வியாழன், 24 ஆகஸ்ட், 2017

ராம் மந்திர் – ராஜா ராணி கோவில்


அரக்கு பள்ளத்தாக்குபகுதி 22

அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


படம்: ராஜா ராணி கோவில், புவனேஷ்வர்

ஒடிஷா மாநிலத்தில் பல பழமையான கோவில்கள் உண்டு. கொஞ்சம் வித்தியாசமான கட்டிடக் கலை, நிறையவே சிற்பங்கள் என கோவில்கள் அதிகம். புவனேஷ்வர் நகரத்தின் உண்மையான பெயர் திரிபுவனேஷ்வர் – அதாவது மூன்று புவனங்களையும் [லோகங்களையும்] ஆண்ட ஈஸ்வரன் பெயரிலிருந்து உருவானது. 600-க்கும் மேற்பட்ட கோவில்கள் புவனேஷ்வர் நகரில் இருப்பதால் ”கோவில் நகரம்” என்ற பெயராலும் அழைக்கிறார்கள். கலிங்கத்து பாணி என்று சொல்லப்படும் பாணியில் தான் கோவில்கள் அமைத்திருக்கிறார்கள். ஸ்வர்ண த்ரிபுஜா என அழைக்கப்படும் மூன்று நகரங்களில் புவனேஷ்வர் நகரமும் ஒன்று – மற்ற இரண்டு நகரங்கள் – பூரி மற்றும் கோனார்க். மூன்றுமே அருகருகே தான் இருக்கின்றன. நாங்களும் ஒடிஷா மாநிலத்தில் ஒரு சில கோவில்கள் பார்த்தோம்.


படம்: ராம் மந்திர், புவனேஷ்வர்

மிகவும் புராதனமான இடம், பல சிறப்புகளைப் பெற்றிருந்தாலும், ஒடிஷாவின் தற்போதைய நிலை அத்தனை சிறப்பாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பழைய கோவில்களும், கட்டிடங்களும் பராமரிக்கப்படுவதில்லை. பல இடங்களில் ஏழ்மை.  தற்போதைய ஒடிஷா மாநிலத்தின் கிராமங்களைப் பார்த்தால் வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது. நிறைய ஆண்கள் சிவப்பு வேட்டி [துண்டு என்று கூட சொல்லலாம்!] கட்டிக்கொண்டு உலா வருகிறார்கள் கிராமங்களில். வேலை வாய்ப்பு வசதிகள் இங்கே இல்லை. பெரும்பாலானவர்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று விடுகிறார்கள். தலைநகர் தில்லியில் இருக்கும் பெரும்பாலான Plumber-கள் ஒடிஷா மாநிலத்தவர்கள்! எனக்குத் தெரிந்த ஒரு Plumber-இடம் கேட்ட போது பத்தாவது படித்து விட்டு, தில்லி வந்ததாகவும், இங்கே வந்து இன்னுமொரு ஒடிஷா நபரிடம் வேலை கற்றுக் கொண்டதாகவும், பிறகு இவரும், தனது கிராமத்தினைச் சேர்ந்தவர்களுக்கு தொழில் கற்றுக் கொடுத்ததாகவும் சொல்வார்!


படம்: ராம் மந்திர், புவனேஷ்வர்

சரி நாங்கள் முதலில் பார்த்த இரண்டு இடங்கள் பற்றி இந்தப் பதிவில் சொல்கிறேன்.  அந்த இரண்டு இடங்கள் புவனேஷ்வர் நகரின் மையத்தில், ஜன்பத் பகுதியில் இருக்கும் ராம் மந்திர் மற்றும் ராஜா ராணி கோவில்கள். ராம் மந்திர் அத்தனை பழைய கோவில் இல்லை என்றாலும் மிகச் சிறப்பாக கலிங்கத்துப் பாணியில் அமைந்த ஒரு கோவில். ராமர், லக்ஷ்மணர், சீதை தவிர, சிவன், ஹனுமான் ஆகியோர்களுக்கும் இங்கே தனிச் சன்னதி உண்டு. தினமும் காலை 07.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை திறந்திருக்கும் இக்கோவிலில் நாங்கள் சென்ற போது அத்தனை மக்கள் கூட்டம் இல்லை என்பதால் நிம்மதியாக தரிசனம் செய்ய முடிந்தது. பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் ஆங்காங்கே கம்பிகள் – எங்களைக் கொஞ்சம் தடுமாறச் செய்தது. எல்லா கோவில்கள் போலவே இங்கேயும் புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லை! வெளியேயிருந்து எடுத்த இரண்டு படங்கள் மட்டும் இங்கே சேர்த்திருக்கிறேன்.

