியாது! ஆனால் வரும்!

எங்கள் வீட்டு வராந்தாவில் உட்கார்ந்து இப்படி நடப்பதை வேடிக்கை பார்ப்பதும் ஒரு பொழுது போக்கு அப்போது! ஜீப், லாரி வந்ததும் அந்த இளைஞர்கள் ஓடுவதைப் பார்த்து ரசித்திருக்கிறேன் பல முறை! இந்த வண்டி வந்து சென்ற விஷயம் எல்லா இளைஞர்களுக்கும் தெரிந்து விடும். ஒன்றிரண்டு நாட்கள் கொஞ்சம் சுதாரிப்புடன் இருப்பார்கள். மீண்டும் தொல்லை தொடங்கும். மீண்டும் நாய்வண்டி வர ஓட்டம். அந்த காலத்திலேயே இந்த Anti Romeo Squad நெய்வேலியில் வந்து விட்டது! இப்போதும் இருக்கிறதா என்பது தெரியவில்லை…..

Squad அமைக்கிறார்களோ இல்லையோ, பெண்களுக்குப் பாதுகாப்பு தருவதும் காவல் துறையின் பணிகளில் ஒன்று. பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு சரியான விஷயங்களைச் சொல்லித் தர வேண்டும்.  அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு, அடுத்தவர்களுக்குத் தொந்தரவு செய்யாது இருந்தால் நல்லது!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.  

20 comments:

 1. சுவாரஸ்யமான அனுபவங்கள்தான். எனது தஞ்சை, மதுரை நாட்களை நினைவுக்குக் கொண்டுவருகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஜி!

   Delete
 3. அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு, அடுத்தவர்களுக்குத் தொந்தரவு செய்யாது இருந்தால் நல்லது!
  உண்மைதான் ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. முடிவில் சொன்னதும் நன்று...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. //அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு, அடுத்தவர்களுக்குத் தொந்தரவு செய்யாது இருந்தால் நல்லது!//

  நன்றாக சொன்னீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 6. நெய்வேலி அனுபவம் ரசிக்கும்படி இருந்தது. எதுவும் அடுத்தவர்களுக்குத் தொந்தரவு இல்லாதவரையில் சரிதான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 7. சுவையான அனுபவத்தை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 8. நீங்க சொன்ன மாதிரி வேலியே பயிரை மேயாமல் இருக்கணும் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 9. என்ன இதுபடிக்கப் படிக்கப் பயமாக இருந்துது, இவ்ளோ மோசமான இடமாகவா இருக்குது?? அதுசரி அதெப்படி 27 வது புளொக் என கரெக்ட்டாச் சொல்றீ ங்க?.. எனக்கு டவுட்டு டவுட்டா வருதே:)

  ReplyDelete
  Replies
  1. அந்த கேரக்டர் எனக்கு நல்லாத் தெரிஞ்ச ஆளாச்சே! அதான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 10. .
  ..உ பி முயற்சி நல்ல விஷயதான்......நெய்வேலி நிகழ்வுகள் சுவாரஸ்யம்.....இறுதி வரி சூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....