எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, December 29, 2017

ஒரு திருமணமும் அதன் விபரீத விளைவும்


வட இந்திய மாநிலங்களில் ஒரு பழக்கம் உண்டு – குறிப்பாக ஹரியானா, உத்திரப் பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களில் இப்பழக்கம் வெகு சாதாரணம். என்ன பழக்கம்?

ஒரு குடும்பம் – ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். அந்த ஆண் பெண்ணுடன் குடும்பம் நடத்தி, பிள்ளைகள் பெற்று சில ஆண்டுகள் கழித்து இறந்து விட்டால், வீட்டில் இருக்கும் வேறு ஒரு ஆணுக்கு, அது அந்த ஆணின் தம்பியாக இருக்கலாம், அல்லது அண்ணன் மகனாக இருக்கலாம், சில சமயம் இறந்த ஆணின் அப்பாவாகக் கூட இருக்கலாம், விதவையான பெண்ணுடன் மீண்டும் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அதற்கு இந்தப் பகுதி மக்கள் சொல்லும் காரணம் – வேறு எந்த ஆணும் இந்தப் பெண்ணை கஷ்டப்படுத்த மாட்டார்கள், திருமணம் ஆன பெண் என மரியாதையுடன் நடத்துவார்கள் என்பது தான். சில வீடுகளில் கணவன் இருக்கும்போதே கூட வீட்டிலுள்ள மற்ற ஆண்களும், அப்பெண்ணை பயன்படுத்திக் கொள்ளும் அவலமும் ஹரியானாவில் உண்டு.

பல சமயங்களில் இந்த மாதிரி திருமணம் செய்து வைப்பது விபரீத முடிவைத்தர வாய்ப்புண்டு. ஆனாலும், கிராமப் பஞ்சாயத்தார், அல்லது வீட்டின் மூத்தவர்கள் சொல்லி விட்டால், அப்பெண்ணால் வேறு ஏதும் செய்ய முடியாது. விருப்பம் இருக்கிறதோ, இல்லையோ திருமணம் நடந்தே தீரும். பாதுகாப்பிற்காக மறு திருமணம் என்று சொன்னாலும், அப்பெண்ணை, இது நாள் வரை அண்ணியாக, மருமகளாக, சித்தியாக நினைத்து வந்தவரை, மனைவியாக பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதற்கு சமூகத்தில் அனுமதியும் இருப்பது கொடுமை. சமீபத்தில் இப்படி ஒரு நிகழ்வு பீஹாரில்! அது பற்றி படித்த போது மிகவும் வேதனையாக இருந்தது. வேதனை தந்த அந்த நிகழ்வு, என்ன நிகழ்வு?

திருமணம் ஆன ஒரு ஆணும் பெண்ணும் பீஹாரில் வாழ்ந்து வந்தார்கள். திருமணம் ஆன அந்த ஆணுக்கு நிறைய வயது வித்தியாசத்தில் ஒரு சகோதரன். ஆணின் அம்மாவும் இறந்திருக்க, அவரது மனைவி தான் அந்த சகோதரனை வளர்த்து ஆளாக்குகிறார். இப்படி இருக்கையில், ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் மூத்த சகோதரன் விபத்தில் இறந்து போகிறார். தொழிற்சாலையிலிருந்து ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடாகக் கிடைக்கிறது. அந்த பணத்தினை, ஆணின் அப்பாவே வைத்துக் கொள்கிறார். கணவனை இழந்த பெண்ணும் அங்கேயே இருக்கிறார். ஆனால், விதவையான பெண்ணின் தந்தைக்கு இதில் கொஞ்சம் விருப்பமில்லை. அவர் இறந்தவரின் அப்பாவிடம் சில நிபந்தனைகளைச் சொல்கிறார்.

தொழிற்சாலையில் கொடுத்த ஒரு லட்சம் ரூபாயையும் பெண்ணிடம் கொடுத்து, அவரை தந்தை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், இறந்தவரின் சகோதரனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் – என்பது தான் அந்த நிபந்தனை.  ஒரு லட்ச ரூபாயை இழக்கத் தயாராக இல்லாததால், தனது சம்பந்தி சொன்னது போல, தனது 15 வயது மகனை, அப்பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். தனது தாயைப் போல இருந்த அண்ணியைத் தான் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காத அவரது தந்தை திருமணத்தினை முன்னின்று நடத்துகிறார். இரண்டு தந்தையர்களுக்கும் மகிழ்ச்சி. ஒரு லட்சம் போகவில்லையே என்று ஒருவர் மகிழ, தனது மகள் புகுந்த வீட்டிலேயே இருப்பார் என மற்றவர்க்கு மகிழ்ச்சி.

