எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, June 7, 2017

காணாமல் போனேன்….கடந்த 30 நாட்களாக நான் காணாமல் போனேன்! என்னைத் தேடி ஆங்காங்கே பதாகைகள் வைத்தீர்களா? ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் நான் காணாமல் போனது பற்றி செய்திகள் கொடுத்தீர்களா? கண்டு பிடித்துக் கொடுத்தால் பரிசு கிடைக்கும் என தெரிவித்தீர்களா? காவல்துறையில் புகார் கொடுத்தீர்களா? என்பது பற்றி நான் அறியேன்.  ஆனால் எனக்குத் தெரிந்த ஒரே ஒரு விஷயம் நான் காணாமல் போனேன் என்பது மட்டுமே! பூக்களையும் வண்ணத்துப் பூச்சிகளையும் படம் பிடித்து பகிர்ந்து கொண்டபிறகு எனக்கும் சிறகு முளைத்து எங்கோ பறந்து சென்றுவிட்டேன். இத்தனை நாட்களாகக் காணவில்லையே என்று யாருக்கும் பதட்டம் இருந்ததாய் தெரியவில்லை! அப்பாடா கொஞ்சம் நாள் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்துவிட்டீர்கள் போலும்! அது எப்படி உங்களை நிம்மதியாக இருக்க விட முடியுமா! இதோ மீண்டும் வலையுலகிற்கு வந்து சேர்ந்தாயிற்று – தலைநகர் தில்லிக்கும் திரும்பியாயிற்று!
தலைநகர் தில்லி பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியாக மனிதர்களை சூடு போட்டுக் கொண்டிருக்கிறது! ஏதோ, சூடான இரும்பு வாணலியில், கொதிக்கும் எண்ணையில் போட்டு பொரிக்கப்படுவது போன்ற ஒரு உணர்வு! கருட புராணத்தில் இப்படியான தண்டனை – வெயிலில் வறுத்தெடுக்கும் தண்டனை உண்டா என்பதை கருட புராணம் தெரிந்த அம்பியிடம் தான் கேட்க வேண்டும். தலைநகரில் வந்து இறங்கும் போது இரவு மணி 09.45 – அந்த நேரத்தில் கூட 43 டிகிரி சூடு என்று சிவப்பு நிறத்தில் தகித்துக் கொண்டிருந்தது சாலை சந்திப்பில் வைத்திருந்த ஒரு பெரிய Electronic Board! இத்தனை நாள் தில்லியில் இல்லாமல் இருந்தால் நான் உன்னை விட்டு விடுவேனா! “வா…. வா…. உன்னை வறுத்தெடுக்கிறேன் வா” என்று சொல்வது போல இருந்தது அந்த அறிவிப்பு!

வீட்டுக்கு வந்து கதவைத் திறந்தால் பூட்டிக் கிடந்த வீட்டுக்குள் படிந்திருந்த ஒரு இஞ்சு அழுக்கு லேயர் என்னைக் கொஞ்சம் கவனி – அதுவும் இப்போதே கவனி – இல்லைன்னா இன்னிக்கு நீ தூங்கக் கூட முடியாது என்று அடம் பிடித்தது! உடைமைகளை படுக்கையின் மீது வைத்த கையோடு, முதலில் கையில் எடுத்தது துடைப்பம் தான்! அந்த இரவிலும் வீடு முழுவதும் பெருக்கி, தூசி தட்டி, ஒன்றுக்கு இரண்டு முறை துடைத்து முடிப்பதற்குள் வியர்வையில் குளித்திருந்தேன்! என்றாலும் தண்ணீர்லும் குளிக்கத்தானே வேண்டும்! பைப்பைத் திறந்தால் ஆவி பறக்கும் தண்ணீர் “வா வாத்யாரே, இந்த சூடு போதுமா, எப்படி வசதி?” என்று எகத்தாளமாக கேள்வி கேட்க! வேறு வழியில்லை! இந்த வெந்நீரில் தான் குளித்தாக வேண்டும்! குளிக்காமல் படுக்கவும் நிச்சயம் முடியாது!

