எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, November 13, 2017

தலாய்லாமா – புத்தர் கோவில் – மெக்லாட்கஞ்ச்

இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 7

முந்தைய பகுதிகளை படிக்காதவர்கள் வசதிக்காக - பகுதி-1 2 3 4 5 6


புத்தர் பிரான்.....

St. John’s Church in the wilderness, Bபாக்சுநாக் ஆலயம் தொடர்ந்து நாங்கள் அடுத்ததாய் சென்றது ஒரு புத்தர் கோவில் – ஆம் தலாய் லாமா அவர்கள் தங்கள் நாட்டிலிருந்து தப்பித்து வந்து அமைத்த முக்கியமான வழிபாட்டுத் தலம் – The Dalai Lama Temple Complex – Tsuglhakhang Complex என அழைக்கப்படும் இடத்திற்குச் சென்றோம். மிகவும் பெரிய இடம். அந்த இடத்தில் பல புத்த பிக்குகள் வசிக்கிறார்கள்.  திபெத்தியர்கள் பெரும்பாலானோர் இங்கே தான் தங்கி தங்களது புத்த மதக் கோட்பாடுகளை கற்றுக் கொள்கிறார்கள்.


கோவில் வளாகத்திலிருந்து இயற்கைக் காட்சி..

அமைதியான சூழலில் அமைந்திருந்த இந்த கோவில் வளாகத்தில்தான் திபெத்தின் Central Tibetan Administration [Tibetan Government in Exile] செயல்படுகிறது. தலாய் லாமா அவர்கள் திபெத்திலிருந்து தப்பி வந்த போது முதன் முதலாக முசோரி பகுதியில் அமைத்தாலும், 1960-ஆம் ஆண்டிலிருந்து இங்கே தான் செயல்படுத்தி வருகிறார். வளாகத்தின் உள்ளே பல இடங்களில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை – குறிப்பாக புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கும் வளாகத்தில்! இணையத்தில் ஆனாலும் அங்கே எடுத்த படங்கள் நிறையவே உண்டு.


 பிரார்த்தனை உருளைகள்....

நாங்களும் வளாகத்தின் உள்ளே சென்று புத்தபெருமானை தரிசித்து, ”ஓம் மணி பத்மே ஹம்” என்று சொல்லிக்கொண்டே உருளைகளை உருட்டினோம். புத்தர் கோவில்கள் அனைத்திலும் இப்படியான உருளைகள் உண்டு. இதைப் பற்றி எனது முந்தைய பதிவுகளிலும் எழுதியதுண்டு.  புத்த மதத்தினைத் தொடர்பவர்கள் மட்டுமல்லாது இக்கோவில்களுக்கும் வரும் பலருக்கும் இந்த மந்திரங்களும், மந்திர உருளைகளும் மிகவும் முக்கியமான ஒரு விஷயம்.  எனது முந்தைய பயணத்தொடரான “ஏழு சகோதரிகள்” எழுதும்போது கோர்சம் எனும் இடத்தைப் பற்றி எழுதும்போது எழுதிய விஷயத்தினை கீழே தருகிறேன்.

புத்த மத வழிபாட்டுத் தலங்கள் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது அங்கே இருக்கும் உருளைகள் தான். கோர்சம் ஸ்தூபாவிலும் இப்படி பிரகாரம் முழுவதும் உருளைகள். மூன்று, நான்கு, ஏழு என வரிசை வரிசையாக உருளைகள். அதன் மீது பொறித்திருக்கும் எழுத்துகள். அந்த உருளைகளைச் சுழற்றியபடியே பிரகாரத்தினைச் சுற்றி வருவார்கள். இந்த உருளைகளில் என்ன எழுதி இருக்கிறது. பெரும்பாலான உருளைகளில் “ஓம் மணி பத்மே ஹம் என்று சமஸ்கிருத மொழில் எழுதி இருக்கிறது.  மரம், உலோகம், கல், தோல் போன்றவற்றில் தயாரான மைய அச்சில் சுழலும் வகையில் இந்த உருளைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மந்திரம் தவிர அஷ்டமங்களா என அழைக்கப்படும் எட்டு வித உருவங்களும் இவற்றில் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. மந்திரங்களைச் சொல்வதால் கிடைக்கும் பலன்களை, மந்திரங்கள் பொறிக்கப்பட்ட இந்த உருளைகளைச் சுழற்றுவதாலும் பெறலாம் என்பது புத்த மத நம்பிக்கை.

