எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, November 3, 2017

பிட்டூ சுமந்த கதை – காஷ்மீரிலிருந்து தரம்ஷாலா!இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 3

முந்தைய பகுதிகளை படிக்காதவர்கள் வசதிக்காக - பகுதி-1 பகுதி-2


பிரதான சாலைக்கு பின் சாலை! 

தரம்ஷாலா – மலைப்பகுதி என்றால் சாலைகள் எல்லாமே ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும், அந்த மலைப்பகுதியில் இறங்கி தங்குமிடம் தேட வேண்டும் என்பது கொஞ்சம் சவாலான விஷயம் தான் – அதுவும் முதுகுச் சுமையோடு. நாங்கள் ஐந்து பேர் என்பதால், மூன்று பேர் எங்கள் உடைமைகளை வைத்துக்கொண்டு ஓரிடத்தில் காத்திருக்க, மற்ற இருவர் தங்குமிட வேட்டையைத் துவங்கினோம். வட இந்திய நகரங்களில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் பின்னிரவு தூங்கி நண்பகலில் விழிப்பவர்கள்! காலை நேரங்களில் சாலைகளில் நடமாட்டம் குறைவாகத் தான் இருக்கும். தங்குமிடங்கள் சிலவற்றின் வாசல் கம்பிக் கதவுகள் பூட்டி இருக்க, உள்ளே சிப்பந்திகள் நல்ல உறக்கத்தில்! கதவைத் தட்டினாலும் எழுந்திருக்கவில்லை. ஹிமாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலாத் துறையுடைய தங்குமிடம் இருக்க அவர்கள் சொன்ன அறை வாடகை எங்களுக்கு ஒத்து வராது என்பதால் அங்கிருந்து புறப்பட்டோம்.


இப்படி தேடிக்கொண்டிருக்கையில் சாலைகளில் காத்திருந்த ஒரு முதியவர் எங்களிடம் வந்தார். தங்கும் அறை வேண்டுமா? பார்க்கும்போதே காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர் எனச் சொல்ல முடிந்தது. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மலைப்பகுதிகளில் நடந்தே பொருட்களை சுமந்து செல்லும் பணியைச் செய்பவர்கள். ஜம்முவில் உள்ள வைஷ்ணவ் தேவி கோவிலுக்குச் செல்லும் பாதையில் இப்படி பலரை பார்க்க முடியும். அவர்களுக்கு பிட்டூ என்று பெயர்! முதுகில் சுமந்து செல்லும் பையைக் கூட ஹிந்தியில் பிட்டூ என்று சொல்வதுண்டு.  பொருட்கள் மட்டுமல்லாது குழந்தைகளை முதுகில் துணி வைத்து கட்டிக்கொண்டு மலைப்பகுதிகளில் ஏறி/இறங்கிச் செல்வார்கள். மலைப் பகுதிகளில் எந்த வித சுமையும் இல்லாது நடப்பதே பெரும்பாடு – இதில் சுமையோடு நடப்பது எவ்வளவு கடினமான விஷயம்! எங்கே இருக்கிறது நீங்கள் சொல்லும் தங்குமிடம் எனக் கேட்க, பிரதான சாலைக்கு பின்புற சாலையில் என்று சொன்னார். சரி என நானும் இன்னுமொருவரும் அவருடன் சென்றோம்.

மலைப்பாதைகளில் வெகு சரளமாக அவர் வேகமாக நடக்க, நாங்கள் அவரோடு ஓடினோம்! அவர் நேராகச் சென்றது ஒரு தங்குமிடத்திற்கு! அங்கே உள்ள நபரிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்லி காத்திருந்தார் அந்த பிட்டூ! அவர் சொன்ன வாடகையும் ஒத்து வர, அறைகளைச் சென்று பார்த்தோம். சுத்தமாகவே இருந்தது. இரண்டு அறைகளை எங்களுக்கு ஒதுக்கித் தந்தார். நான் அங்கேயே நின்று அவர்களின் வருகை பதிவேட்டில் விவரங்களை எழுத, நண்பரும் பிட்டூவும் மற்ற நண்பர்கள் காத்திருந்த பிரதான சாலைக்கு சென்றார்கள். பிட்டூ எங்களின் பெரும்பாலான உடைமைகளைச் சுமந்து வர சிலவற்றை நண்பர்கள் எடுத்து வந்தார்கள். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் வைத்துவிட்டு அவருக்கு நாங்களாகவே கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டார். அவரிடம் கொஞ்சம் பேசினேன். 

