எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, July 10, 2017

ஏழு கடல், ஏழு மலை தாண்டி – எம்டி என்.எல்ஏழு கடல், ஏழு மலை தாண்டி....
படம்: இணையத்திலிருந்து.....

சிறு வயதில் கேட்ட/படித்த மாயாஜாலக் கதைகளில் அரக்கன் தூக்கிக் கொண்டு போன இளவரசியைக் காப்பாற்ற யாருமே இல்லையா என நாட்டு மன்னர் கதறியபடியே “இளவரசியை அரக்கனிடமிருந்து காப்பாற்றி யார் அழைத்து வருகிறாரோ, அவருக்கு தனது தேசத்தில் பாதியைத் தந்து, தனது ஆசை மகளான இளவரசியையும் திருமணம் செய்து தருகிறேன்” என்று தண்டோரா போடச் செய்வார். தன் மீது அதீத நம்பிக்கை கொண்ட இளைஞன் ஒருவன் ”இதோ வந்தேன் மஹாராஜா”, என குதித்துக் கொண்டு புறப்படுவான் – அவனுக்குத் தெரியாது அரக்கனை அழிப்பது அத்தனை சுலபமல்ல என்பது.


ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, பயங்கர விலங்குகளிலிருந்தும் தப்பித்து, பற்பல இன்னல்களைத் தாண்டிச் சென்றால் ஒரு கூண்டுக்கிளியின் உடலில் இருக்கும் அரக்கனின் உயிரை, கிளியைக் கொன்று தான் எடுக்க முடியும் என்பது பிறகு தான் தெரியவரும். விற்போரோ, மற்போரோ அல்லது கத்திச் சண்டையோ போட்டு அரக்கனை அழிக்க முடியாது. மதியூகமும் அலைச்சலும் நிச்சயம் உண்டு. பின்ன சும்மாவா கிடைக்கும் அரசில் பாதியும், அழகிய இளவரசியும்!

சமீபத்தில் இப்படி ஏழு கடல், ஏழு மலை தாண்டி அரக்கனின் உயிரை எடுப்பது போன்ற ஒரு சாகசத்தினைச் செய்ய வேண்டியிருந்தது எனக்கு! உடனே யார் அந்த இளவரசி, யார் அந்த மன்னன் என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது! ஏற்கனவே வீட்டில் மஹாராணியாரும், இளவரசியும் இருக்க, புதிதாக ஒரு இளவரசி உனக்கு வேண்டியிருக்கிறதா என போர்க்கொடி தூக்கக்கூடாது! பொறாமை கொள்ளக் கூடாது. முழுசா படிச்சுட்டு அப்புறம் மனதில் உள்ளதைச் சொல்லணும் சரியா!

சில பல வருடங்களாகவே தலைநகர் தில்லியில் இருக்கும் நான் BSNL-உடைய ஒன்று விட்ட தம்பியான MTNL [Empty NL என்று கூடச் சொல்லலாம்] அளிக்கும் தொலைபேசி மற்றும் இணைய சேவையைத் தான் பயன்படுத்தி வந்தேன் – அந்த சேவை என்னையும் ரொம்பவே படுத்தியது என்றாலும்…. 2 MBPS Speed, 100 கால்கள், Unlimited Browsing எனச் சொன்னாலும், பெரும்பாலான நேரங்களில் 512 KBPS Speed தான் இருக்கும். பல நேரங்களில் வேலை செய்யாது! மாதத்தில் ஒரு முறையாவது Complaint செய்தே ஆக வேண்டும் – எங்களை நீங்க மறக்கக் கூடாது இல்லையா என்று அதன் நிர்வாகிகளும், ஊழியர்களும் கேட்டாலும் கேட்கலாம்!

I am dead......
படம்: இணையத்திலிருந்து.....


