வியாழன், 13 ஜூலை, 2017

ஸ்ரீமுகலிங்கம் – பாழடைந்த கோவிலும் அழகிய சிற்பங்களும்


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 5

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - ஆதவன் மறையும் சமையத்தில்....


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - செல்லும் பாதையில் கண்ட காட்சி ஒன்று..... 

ஸ்ரீகூர்மத்திற்கு எங்களை அழைத்துச் சென்றவர், நீங்கள் விரும்பினால் உங்களை ஒரு பழங்காலக் கோவிலுக்கு அழைத்துச் செல்கிறேன் – இங்கிருந்து [அதாவது ஸ்ரீகூர்மத்திலிருந்து] சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் ஒரு அற்புதமான கோவில் உண்டு. அங்கே பழங்காலச் சிற்பங்கள் நிறைய இருக்கிறது. அது ஒரு சிவஸ்தலம் என்று சொல்ல, நேரம் இருந்ததால் அங்கேயும் செல்லலாம் என முடிவு செய்தோம். ஸ்ரீகூர்மத்திலிருந்து அழகிய கிராமங்கள், சிற்றோடைகள், ஓடைகளின் கரையிலுள்ள பனைமரங்கள் ஆகியவற்றைக் கடந்து நாங்கள் முகலிங்கம் என்று அழைக்கப்படும் சிற்றூரினைச் சென்றடைந்தோம்.  சுமார் ஒரு மணி 15 நிமிடத்தில் முகலிங்கம் சென்று சேர்ந்துவிட்ட்டோம்.  முகலிங்கம் எனும் சிற்றூரில் இருக்கும் கோவில் ஸ்ரீமுகலிங்கம்.


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - பலருக்கும் பிடித்த ஆனைமுகத்தான்!....


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - ஒரு பார்வை....

அங்கே சென்ற பிறகுதான், முதல் பார்வையிலேயே, நல்ல வேளை இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம் என்று தோன்றியது.  அப்பப்பா எத்தனை அழகான சிற்பங்கள் – சிற்பிகளின் வியக்கத்தகு கைவண்ணம் கண்டோம் – பல சிற்பங்களின் இன்றைய பாழ்பட்ட நிலை கண்டு கொஞ்சம் மனதில் சோகமும் ததும்பியது. முகலிங்கேஸ்வரா, பீமேஸ்வரா மற்றும் சோமேஸ்வரா ஆகிய மூன்று வடிவங்களில் சிவபெருமானுக்கு இங்கே கோவில் கட்டியிருக்கிறார்கள்.  இந்தக் கோவில் கட்டப்பட்டது எட்டாம் நூற்றாண்டில்! எத்தனை பழைய கோவில் என்பதை இக்கட்டுரையில் பகிர்ந்திருக்கும் படங்களிலிருந்தே நீங்கள் உணர முடியும்.


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - சிற்பங்களில் ஒன்று..... 


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - சிற்பங்களில் ஒன்று..... 

இச்சிற்றூரின் மக்கள் தொகையே ஆயிரத்தில் தான் எனும்போது எவ்வளவு சிறிய ஊர் என்பது புரியும். அத்தகைய சிற்றூராக இப்போது இருக்கும் ஊரில் இவ்வளவு பழமையான கோவில் இருப்பது பெரும்பாலான வெளிமாநிலத்தவர்களுக்குத் தெரிவதில்லை. ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களிலிருந்து லக்ஷக் கணக்கான மக்கள் வருடத்திற்கு ஒரு முறை இங்கே நடக்கும் சக்ரதீர்த்த ஸ்னானத்திற்கு வருவார்கள் என்றும் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் என்றும் எங்களுடன் வந்தவர் சொல்லிக் கொண்டு வந்தார்.


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - கண்ணே என்னைக் கொஞ்சம் பாரேன்!..... 


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - பக்தர்கள் கைவண்ணம்!.....

