எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, July 17, 2017

சுன்னுண்டலு! – உளுந்து உருண்டை – ஆதி வெங்கட்

உளுந்து உருண்டை....

ஒவ்வொரு திங்களன்றும் “எங்கள் பிளாக்” பக்கத்தில் ”திங்க”க் கிழமை என்று தலைப்பிட்டு ஏதாவது ஒரு உணவு பற்றிய செய்முறைக் குறிப்புகள் வருவது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.  ‘திங்க’க் கிழமை பதிவுகளுக்கு போட்டியா இந்த ‘திங்க’க் கிழமை நீங்களும் ஒரு சமையல் குறிப்போட வந்திருக்கீங்களா என்று என்னிடம் யாரும் கேட்க வேண்டாம். It’s just a coincidence! கோவை2தில்லி வலைப்பூவில் எழுதி வந்த என்னவள் இப்போதெல்லாம் எழுதுவது குறைந்துவிட்டது. அப்படியே எழுதினாலும் அது முகநூலில் மட்டுமே! சரி அவங்க வலைப்பூவில் எழுதவில்லை என்றாலும், முகநூலில் எழுதுவதை என்னுடைய வலைப்பூவில் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்திருக்கிறேன்.  அப்படி ஒரு பகிர்வு இந்த ‘திங்க’க் கிழமையில்!


உளுந்து உருண்டை

மகளுக்காக, அவளுக்குப் பிடித்த உளுந்து உருண்டை செய்து வைத்திருக்கிறேன். பள்ளியிலிருந்து வந்தவுடன் கொடுக்கணும். சுடச்சுட நீங்களும் எடுத்துக்கோங்க!

தேவையான பொருட்கள்:

வெள்ளை உளுந்து - 1 கப்
சர்க்கரை - 1 கப்
பச்சரிசி - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - சிறிதளவு
நெய் - தேவையான அளவு
முந்திரி - விருப்பப்பட்டால்

எப்படிச் செய்யணும் மாமு?

கடாயில் உளுந்தை பொன்முறுவலாக வறுத்துக் கொள்ளவும். அரிசியையும் வறுத்துக் கொள்ளவும். ஆற வைத்து மிக்சியில் ஏலக்காயுடன் பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையும் மிக்சியில் பொடித்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். உளுந்து, அரிசி கலவையும் சேர்த்து நன்கு கலந்து விடவும். கடாயில் நெய் சேர்து உருகியவுடன் முந்திரி வறுத்து கலவையில் சேர்த்து, காய்ச்சிய நெய்யும் விட்டு உருண்டை பிடிக்கவும்.

உடலுக்கு பலம் சேர்க்கும் உளுந்தில் உருண்டை செய்து பாருங்களேன்..

பின்குறிப்பு - சர்க்கரைக்கு பதில் வெல்லமோ, பனை வெல்லமோ சேர்க்கலாம்.

     ஆதி வெங்கட்.

என்ன நண்பர்களே உளுந்து உருண்டை எப்படிச் செய்வது என்று படித்தீர்களா?  சில மேலதிகத் தகவல்கள் சேர்க்க எண்ணம். அவை கீழே!

ஆந்திரப் பிரதேசத்தில் சங்கராந்தி சமயங்களிலும், குழந்தைகளின் விடுமுறைக் காலங்களிலும் அவர்களுக்குச் செய்து தரப்படும் ஒரு இனிப்பு இந்த உளுந்து உருண்டை – அவர்கள் இந்தப் பெயரில் தான் இதைச் சொல்வார்களா என்று கேட்ககூடாது! அவர்கள் அழைப்பது – சுன்னுண்டலு அல்லது மினப்ப சுன்னுண்டலு! கால்சியம் அதிக அளவில் கிடைக்கும் என்பதால் வளரும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் இந்த சத்தான உருண்டைகளைத் தருவார்கள். இதைப் போலவே பிரசவித்த பெண்களுக்கு “தொக்குடு லட்டு” என்று ஒன்று தருவார்கள். விஜயவாடா பயணத்தின் போது பல “தொக்குடு லட்டு”களை நான் உள்ளே தள்ளினேன் – எனக்குப் பிடித்திருந்ததால்!