இந்த மாதிரி வெந்நீராக வரும் வசதி குளிர்காலத்தில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இப்போது குளிர்காலம் போன்று தண்ணீர் ஜில்லென்று இருந்தால் இரவு முழுவதும் குளிக்கலாமே! இயற்கை நம்மை இப்படி வஞ்சிக்கிறதே! என மனதில் நினைக்கும்போதே “நானா உன்னை வஞ்சிக்கிறேன்! இதற்குக் காரணம் உங்கள் மனித இனம் அல்லவா? என்று வெந்நீராக வந்த தண்ணீர் மேலே விழுந்து தன் எரிச்சலை என் உடல் மீது காட்டியது! நல்ல வேளை கொதிநிலையில் இல்லை! இருந்திருந்தால் தோல் வழட்டிக்கொண்டு வந்திருக்கும்! ஆனாலும் எனது கருப்புத் தோல் கூட, கொஞ்சம் சிவந்து தான் போகிறது!

சரி இயற்கை தான் இப்படி படுத்துகிறது என நினைத்தால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அலுவலகம் செல்ல, குளிர்ந்த சூழல் என்றாலும் காத்திருக்கும் வேலைகளும், ஆடிட் பார்ட்டிகளின் ஆரவாரங்களும் பயமுறுத்துகிறது! எனக்காகவே சில சிக்கலான வேலைகளை வைத்துவிட்டு சக பணியாளர்கள் இரண்டு பேர் விடுப்பில் சென்றிருக்கிறார்கள்! “எவ்வளவு வேலை இருந்தாலும் எல்லாம் இவன் பார்த்து முடிச்சுடுவாண்டா… இவன் ரொம்ப நல்லவன்….” என்று புகழாரம் வேறு – கிரி பட வடிவேலு மாதிரி மாங்கு மாங்கு என தலைநகர் வந்ததிலிருந்தே, ”நானும் வலிக்காத மாதிரியே” வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்!அதெல்லாம் சரி, இவ்வளவு நாள் காணாம போனயே, இந்த சமயத்துல ஒரு நாள் கூடவா பதிவு எழுத நேரம் இல்லையா? இல்லை விஷயம் தான் இல்லையா?  எழுத நேரமும் இருந்தது, விஷயமும் நிறையவே இருந்தது! ஆனால் எழுதத்தான் இல்லை! இனிமே கொஞ்சம் கொஞ்சமா எழுதலாம்! நீங்க எங்க போயிட போறீங்க! நானும் எங்க போகப் போறேன்! சுத்தி சுத்தி இங்கே தானே இருக்கணும்! இத்தனை நாள் எழுதிட்டு இருந்த வலைப்பூவை கொஞ்சம் தூசி தட்டி இன்னிலேருந்து ஆரம்பிச்சட்டேன்! அதே மாதிரி யாருடைய பதிவுகளும் படிக்கலை! அதுவும் படிக்க ஆரம்பிக்கணும்! ஆரம்பிச்சுடலாம்!

வந்துட்டேன்! வாங்க எழுதலாம்! படிக்கலாம்!

தொடர்ந்து ச[சி]ந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

42 comments:

 1. நீங்கள் ஏற்கெனவே ஒரு பதிவில் "விடுப்பு" கேட்டிருந்ததாய் ஞாபகம். அதுதான் காரணம் என்றிருந்தது விட்டேன்! ஆனாலும் காணோமே என்று நினைத்தேன். சாதாரண விடுப்புதானே? உடல்நிலை எல்லாம் ஓகேதானே? வாங்க.. வாங்க... டெல்லி வெயில் பற்றிப் படித்தபோது உங்கள் நினைவு வந்தது. சென்னையும் வாட்டியது. நேற்றிரவு பெய்த மழை சற்று சாந்தப்படுத்தியிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. விடுப்பு கேட்கவில்லை! உடல்நிலை பூரண நலம்! பதிவுலகம் பக்கம் வரவில்லை அவ்வளவு தான்!