 புத்தகங்களிலோ அல்லது ஏடுகளிலோ இருக்கும் இந்த மந்திரங்களை படிக்கத் தெரிந்தவர்கள் மட்டும் தான் பலன் அடைய வேண்டுமா? படிக்காதவர்களுக்கு, படிக்கத் தெரியாதவர்களுக்கு தர்மத்தின் பலன் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதும் புத்த மதத்தில் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். வழிபாட்டுத் தலங்கள் அமைக்கும்போது அங்கே நிச்சயம் இம்மாதிரி உருளைகள் அமைக்கப்பட வேண்டும். அப்படி அமைத்தால், அவற்றைச் சுழற்றுவதன் மூலம், அம்மந்திரங்களைப் படித்த பலன் உருளைகளைச் சுழற்றும் படிக்காத மக்களுக்கும் கிடைக்கும் என்ற நல்லெண்ணம் அவர்களுக்கு இருந்திருக்கிறது.

 இந்த உருளைகளைச் சுழற்றுவது எப்படி என்பதையும் சொல்லி இருக்கிறார்கள் – வேகவேகமாகச் சுழற்றுவதால் அதிக பலன் கிடைக்கும் என்பதல்ல....  பொறுமையாக, ஒரே வேகத்தில் சுழற்ற வேண்டும், அதைச் சுழற்றும் சமயத்தில் ”ஓம் மணி பத்மே ஹம் எனும் மந்திரத்தினையும் மனதுக்குள் சொல்லிக் கொண்டே சுற்றினால் அதிக பலன் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. கோர்சம் ஸ்துபாவில் இப்படி 108 உருளைகள் இருக்கின்றன. மந்திரத்தினை 108 முறை சொன்ன பலன்! இந்து மதத்திலும் 108 – இங்கேயும் 108!பிரார்த்தனை - பக்கத்தில் இருக்கும் நண்பர் கேமராவினைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்!.....

தரம்ஷாலா புத்தர் கோவிலிலும் 108 உருளைகள் தான்.  அவற்றை உருட்டியபடி ஒரு வலம் வந்தோம். புத்தர் சிலை முன்னர் பெரிய ஹால் இருக்கிறது – அங்கே சில பலகைகளும் போட்டிருக்க, அதில் அமர்ந்து நீங்கள் பிரார்த்திக்கலாம் – நாங்களும் சில நிமிடங்கள் அங்கே அமர்ந்து எங்களுக்குத் தெரிந்த வகையில் பிரார்த்தனை செய்தோம். தலாய் லாமா அவர்களைப் பார்த்தோமா? என்றால் பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பெரும்பாலான நாட்களில் அவர் பயணத்திலே இருக்கிறார் என்பதால் பார்ப்பது கடினம் தான். அங்கே இருக்கும்போது நிறைய பேர் தரிசிக்க வருவார்கள் என்று தெரிந்து கொள்ள மட்டுமே முடிந்தது. தலைநகர் தில்லியில் ஒரு முறை அவரை நேரில் பார்த்ததுண்டு.  


திபெத் பிரச்சனையும் அதைச் சொல்லும் சிலையும்......உள்ளூர் காய்கறிகள்......

