எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, November 4, 2017

சே குவேராவும் தமிழக இளைஞர்களும் – யாருக்கு விடுதலை?


தமிழகத்தில் இருந்த போது சில பேருந்து பயணங்கள். ஒவ்வொன்றிலும் சில அனுபவங்கள். பொதுவாகவே இளைஞர்கள் சே குவேராவின் படம் போட்ட T-Shirt அணிவதைப் பார்ப்பதுண்டு. இந்த முறை திருப்பராய்த்துறை செல்லும் ஒரு 97-ஆம் நம்பர் பேருந்தில் பார்த்த சிறுவன் அரை ட்ராயரில் சே குவாராவின் படத்தினை ப்ரிண்ட் செய்திருந்தார்கள்! ரெடிமேட் ஆடை. அவரின் முகம் இருந்த இடம் தொடையிலும், தொடைகளுக்கு நடுவிலும்! இப்படி ஒரு மரியாதை செய்வதைத் தவிர்த்திருக்கலாம். அந்த சிறுவனுடன் அவனது நான்கு ஐந்து நண்பர்களும் பேருந்தில் பயணித்தார்கள். எனது இருக்கையின் அருகேயே நின்று கொண்டு பேருந்தில் தங்கள் பயணத்தை ரசித்தபடி, Comments செய்த படி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் போட்டி வேறு, மேலுள்ள கம்பி பிடிக்க முடியாது – அத்தனை உயரமில்லை, பக்கவாட்டு கம்பிகளைப் பிடிக்காமல் நிற்க வேண்டும் என்ற போட்டி!


அதிலே ஒல்லியாக உள்ள சிறுவன் பலமுறை தடுமாறி விழப்போனான், ஆனாலும் கெத்தை விடக்கூடாது என கம்பிகளைப் பிடிக்காமல் இருந்தான்! எனக்கு சூனா பானா வடிவேலு நினைவுக்கு வர, அச்சிறுவனிடம் “உன் பேர் என்ன சூனா பானாவா?” என்று கேட்க, அச்சிறுவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. சிறுவனை நண்பர்கள் அனைவரும் சூனா பானா என அழைக்க ஆரம்பித்தார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து அவனுக்கு இல்லாத மீசையை தடவச் சொல்ல, அவன் மீசையை முறுக்கிக் காண்பிக்க ஒரே குதூகலம் அச்சிறுவர்களுக்கு. அனைவருக்குமே மீசை முளைத்திருந்ததோ இல்லையோ, வால் முளைத்திருந்தது. ஏதாவது விஷமம் செய்த வண்ணமே இருந்தார்கள். பேருந்தில் இருந்த பல காதல் ஜோடிகளைப் பார்த்து, அவர்கள் செய்து கொள்ளும் சில்மிஷங்களைப் பார்த்து அவர்களுக்குள் சங்கேத மொழி – சே குவாரா கால்சட்டை அணிந்திருந்த சற்றே புஷ்டியான பையன், “அங்கே பாருடா அவங்க என்னவோ பண்ணுறாங்க!” என்று சத்தமாகவே சொல்ல, அனைவரின் பார்வையும் தடுமாறியது!

எங்கே செல்கிறார்கள், எந்த ஊர் என கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடன் பேச்சுக் கொடுத்தேன்!  எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் – திருச்சியைச் சுற்றி இருக்கும் பல சிற்றூர்களில் ஒன்றில் வசிப்பவர்கள். முக்கொம்பு சுற்றிப் பார்க்க செல்கிறார்களாம்! தீபாவளிக்கு அடுத்த நாள் என்பதால் பள்ளி விடுமுறை! நான்கு-ஐந்து சிறுவர்கள் மட்டும், பெரியவர்கள் துணை இல்லாது சுற்றுலா! இந்த வயதில் இப்படிச் சுற்றுவது பெரிய விஷயம்! அது சரி வீட்டில் என்ன சொல்லிட்டு வந்திருப்பார்களோ என ஒரு சந்தேகம். என்னப்பா, ”ஸ்கூல்ல ஸ்பெஷல் கிளாஸ்னு பொய் சொல்லிட்டு  வந்தீங்க தானே?” என்று கேட்க, ”இல்லைண்ணா, முக்கொம்பு போறோம்னு சொல்லிட்டு தான் வந்தோம்”, எனச் சொன்னதோடு, ”இங்கே ஜோடிஜோடியா இருக்க நிறைய அண்ணா-அக்கா எல்லாம் வீட்டுல அப்படிச் சொல்லிட்டுதான்  முக்கொம்பு போறாங்க!” என்று கூடுதல் தகவல் சொன்னார்!

