செவ்வாய், 2 மே, 2017

உழைப்பாளிகள் – எலுமிச்சை/பனீர் சோடா – கொடுக்காப்புளி - ஜிகிர்தண்டா


சீனிப் புளியங்கா, கோணப்புளியங்கா, கொடுக்காப்புளி - எந்தப் பெயரில் அழைத்தாலும் ஒரே சுவை!


தலைநகரிலிருந்து வந்திருக்கும் சமயத்தில் தலைநகர் நண்பரும் அவரது மனைவியும் திருச்சிக்கு வந்திருக்கிறார்கள். நான் அடிக்கடி சந்தித்தாலும் எனது குடும்பத்தினரும் அவர்களும் சில வருடங்கள் கழித்து சந்திக்கிறார்கள். கடந்த இரண்டு மூன்று நாட்களாக, திருச்சியின் சில இடங்களுக்கு தினம் தினம் பயணம், ஊர் சுற்றல் என தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அனுபவம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திக்கிறார்கள் என்பதால் இந்த இடைவெளியில் நடந்த அனைத்தும் பேசுவதற்கே எத்தனை நேரம் தேவை! ஒரே அரட்டையும் சிரிப்பும் மகிழ்ச்சி ததும்பும் நாட்களாக இருந்து கொண்டிருக்கின்றன!

தலைநகரிலேயே பிறந்து வளர்ந்த நண்பருக்கு நமது ஊரில் உள்ள சிறப்பான விஷயங்களைச் சொல்லி, அவர்களுக்கு முடிந்த சிலவற்றை உண்ண வாங்கிக் கொடுத்து புதிய அனுபவங்கள் தர முடிந்ததில் மகிழ்ச்சி. அப்படி புதிதாக அவர்கள் ருசித்தது மதுரை புகழ் ஜிகிர்தண்டா, பொடி தோசை, இங்கே கிடைக்கும் கொடுக்காபுளி, பனீர் சோடா, லெமன் சோடா! திருச்சி மலைக்கோட்டை, NSB ரோடு அழைத்துக் கொண்டு சென்று அங்கேயும் சில அனுபவங்கள். 

சீனிப்புளியங்கா:


முதிய உழைப்பாளி....


நேற்றைய உழைப்பாளிகள் தினம் அன்று திருவரங்கம் ராஜகோபுரம் அருகே ஒரு மூதாட்டி அமர்ந்து கொடுக்காப்புளி, வேப்பம்பூ, மாங்காய், வேர்க்கடலை, முழு நெல்லிக்காய் என கலந்து கட்டி பலவற்றை விற்றுக் கொண்டிருந்தார். தலைநகரிலிருந்து வந்திருந்த நண்பருக்கும் அவரது மனைவிக்கும் கொடுக்காப்புளி வாங்கி, சுவைக்கத் தந்தேன். இதுவரை அவர்கள் இதை பார்த்தது கூட கிடையாது என்பதால் அவர்களுக்கு இது பற்றி சொல்லிக் கொண்டிருக்க, மூதாட்டி சிரித்தவாறே, “மரம் எல்லாத்தையும் வெட்டிடறாங்களே இப்பல்லாம், இன்னும் கொஞ்சம் நாள்ல இதெல்லாம் கிடைக்குமா என்பதே சந்தேகம் தானப்பா!என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

கூடவே கொடுக்காப்புளியை வேறு பெயர்களிலும் அழைப்பார்கள் என்று சொன்னதோடு, அதன் வேறு பெயர்களையும் – “சீனிப் புளியங்கா, கோணப் புளியங்காஎன்று அழைப்பார்கள் என்று சொல்லிக் கொடுத்தார். சீனிப் புளியங்கா 20 ரூபாய்க்கு வாங்கி அனைவரும் உண்ட பிறகு, எனக்கு மிகவும் பிடித்த அரிநெல்லிக்காய் இருக்கிறதா என்று கேட்க, “பங்குனி மாசம் தான் கிடைக்கும்பா, அப்ப வந்தா தரேன் என்று பாசத்தோடு சொல்ல, உழைப்பாளிகள் தினம் அன்று மட்டுமல்லாது வருடத்தின் எல்லா நாட்களிலும் உழைத்துக் கொண்டிருக்கும் அந்த மூதாட்டியை வணங்கி அங்கிருந்து புறப்பட்டோம்.