பனிப்பொழிவு அதிகம் இருக்கும் நாட்களில் அவருடைய ஊரான காஷ்மீரத்தில் வேலை எதுவும் கிடைக்காது என்பதால் அந்த நாட்களில் [சுமார் ஐந்து மாதங்கள்] இவரும் இவர் ஊரைச் சேர்ந்த வேறு சிலரும் இது போன்ற மலைப்பகுதிகளுக்கு வந்து விடுவார்களாம். இங்கே இருக்கும் நேரத்தில் இது போன்று சுமக்கும் வேலை செய்து கிடைக்கும் பணத்தினைச் சேமித்து ஊருக்கு அனுப்பி வைப்பார்களாம். காஷ்மீரத்தில் பனிப்பொழிவு நாட்களில் வசிப்பது கடினமான விஷயம். என்னதான் கம்பளி உடைகள் போட்டுக்கொண்டு, சூட்டுக்காக “Khகேவா” எனும் மலைத் தேநீர் அருந்தினாலும் அங்கே இருப்பது ரொம்பவும் கஷ்டம். வயிறு இருக்கிறதே, ஊரில் எங்கள் பெண்டாட்டி பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதால் இப்படி வேலை செய்ய வந்து விடுவோம் என்று தன் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருடன் பேசியதில் அவருக்கு ரொம்பவும் மகிழ்ச்சி. பொதுவாக உல்லாசப் பயணம் வருபவர்கள் அவர்களை மதிப்பதே இல்லை, பேசுவதும் இல்லை என்றும் வயதுக்குக் கூட மரியாதை கொடுப்பதில்லை என்றும் தன் குறையாகச் சொல்லி, நீங்கள் தான் இப்படி என்னிடம் பேசி இருக்கிறீர்கள் என தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். உங்களது உல்லாசப் பயணம் சிறப்பாக அமையட்டும் என்று சொன்ன அவரிடம், நாங்கள் கொடுத்த கூலிப் பணம் சரியா, இல்லை குறைவாகக் கொடுத்தோமா எனக் கேட்க, நீங்கள் கொடுத்ததே அதிகம், தவிர, ஹோட்டல் உரிமையாளரும் அறைக்கு 50 ரூபாய் வீதம் தருவார் எனச் சொல்லி மீண்டும் நன்றி சொல்லி புறப்பட்டார்.  பெரும்பாலும் இப்படி வருபவர்களிடம் பேரம் பேசுவதில்லை. நமக்குக் கட்டுப்படி ஆகாது என்று நினைத்தால், மறுத்து நகர்வதே வழக்கம்.  அந்த மூத்த பிட்டூ அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சாலையில் வேகமாக அடுத்த வேலைக்காக நடந்து செல்வதை அறையின் ஜன்னல் வழியே பார்க்க முடிந்தது.


நாங்கள் தங்கிய இடத்தின் வாயிலில்....  

முதல் நாள் இரவு புறப்பட்டது. என்ன தான் பேருந்தில் உறங்கினாலும், வீட்டில் உறங்குவது போல இருக்காது அல்லவா! ஆனால் படுத்தால் தூங்கி எப்போது எழுந்திருப்போம் எனத் தெரியாது! ஒவ்வொருவராக குளித்து தயாராக முடிவு செய்தோம். அது சரி தங்குமிடம் எது என்றே சொல்லவில்லையே என்பவர்களுக்காக இதோ அந்த தகவல்! நாங்கள் தங்கிய இடத்தின் பெயர் Hotel Holiday Home! ஆண்கள் மட்டுமே சென்றால் பரவாயில்லை. குடும்பத்துடன் செல்வதென்றால் Himachal Tourism நடத்தும் தங்குமிடத்திற்குச் செல்வது நல்லது! நாங்கள் அனைவரும் குளித்து தயாராகி வருகிறோம்! நீங்களும் காத்திருங்கள் உங்களுக்கு தரம்ஷாலா சுற்றிக் காட்டுகிறேன்! ஓகேவா!

தொடர்ந்து பயணிப்போம்

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

32 comments:

 1. அன்பு ஒன்று தான் எல்லாரையும் இணைப்பது..
  பெரும்பாலோர் இதனை உணர்வதில்லை..

  சுமை எடுத்து வந்த முதியவரிடம் தாங்கள் பேசியது
  அவருக்கு மட்டுமல்ல எனக்கும் மகிழ்ச்சி..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 2. பிட்டூ/சுமை தூக்குபவரிடம் எல்லாம் எல்லோரும் பேசுவது கிடையாது ஜி! அவர் சொல்லுவது போல்தான் நடக்கிறது. பிட்டூவிடம் நீங்கள் கனிவுடன் பேசியது மிக மிக மகிழ்ச்சி வெங்கட்ஜி! பாவம் தான் அவர்களின் வாழ்க்கை. எதிர்பார்ப்பற்ற அன்பு ஒன்றே இவ்வுலகை இணைக்கும்! தொடர்கிறோம் ஆவலுடன்!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. எதிர்பார்பில்லாத அன்பு ஒன்றே - அது தான் அரிதாக இருக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 3. அந்தப் பெரியவரின் புகைப்படம் ஒன்று (எடுத்து) போட்டிருக்கக் கூடாதோ!