ஆனால் அந்த 15 வயது சிறுவனின் நிலை பரிதாபமானது. கணவனை இழந்த அந்தப் பெண்ணின் நிலையும் தான். இருவருக்குமே விருப்பமில்லாத ஒரு திருமணம். சிறுவனால் அந்த நிலையைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. திருமணம் ஆன அன்று மாலையே தற்கொலை செய்து கொள்கிறான் அச்சிறுவன். காலையில் திருமணம், மாலையில் மரணம்! என்னவொரு கொடுமை.  பணத்திற்காக இப்படி ஒரு ஏற்பாடு – அதுவும் மரணத்தில் முடிந்திருக்கிறது.  என்னதான் பால்ய விவாகம் அழிந்து விட்டது என அரசாங்கங்கள் சொன்னாலும், இன்னமும் நமது வட மாநில கிராமங்கள் பலவற்றில் இம்மாதிரி நடந்து கொண்டு தான் இருக்கிறது.

பணத்திற்காக தனது சொந்த மருமகளையே திருமணம் செய்து கொள்வாரா அல்லது அந்தப் பெண்ணை பணத்துடன் அவரது வீட்டிற்குத் திருப்பி அனுப்புவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒரு சிறுவனின் உயிர் பறிக்கப்பட்டது தான் மிச்சம். அந்தப் பெண்ணின் நிலையும் பரிதாபகரமானது. இனிமேல் என்ன நடக்கும் என்பதை யார் அறிவார்!

பாரதம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது, நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன என்று சொன்னாலும், பல கிராமங்களில் நிலை இதைவிட அடிமட்டத்திலேயே தான் இருக்கிறது. வல்லரசு ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பெரும்பாலானவர்கள் சொல்லிக் கொண்டிருக்க, இன்னமும் கீழேயே தான் இருக்கிறது நம் தேசத்தின் பல கிராமங்கள்….  

மீண்டும் ச[சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

36 comments:

 1. இன்று தம பட்டை தரிசனம் தந்து விட்டது. ஆனால் தளம் திறக்கத்தான் நெடுநேரம் எடுத்துக் கொண்டது!

  ReplyDelete
  Replies
  1. தளம் திறக்க நேரம் - சில சமயங்களில் இப்படித்தான்! த.ம. புரியாத புதிர்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. படிக்கவே மிகவும் கொடுமையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அரசாங்கம் ஆவன செய்யவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. கொடுமையான விஷயம் தான். பால்ய விவாகம் பற்றி பீஹார் மாநில அரசு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கின்றது. மனிதர்களின் மனம் இன்னமும் மாற வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. படு மோசமான கலாச்சாரம்...மூட நம்பிக்கைகள்...இன்னும் வட இந்தியாவில் அதிகமாக இருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்று....பாவம் அந்தப் பையன்...இதற்கெல்லாம் சட்டம் இல்லையோ? ஜி?

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அந்தப் பையன் ரொம்பவே பாவம். வேண்டாம் என்று சொல்லியும் கட்டாயக் கல்யாணம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 4. இவ்வாறான வழக்கங்களைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. அந்தப் பெண்களின் நிலையை நினைக்கும்போது நம் சமூகக்கட்டமைப்பின் அவலத்தைக் காணமுடிகிறது.

  ReplyDelete
  Replies
  1. சமூகக் கட்டமைப்பின் அவலம் - உண்மை தான் ஐயா. இன்னமும் பல விஷயங்களில் இப்படித்தான் இருக்கிறது இந்தியா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 5. Replies
  1. சோகம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நன்மனம்.

   Delete
 6. நினைக்கவே அதிர்ச்சிதான். தமிழகம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. சில விஷயங்களில் நம் தமிழகம் ரொம்பவே முன்னேறி இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 7. அடக்கடவுளே என்ன பழக்கவழக்கம் இது
  நீங்கள் சொல்வது உண்மை முன்னேறிவிட்டது என்று நாகரிக பொருட்களையும், மீடியாவை ,டிரான்ஸ்போர்ட் வசதி மட்டுமே வைத்து முன்னேறிவிட்ட தோற்றத்தை கொடுக்கிறது

  ReplyDelete
  Replies
  1. கொடுமையான பழக்க வழக்கம் தான். இதனை ஆதரிப்பவர்களும் இங்கே நிறைய.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

   Delete
 8. Replies
  1. அதே அதே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 9. நம்ம தமிழ்நாடு எவ்ளோ பரவாயில்லையே..பெண்களுக்கு என்றுதான் முழு உரிமை கிடைக்கும் தேசத்தில்.

  ReplyDelete
  Replies
  1. நம்ம ஊர் எவ்ளோ பரவாயில்லை - உண்மை.

   தங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கலியபெருமாள் புதுச்சேரி.

   Delete
 10. Replies
  1. கொடுமை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 11. வணக்கம் சகோதரரே!

  பதிவு படித்தேன். தூக்கி வாரிப் போட்டது இந்தச் சமூகத்தின் காட்டுமிராண்டித்தனம்.
  இந்த நவீன யுகத்தில் இப்படியும் உள்ள சமூகமா?
  வேதனை தரும் விடயம்.
  இப்படியும் இருக்குது உலகு என அறியத் தந்தமைக்கு
  நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. சமூகத்தின் காட்டுமிராண்டித்தனம் - இன்னமும் இந்த மாதிரி கொடுமைகள் இங்கே இருப்பது அவலம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 12. படு மோசமான கலாச்சாரம்...மூட நம்பிக்கைகள்...இன்னும் வட இந்தியாவில் அதிகமாக இருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்று....பாவம் அந்தப் பையன்...இதற்கெல்லாம் சட்டம் இல்லையோ? ஜி?

