எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, July 31, 2017

மண்ணில்லை பெண் – சிறுகதைத் தொகுப்பு - நிர்மலா ராகவன்


படம்: இணையத்திலிருந்து....

பத்து சிறுகதைகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு சிறுகதைத் தொகுப்பு மண்ணில்லை பெண். மலேசியாவில் வசிக்கும் நிர்மலா ராகவன் என்பவரின் எழுத்தில், 62 பக்கங்கள் கொண்ட இந்த சிறுகதைத் தொகுப்பு WWW.FREETAMILEBOOKS.COM தளத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து படிக்கலாம். இத்தொகுப்பின் சில கதைகலிளிருந்து எனக்குப் பிடித்த சில வரிகள் இங்கே ஒரு முன்னோட்டமாக! 
ஆசிரியரின் முன்னுரையிலிருந்து சில வரிகள்.....

நாற்பது வயதுக்கு மேல் பெண்கள் அழகையும், இளமையையும் இழந்து, அவர்களின் கணவன்மார்களின் கேலிக்கும் ஆளாவது சர்வசாதரணமாக நம்மிடையே நடந்து கொண்டுதானிருக்கிறது. இந்த ஆண்கள் தாமும் வயதானவர்களாத்தானே – அடர்த்தியான தலைமயிராய் இழந்து, தொந்தி போட்டு – ஆகிக்கொண்டிருக்கிறோம் என்று எண்ணிப்பார்ப்பதே கிடையாது!

மானசீகக் காதல்.....

ஆண்-பெண் உறவைப் பற்றி எழுதும் ஒரு பெண் எழுத்தாளரின் கதைகளைப் படித்து அந்த எழுத்தாளினி மீது ஒரு இது... என மனைவியிடமே சொல்லும் கதை நாயகன். எழுத்தாளினியைச் சந்திக்கும் வரை மனைவியை அடிமை போல் நடத்தியவர், சந்தித்த பிறகு கதை நாயகனிடம் ஏற்பட்ட மாறுதல் பற்றிச் சொல்லும் சிறுகதை – மானசீகக் காதல்! கதாநாயகன் பெரியசாமி, என்ன சமைப்பது என்று கேட்கும் மனைவி பார்வதியிடம் சொல்லும் சில வார்த்தைகள்.....

தோசை வார்த்தால், "எப்பவும் தோசைதானா இந்த இழவு வீட்டில்? தாகத்தாலேயே ஆள் செத்துடனும்னு பாக்கறியா? என்பார்.

சரி தான் என உப்புமா பண்ணுவாள், மறுநாள்.

"இது என்ன உப்புமா, களிமண்ணிலே கையை விடற மாதிரி. இட்லி, தோசை எதையாவது செய்யறதுக்கென்ன? அரிசி, உளுந்தைப் போட்டு அரைக்க நேரம் இல்லையோ மகாராணிக்கு? ஒக்காந்து என்னதான் கிழிக்கிறே?" என்று அதற்கும் வசவு விழும்.

பல வீடுகளில் இப்படித்தானே நடக்கிறது!

நாற்று

நான்கு குறைப் பிரசவங்கள், சோதனைக்குழாய் வழி வயிற்றில் வளர்ந்த கருவும் மூன்றே மாதங்களில் வெளிப்பட்டுவிட, தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்ன கணவரிடம் ஒத்துக் கொள்ளாத செல்வந்தரின் மனைவி.  மனசைத் தளரவிடாதே, வேறு ஒரு வழியும் இருக்கிறது என்று பத்திரிகையில் வந்திருந்த கட்டுரையைக் காண்பிக்கிறார் செல்வந்தர். அக்கட்டுரை வாடகைத் தாய் பற்றியது. வாடகைத் தாயாகத் தேர்ந்தெடுக்க நிறைய தரகர்கள்...  அப்படி ஒரு தரகர் வாயிலாகச் சொல்லும் வார்த்தைகள்......

"மண்ணிலே விதை போட்டா, செடி முளைக்கிற மாதிரிதான்னு வெச்சுக்கங்களேன். கரு உருவாகிடுச்சுன்னு உறுதி ஆனப்புறம், ஒங்க வயித்தில அதை விதைச்சுடுவாங்க. ஏன்னா, அந்தம்மா வயத்தில கரு தங்கறதில்ல்லே!"

"நாத்து நடறமாதிரி!" என்றாள் நாகம்மா. அவளுடைய முகத்தில் தெளிவு. தான் அறியாத அந்தப் பணக்காரப் பெண்மணியின் மேல் இரக்கம் சுரந்தது. தூக்கத்திலிருந்து எழுந்த மகனிடம் "ஒனக்குத் தம்பிப் பாப்பா பொறக்கப் போறாண்டா!" என்றாள்.

மாதங்கள் உருண்டோட பெற்ற குழந்தையின் முகத்தைக் கூடப் பார்க்க முடியாமல் குழந்தையைக் கொடுத்து பணம் பெற்றுக் கொள்கிறார் நாகம்மா. அவர்கள் வாழ்க்கைத் தரம் கொஞ்சம் உயர்கிறது. சில மாதங்களுக்குப் பிறகு தரகர் மீண்டும் வருகிறார் – வேறு ஒருவருக்கும் குழந்தை வேண்டும் – வாடகைத் தாயாக இருக்க வேண்டும் என்று நாகம்மாவிடம் கேட்க......

"அன்னிக்கு நாத்துன்னு சொன்னேன். ஆனா, நான் மண்ணில்லே. அது இப்பதான் புரியுது!" என்று விம்மியவள், "ஒரு செடியைப் பிடுங்கி நடறப்போகூட வேரோட கொஞ்சம் தாய்மண்ணையும் சேர்த்துத் தான் எடுப்போம். எனக்கு அந்த கொடுப்பினைகூட இல்லாம போச்சே! பிள்ளை முகத்தக்கூட பாக்க முடியாத பாவி ஆயிட்டேனே!" என்று பெரிதாக அழ ஆரம்பித்தாள்.