இப்படியே மாதத்திற்கு ஒரு முறை உயிர் விடும் தொலைபேசி இந்த முறை மொத்தமாக படுத்துவிட்டது! “இனிமேல என்னால முடியாது! நீ உன்னால ஆனத பார்த்துக்கோ!”. வழக்கம் போல எம்டி.என்.எல் இயந்திரப் பெண்மணியின் குரல் சொல்லும் எண்களை அழுத்தி, அழுத்தி, விரல் தேய்ந்து போக அழுத்தி தொலைபேசி உயிர்விட்டதை பதிவு செய்தேன். வெள்ளிக்கிழமை இரவு பதிவு செய்து, சனிக்கிழமை முழுவதும், படிதாண்டா பத்தனன் போல வீட்டிலேயே காத்திருந்தேன் – ஈ காக்காய் கூட எம்டி.என்.எல்-லிருந்து வரவில்லை. மாலையில் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி – உங்கள் பிரச்சனை தீர்க்கப்பட்டது! வாழ்த்துகள் என்று! பரவாயில்லையே வீட்டுக்கு வராமலேயே சரி செய்து விட்டார்கள் போலும் என தொலைபேசியை எடுத்தால் நள்ளிரவு நிசப்தம்!

திரும்பத் திரும்ப நான் Complaint செய்வதும், அவர்கள் சரி செய்துவிட்டோம் என குறுஞ்செய்தி அனுப்புவதும் தொடர்ந்தது. நேரடியாக பேசலாம் என தொடர்புகொண்டால் எடுத்துப் பேச ஆளே வரவில்லை.  வேறு வழியில்லை மொத்தமாக தொலைபேசி சேவையே வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன். அது அத்தனை சுலபமான வேலையாக இருக்கவில்லை. ஏழுகடல், ஏழு மலை தாண்டுவதை விடக் கடினமான விஷயமாகவே இருந்தது.  அவர்கள் தளத்தில் இருந்த விண்ணப்பத்தினை தரவிறக்கம் செய்து பார்த்தால் – “ஏன் எங்கள் சேவையை வேண்டாம் எனச் சொல்கிறீர்கள்” என்ற காரணம் கேட்டிருந்தார்கள் – “எங்கள் சேவையில் குறை கண்டீரா?, “உங்களால் காசு கட்ட முடியவில்லையா?” “வெளியூருக்குப் போகிறீர்களா?” என்றெல்லாம் கேள்விகள்!

விண்ணப்பத்தினை நிரப்பி படேல் சௌக் பகுதியில் இருக்கும் அலுவலகத்திற்கு காலை பத்தரை மணிக்குச் சென்றால், அங்கே விண்ணப்பத்தில் கையொப்பம் இடும் அதிகாரி வரவில்லை. “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி” என்று பாடாத குறை! நல்லவேளையாகவே என்னைப் போலவே எம்டி.என்.எல். சேவையில் நொந்திருந்த நண்பர் ஒருவரும் அவரது இணைப்பினை திருப்பிக் கொடுக்க வந்திருந்தார். இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனது. அரை மணி நேரத்திற்குப் பிறகு ஒரு அதிகாரி வந்தார் – ஆனால் அவர் நாங்கள் பார்க்க வேண்டிய அதிகாரி இல்லையாம். காசு கட்டிவிட்டோமா என்பதைப் பார்த்து மட்டும் சொல்கிறேன் எனச் சொல்லி, மற்ற அதிகாரியின் வருகைக்குக் காத்திருக்கச் சொன்னார். மேலும் பதினைந்து நிமிடம் போனது! வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தோம்! வந்தபாடில்லை அதிகாரி! போனால் போகிறது என பெரிய மனது செய்து கையொப்பொம் செய்து கொடுத்தார்.  ஒரு மலை தாண்டியாயிற்று!

அடுத்ததாக, அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இராமகிருஷ்ண ஆஸ்ரமம் பகுதிக்கு அடுத்த பயணம். அங்கே இருக்கும் அலுவலர்களிடம் தொலைபேசி, Modem, Separator, Connector, Splitter என இருக்கும் அத்தனை உபகரணங்களையும் கொடுத்து அங்கிருந்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு Screw இல்லை என்றால் கூட ரசீது தரமாட்டார்கள்! ஒரு தாளில் இவை எல்லாம் பெற்றுக்கொண்டோம் என கையால் எழுதி, கையொப்பம் இட்டு, சீல் வைத்துக் கொடுப்பார். இரண்டு காகிதங்களும் [விண்ணப்பம், ரசீது] கிடைத்துவிட்டால் இரண்டாம் மலை தாண்டியாயிற்று! அடுத்த படையெடுப்பு இன்னும் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு இடத்திற்கு!