  கீதா

  காலையிலேயே போட்ட கமென்ட் இப்பத்தான் போகுது!! இவ்வளவு நேரம் போகாம அடம்!! ஹா ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. காலையில் போட்ட கமெண்ட்-உம் வந்திருக்கிறது! இப்போது தான் வெளியிட முடிந்தது.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 13. கொடூரமான விஷயம். இந்த மாதிரி பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது. விடியல் இன்னும் நிறைய கிராமங்களுக்கு வரவேயில்லை.

  ReplyDelete
  Replies
  1. விடியல் இன்னும் பல இடங்களில் வரவேயில்லை - சுடும் உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 14. மிகவும் வருந்ததக்க விஷயம்....... தேவையில்லாவைக்க்கெல்லாம் போராடும் நம் தலைவர்கள் இதற்காக மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முயலாலது ஏன் என்ற கேள்விதான் மனதில் எழுகிறது

  ReplyDelete
  Replies
  1. போராட்டங்கள் பெரும்பாலானவை அரசியல் ரீதியானவை. பெரும்பாலான தலைவர்கள் பதவி, பணம் போன்றவற்றில் மட்டுமே நாட்டம் கொண்டவர்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத்தமிழன்.

   Delete

 15. என்னதான் பெண்விடுதலை, பால்ய விவாகம் போன்ற பிரச்சனைகள் பற்றி பேசினாலும், இந்த தொடர் நிகழ்வுகள் ஒரு புறம் தொடர்ந்து கொண்டே இருப்பதென்பது மிகவும் வேதனைக்குறியது.

  ReplyDelete
  Replies
  1. தொடரும் வேதனை.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத்!

   Delete
 16. ம்ம்ம்ம்ம் இதைப் பற்றி ஒரு படம் ஹேமமாலினி, ரிஷிகபூர், குல்பூஷன்(?) நடிச்சு வந்தது. ஹேமமாலினி அந்த ஒரு படத்தில் தான் நடித்திருப்பார்!

  ஆனால் இன்னமும் இந்த வழக்கம் இருப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது! ரொம்பவே வேதனையான விஷயம்! :(

  ReplyDelete
  Replies
  1. இன்னமும் இப்படியான கிராமங்கள் இந்தியாவில் உண்டு. இதை விட மோசமான விஷயங்களும்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 17. மிகவும் வேதனைக்குறிய விஷயம்.

  நான் மஸ்கட்டில் பணி புரிந்த பொழுது எங்கள் அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக இருந்த இந்தியர் ஒருவர் சொன்ன விஷயம்: அவருடைய நண்பர் ஒருவருக்கு அவருடைய அக்காவின் மகளை முறை மாமன் என்பதால் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணை இவர் சிறு வயதிலிருந்தே எடுத்து வளர்த்திருக்கிறார். தன்னால் அந்த பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். மனப்புழுக்கம் அதிகமாகி அவர் குடிக்கு அடிமையாகி விட்டாராம்.

  ReplyDelete
  Replies
  1. குடிக்கு அடிமை ஆன மனிதர் - சோகம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   Delete
 18. இன்னமும் இந்தியா கீழ் நிலையில் தான் இருக்கிறது என்கின்ற உண்மையை பதிவின் மூலம் தெரிவித்துள்ளீர்கள்.
  மாற்று கருத்து கிடையாது.அவமானம் தான்.
  ஹரியானா, உத்திரப் பிரதேசம்,பீஹார் போன்ற மாநிலங்களில் இப்படியான மூடத்தனமான பழக்க வழக்கங்களுக்கு எதிராக இந்திய அரசு நடைவடிக்கைகள் எடுத்தால் தமிழகம் போலவே அங்கேயும் முடியுமா?
  அது அந்த மானிலம் சார்ந்த மக்களின் மரபு சார்ந்த நம்பிக்கைசார்ந்த அதிக முக்கியம் கொண்ட விஷயம்,
  அதில் இந்திய அரசோ அல்லது அந்த நாட்டு சட்டமோ தலையிட முடியாது. ஹரியானா உத்திரப் பிரதேசம்பீஹார் போன்ற மாநிலங்களில் வாழும் மக்களின் நம்பிக்கை பண்பாட்டின் மீதான ஒரு தாக்குதல் என்று பலர் எதிர்த்து இருப்பார்கள்.மானில மக்களின் பழக்க வழக்கங்களுக்குள்ளும் அவர்களின் சம்பிரதாயங்களுக்குள்ளும் இந்திய அரசு எப்படி அரசாங்கம் மூக்கை நுழைக்க முடியும் என்று தமிழக அரசியல்வாதிகள் போலவே, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் போலவே அவர்களும் கேட்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி.

   எல்லாவற்றிலும் அரசியல் உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேகநரி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....