ஸ்ரீமுகலிங்கம் என்ற பெயர் எதற்கு? பொதுவாக சிவலிங்கம் இருக்கும் கோவில்களில் சிவபெருமானை திருமுகத்துடன் பார்க்கமுடிவதில்லை. ஆனால் ஸ்ரீமுகலிங்கம் கோவிலில் சிவபெருமானின் முகமும் பார்க்க முடியும். இங்கே இருப்பது கல்லால் உருவான/உருவாக்கப்பட்ட சிலாரூபம் கிடையாது. இலுப்பை மரம் ஒன்றின் புதைபடிவத்தில் இயற்கையாகவே முகத்துடன் உருவான ஒரு சிலாரூபம் தான் இங்கே வழிபடப்படுகிறது. வம்ஸத்தாரா நதிக்கரையில் இருக்கும் இக்கோவில் மத்திய அரசின் தொல்பொருள் துறையினரின் கீழ் இருக்கிறது.  பராமரிப்பு சுத்தமாக இல்லை என்று சொல்லும் அளவிற்குத் தான் சிற்பங்கள் இருக்கின்றன.  பல சிற்பங்கள் சிதிலமடைந்து இருக்க, இருக்கும் மற்ற சிற்பங்கள் மீது இங்கே வரும் பொதுமக்கள் கையில் கிடைக்கும் குங்குமம், வீபூதி ஆகியவற்றைப் போட்டு பாழ்செய்து கொண்டிருக்கிறார்கள். 


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - நரசிம்ஹ அவதாரம்


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - கூர்ம அவதாரம்...


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - அபிஷேகத் தீர்த்தம் வெளிவரும் இடத்தில்!.....


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - மச்சாவதாரம்.....

நிறைய சிற்பங்கள் ரொம்பவே அழகாக இருந்தன. நிறைய விநாயகர் சிலைகளைப் பார்க்க முடிந்தது. விஷ்ணுவின் அவதாரங்கள் சிலவும் சிலாரூபத்தில் பார்க்க முடிந்தது. கோவில் அபிஷேக நீர் வெளிவரும் இடத்தில் இருக்கும் சிற்பம் மிகவும் அழகு. பொதுவாக மற்ற கோவில்களில் இருப்பது போல அல்லாமல் இங்கே வேறு வடிவத்தில் இருக்கிறது. சிற்பங்கள் தவிர பல அழகிய வடிவங்களும், தோரணங்களும் கல்லில் செதுக்கி இருப்பது, நின்று நிதானித்து, ரசித்துப் பார்க்க வேண்டியவை.  நிறைய நேரம் இங்கே இருந்து ஒவ்வொரு சிற்பமாகப் பார்த்து ரசிக்க முடிந்தது.


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - எங்கும் நான் இருப்பேன்...


 ஸ்ரீமுகலிங்கம் கோவில் - சிற்பங்களில் ஒன்று.....

கோவிலில் இருந்த பூஜாரிகள் எங்களை அமர வைத்து கோவில் பற்றிய விளக்கங்கள் சொல்லி, வீபூதி பிரசாதம் கொடுத்தார்கள். பெரும்பாலான நாட்களில் இங்கே யாரும் வருவதில்லை என்பதால் இங்கே இருக்கும் பூஜாரிகளுக்கு அத்தனை வருமானம் கிடையாது என்றும், எப்போதாவது வருபவர்கள் ஏதாவது கொடுத்தால் உண்டு என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்.  பத்து பதினைந்து பூஜாரிகளுக்கு மேல் அங்கே இருந்தார்கள். பெரும்பாலும் பக்கத்து மாநிலமான ஒடிசாவைச் சேர்ந்த பூஜாரிகள் என்றாலும் தெலுங்கிலும் சரளமாகப் பேசுகிறார்கள். 


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - நிற்கட்டுமா... போகட்டுமா.... என்று கேட்கும் ஆதவன்...


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - ஆதவன் மேற்கே அஸ்தமனமாகும்போது!.....


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - வெளிப்புறத்திலிருந்து....

கோவிலில் சிறிது நேரம் இருந்து, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மேற்கே சூரியன் மறையும் காட்சிகளையும் படமாக எடுத்துக் கொண்டுதான் அங்கிருந்து புறப்பட்டோம்.  கோவிலின் பின்னணியில் சூரியன் மறைவது போன்ற சில படங்கள் எனக்கு பிடித்ததாக அமைந்தன.  கோவிலின் வெளியே நின்று சில படங்கள் எடுத்துக் கொண்டோம். எங்களை இப்படி ஒரு அற்புதமான கோவிலுக்கு அழைத்து வந்தவருக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டோம். அடுத்ததாய் எங்கே சென்றோம் என்பதைச் சொல்வதற்கு முன்னர் இக்கோவில் இருக்கும் ஊருக்கு எப்படிச் செல்வது என்ற தகவல்களைப் பார்க்கலாமா….