லெமன் சோடா:

திருச்சி என்றாலே கோவில்கள், கோவில்கள், கோவில்கள் மட்டுமே! வேறு சுற்றுலாத் தலம் என்றால் காய்ந்து போன முக்கொம்பு, கல்லணை தான்! அங்கேயும் பெரிதாக ஒன்றும் இல்லை. ஒவ்வொரு முறை வரும்போதும் முக்கொம்பு, கல்லணை என்று போனதால் இப்போது முக்கொம்பு போகலாம் என்றாலே முறைக்கிறார்கள் வீட்டில்! நல்ல வேளையாக கடந்த சில முறையாக ஆசியாவின் மிகப் பெரிய Butterfly Park [இன்னும் அமைப்புப் பணிகள் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது!] செல்ல முடிகிறது.  தில்லியிலிருந்து வந்திருந்த நண்பர்களையும் அங்கே அழைத்துச் சென்றோம்.

வீட்டிலிருந்து சற்றே அருகில் இருப்பதால் வீட்டு வாசலிலிருந்து மினி பஸ் பயணம் – பூங்கா வாசல் வரை! இந்த மினி பஸ் பயணமும், அந்த ஓட்டுனர் போடும் பழைய பாடல்களும் – அதுவும் அரத பழசான பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்தவை! இந்த முறை கேட்ட பாடல்கள் – “ஆஹா நம் ஆசை நிறைவேறுமா, கடல் அலைபோல”, வேறு ஒரு பாடல் – நடுவே “கல்கண்டு நாணும் மொழியாள்!என்று வந்தது! ஆஹா என்ன ஒரு சுவை பாடலில்! இனிப்பான கல்கண்டே நாணும் அளவுக்கு இருக்குமாம் அந்த காதலியின் மொழி! என்ன சுவை பாடலில்.  இப்படி பாடல் கேட்டபடியே வண்ணத்துப் பூச்சி பூங்காவிற்கு ஒரு பயணம்!

பூங்காவில் இறக்கி விடும்போதே, மினி பஸ் நடத்துனர், அடுத்த ட்ரிப் எப்போது என்பதை கேட்காமலேயே நமக்காகச் சொல்லிச் செல்கிறார்! இங்கே அரசுப் பேருந்துகள் வருவதில்லை. திருவரங்கத்திலிருந்து மேலூர் வழியாக இந்த மினி பஸ் மட்டும் தான். என்னதான் அங்கே ஆட்டோ இருக்கிறது என்றாலும், பேருந்து நேரத்தினைச் சொல்லிப் போகும் நல்ல மனது கொண்ட அந்த நடத்துனருக்கு ஒரு நன்றியைச் சொல்லி பூங்காவிற்கு உள்ளே செல்ல உண்டான கட்டணம் [ஒரு நபருக்கு ரூ.10/-]மற்றும் கேமராவிற்குரிய கட்டணம் [ரூ.20/-] கொடுத்து உள்ளே நுழைந்தோம்.  பூங்காவில் ஒரு மணி நேரம் இருந்தபிறகு வெளியே வர, வெய்யிலுக்கு இதமாய் லெமன் சோடா குடிக்கலாம் என்று வெளியே மரத்தடியில் இருந்த கடைக்கு வந்தோம்.


இளம் உழைப்பாளி....