அடுத்ததாக Janpath சாலையில் இருக்கும் Eastern Court Building-ல் இருக்கும் எம்டி.என்.எல். அலுவலத்தில் 107-ஆம் எண் உள்ள அறைக்குச் செல்ல வேண்டும்! அங்கே செல்லும்போது மதியம் 12 மணி. நேரத்திற்குத் தகுந்தாற்போல அங்கே இருந்தது ஒரு சர்தார்ஜி! அப்போது தான் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார் போலும்! தன் அறையில் ஊதுவத்தி ஏற்றி வைத்துக் கொண்டிருந்தார். எங்களிடம் இருந்த காகிதங்களைக் கொடுக்க, கடுப்புடன் மேஜை மேல் வீசி எறிந்து, “போ, போ, 118-ஆம் எண் அறையில் எழுதி வாங்கிக் கொண்டு வா!” என்று எரிந்து விழுந்தார்.  நமக்கு நேரம் சரியில்லை! பன்னிரெண்டு மணியாகும்போது சர்தார்ஜியுடன் வாக்குவாதம் செய்யும் பொறுமை எனக்கில்லை!

அங்கே இருந்த அலுவலர் கிழக்கும் மேற்கும் பார்த்து, பிறகு அதே அறையில் இருந்த பெண்மணியிடம் போய் காகிகதங்களைக் கொடுக்கச் சொல்ல, அங்கே சென்றால் அந்தப் பெண்மணி ஒரு பழைய கணினியினுடன் போராடிக் கொண்டிருந்தார். நான் கொடுத்த காகிதங்களை வேண்டாவெறுப்புடன் வாங்கி Keyboard கதறக் கதற தட்டச்சினார். அது போம்மா, நான் இந்த விளையாட்டுக்கு வரலை எனச் சொல்ல, அடுத்த கணினி – அங்கே சென்று, மீண்டும் சுத்தி கொண்டு அடிப்பது போன்ற பாவத்தில் தட்ட, பழையகால Dot Matrix Printer. எழுத்துக்களே தெரியாத, ஒரு Bill-ஐ சத்தத்துடன் துப்ப, அதைக் கிழித்து என்னிடம் கொடுத்து, கீழே போய் பணம் கட்டிவிட்டு வரச் சொன்னார்!

“வேணாம், விட்டுடு, அளுதுடுவேன்” என்று கைப்புள்ள வடிவேலு மாதிரி கதறத் தோன்றியது! அடுத்து பணம் கட்டும் இடத்தில் அரை மணி நேரம் – ஆதாம் ஏவாள் காலத்து மனிதர் [ட்ரெஸ் போட்டு இல்லைன்னு நினைக்காதீங்க!] மாதிரி ஒருவர் கணினியில் ஒவ்வொரு விரலாகப் பயன்படுத்தி தட்டச்சு செய்து பணத்தை வாங்கிக் கொண்டிருந்தார்! ஒரு ஆள் நகர்வதற்கு குறைந்தது ஏழு நிமிடங்கள்! ஒரு வழியாக பணத்தைக் கட்டி அதற்கான ரசீது பெற்றுக் கொண்டு மீண்டும் 118-ஆம் எண் அறைக்குச் சென்று அந்தப் பெண்மணியிடம் காண்பிக்க, பேனாவைத் தேடி எடுத்து, ”இவரிடம் பிடுங்க இனி ஏதுமில்லை” என எழுதிக்கொடுத்து, அதிகாரியிடம் கையொப்பம் வாங்கிக் கொள் என்றார். அதிகாரி கையெழுத்துப் போட, அதை எடுத்துக் கொண்டு மீண்டும் 107-ஆம் எண் அறையில் சர்தாரிடம் கொடுக்கச் சென்றோம்.  அதை வாங்கி மேஜையின் ஒரு ஓரமாக போட்டு விட்டார் – குப்பை போல! இதற்குத் தான் இத்தனை ஓட்டமா….. என்று தோன்றியது எனக்கு!

எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு அலுவலகம் செல்லும்போது மதியம் 1 மணி – அரை நாள் விடுப்பு கொடுக்க வேண்டியதாயிற்று! இந்த Single Window, Single Window என்று சொல்கிறார்களே அது என்ன என்பதை இன்னும் இந்த எம்டி.என்.எல். தெரிந்து கொள்ளவே இல்லை! வாடிக்கையாளரை இப்படியா அலைய விடுவது…..  இனிமேல் யாராவது எம்டி.என்.எல். என்று சொல்லிக்கொண்டு வந்தால் கடித்துக் குதறிவிடுவது என்ற எண்ணத்தோடு இருக்கிறேன்! தமிழகத்தில் இருக்கும் பி.எஸ்.என்.எல்- சேவையும் இப்படித்தான் இருக்கிறது! அடுத்த படையெடுப்பு பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்குதான்! போங்கடா நீங்களும் உங்க சேவையும் எனத் தோன்றுகிறது!