எப்படிச் செல்வது?


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - கோவில் சிற்பங்களில் ஒன்று...
உன் பேச்சு கா... என்று முகம் திருப்பிக்கொண்டனளோ....


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - சிற்பங்களில் ஒன்று...
நான் சங்கும் வைத்துக் கொள்வேன்....


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - ரிஷபவாகனத்தில் சிவனும் அம்மையும்....

ஸ்ரீமுகலிங்கம் – ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில், ஜலமுரு மண்டல் பகுதியில் அமைந்துள்ளது. இங்கே வருவதற்கு விரும்பினால், விசாகப்பட்டினம் வரை விமானத்தில் வந்து அங்கிருந்து ஸ்ரீகாகுளம் வரை பேருந்தில் வரவேண்டும். ஸ்ரீகாகுளம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு மணிக்கு ஒரு முறை ஸ்ரீமுகலிங்கம் வரை செல்லும் பேருந்துகள் இருக்கின்றன.  இரயிலில் வருவதென்றால் ஸ்ரீகாகுளம் ரோடு என அழைக்கப்படும் ரயில் நிலையம் வரை வந்து அங்கிருந்து பேருந்திலோ அல்லது தனியார் வாகனத்திலோ வரலாம்.  தங்குவதற்கு இங்கே இடம் கிடையாது. ஸ்ரீகாகுளம் பகுதியில் தங்குவதற்கு சில தனியார் விடுதிகள் உண்டு. இல்லை என்றால் விசாகப்பட்டினத்திலிருந்து காலையில் புறப்பட்டு, ஸ்ரீகூர்மம், ஸ்ரீமுகலிங்கம் ஆகிய கோவில்களைப் பார்த்துவிட்டு மாலைக்குள் விசாகப்பட்டினம் திரும்புவது நல்லது! 


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - சிறு கல்லிலும் நுட்பமான சிலைகள்....


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - கல்லிலே கலைவண்ணம்.....


ஸ்ரீமுகலிங்கம் கோவில் - நான்முகன்!.....

ஸ்ரீமுகலிங்கம் கோவிலில் எடுத்த படங்களும் நிறையவே என்பதால், இங்கே தந்திருக்கும் படங்கள் தவிர மீதி படங்கள் ஏதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமையில் எனது தளத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.  ஸ்ரீமுகலிங்கம் கோவிலிலிருந்து புறப்பட்ட நாங்கள் அடுத்ததாக எங்கே சென்றோம் என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

30 கருத்துகள்:

  1. படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. அழகிய சிற்பங்கள்.. மனதைக் கொள்ளை கொள்கின்றன...

    அழகையும் அழகாகக் காட்சிப்படுத்துகின்றது - தங்களது கை வண்ணம்..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  3. தமிழ்நாட்டிலும்கூட பல கோயில்கள் வெளியில் தெரியாமல் மறைந்து போய்க்கொண்டு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  4. சிற்பங்கள் அனைத்தும் ஆகா...! விளக்கங்கள் அதைவிட...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. உமையம்மையை அணைத்த நிலையில் சிவபெருமானை நின்ற நிலையில் தமிழகக் கோயில்களில் பார்த்துள்ளேன். தங்களது இப்பதிவு மூலமாக அவர்கள் இருவரும் அமர்ந்த நிலையில் உள்ளதைப் பார்த்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. முகலிங்க கோவில் அழகு.
    உங்கள் புகைப்படங்கள் அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  7. இதுவரை கேள்விப்படாத ஆனால் மிகப் பழமையான கோவில். சிற்பங்கள் ரொம்ப நல்லா இருக்கு. நம் மக்களின் கைவண்ணம்தான் அவர்களின் படிப்பறிவில்லாத் தன்மையைப் பறை சாற்றுகிறது.

    பாரிசில் லூவர் மியூசியத்தில், பளிங்கில், மெத்தையில் படுத்திருக்கும் ஒரு பெண் சிலை உண்டு. அந்த மெத்தை இயல்பான மெத்தை மாதிரியே இருந்தது. ஒருவேளை மெத்தை மட்டும் தோலில் செய்து பெயின்ட் பண்ணியிருப்பார்களோ என்று நினைத்துத் தொட்டேன். (அது பளிங்குதான்). உடனே அங்கிருந்த கைடு, எந்தச் சிலையையும் எக்காரணத்தை முன்னிட்டும் தொடக்கூடாது என்று சொன்னார்.