ராஜா ராணி கோவில்:


படம்: ராஜா ராணி கோவில், புவனேஷ்வர்

11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில் இந்த ராஜா ராணி கோவில். தற்போது ஒரு அழகிய பூங்காவினை கோவிலைச் சுற்றி அமைத்திருக்கிறார்கள்.  ராஜா ராணி கோவில் என்றதும், ஏதோ இப்பகுதி ராஜா-ராணிக்கு அமைத்த கோவிலோ என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது! ஆனால் இக்கோவில் கட்டப்பட்ட பயன்பட்ட சுண்ணாம்புக் கற்களின் பெயரால் – அதாவது கோவில் கட்டப் பயன்பட்ட கற்களின் பெயர் இப்பகுதியில் ராஜாராணி என்பதால், கோவிலுக்கும் அதே பெயர் என்று தெரிந்தது. ஜகமோஹனா என அழைக்கப்படும் நுழைவாயில் தவிர எல்லா இடங்களிலும் நிறைய சிற்பங்கள் – கஜுரோஹா வகை சிற்பங்கள் அமைந்திருக்கின்றன. அழகான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்திருக்கின்றன.



 படம்: ராஜா ராணி கோவில் சிற்பங்கள், புவனேஷ்வர்
இந்த இரண்டும் இணையத்திலிருந்து....

கோவில் என்று சொன்னாலும் தற்போது இங்கே எந்தக் கடவுளின் சிலைகளும் உள்ளே இல்லை. பூஜைகளும் நடப்பதில்லை. இந்தியத் தொல்பொருள் துறையின் பராமரிப்பில் இருக்கும் இக்கோவிலுக்குள் செல்ல, கட்டணம் உண்டு. புகைப்படங்கள் எடுக்கவும் கட்டணம் உண்டு. நாங்கள் சென்ற போது வெளியே இருந்து தான் புகைப்படங்கள் எடுக்க முடிந்தது. நுழைவுச் சீட்டு கொடுக்க வேண்டிய ஊழியர் அங்கே இல்லை! ஏற்கனவே உள்ளே சிலர் நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு சென்றிருக்க, சீட்டு இல்லாமல் செல்வதில் எனக்கு விருப்பமில்லை. கொஞ்சம் நேரம் காத்திருந்தால் வருவார் என்று சொல்ல, காத்திருக்கும் அளவிற்கு நேரமும் இல்லை, எங்களுடைய திட்டத்திலும் இவ்விடம் இல்லை என்பதால், வெளியே இருந்தே சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டேன்! Zoom செய்து எடுத்த சிற்பங்களின் படங்கள் அத்தனை சரியாக வரவில்லை என்பதால் இங்கே பகிர்ந்து கொள்ளவில்லை. இருந்தாலும், இணையத்திலிருந்து ஒன்றிரண்டு படங்கள் இணைத்திருக்கிறேன். அடுத்த பயணத்தில், விடுபட்ட இடங்களையும் அங்கே இருக்கும் சிற்பங்களை புகைப்படம் எடுக்கவும் செல்ல வேண்டும்!

அடுத்ததாய் சென்ற இடம் என்ன, அங்கே என்ன பார்த்தோம் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

10 கருத்துகள்:

  1. வியக்க வைக்கும் கட்டிடக்கலை, சிற்பக்கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தன்பாலன்.

      நீக்கு
  3. அட்டகாசமான படங்கள்! வெங்கட்ஜி!! மனதை மயக்கும் கட்டடக் கலை நுணுக்கமான வேலைப்பாடுகள்! ஆனால் பராமரிப்பை நினைக்கும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது. தகவல்கள் அனைத்தும் தெரிந்துகொண்டோம்...அருமை வெங்கட்ஜி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  4. வேறு ஒருவரது பதிவில் இந்த இடங்கள் பற்றி மிகவும் சிலாகித்து எழுதி இருந்ததாக நினைவு. நான்புவனேஸ்வர் சென்றதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு படித்த நினைவில்லை. வாய்ப்பு கிடைத்தால் புவனேஷ்வர் சென்று வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....