எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, April 17, 2017

ஹனிமூன் தேசம் – ஹடிம்பா, பீம் மற்றும் கடோத்கஜன்!


ஹனிமூன் தேசம் – பகுதி 17

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!

சுடச்சுட மக்காச்சோளம்! வேணுமா?

நாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த இரண்டு வாகனங்கள் மட்டும் வாகன நிறுத்துமிடத்தில் இருக்க, அதை ஓட்டி வந்த ஓட்டுனர்கள் இருவரையும் காணவில்லை! எங்கே சென்றுவிட்டார்கள் எனப் பார்த்தபோது மேலே ஒரு உணவகத்திலிருந்து இரண்டு பேரும் கை காட்டுகிறார்கள். பால்கனி போன்ற அமைப்பில் அமர்ந்து கொண்டு மதிய உணவை மாலை வேளையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் அவசர அவசரமாகச் சாப்பிட, அவர்களிடம் பொறுமையாக சாப்பிடச் சொன்னோம். அவர்கள் சாப்பிட்டு முடிப்பதற்குள் எங்களுக்குத் தேநீரும் அதே உணவகத்திலிருந்து வந்தது. 


இது உணவகத்தின் முன்பக்கமா? பின்பக்கமா? 

கூடவே வாகன நிறுத்துமிடத்தில் வேக வைத்த சோளம் இருக்க, அதிலும் கொஞ்சம் வாங்கி அனைவரும் பங்கிட்டு உண்டோம். தேநீரும் வந்தது. குடித்து முடிப்பதற்குள் வாகன ஓட்டுனர்களும் தாமதமானதற்கு மன்னிப்பு கேட்டபடி வந்தார்கள். சாப்பிடுவதற்காகத்தானே இத்தனை உழைப்பும், அதனால் தவறில்லை என்று சொல்லி, அவர்களுடன் புறப்பட்டோம்.  அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் dhதியோdhதர் மரம் என அழைக்கப்படும் தேவதாரு மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு. ஆமாம் காட்டுப்பகுதிதான். அந்தக் காட்டுப்பகுதியில் இருக்கும் ஒரு வழிபாட்டுத் தலத்திற்குதான் அடுத்ததாய் உங்களை அழைத்துப் போகப்போகிறேன். அதற்கு முன்னர் கொஞ்சம் மஹாபாரதக் கதை!

ஹடிம்பா கோவில் - நீண்ட வரிசை...
காத்திருந்து காத்திருந்து.....


ஹடிம்பா கோவில் - வேறொரு பார்வை!

பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது இந்த அடர்வனத்தில் தங்கி இருந்தார்கள். ஒரு இரவுப் பொழுதில், பீமனைத் தவிர மற்ற அனைவரும் உறக்கத்தில் இருக்க, பீமன் மட்டும் காவலுக்காக விழித்திருக்கிறான். அந்தப் பகுதியில் இருந்த காட்டுவாசிகள் கூட்டத்தின் தலைவனான ஹடிம்ப் மற்றும் அவனது சகோதரி ஹடிம்பா [ஹடிம்ப் மற்றும் ஹடிம்பா என்றும் அழைப்பதுண்டு] இருவரும் காட்டுப்பகுதியில் உலவிக் கொண்டிருக்கிறார்கள். காட்டுப் பகுதியில் மனித வாசம் இருப்பதைத் தெரிந்து கொண்ட ஹடிம்ப், அந்த மனிதர்களைக் கொன்று அவர்கள் மாமிசத்தை உண்ணுவதற்காக, தனது சகோதரியை “அந்த மனிதர்களைக் கொன்று வா” என்று அனுப்புகிறான்.


இந்தக்காலத்து பீம்?
ஒரு உழைப்பாளி....