“அப்படியெல்லாம் தெரியாம சொல்லக்கூடாது” என நான் சொல்ல, அச்சிறுவன் என்னை ஒரு பார்வை பார்த்து, “பாவம் பச்சை புள்ளையா இருக்கே இந்த அண்ணன்” என்பது போல ஒரு பார்வை பார்த்து, ”அவங்களே பேசிக்கிட்டாங்க அண்ணே” என்று சொன்னார். ம்ம்ம்ம்…. என்னத்த சொல்ல. நிறைய விஷயங்கள் அந்த முக்கால் மணி நேர பயணத்தில் பேசினோம். அப்படி பேசிய ஒரு விஷயம் தான் தலைப்பில் சொன்ன சே குவாரா விஷயமும். அந்த விஷயத்திற்கு வருகிறேன். அவரின் படத்தினை அரை ட்ராயரில் போட்டிருந்த பையனிடம் “இவர் யார் தெரியுமா?” என்று கேட்க, “சேகுவார்!” என்று சொன்னான். நல்ல வேளை சேக்கிழார் என்று சொல்லாமல் விட்டானே! அவரைப் பற்றி கொஞ்சமாவது தெரியுமா? என்று கேட்க, உடனடியாக பதில் வந்தது! “இலங்கைக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார் சேகுவார்!” ”அடேய்…  இலங்கைக்கா விடுதலை வாங்கிக் கொடுத்தார்?” என்று நான் கேட்க, உடனே அடுத்த பதில் – இலங்கைக்கு இல்லண்ணே, இந்தியாவுக்கு தான் விடுதலை வாங்கிக் கொடுத்தார்! இந்த இரண்டாவது பதிலுக்கு முதல் பதிலே பெட்டர்! :( 

டேய் டேய், அவர் க்யூபா புரட்சியில் பங்கு கொண்டவர், அவரைப் பத்தி கொஞ்சம் படிச்சுட்டாவது அவரைக் கொண்டாடுங்கடா என்று சொல்ல நினைத்தேன். அதற்குள் முக்கொம்பு நிறுத்தம் வர, குதூகலத்துடன் இறங்கிச் சென்றார்கள்.   

சே குவாரா யார் என்று தெரியாது, அவரது வாழ்க்கையில் செய்த பல நல்ல செயல்கள், யாருடன் சேர்ந்து புரட்சி செய்தாரோ அவரே இவரின் முடிவுக்குக் காரணமானது, அவரின் முடிவு எப்படி இருந்தது என எதுவுமே தெரியாது. அவர் சொன்ன கருத்துகள் எதுவும் தெரியாது, தெரிந்தாலும் கடைபிடிக்கப் போவதில்லை! என்றாலும் சே குவாரா படம் போட்ட T-Shirt/Trouser மட்டும் போட்டுக்கொள்வது தான் புரட்சி என நினைக்கும் இளைஞர்கள் இங்கே நிறைய இருக்கிறார்கள்! அவருடைய ஒரு பொன்மொழி நினைவுக்கு வந்தது - அது…. 

I am not a liberator. Liberators do not exist. The people liberate themselves!

மீண்டும் ச[சி]ந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

26 comments:

 1. என்னைய அண்ணேனு சொல்லிட்டாங்க பசங்க" அவ்வ்வ்வ்வ்...நு சந்தோஷமா வடிவேலு ஸடைல்ல சொல்லிக்கங்க வெங்கட்ஜி!!!