கடைக்காரருடன் ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பிற்குச் செல்லும் அவரது செல்ல மகளும் அப்பாவுக்கு உதவியாக [பள்ளி விடுமுறை என்பதால்] இருக்கிறார். லெமன் சோடா சொல்ல, அப்பாவுக்கு உதவியாக சோடா உடைப்பது, உப்பு போடுவது என்று எல்லாம் செய்கிறார். சிரித்த முகம், மனதைக் கவரும் அழகு, கூடவே அகத்தின் அழகும் தெரியும்படி அப்பாவுக்குச் செய்யும் உதவி என்று பார்த்தவுடனேயே பிடித்துவிட்டது. உழைப்பாளிக்கு உதவி செய்யும் சின்ன உழைப்பாளி! அவரது பெயரைக் கேட்க – மனதுக்குள் மகிழ்ச்சி! எனது மகளின் அதே பெயர் கொண்டவள்! நல்லா படிக்கணும் கண்ணா என்று வாழ்த்தி லெமன் சோடாவைக் குடிப்பதற்குள் பேருந்து வந்துவிட, ருசித்துக் குடிக்காமல் வேகமாகக் குடித்து புறப்பட்டோம்!

சரி சரி, லெமன் சோடாதான் ரசித்து ருசித்து குடிக்க முடியவில்லையே என வடக்கு வாசல் பக்கம் செல்லும் போது, அங்கே ஒரு பனீர் சோடா வாங்கி ரசித்து, ருசித்து குடித்தாயிற்று! 

திருவரங்க நாட்கள் இனிதாய், மகிழ்ச்சியாய் சென்று கொண்டிருக்கிறது. நண்பர்கள் வரவும் சேர்ந்து கொள்ள மகிழ்ச்சி இரட்டிப்பாய்!  உழைப்பாளிகள் தினமான நேற்றே இந்த உழைப்பாளிகள் பற்றி பகிர்ந்து கொண்டிருக்க வேண்டியது – சற்றே தாமதமாய் இன்று!

தொடர்ந்து சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து...

38 கருத்துகள்:

  1. சீனிப்புளியங்காய்தான் சரி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பெயர் ஜி....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  2. கள்ளமில்லாத சிரிப்புடன் சின்னப் பெண் அழகோ அழகு!..

    பன்னீர் சோடா குடித்துப் பழகியவர்கள் அதன் சுவையை மறப்பதேயில்லை!..

    அழகான பதிவு.. வாழ்க நலம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். பனீர் சோடா சுவை மறக்க முடிவதில்லை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  3. முழுமையா இன்டெரெஸ்டா படித்தேன். அந்த அம்மா படமும் அருமையா இருந்தது. பார்த்த உடனேயே, என்ன என்ன விக்கறாங்கன்னு பார்த்தேன். இள கிளிமூக்கு மாங்காய்... ஆஹா... அரிநெல்லிக்காயை நினைத்தேன்.. கேட்டுவிட்டீர்கள். ஜிகர்தண்டா, முருகன் இட்லி கடையில் (சாந்தோம்) சாப்பிட்டேன்.. அவ்வளவு நன்றாக இல்லை.

    இந்த ஊரிலும் கொடுக்காப்புளி உண்டு. ரெண்டு கையளவு (முழுவதும்) கிட்டத்தட்ட 200 ரூ.

    ஆமாம்... நுங்கைப் பற்றி எழுதவில்லையே.. அங்கு வரவில்லையா அல்லது மறந்துவிட்டீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நுங்கு.... மார்க்கெட்டில் கிடைக்கிறது. இன்னமும் சுவைக்கவில்லை. இனிமே தான். பிறகு எழுதுகிறேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    2. நெ.த. ஜிகிர்தண்டா மதுரையில் சாப்பிட்டால் தான் ருசி! :)

      நீக்கு
    3. மதுரையிலும் கூட சில இடங்களில் நன்றாக இருப்பதில்லை கீதாம்மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வெயில் நேரத்தில் லெமன் சோடா போல் சுகமான பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  5. நான் அறிந்த பெயர் கொடுக்காப் புளிதான்.
    லெமன் சோடா போல் சுகமான பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் கொடுக்காப்புளி தான் தெரியும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  6. கோணக்காய் தான் நாங்கள் சொல்வது. சீனிப்புளியை சீனப்புளி என்று படித்துக் கலங்கி, பிறகு சுதாரித்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோணக்காய்.... இது முதல் முறை கேட்கிறேன்!. சீனப்புளி! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோ.சி.பாலன் ஜி!