உருண்டையாக இருப்பதால் உருண்டை என்று நாம் சொல்வது போல, வடக்கே இப்படி எதை உருண்டையாகப் பிடித்தாலும் அது லட்டு தான்! மாட்டுத் தீவனம் கூட உருண்டைகளாகப் பிடித்து வைத்து, அதை மாடுகளுக்குக் கொடுப்பதுண்டு – அதுவும் லட்டு தான்! மாட்டுத் தீவன லட்டு என்று கேட்டதிலிருந்து “லட்டு” என்று சொல்லும்போது அது தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது!

என்ன நண்பர்களே, இந்த வாரம் எனது இல்லத்தரசி தந்த உளுந்து உருண்டை குறிப்புகள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.  அவ்வப்போது அவரது பதிவுகள் இங்கே தொடரலாம்!

நாளை மீண்டும் சந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


40 comments:

 1. எங்கள் பிளாக் பற்றிய குறிப்புகளுக்கும் சுட்டிக்கும் நன்றி. உளுந்து உருண்டை பற்றி கேள்விப்பட்டதுண்டு. சாப்பிட்டுப்பார்த்ததில்லை. பெண்களுக்குத்தான் ஸ்பெஷல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. எங்கள் குடியிருப்பில் உள்ள தோழி ஒருவர் செய்து தந்து தான் இந்த உருண்டை பற்றித் தெரியும்..வளரும் பெண்களுக்கு பலம் தரக்கூடியது..

   நன்றி ஸ்ரீராம் சார்..

   Delete
 2. சாப்பிடத் தோன்றுகிறது ஐயா
  தம 1

  ReplyDelete
 3. உருண்டையாக இருந்தால் லட்டுதானா ?

  ReplyDelete
 4. ஜி த.ம. இணைப்பு தவறு சரி செய்யவும்.

  ReplyDelete
  Replies
  1. த.ம. இணைப்பு சரி செய்து விட்டேன் கில்லர்ஜி! நன்றி.

   Delete
 5. உளுந்து உருண்டை அபாரம்..

  கூடுமானவரை White Sugar தவிர்க்கவும்.. நமது பாரம்பர்ய சர்க்கரை , வெல்லம் மற்றும் கருப்பட்டி இவையே உகந்தவை...

  உளுந்தங்களி, உளுந்து உருண்டை முதலானவைகளை உண்பது மிகவும் நல்லது..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி சார்..

   Delete
 6. உளுந்து லட்டு பற்றி இதுவரை கேள்வி பட்டதில்லை....உளுந்தில் செய்த பண்டங்கள் பிடிக்கும் என்பதால் நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்துவிடனும்...

  ReplyDelete
  Replies
  1. செய்து பார்த்து சொல்லுங்க சகோ..

   Delete
 7. இப்படி அடுத்தவங்க இடுகையை "கண்ணா லட்டு திங்க ஆசையா" மாதிரி லபக்கிட்டீங்களே! அவங்க எழுதியிருந்தாங்கன்னா அதில் "எப்படிச் செய்யணும் மாமு" வந்திருக்காதே! நானும் போண்டாமாதிரி பொரிக்கற ஐட்டமோன்னு பார்த்தேன். த ம போட்டாச்சு.

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய பகிர்வு தான் சார். Extra fittings கொஞ்சம் சேர்த்திருக்கார்..:)

   Delete
 8. ஆம்! வெங்கட்ஜி உளுந்துருண்டை பெண்களுக்காகச் செய்து கொடுப்பதுண்டு என்று கேட்டதுண்டு. நான் செய்ததில்லை. பாட்டி வெல்லம் சேர்த்துச் செய்வார்கள். எப்படிச் செய்வார்கள் என்று தெரியவில்லை. வெல்லத்தைக் கரைய விட்டு கசடு எடுத்துவிட்டுச் சேர்த்தா அல்லது அப்படியே பொடி செய்தா என்று தெரியவில்லை. பாட்டியும் இப்போது இல்லை. இக்குறிப்பையும் குறித்துக் கொண்டேன். தொக்குடு லட்டு நான் செய்ததுண்டு. கடலைமாவு லட்டு....