  எட்டாம் வகுப்பு படிக்கும் போது தனியாக இப்படி நண்பர்கள் குழாம் சுற்றுலா என்பதெல்லாம் இப்போது சகஜம் என்று தோன்றுகிறது. வியப்பாகவும் இருக்கு. பெற்றோர் அனுமதிப்பதும் உட்பட.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 2. கடைசி பத்தி அருமை! ஜி சேகுவாரா பற்றி ஒன்றும் தெரியலைனாலும் கூட ஓகே இலங்கைக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார் ஓகே அதையும் விடுவோம்...இந்தியாவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார்!!!!! என்னென்னவோ சொல்லத் தோன்றுகிறது.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 3. ஏதோ அரைகுறையாக அவர் பெயராவது தெரிந்து வைத்திருக்கிறார்களே..... ஒரு செலிபிரிட்டி என்கிற அளவில்!

  ReplyDelete
  Replies
  1. ஒரு செலிபிரிட்டி என்ற அளவில் தெரிந்து வைத்திருக்கிறார்கள்... உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. தமிழ்நாட்டில் திடீரென்று புரட்சியாளர்கள் நிறைய பேர் கிளம்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு கியூபாவைப் பற்றியோ, சேகுவாரா பற்றியோ ஒரு மண்ணும் தெரியாது. எவனாவது சினிமாவில் ஒரு டி-சர்ட் போட்டால், அதையே இவர்களும் பின்பற்றுவார்கள். நாமம் போட்டவனெல்லாம் நாராயணன் ஆக முடியுமா? :-)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை அண்ணா.

   Delete
 5. பதிவின் இறுதியில் தந்துள்ள சே குவாரா வின் பொன் மொழி அருமமை! பகிர்ந்தமைக்கு நன்றி! பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் பிடித்த வரிகள் அவை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 6. என்னையும் பதிவின் இறுதியி இருந்த பொன்மொழி ஈர்த்தது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   Delete
 7. /என்னையும் பதிவின் இறுதியில் இருந்த பொன்மொழி ஈர்த்தது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   Delete
 8. சிறுவன் சேகுவாராவின் பெயரினைத் தெரிந்து வைத்திருந்ததே பெரிய விசயம்தான் ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 9. சேகுவாரா பற்றி ஒரு பதிவர் பதிவு எழுதி இருந்தார் அதன் பிந்தான் சேகுவாரா பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 10. காதல் ஜோடிகள் பற்றி நாலு வரி கிளுகிளுன்னு எழுதமால சும்மா சேகுவார் பற்றி எழுதி பதிவை முடித்தற்கு கண்டணங்கள்

  ReplyDelete
  Replies
  1. கிளுகிளுன்னு எழுதாமல்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 11. போகட்டும் விடுங்க எதோ சினிமாக்காரன் அப்டி இப்படினு உளறாம எதோ ஒரு விஷயத்து போராடனவருனு சொன்னாங்களே சந்தோஷபட்டுக்கோங்க முக்கியமா பேர தெரிஞ்ச வச்சியிருக்காங்க அதுவே பெரிசு

  ReplyDelete
  Replies
  1. பேர் தெரிந்து வைத்திருப்பதே பெரிது! உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

   Delete
 12. நன்றாக சிரித்தேன் ....

  சேகுவாரா .. சான்ஸே இல்லை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 13. எல்லாம் சரி நாகராஜ். சேகுவேராவின் முடிவுக்கு (இறப்பிற்கு) காரணம் யாரென்று சொல்ல வருகிறீர்கள்? பிடல் காஸ்ட்ரோ என்றா?
  இல்லை. அவர் பொலிவியாவில் அமெரிக்க ஏஜெண்டுகளால் தான் கொல்லப்பட்டார் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். தவறாக இருந்தால் சரியான கருத்துக்களை தருவீர்கள் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அவரது மறைவில் நிறையவே சந்தேகங்கள் உண்டு. அவர் பொலிவியா செல்ல விரும்பவில்லை என்றும் அங்கே இஷ்டமில்லாமல் அனுப்பி வைக்கப்பட்டார் என்றும் சொல்வதுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பொன் பாரதிராஜா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....