      நீக்கு
  7. உழைப்பாளர் நாளில் உழைப்பாளர்களை கௌரவித்திருக்கிறீர்கள். பாராட்டுகள்! கொடுக்காப்புளியை இது போல் படத்தில் தான் இனி பார்க்கமுடியும் போல! பதிவை இrசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் தான் பார்க்க முடியும்... உண்மை தான் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  8. கொடுக்காப்புளி, சீமைக்காய்ன்னும் நாங்க சொல்வோம். பாட்டி, பாப்பாவின் முகத்தில் உழைப்பின் அழகு மிளிர்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீமைக்காய்! இது கேள்விப்பட்டதில்லை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  9. ஏனோ கொடுக்காப்புளி எனக்குப் பிடிக்காது! முன்பெல்லாம் சென்னை என்றதும் நினைவுக்கு வருவது பன்னீர் சோடா. அது ஓரிரு முறை சுவைத்திருக்கிறேன். ஜிகர்தண்டாவும் அப்படியே!

    முன்பெல்லாம் அடிக்கடி தலைவலி, வாந்தி வரும். அப்போது சோடாவில், எலுமிச்சம் பழம், உப்பு, இஞ்சி எல்லாம் போட்டுத் தேர்ச்சி சொல்லிக் குடித்ததுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலருக்கு இதன் துவர்ப்பு பிடிப்பதில்லை.

      சோடாவில் எலுமிச்சம் பழம், உப்பு, இஞ்சி சேர்த்து - இப்படிக் குடித்ததில்லை. இஞ்சி சேர்த்து....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. கொடுக்காப்புளி நல்லாயிருக்கு... பன்னீர் சோடா தெரியாது... அந்த குட்டிப் பெண்ணின் படத்தை எப்படி நீங்க வெளியிடலாம்? என் வன்மையான கண்டனங்கள்:) வழக்குப் போடப்போறேன்ன்ன்ன்ன்ன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.... வழக்கு போடப் போறீங்களா... பயமா இருக்கே.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  11. கொடுக்கா புள்ளி அரிநெல்லிகாயை சொல்லி வயிறு எரிய விட்டீங்களே பாஸ் இது உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.... அடுத்த தமிழகப் பயணத்தில் நிச்சயம் சுவைக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  12. கொடுக்காபுளி சிறுவயதில் சாப்பிட்ட நினைவலைகள் மனதில் மோதுகின்ற்ன ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் பயணத்தில் தான் சாப்பிட முடிந்தது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  13. அனுபவி ராஜா! அனுபவி! அந்த மூதாட்டி சொன்னதுபோல் இந்த கொடுக்காப்புளி எல்லாம் இன்னும் சில காலம் கழித்து காண்பதே அரிதாகி விடலாம். (பார்ப்பதற்கு தேளின் கொடுக்கு போல் இருப்பதால் கொடுக்காப்புளி)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவி ராஜா அனுபவி! :) இன்னும் சில காலத்தில் இவை காண்பது அரிது தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  14. எனக்குத் தெரிந்து திருச்சியில் காலணாவுக்கு வாங்கி சாப்பிட்ட பிரப்பம்பழம், கோழிக்குஞ்சு பழம், சின்ன ஈச்சம் பழம், எல்லாம் காணாமல் போய் விட்டன. நாவல் பழம், இலந்தைப்பழம் மட்டும் தற்போது சீசனில் கொஞ்சம் கிடைக்கிறது. என்ன இருந்தாலும் திருச்சி மதுரை போன்று விதம் விதமான காய், பழம், கீரை எங்கும் கிடைப்பதில்லை.
    --
    Jayakumar​​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோழிக்குஞ்சு பழம், பிரப்பம்பழம் சாப்பிட்டதில்லை. ஈச்சம் பழம் சாப்பிட்டதுண்டு. திருச்சியில் கிடைப்பது போல எங்கும் கிடைப்பதில்லை - உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  15. ..கொடுக்காப்புளி...இளம்வயதில் ஏராளமாக தின்றிருக்கிறேன். என்ன, உடனே தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லாவிடில் மூச்சடைக்கும். கிளிகள் இந்த மரத்தை மிகவும் விரும்பும். எனவே மரத்தடியில் கிளி கடித்த கொடுக்காப்புளி நிறைய விழுந்திருக்கும்.அதை விரும்பி உண்போம். இப்போது இம்மரங்கள் இல்லை. எளிதில் காற்றிலும் மழையிலும் சாய்ந்துவிடுவதால் ஆயுள் குறைவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிட்ட உடனே தண்ணீர் - உண்மை தான். ஆனால் தண்ணீர் குடிக்கக் கூடாது என்றும் சிலர் சொல்வார்கள்! கிளி கடித்த கொடுக்காப்புளி! :) அதன் சுவை தனி தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.