  மிக்க நன்றி ஜி பகிர்விற்கு...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..

   Delete
 9. உளுந்தில் செய்வதை விட கடலை மாவில் செய்யும் பேசின் லட்டு பிடிக்கும் பூவையின் எண்ணங்களில் பகிர்ந்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி சார்..

   Delete
 10. பேசின் லட்டு பற்றிய செய்முறை பூவையின் எண்ணங்களிலில்லை. வேறேதோ நினைவில் கூறி விட்டேன்போல் இருக்கிறது சாரி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 11. Dear
  Nice to see this recipe. Thanks. Ask Adhi Venkat to send some pieces for us.
  Vijayaraghavan

  ReplyDelete
  Replies
  1. அனுப்பிட்டா போச்சு..:)

   Delete
 12. உளுந்து உருண்டையை இன்றே செய்கின்றோம்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. செய்து பார்த்துட்டு சொல்லுங்க சகோ..

   Delete
 13. குஜராத்தில் உளுந்து மாவில் மைசூர்ப்பாகு மாதிரிச் செய்வார்கள். நன்றாக இருக்கும். அதே போல் பிரசவித்த பெண்களுக்கு மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத்தில் கோந்து லாடு(லட்டு) செய்து கொடுப்பார்கள். ஒரு லட்டு சாப்பிட்டால் வயிறு நிறைந்து விடும். லாடு பிடிக்கும் கோந்து தனியாகக் கடைகளில் விற்கும். அதோடு பாதாம், பிஸ்தா, அக்ரூட், திராக்ஷை இன்னும் பல பொருட்கள் கலந்து பிடிப்பார்கள். சுத்தமான தேஷி கீ(பாலில் வெண்ணெய் எடுத்து உருக்கிய நெய்) ஊற்றிப் பிடிப்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி மாமி..

   Delete
 14. உழுந்து எல்லா வயதிலும் எல்லோருக்கும் ஏற்றதெனினும் வயதுக்கு வரும் பெண்குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியது என்பதனால் எங்கள் பகுதியிஉம் உழுந்தை அதிகமாக பயன் படுத்தி இப்படி மாவு உருண்டை,களி என செய்வதுண்டு. யாழ்ப்பாணப்பக்கம் இந்த மாதிரி உருண்டைகள் விஷேசமாக செய்வார்கள். என் வீட்டுக்காரரின் ஊர் என்பதனால் அங்கே சென்ற பொழுதுகளில் உழுந்தில் நிரம்ப வகை சிற்றுண்டிகளை உண்டிருக்கின்றேன். உழுந்து சேர்த்த எல்லா வகை உணவுமே எனக்கும் பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி..

   Delete
 15. திங்கக்கிழமை மட்டுமல்ல, செவ்வாக்கிழமை கூட நாங்க திங்க ரெடி.

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா..ஹா!! நன்றி சார்..

   Delete
 16. சாப்பிட்டிருக்கிறேன்.. ஹைதராவில் வசித்த நாட்களில் பக்கத்து வீட்டில் செய்வார்கள்... bachelor நண்பர்கள்எ எங்களுக்கும் வந்து விடும்.. (இல்லின்னா அவங்க வீட்டுக்கு நாங்க வந்துடுவமோ என்ற பயம்..அவங்க வீட்டுல மொத்தம் எட்டு பெண்கள் - அம்மாவைச் சேர்க்காமல்!)

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி..

   Delete
 17. வளரிளம் பெண்களுக்கு ரொம்ப நல்லதுண்ணே. படத்தை பார்த்து ரவா லட்டுன்னு நினைச்சுட்டேன்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ராஜி..

   Delete
 18. சுவையான உளுந்து லட்டு குறிப்பைக்கொடுத்திருக்கிறீர்கள்! சத்தானது என்பதால் அவசியம் செய்து பார்க்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. செய்து பாருங்க மனோம்மா..

   Delete
 19. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 20. நல்ல உணவு சுவையானது.
  பெண்களுக்கு சத்தான உணவு.உழுந்து உணவுகள் ஊர்களில் செய்வது அநேகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....