இணையத்தொடர்பு இல்லாததால் பல நாட்கள் இணையம் பக்கமே வர இயலவில்லை. என்னதான் ”ஜியோ மேரே லால்!” இருந்தது என்றாலும், அதில் பதிவுகள் எழுதுவதோ, படிப்பதோ பிடிக்கவில்லை. இப்போது கேபிள் மூலம் இணையத்தொடர்பு வாங்கிக் கொண்டு சுகமாக இருக்கிறது! நல்ல வேகம். படங்களும், காணொளிகளும் அதிவேகமாக தரவேற்றம், தரவிறக்கம் செய்ய முடிகிறது! அதனால் பதிவுகளும் தினம் தினம் வந்து கொண்டிருக்கிறது. மக்களுக்குச் சேவை தரும் அரசு நிறுவனங்கள் இப்படி இருப்பதால் தான் தனியார் வசம் எல்லா துறைகளும் சென்று கொண்டிருப்பது தெரிகிறது. காசு மட்டும் வேண்டும், வேலை செய்ய மாட்டோம் என்று சொன்னால் எப்படி… எழுதக்கூடாது என நினைத்தாலும் எழுத வேண்டியிருக்கிறது!

ஒரு Telephone Surrender செய்ய இத்தனை அக்கப்போரா!

நாளை மீண்டும் சந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


46 comments:

 1. ஏழு கடல் தாண்டி... ஏழு மலை தாண்டி.. இந்த கான்செப்ட் வைத்துதான் ஷாஓலின் கதைகள் கூட வந்தன இல்லையா!

  கீ போர்ட் கதறக் கதற... ஹா..... ஹா.... ஹா...!

  பி எஸ் என் எல் இவ்வளவு மோசம் இல்லை என்றே தோன்றுகிறது. உங்களுக்கு ஆனாலும் அலைச்சல்தான்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. பழையபடி எல்லாயே கேபிளில் வந்தால் நல்லதுதான் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 3. ஏழுகடல் ஏழு மலை தாண்டுவதெல்லாம் கூட எளிதாய் செய்துவிடலாம் போல என்று தோன்றுகிறது உங்கள் பதிவு பார்த்து. எப்படியெல்லாம் அலையவைக்கிறார்கள். நுகர்வோர் சேவை என்பதன் பொருள் பலருக்கும் என்னவென்றே தெரியாமல் இருப்பதுதான் கொடுமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 4. எனக்கும் இத்தகைய அனுபவம் உண்டு ஐயா
  எனவே இப்பொழுதெல்லாம் Prepaid Modem தான் உபயோகிக்கிறேன்
  பிடிக்கவில்லை எனில் தூக்கி எறிந்துவிட்டு, அடுத்ததை வாங்கிக் கொள்கின்றேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 5. ஆறு ஆண்டுகளுக்கு முன் ரிலையன்ஸ்காரனிடம் எனது இணைப்பை
  ஒப்படைத்து விட்டு முன் பணத்தையும் திரும்பப்பெற வேண்டியிருந்தது.. என்னை விட்டு ஓடிப் போக முடியுமா - என்றபடிக்கு கேள்விகள் ஆயிரம்..

  எனக்கிருந்த அவசரம்.. சில தினங்களுக்குள் குவைத்திற்குப் புறப்பட்டாக வேண்டும்..

  அத்துடன் போயிற்று - முன்பணம்..

  ReplyDelete
  Replies
  1. அத்துடன் போயிற்று முன்பணம்! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 6. அட ராமா... பாரா பஜேக்கு யாராவது சர்தாரைப் பார்க்கலாமா? ஊஹூம் :-)

  கொடுமை கொடுமை கொடுமை! :-(

  ReplyDelete
  Replies
  1. கொடுமையே தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 7. வேண்டாம் என சொல்லவா இத்தனைப் பாடு!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 8. முகநூலில் பகிர்கிறேன் ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 9. நானும் இந்தத் தொந்தரவில் பாதி அனுபவித்தேன்! தற்சமயம் கேபிளில்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

   Delete
 10. ஏழு கடல் ஏழு மலை தாண்டுன ரகசியம் இதானா?! நானும் என்னமோ ஏதோன்னு நினைச்சுட்டேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 11. இணைப்பு பெறுவதிலும் சிரமம், திரும்ப ஒப்படைப்பதிலும் சிரமம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 13. அப்ப...ரொம்ப கஷ்டம் தான்..