      நீக்கு
  16. கொடுக்காப்புளி அவ்வளவாப் பிடிக்காது. அதோடு தொண்டையை அடைக்கும் போன்ற உணர்வும் இருக்கும். அந்தப் பெண் மிக அழகு! ஃபோட்டோவுக்கு ஏற்ற முகம்! வாழ்த்துகள். பன்னீர் சோடா நானும் சென்னை வந்து தான் முதல் முதல் சாப்பிட்டிருக்கேன். அப்போல்லாம் காஞ்சிபுரம் பன்னீர் சோடா என்பது பிரபலம். ஒரு ரூபாய்தான்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃபோட்டோவுக்கு ஏற்ற முகம். உண்மை. முகத்தில் அப்படி ஒரு தெளிவு! குழந்தை நன்றாக இருக்கட்டும்!

      பனிர் சோடா இப்போதெல்லாம் ஆறு முதல் பத்து வரை கிடைக்கிறது. காளி மார்க் சற்று அதிகம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  17. சோடா என்றதும் விஜயவாடா நினைவுக்கு வருகிறது அங்கே சோடாவை உடைத்துக் கொடுக்கும் போது எழும் ஒலி வேறெங்காவது உண்டா தெரியவில்லை மதுரையில் பதிவர் விழாவுக்குப் போனபோதுமுதன் முதலில் ஜிகிர் தண்டா சாப்பிட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஜயவாடாவும் கோலி சோடா உடைக்கும் போது எழும் ஒலியும் வேறெங்கும் கேட்டதில்லை! பள்ளி சமயத்தில் ஒவ்வொரு வருட கோடை விடுமுறைக்கும் அங்கே தான் போவோம்! பெரியம்மா அங்கே தான் இருந்தார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு
  18. ஓ திருவரங்கத்தில்...குடும்பத்துடன் நாட்கள்...என்ஜாய் ஜி...

    கீதா: ஆஹா ஜி..கொடுக்காப் புளி.... அரிநெல்லி... மிகவும் பிடிக்கும்...இங்கும் கிடைக்கிறது..நெல்லி இப்போதில்லை..சீசன் ஓவர்...சரி பட்டர் fly... பார்க்கில் எதுவும் இல்லையா. படமே இல்லையே..ஜி....

    பன்நீர் சோடா..ஜிகிர் தாண்டா பிடிக்கும்..ஆனால் குடிக்க முடியாது..ச்சோ ஸ்வீட். ஆச்சே....சூப்பர்..கலக்குங்க ஜி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசித்ரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....