சகோதரனின் பேச்சை மதித்து பஞ்சபாண்டவர்கள் இருந்த இடத்திற்குச் செல்லும் ஹடிம்பா, அங்கே காவலுக்கு இருக்கும் பீமனைப் பார்த்தவுடன் மயங்குகிறாள். அவனிடம் தான் வந்த நோக்கத்தையும் சொல்லி, இங்கே இருந்து தப்பிவிடுங்கள், இல்லை என்றால் என் சகோதரனான ஹடிம்ப் உங்கள் அனைவரையும் கொன்று உங்களை விழுங்கிவிடுவான் என்று சொல்லி, அவசரப்படுத்துகிறாள். அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பீமன், நீயும் என்னைக் கொல்வதற்குத்தானே வந்தாய், பிறகு ஏன் இந்த மனமாற்றம் என்று கேட்க, அவள், பீமன் மீது காதல் கொண்டதாகக் கூறுகிறாள்.


மலைப்பாதையில் நடந்து செல்லும் முதியவர்....

இதைக் கேட்டபிறகு, உன் சகோதரனைக் கண்டு பயப்படாதே, அவனால் எங்களை எதுவும் செய்யமுடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, சகோதரி சென்று நீண்ட நேரமாயிற்றே, நாமே செல்ல வேண்டியது தான் என்று ஹடிம்ப் அங்கே வருகிறான். பார்த்தால் கொல்லவேண்டிய ஹடிம்பா, பேசிக்கொண்டிருக்கிறாள். பீமனுக்கும் ஹடிம்ப்-க்கும் இடையே பலத்த யுத்தம் நடக்கிறது. கடைசியில் பீமன் ஜெயிக்கிறான். அந்தப் பகுதியில் இருக்கும் காட்டுவாசிகளின் தலைவன் ஆகிறான். பீமனுக்கும் ஹடிம்பாவுக்கும் திருமணம் நடக்கிறது. அவர்களுக்கு ஒரு மகன் பிறக்கிறான் – அவன் கடோத்கஜன்!

இப்படிக்கா போனா ஹடிம்பா கோவில் தான்!
தகவல் சொல்லும் பலகை!

(கதையை மிகவும் விஸ்தாரமாக படிக்க நினைப்பவர்கள் ஆங்கிலத்தில் பாரதீய வித்யா பவன் வெளியீடான கிருஷ்ணாவதாரா – மொத்தம் 7 பகுதிகள் படிக்கலாம். கே. எம். முன்ஷி அவர்கள் எழுதிய மிகவும் சுவாரஸ்யமான புத்தகம். இந்தக் கதையை மிகவும் விளக்கமாக எழுதி இருப்பார் முன்ஷி. முடிந்தால் படித்துப் பாருங்கள்).


அந்த மானோட கண்ணு உங்களையே பாக்கற மாதிரி இருக்கே!

இது நடந்த காட்டுப்பகுதி தான் நாம் இப்போது பார்க்கப்போகும் இடம். இந்தப் பகுதியில் இப்போதும் ஹிடிம்பாவுக்கு ஒரு கோவில் உண்டு! காட்டுவாசி என்பதால் கோவிலின் சுற்றுப்புறங்களில் பல காட்டு விலங்குகளின் தலைகள் பாடம் செய்யப்பட்டு மாட்டி இருக்கும். கோவிலின் சுற்றுப்பகுதியில் இப்படி இறந்த மிருகங்களில் தலைகள் இருப்பது உங்களுக்கு ஒரு வித பய உணர்வை உண்டாக்கலாம்! ஆனால் பயப்படத் தேவையில்லை! – அவை உயிருடன் வரப்போவதில்லை!


எந்த விலங்கின் கொம்புகள் இவை?

நாங்கள் சென்ற போது அங்கே அதிக சுற்றுலாப் பயணிகள் காத்திருந்தார்கள். நீண்ட வரிசையில் நின்று தான் கோவிலுக்குள் செல்ல வேண்டியிருந்தது. இக்கோவிலுக்கும் இப்படி நிறைய கதைகள் உண்டு. வரிசையில் காத்திருக்கும் நேரத்தில் அந்தக் கதைகளையும் பார்க்கலாம்…. அந்தக் கதைகள் அடுத்த பகுதியில்!

தொடர்ந்து பயணிப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

30 comments:

 1. இடும்பி கதை நல்லவேளை எனக்கு(ம்) தெரிந்த கதை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. பதிவை ரசித்து தொடர்கிறேன் ஜி

  ReplyDelete
 3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

  ReplyDelete
 4. மகாபாரத கிளைக் கதைகள் சுவாரஸ்யமானவை...

  தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. பயணத்தோடு கதையினையும் கேட்கும் வாய்ப்பு
  தொடருங்கள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 6. சுட்டெடுத்த சோளக் கதிர் போல பதிவும் சுவை!..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 7. போன வருசம் அப்பா அம்மா போய் வந்தாங்க. ஆன விவரம் சொல்ல தெரியல. இப்ப தெரிஞ்சுக்கிட்டேன்., இடும்பன் கதை தெரிந்ததே.
  பகிர்வுக்கு நன்றிண்ணே

  ReplyDelete
  Replies
  1. ஓ உங்கள் பெற்றோர்கள் சென்று வந்தார்களா? மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 8. இடும்பி கதை. அந்தக் கோவில்தான் ஹடிம்பாவா? கோவில் விவரங்கள் அருமை. தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இந்த கோவில் தான் ஹடிம்பா கோவில்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 9. கருத்துப் பகிர்வுக்கு நன்றி
  Tamil News

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹென்றி.

   Delete
 10. #காவலுக்கு இருக்கும் பீமனைப் பார்த்தவுடன் மயங்குகிறாள்#
  அப்பவே, கண்டதும் காதல்தானா :)

  ReplyDelete
  Replies
  1. அப்பவே கண்டதும் காதல்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 11. இடும்பி தான் ஹடிம்பா என இன்று அறிந்துகொண்டேன். அந்த தேவதாரு மரங்களின் பின்னணியில் ஹடிம்பா கோவில் அழகாய் தெரிகிறது. தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தேவதாரு மரங்களின் பின்னணியில் கோவில் ரொம்பவே அழகு தான். அதுவும் பனிப்பொழிவு இருக்கும் நாட்களில் இன்னும் அழகாய் இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 12. படங்களும் செய்திகளும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 13. அந்த பல்கனியைப் பார்க்கவே நடுங்குது.. இப்பவோ கொஞ்சத்தாலயோ விழப்போகுதுபோலவே இருக்கே.

  பீமன் கதை சூப்பர்.. எனக்கு மகாபாரதம் கம்பராமாயணம்.. கேட்க ரொம்பப் பிடிக்கும்.. ஆனா அரச கதைகள் பிடிக்காது.. அந்தக் கோயில் ஒரு வித்தியாசமாகவே இருக்கு.. சைனீஸ் ஸ்டைலில்.

  ReplyDelete
  Replies
  1. எப்ப வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் தான் இருக்கிறது! என்றாலும் பயமில்லை உட்கார்ந்திருப்பவருக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 14. இடும்பா இடும்பி கதை தெரிந்த கதை அது மகா பாரதத்தின் கதையிலேயே கடோத்கஜனின் பிறப்பைச் சொல்லும் கதை அல்லவா...தொடர்கிறோம் ஜி..

  கீதா: வெங்கட்ஜி நீங்கள் செல்லும் போது கூட்டமா? வரிசையா? ஓ அத்தனை ஃபேமஸ் ஆகிவிட்டது போலும்..சீசனால் இருக்கலாம்...நாங்கள் சென்ற போது முதல் தடவை பல வருடங்கள் முன்பு என்பதால் கூட்டமில்லை....இரண்டாம் முறையும் அத்தனை கூட்டமில்லை...அதன் வாயிலில் கீழே முயல் எல்லாம்வைத்துக் கொண்டிருப்பார்கள். அதனை வைத்துக் கொண்டு ஃபோட்டோ எடுத்துக் கொள்ள...

  ReplyDelete
  Replies
  1. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் வேளைகளில் இங்கே நிறைய கூட்டம் இருக்கிறது. முயல் வைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்வது வேறு இடத்தில் பார்த்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 15. சுவாரஸ்யம் ....படங்களும் ... கதையும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 16. Mahabharat story is good and like to read again and again. I like the Mahabharat story (Venmurasu) written by Jeyamohan in his website (http://www.jeyamohan.in/வெண்முரசு)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனானி!

   பெயரைச் சொல்லலாமே! :)

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....