  ReplyDelete
  Replies
  1. கேமரா உள்ளே இருந்தது. அதுவும் இல்லாமல் அவர் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவாரா என்பதும் தெரியவில்லை. சில சமயங்களில் கேட்க முடிவதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. மூத்த பிட்டூ அவர்களின் படத்தைக் காணோமே. மனதுக்கு நெகிழ்வான சம்பவம். தங்குமிடம் நன்றாக இருந்ததா? ஏன் குடும்பத்துடன் வருபவர்களுக்குச் சரிப்படாது என்பதுபோல் எழுதியிருக்கிறீர்கள்?

  ReplyDelete
  Replies
  1. பயணத்தின் போது கேமரா உள்ளே வைத்தது. வெளியே எடுக்காததால் படம் எடுக்கவில்லை. கூடவே அவர் படம் எடுக்க சம்மதிப்பாரா என்றும் தோன்றியதால் எடுக்கவில்லை.

   குடும்பத்துடன் தங்க ஏன் சரிப்படாது - அது பற்றி வரும் பதிவுகளில்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 5. முதியவர் பிட்டூ சொன்னவைகள் நெகிழ வைத்த்து.
  பயணத்தை தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 6. இப்படி கூலி தொழிலாளர்கள் என்றுமட்டுமல்ல பப்ளிக்கூடன் தொடர்பு கொண்டு வேலை செய்பவர்கள் அனைவரும் இப்படிதான் யாராவது அன்போட விசாரிக்கமாட்டார்களா என்று எதிர்பார்ப்பார்கள் அவருக்கு ஆதரவாக சில விஷயங்கள் பேசினால் அதன் பிறகு நாம் வேண்டியவைகளை முகம் சுழிக்காமல் செய்து தருவார்கள்

  ReplyDelete
  Replies
  1. முகம் சுழிக்காமல் வேலை செய்து தருவார்கள். உண்மை தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 7. பயணங்களில் இதுபோன்ற நல்ல இதயங்களைக் காணும் வாய்ப்பு கிடைப்பது அரிது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 8. உங்களின் அன்பான பழக்கத்திற்கு வாழ்த்துகள் ஜி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 9. யாரும் எங்களிடம் பேசுவதில்லை என்ற முதியவரின் ஆதங்கம் வருத்தமளித்தது.
  சுற்றிக்காட்டுங்கள்... காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 10. பொதுவாக நீங்கள் சொல்வதுபோல் இது போன்று பணி/உதவி செய்பவர்களை நம்மில் பலர் பிட்டூ சொன்னதுபோல் மதிப்பதும் இல்லை. பேசுவதும் இல்லை. நீங்கள் அவ்வாறு இல்லை என அறிந்து மகிழ்ச்சி! பாராட்டுகள்! தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 11. நீங்கள் கொடுத்து வைத்தவர் ஓயாது பயணம் செய்கிறீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. கொடுத்து வைத்தவர்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 12. அன்பான விசாரிப்பு அவரின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது அவரின் கூற்றில் தெரிகிறது அவர் மனதில் உங்களையெல்லாம் ஆசிர்வாதம் செய்திருப்பார்
  நானும் வைஷ்ணவி கோவில் அமர்நாத் சென்றபோது இப்படி பிட்டூகளின் உதவிகள் பெறப்பட்டு இருக்கிறது எங்கள் குழுவால் அவர்களின் வலுவின் முன் நாமெல்லாம் ஒன்றுமில்லையென்றே தோன்றியது

  ReplyDelete
  Replies
  1. அவர்களின் வலு... மிகவும் பலசாலிகள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

   Delete
 13. மலைப்பிரதேசத்துக்கு ஒரு விசிட் அடிக்கனும். அதும் உங்களோடு.. சுத்திக்காட்ட இல்ல என்னை படமெடுக்க.. உங்க கேமராவுலயாவது நான் அழகா தெரியுறேனான்னு பார்க்கனும்

  ReplyDelete
  Replies
  1. உங்க கேமராவுலயாவது நான் அழகா தெரியுறேனான்னு பார்க்கணும்! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 14. இந்தப் பதிவால் காஷ்மீரிகள் பற்றிய எண்ணம் மாறலாம்

  ReplyDelete
  Replies
  1. லாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   Delete
 15. you have got style ...
  nice to read

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 16. பயணங்களில் அறை வாடகைதான் அதிகமாக ஆகிறது. நல்ல இடம் வேணுமென்றால் கொடுக்கத்தானே வேணும். ஆண்களாக இருப்பதில் பயணம் சுகம். எங்களுக்குத்தான்.....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....