   Delhi badly needs good rain! வாட்டி எடுக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  2. வணக்கம் ஜி
   நான் பலமுறை நினைத்துண்டு ஆள் டூர் போயிருப்பார் என்று நினைத்துக் கொண்டேன் ஆனால் பதிவுகளுக்கான விசயங்களோடு வருவார் என்று மட்டும் நிச்சயமாக தெரியும்.
   நானும், வில்லங்கத்தாரும் ஒருமுறை பேசிக்கொண்டோம்.

   ரைட்டு இனி தொடங்கட்டும் எழுத்து வீச்சு வாழ்த்துகள் ஜி

   Delete
  3. எங்கேயும் டூர் போகவில்லை! தமிழகம் வந்திருந்தேன் - அதன் பிறகு சில வேலைகள்/நிகழ்வுகள்! இப்போது தலைநகர் திரும்பியாயிற்று!

   வில்லங்கத்தாரும் நீங்களும் என்னைப் பற்றி பேசிக் கொண்டீர்கள் என்று தெரிந்து மகிழ்ச்சி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 2. வாருங்கள் ஐயா வாருங்கள்
  ஒரு மாத விடுப்பு எடுத்துக் கொண்ட புத்துணர்ச்சியுடன்
  புதுப்பொலிவுடன் வாருங்கள்

  ReplyDelete
  Replies
  1. ஒரு மாத விடுப்பு - ஆமாம்! தொடர்ந்து சந்திப்போம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. TM 4வருக வருக..... பதிவுலக்கு வாராமல் இருந்தினால் ஏற்பட்டஅனுபவங்களை எழுதுங்கள்

  ReplyDelete
  Replies
  1. பதிவுலகுக்கு வாராமல் இருந்ததில் கிடைத்த அனுபவம் - எழுதிட்டா போச்சு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 4. வாருங்கள் தலைவரே... அசத்துங்கள்...

  ReplyDelete
  Replies
  1. அசத்துங்கள்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 5. ரோஷிணி பாப்பாவோடு மட்டும் இருக்கனும்ன்னு முடிவு செஞ்சிருப்பீங்கன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். சரிதானே?!

  ReplyDelete
  Replies
  1. அதுவும் தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 6. நீங்கள் வேறெங்கும் சுற்றுலா சென்றிருப்பீர்கள் என்று நினைத்திருந்தேன்..

  கோடை வெயில் வறுவல் எல்லாம் குவைத்திற்கு வந்த பிறகு சர்வ சாதாரணமாகிவிட்டது..

  ஆனாலும் - வருடத்திற்கு வருடம் அனல் அதிகரிக்கின்றது..

  ReplyDelete
  Replies
  1. நவம்பர் மாதத்திற்குப் பிறகு தில்லியை விட்டு எங்கேயும் செல்லவில்லை! செல்ல முடியவும் இல்லை!

   கோடை வெயில் அங்கேயும் அதிகம் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 7. பதிவு எழுதும் மூட் இல்லையோ என்றே நினைத்தேன் என்ன பரவாயில்லை நாங்கள் எங்கு போகப் போகிறோம் நீங்களும்தான் எங்கே போகப் போகிறீர்கள் மீண்டு வருவதற்கு வெல்கம்

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் விட்டு விலகி இருப்பதும் நன்றாகவே இருக்கிறது! பதிவு எழுதும் மூட்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 8. தமிழகம் வந்து குடும்பத்தினர், உற்றார், உறவினர்களுடன் களித்து இருப்பீர்கள் அதனால் எழுதவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. அதுவும் தான்... கொஞ்சம் விலகியும் இருக்கலாம் என்று தோன்றியது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 9. வாங்க வாங்க!தொடங்கட்டும் சுவையான எழுத்து

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 10. நான் தவறாமல் படிக்கும் பதிவுகளில் உங்களுடையதும் ஒன்று. காணவில்லையே என்று தேடினேன். மீண்டும் வருக! வருக!.