    நம் பாரம்பர்யத்தையும் கலை வண்ணங்களையும் காத்து வரும் சந்ததிகளுக்கு விட்டுச்செல்வது நம்முடைய கடமை என்பதைப் புரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்ற நாடுகள் தங்களது புராதனச் சின்னங்களை மிகவும் அதிகமான உணர்வுடன் பாதுகாக்கும்போது நமது நாடும், மக்களும் இதில் அக்கறை காட்டுவது இல்லை என்பது வேதனையான விஷயம். இந்தியாவின் பல பகுதிகளிலும் இப்படி அழிந்து கொண்டிருக்கும் சின்னங்கள் எத்தனை எத்தனை.....

      உங்கள் லூவர் மியூசிய அனுபவம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. சிலைகள் அனைத்தும் கதைகள் பல பேசி ...அருமையோஅருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  9. இரண்டாவது படம் அந்தக் காலத்து பொங்கல் வாழ்த்து அட்டை போல உள்ளது. கோவிலின் பழமை பற்றி படிக்கும்போது பார்க்கும் சந்தர்ப்பம் கொடு ஆண்டவா என்று வேண்டத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்று அல்லது நான்கு நாட்கள் விசாகப்பட்டினத்தில் தங்கி அங்கே இருக்கும் இடங்களைப் பார்க்க முடியும் ஸ்ரீராம். விரைவில் உங்களுக்கு வாய்ப்பு அமையட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. சிற்பங்கள் சிதிலம் அடைவதைப் பார்க்கவா ,தொல்பொருள் துறை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  11. புகைப் படங்கள் அருமை. நம் நாட்டு கலைச் செல்வங்கள் எங்கெல்லாம் ஒளிந்திருக்கின்றன! அவற்றை எங்களையும் காண வைத்ததற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  12. கோவிலின் வெளிப்புறம் பேளூர் ஹளேபேடு இடங்களை நினைவு படுத்துகிறதோ அருமையான புகைப்படங்கள் கேள்விப்படாத ஊர் கோவில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேளூர் பக்கம் சென்றதில்லை. பார்க்கும் எண்ணம் உண்டு. வாய்ப்புக்குக் காத்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு
  13. மிக மிக அற்புதமான சிலைகள்
    அற்புதமாக படமெடுத்துப் பதிவு செய்து
    பகிர்ந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  14. அழகான படங்கள்! கோயில் பற்றிய தகவல்களும். அருமை. தொடர்கிறோம்

    கீதா: எங்கள் லிஸ்டில் ஸ்ரீகாகுளம் இருந்தும் செல்ல முடியாமல் ஆன இடம். இந்த இரு கோயில்களும். ஸ்ரீகூர்மம் ஃபேமஸ் . முகலிங்கம் பற்றி என் மகனின் நண்பர் சொல்லியிருந்தார். அவர் ஆந்திரக்காரர். எனவே அதையும் குறித்து வைத்திருந்தோம். ஆனால் போகமுடியவில்லை..

    இரண்டாவது படம் முன்பே நீங்கள் பகிர்ந்திருக்கிறீர்கள் இல்லையா!! மிக மிக அழகான படம். எல்லா படங்களுமே அழகியல்!! ஸ்ரீமுகலிங்கம் கோயில் கோனார்க் கோயில் போல அந்தச் செதுக்கல்கள் போன்றவை போல தோன்றுகிறது!! ஒடிஸா பார்டர் அருகில் என்பதால் இருக்கலாமோ...மிக மிக அழகான சிற்பங்கள். உங்கள் படங்கள் மிக அழகாக இருக்கின்றன ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  15. சிற்பங்களை அருமையாய் படமெடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி! இந்த கோவிலை பார்க்கும் போது, இது ஓடிஷா கோவில்கள் பாணியில் கட்டப்பட்டதுபோல் தெரிகிறதே.

    மத்திய அரசின் தொல்பொருள் துறையினரின் கீழ் இருக்கிறது என்றாலே பராமரிப்பு சுத்தமாக இருக்காது என்பது தெரிந்தது தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....