  அதுவும் அரசு இயந்திரத்தில் மிக மிக மோசம்..

  ஆனால் இங்க உள்ள பிரைவேட் இணைப்புகள் எல்லாம் போன்லே பேசி, மெயில் செஞ்சு கொஞ்சம் எளிதான சேவையாகவே உள்ளது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 14. என்னுடைய ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அனுபவத்தையும் மிஞ்சிவிடும் போலிருக்கிறதே உங்கள் 'தொலைபேசியைத் திரும்பக்கொடுத்துவிடும்' அனுபவம். எனக்கு அந்த வங்கியின் கணக்கை முடிப்பதற்கு ஐ.சி.ஐ.சி.ஐ போடும் ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள், ஐ.சி.ஐ.சி.ஐ என்றாலே எனக்கு அலர்ஜியாகிவிட்டது. த ம.

  ReplyDelete
  Replies
  1. ஐ.சி.ஐ.சி.ஐ. - சோகம். ரொம்பவே படுத்துகிறார்கள் - எனக்கு அங்கே அலுவலகம் மூலமாக தொடர்பு இருப்பதால் அவர்கள் படுத்துவது தெரியும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 15. எப்படியோ ஏழுகடல் தாண்டி ஏழு மலை தாண்டி Telephone Surrender செய்து விட்டீர்களே!
  நாங்கள் இணைப்பு வாங்க (பி.எஸ்.என்.எல்-) அலையாய் அலைந்தோம், 20 நாட்கள் அழைய விட்டு இணைப்பு தந்தார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 16. பெங்களூரில் பிஎஸ் என் எல் சேவை நன்றாக இருக்கிறதுஎன்றே சொல்ல வேண்டும் குறைகளை பதிவு செய்ஹு விட்ட்டல் ஒரே நாளில் சரிசெய்து சரியாயிற்றா சரியாயிற்றா என்று கேட்டெ கொல்கிறார்கள் ஒரு முறை சாலயில் ஏதோ குழி தோண்ட அவர்களது கேபிள்கள் பழுது பட தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகள் ஒரு வாரகாலம்வரவில்லை.போய் புகார் கொடுத்ததற்கு அதற்கான கழிவை பில்லில் கொடுத்தார்கள்......!

  ReplyDelete
  Replies
  1. சார் பரவாயில்லையே.... சேவை இல்லாதப்ப கழித்திருக்கிறார்களே....இங்கு சென்னையில் பல நாட்கள் சேவை போய்விடுகிறது..இதோ இன்று கூட...ஆனால் பில் அப்படியேதான்

   கீதா

   Delete
  2. பரவாயில்லையே பெங்களூரு பி.எஸ்.என்.எல்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
  3. அதானே கீதா ஜி. இங்கே எம்டி.என்.எல். பத்து நாளா வேலை பண்ணலை - ஆனா ஒரு பைசா குறைக்கல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 17. ஏதோ ஒரு திகில் படம் பார்ப்பதுபோல் இருந்தது உங்கள் பதிவு. பேசாமல் ஒரு நாவல் எழுதுங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. கதையே தகறாறு! இதில் நாவல் எங்கே ஐயா. :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஐயா.

   Delete
 18. எட்டு ஆண்டுகளுக்குமுன் நீங்கள் எழுதிய கர்நாடகா மெஸ் பதிவைப் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா தன்யனானேன்! நானும் ஒரு முறை மீண்டும் வாசித்தேன் - உங்கள் கருத்து பார்த்த பிறகு! இன்னும் கூட எழுதி இருக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஐயா.

   Delete
 19. நானா இங்கு BSNL இல் 2006 இல் இணைய சேவையைப் பெற்றேன். நல்ல வேளையாக Modem த்தை பணம் கொடுத்து அவர்களிடமே வாங்கிவிட்டேன். தங்களுக்கு ஏற்பட்டதுபோலவே எனக்கு அடிக்கடி தடங்கல் ஏற்பட்டது. புகார் செய்து, செய்து அலுத்துவிட்டதால் சென்ற மாதம் ACT Fibre Net இணைப்புக்கு மாறிவிட்டேன்.