வளாகத்தின் வெளிப்புறத்தில் நிறைய பதாகைகள் – திபெத் பிரச்சனை பற்றி வைத்திருக்கிறார்கள். அரசியல் என்பதால் அதிலிருந்து விலகியே இருப்போம். வளாகத்திலிருந்து தரம்ஷாலா மலைத்தொடர்களைப் பார்க்க ஒரு வித பரவசம். சில பல புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வளாகத்திலிருந்து வெளியே வர உள்ளூர் காய்கறிகள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். அவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டோம்.  அடுத்ததாய் சென்ற இடம் என்ன, அங்கே என்ன பார்த்தோம் என்பவற்றை வரும் பதிவில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

42 comments:

 1. படங்கள் அழகு. சுவாரஸ்யமான விவரங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. ஆகா
  படங்களும் பகிர்வும்அருமை ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. புத்தர் கோயிலைப் பற்றிய தகவல்கள் அருமை..
  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 4. சுவாரஸ்யமான தகவல்கள். நன்றி! த ம +1.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌதமன் ஜி!

   Delete
 5. பிரார்த்தனை உருளைகள்..முன்னரே நீங்கள் கூறியது..வித்தியாசமான வழிபாட்டு முறை..படங்கள் அருமை. இங்குள்ள புத்தர், புத்தகயாவிலிருக்கும் புத்தரிடமிருந்து சற்று மாறுபட்ட நிலையில் உள்ளார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 6. புத்தர் கோவிலும் அழகு, இடமும் அழகு. தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 7. பிரார்த்தனை உருளைகள் பற்றிய தகவல்கள் வெகு அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 8. என்ன தொழிலில் இருக்கிறீர்கள்? ஆண்டு முழுவதும் டூரிஸ்ட் ஆக இருக்கிறீர்களே எப்படி?

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி.

   ஆண்டில் ஒன்று அல்லது இரண்டு சுற்றுலாக்கள் மட்டுமே - அதுவும் சில நாட்களுக்கு. மற்ற எல்லா நாட்களிலும் இடைவிடாத பணி தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விநாயகம் ஜி!

   Delete
 9. புத்தர் கோவிலின் உருளையில் உள்ள விஷயங்கள் பற்றி தெளிவாய் பகிர்ந்து இருக்கறீர்கள் நன்றி எப்படி சகோ இவ்வளவு விரிவாய் அருமையாய் எழுதுகிறீர்கள் எதையும் விடாமல் அங்கேயே எழுதிவைத்துவிடுவீர்களோ குறிப்பாய்..... இயற்க்கை காட்சிகளின் படங்கள் அருமை

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு பயணத்தின் போதும் குறிப்புகள் எடுத்துக் கொண்டே இருப்பது வழக்கம். கூடவே புகைப்படங்கள். இவற்றை வைத்துக் கொண்டு விரிவாக எழுதுவது வழக்கமாக இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

   Delete
 10. அழகிய படங்கள் சுவாரஸ்யம் தொடர்கிறேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 11. புகைப்படங்களும் விபரங்களும் மிக அருமை! தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா முதைய இடங்களில் இருக்கும் புத்தர்களைப்போல இந்த புத்தரும் மிக அழகாக, கருணை ததும்பும் முகத்துடன் இருக்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   Delete
 13. ஆஹா மிக அருமை... இக் காய்கறிகள் இங்கும் கிடைக்கின்றன...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதிரா.

   Delete
 14. படங்கள் அழகு! வெங்கட்ஜி! அதே போன்று தகவல்களும்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 15. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 16. சுவாரசியமான விசயங்கள், ரசிக்க வைத்த படங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 17. பிரார்த்தனை - உருளையை சுற்றி வணங்கினால் அவர்கள் வேதத்தை படித்த மாதிரி என்று சொல்லிசீனாவில் விற்றார்கள். கைலாயம் போன போது காரில் சூரிய ஓளியில் சுற்றுவது வாங்கி வந்தோம்.
  இனி நீங்கள் சொன்ன மந்திரத்தை சொல்லி சுற்றி விடுகிறேன்.
  எல்லோரும் மன அமைதியும், மகிழ்ச்சியுமாய் இருக்கட்டும்.
  நல்ல பகிர்வு. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. எல்லோரும் மன அமைதியுடனும் மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும். அது தான் இப்போதைய தேவை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 18. வணக்கம்
  ஐயா
  அறியாத பல தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல. த.ம12
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிஞர் ரூபன்.

   Delete
 19. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா....

   Delete
 20. அருமை! தொடர்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....