என் வயத்துல சுமந்து பெத்த பிள்ளை எங்கே இருக்கோ, எப்படி இருக்கோ, அதைப் பார்க்க முடியலையே!"ன்னு என்னோட அடிமனசு குமுறிக்கிட்டே இருக்குமே! ஒங்க பணத்தாலே அதைச் சமாதானப்படுத்த முடியுமா? ஏன்யா? ஏழைங்கன்னா, பணந்தான் கிடையாது, உணர்ச்சிங்கக் கூட இருக்காதா? வார்த்தை குழற முடித்துவிட்டுக் கதறினாள். 

வாடகைத் தாயாக இருக்கும் ஒரு தாயின் உணர்வுகளைச் சொல்லும் நல்லதோர் கதை.

போட்டி என்ற தலைப்பிட்ட கதையில் திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளுக்குள் தனது மனைவியை இழந்த சரவணின் உணர்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறார் கதாசிரியர். பிறந்த குழந்தைகளின் காரணமாக தன் மீது மனைவி காட்டும் அன்பு குறைந்து விட்டதோ, என்ற போட்டி மனப்பான்மை, இருந்த கதாநாயகன் தனது தவற்றை உணர்ந்து தடுமாறும் நிலை...  கண் கெட்ட பின் சூரிய உதயம்.....

பெரும்பாலான கதைகள் மலேசியாவில் நடப்பவையாகவே இருக்கின்றன. நூலாசிரியர் மலேசியாவில் இருப்பவர் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். 

நல்லதோர் தொகுப்பு. நீங்களும் தரவிறக்கம் செய்து படிக்கலாமே.

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.28 comments:

 1. கதைக்கான கருக்கள்
  மிக்க வலிமையுடையாத இருக்கின்றன்
  மிகச் சுருக்கமாக எனினும்
  மிக மிக அற்புதமாகவிமர்சனம் செய்துள்ளீர்கள்
  இணைப்பும் கொடுத்தமைக்கு நல்வாழ்த்துக்கள்
  இன்று படித்து விடுவேன்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 2. நல்லதொரு பகிர்வு. வாடகைத்தாய் கதையின் வரிகள் மனதைப் பாதிக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. தங்களுடைய பார்வையில் நூல் அறிமுகம் அருமை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 4. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 5. வணக்கம்
  ஐயா

  கதைக்கான விமர்சனத்தை மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன் -

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 6. அறிமுக தகவல்கள் அருமை ஜி வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 7. மண்ணில்லை பெண். தலைப்பே நல்லா இருக்குண்ணே

  ReplyDelete
  Replies
  1. நல்ல தலைப்பு தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 8. Replies
  1. தமிழ் மணம் ஏழாம் வாக்கிற்கு மிக்க நன்றி ராஜி!

   Delete
 9. புதிய புத்தகம் அறிமுகம். நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன்.

  "வாடகைத் தாயாக இருக்கும் ஒரு தாயின் உணர்வுகளைச் சொல்லும் நல்லதோர் கதை." - இவர்களைப் பற்றி பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். இது ஒரு வியாபார உலகம். இவர்களுக்கு 10 மாதங்கள், நல்ல வீடு, சாப்பாடு, வேளா வேளைக்கு மருத்துவக் கவனிப்பு, கட்டுப்பாடான வாழ்க்கை, வேறு தொடர்பு கிடையாது. குழந்தை பிறந்தவுடன், உணர்வுக்கு ஆட்படக்கூடாது என்று குழந்தையைக் காண்பிக்காமலேயே, அவர்களுக்கு உண்டான பணத்தைக் கொடுத்துவிட்டு அனுப்பிவிடுவார்கள். யாருக்காக குழந்தை பெறுகிறோம் என்பதே இவர்களுக்குத் தெரியாது. அப்படித் தெரியவந்தால் பிற்காலத்தில் பெரும் பிரச்சனைகளை அது ஆரம்பித்துவைக்கும் என்பதால்.

  இதில், நடிகர் அரவிந்தசாமியின் கதை தெரியும் என்று நினைக்கிறேன். அவருடைய ரத்த சம்பந்தமான தந்தை (டெல்லி குமார்), பிற்காலத்தில் தன் மகன் தன்னை மரியாதைக்குக்கூட சந்திக்கவில்லை என்பதைச் சொல்லி வருத்தப்பட்டார்.

  த ம காலையிலேயே போட்டாச்சு.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். பிறந்த உடன் அனுப்பி விடுவதும், பிரச்சனைகளைத் தடுக்க என்றாலும், பல சமயங்களில் பிரச்சனைகளை சந்தித்து ஆக வேண்டியிருக்கிறது.

   அரவிந்த்சாமி கதை - படித்த நினைவு இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 10. அருமையான புத்தக அறிமுகம், கதைகளும் கனமானவை என்று தெரிகிறது...பகிர்விற்கு மிக்க நன்றி வெங்கட்ஜி!

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 11. அருமையான விமர்சனம்.

  //ஏழைங்கன்னா, பணந்தான் கிடையாது, உணர்ச்சிங்கக் கூட இருக்காதா? வார்த்தை குழற முடித்துவிட்டுக் கதறினாள்.//

  மனதை கனக்க வைத்த வரிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 12. படிக்க தூண்டும் வரிகள்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 13. கதை தலைப்பு நல்ல பொருத்தம் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 14. எடுத்துச்சொன்ன கதை கருக்கள் நன்றாக இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....