  இது போன்று செய்தால் பொது மக்கள் எல்லோரும் தாங்களாகவே தனியார் சேவைக்கு மாறிவிடுவார்கள் என்பது அவர்களது திட்டமோ என்னவோ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 20. வெங்கட் ஜி உங்கள் அநுபவம் ரொம்ப... வேதனை.... அதுவும் தலை நகரில் இப்படியா.... நானும் கிட்டத்தட்ட உங்கள் அனுபவத்தில் முதல் மலையில் இருக்கிறேன்!! ஹஹஹ.....பி எஸ் என் எல் நன்றாக இருக்கிறதே..இருந்தது... என்று நான் ரொம்ப பெருமைபட்டேன்...ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி போய்விடுகிறது இணையம்.தினமும் இரவு 9 மணிக்கு தூங்கப் போய்விடும்.....மறுநாள் காலை 5 மணி அளவில் எழுந்திருக்கும்....பல சமயங்களில் பல தினங்கள் படுத்துவிடும் . சின்ன மழைத்துளி, காற்று பட்டால் போதும் உடம்புக்கு வந்துவிடும்.இதோ இன்று கூட இணையம் இல்லை. புகார் கொடுத்து காத்திருந்தேன். வந்ததும் உங்கள் பதிவிக்கு கருத்து போட....இது வரை வரவில்லை...மொபைலில் அடிக்கிறேன்.....யோசிக்கிறோம்.இதை தொடர்வதா இல்லை வேறு சேவை பார்க்கணுமா என்று....எங்கள் ஏரியாவுக்கு கேபிள் சேவை இல்லை....நாளை சரியாகிறதா பார்ப்போம்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தலைநகரில் இப்படி பல படுத்தல்கள் உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 21. நாங்களும் இப்போத் தனியார் இணைய சேவைக்கு மாறி இருக்கோம். பிஎஸ் என் எல் மோடத்தின் மூலம் என்னோட அலைபேசியில் இணைப்புக் கொடுக்க முடியவில்லை. கணினி மருத்துவர் வந்து முயற்சித்துப் பார்த்துட்டு மோடத்தை மாத்தணும்னு சொன்னார். பிஎஸ் என் எல்லிடம் மோடம் இல்லை! ஆகவே அந்த இணைப்பை அவங்க கிட்டே திருப்பிக் கொடுத்தோம். இத்தனை கஷ்டம் எல்லாம் படலை! இப்போத் தனியார் சேவை தான். ஆனால் அவங்க மோடம் ஐந்து மீட்டர் தூரம் வரை தான் எடுக்கும் என்று இப்போத் தான் சொல்கிறார்கள். இணையம் போயிட்டுப் போயிட்டுத் தான் வருது. புகார் கொடுத்தால் யாருமே புகார் சொல்வதில்லை! நீங்க மட்டும் தான் சொல்றீங்க! இந்த மோடம் ஐந்து மீட்டருக்குள் தான் எடுக்கும். நீங்க கணினியை மோடத்தின் பக்கம் வைச்சுக்கோங்க, இல்லைனா இன்னொரு மோடம் வாங்கி இங்கே வரவேற்பறையில் போட்டுக்கோங்கனு சொல்லிட்டாங்க! ஆகத் தனியாரும் ஒண்ணும் சுகமில்லை. நான் ஜியோ பக்கமெல்லாம் போகலை! :))))

  ReplyDelete
  Replies
  1. ஐந்து மீட்டர் தூரம் வரை தான் எடுக்கும்! :) நாங்க இதெல்லாம் அப்புறமாத்தான் சொல்வோம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 22. ஆனால் பிஎஸ் என் எல்லின் வீச்சு தனியார் இணைய சேவையில் வராது. நீங்க சொல்றாப்போல் முனைந்து வேலை செய்ய வேண்டும். இல்லைனா இப்படித் தான் புகார்கள் வரும் எல்லோரும் இணைய இணைப்பைத் திரும்பக் கொடுப்பார்கள். :( என் ஓட்டு பிஎஸ் என் எல்லுக்கே!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஓட்டு பி.எஸ்.என்.எல்!க்கு! :) அதிலும் சில பிரச்சனைகள் உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....