  ReplyDelete
  Replies
  1. பதிவுகள் தொடர்ந்து படிப்பதில் மகிழ்ச்சி. காணவில்லை என்று தேடினீர்கள் என்று தெரிந்து மனது குதூகலம் கொண்டது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   Delete
 11. டெல்லி வெயில் பற்றி கொஞ்சம் தெரியும். குவாலியரில் நான்கு வருடங்கள் இருந்திருக்கிறேன். தற்சமயம் குற்றாலம் அருகில் குளு குளு சீசன் சாரலுடன் வாழ்ந்து வருகிறேன். தங்களின் ஒரு மாத நிகழ்வினை பதிவுகள் மூலம் எதிர்பார்க்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. ஆஹா குற்றாலம் குளுகுளு சீசனில் சாரலுடன் இருக்கீங்களா! ஆஹா.... கொஞ்சம் பொறாமையா இருக்கு! :) வரணும் அங்கே. பார்க்கலாம் எப்ப நேரம் கிடைக்குதுன்னு!

   குவாலியர் - சூடும் அதிகமாகத் தான் இருக்கும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பொன்சந்தர் ஜி!

   Delete
 12. தாங்கள் திருச்சி வந்த விஷயம்
  பதிவுலகில் எல்லோருக்கும் தெரிந்ததுதான்
  அலுவலகம் போல பதிவுலகத் தொந்தரவும்
  இல்லாமல் கொஞ்சம் நிம்மதியாக இருக்கட்டும்
  என்றுதான் நாங்கள் உங்களைக்
  கண்டும் காணாததுபோல் விட்டுவைத்திருந்தோம்
  சூடான பதிவுடனே தொடங்கியது அருமை
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் நிம்மதியாக - இல்லை - நிறையவே நிம்மதியாக இருந்தேன் - அலுவலகத் தொல்லைகளிலிருந்து விடுபட்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 13. வாங்கோ வாங்கோ சூடாக இருக்கும் இடத்தில் இருக்கும் உங்களைக் குளிர்விக்க 12 ஆவது வோட்டுப் போட்டு வரவேற்கிறேன்:).

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... த.ம. 12-ஆம் வாக்கு! மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 14. மீண்டும் வருக வருக என்று வரவேற்கிறேன்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.....

   Delete
 15. ஆகா வாங்க....ஊர் சுத்தி பார்க்கணும்..

  ReplyDelete
  Replies
  1. ஊர் சுத்தி பார்க்கணும்! விரைவில் அடுத்த தொடர் ஆரம்பிக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 16. இது நேற்று வந்த பதிவோ...நாங்கள் நேற்று வலைப்பக்கம் வரவில்லை. உங்களுக்கு
  என்னாச்சு காணவில்லை என்று மெயில் ஒன்று எழுதி ட்ராஃப்டில் போட்டு அதை மீண்டும் இன்று அனுப்ப எடுத்தால் உங்களது பதிவு ஒன்று க்வாட்டர் வந்திருந்தது. இருந்தாலும் மெயிலையும் தட்டிவிட்டு இங்கு வந்தால் காணாமல் போனேன் பதிவு!!!! மீண்டும் வந்தாயிற்று..வாங்க வாங்க...

  கேரளத்தில் நல்ல மழை...அங்கு தகிக்கிறது என்றால் இங்கு வந்து செல்லலாமே..--துளசி

  கீதா: இங்கும் நல்ல வெயில்தான் ஜி. நேற்று இன்று கொஞ்சம் பரவாயில்லை மேக மூட்டம். அங்கும் கொஞ்சம் மழை பெய்தது என்று தங்கை சொன்னாள் ஆனால் வெயிலும் அடிக்கிறது என்றாள்.

  இனி உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி.

   கேரளம் வரவேண்டும். எப்போது என்பது என் கையில் இல்லை!

   Delete
 17. வாங்க வாங்க. ஒரு இடைவெளியும் நல்லதுதான். அதுவும் பெரும்பாலும் குடும்பத்தோடு இருக்க நேர்ந்தால் அதுவும் சிறப்பானதுதான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   Delete
 18. வருக! வருக!! சுவையான பதிவுகளைத் தருக !!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 19. கொஞ்ச நாட்கள் வரலையா? எனக்கு அது கூடத் தெரியலை! :( என் வேலையிலேயே முழுகி இருந்து விட்டேன். உடல் நலம் தானே! மீள் வருகைக்கும், பதிவுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. உடலும் உள்ளமும் நலமே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....