எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, January 8, 2018

குஜராத் போகலாம் வாங்க – நண்பேன்டா – குஜராத்தி காலை உணவு

இரு மாநில பயணம் - பகுதி - 2

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


காண்ட்வி - குஜராத்தி சிற்றுண்டி...
படம்: இணையத்திலிருந்து....

குஜராத் மாநிலத்திற்கு பயணம் செய்ய வேண்டும் என முடிவு செய்தவுடனேயே நான் அழைத்தது நண்பரின் நண்பர் குரு அவர்களைத் தான். அவர் மூலமாக வாகன ஏற்பாடு செய்து கொண்டோம். இரண்டு மூன்று முறை அவரை அழைத்து, அதுவும் பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அவரை அலைபேசியில் அழைத்து வாகன ஏற்பாடு செய்யச் சொல்ல, கவலைப் படாதீர்கள் நான் ஏற்பாடு செய்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டார். அதே போல, எங்கள் பயணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே வாகனம் ஏற்பாடு செய்தது பற்றி, தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் பற்றி எல்லாம் என்னிடம் தெரிவிக்க எந்த கவலையும் இல்லாது இருந்தேன். சொன்னதைப் போலவே ஏற்பாடு செய்தாலும், அவரது பணியின் காரணமாக நாங்கள் சென்று சேரும் நாள் அன்று அவர் ஆம்தாவாத்-இல் இருக்க முடியாத சூழல்!
எங்களுக்கான ஓட்டுனர் - முகேஷ்...
எட்டு நாட்கள் இவருடன் தான் எங்கள் பயணம்....

இருந்தாலும் எங்களை வரவேற்க சரியான ஏற்பாடு செய்து வைத்த பிறகு தான் சென்றிருந்தார். விமான நிலையத்திலிருந்து வெளியே வர, Travels நடத்தும் Dhதர்ஷன் பாய் என்பவர் அனுப்பி வைத்த ஓட்டுனர் முகேஷ் எனக்காக காத்திருந்தார். பார்க்கும்போதே முகத்தில் நட்பான ஒரு புன்னகையோடு வரவேற்றார் ஓட்டுனர் முகேஷ் – இன்னும் எட்டு நாட்களுக்கு அவர் எங்களுடனேயே இருக்கப் போகிறார்! அவருடன் பேச்சுக் கொடுத்தபடியே உடைமைகளோடு வாகனத்தில் அமர்ந்தேன். மதியம் 12.30 மணிக்கு தான் நண்பர்கள் வருவார்கள் என்பதால் அதுவரை என்ன செய்யலாம் என யோசிக்கக் கூட நேரம் தரவில்லை முகேஷ். அவருக்கு நண்பர் கொடுத்திருந்த கட்டளைகள் அப்படி!


டோக்லா - குஜராத்தி சிற்றுண்டி...


என்னை நேராக பூட்டியிருந்த நண்பரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று, எதிர் வீட்டிலிருந்து சாவி வாங்கி என்னை வீட்டுக்குள் விட்டு, நீங்கள் சற்று நேரம் ஓய்வு எடுங்கள், காலை உணவு இப்போது எதிர் வீட்டுக்காரர்கள் தருவார்கள், நான் கீழே சென்று காத்திருக்கிறேன் எனச் சொல்லிச் சென்றார். சில நொடிகளில் எதிர் வீட்டுக்காரர், கையில் ஒரு Tray-வில் தேநீர், கொறிக்க சில பிஸ்கெட், குஜராத்தி உணவான காண்ட்வி, டோக்லா என சில பல சிற்றுண்டி எடுத்து வந்தார். சுய அறிமுகம் முடிந்த பிறகு “உங்கள் நண்பர் நீங்கள் வரும்போது தன்னால் இருக்க முடியவில்லை என்ற வருத்தத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளச் சொன்னார்” என்று சொல்லி, இவற்றை சாப்பிட்டுக் கொண்டு இருங்கள், காலை உணவுடன் மீண்டும் வருகிறேன் எனச் சொல்லிச் சென்றார்.


ஆம் கா CHசுண்டா..... 
எங்கள் வீட்டில் செய்தது....

இதுவே அதிகம், இன்னும் வேறு காலை உணவா? என்று யோசித்தபடியே அவர் கொடுத்துச் சென்ற தேநீர், சிற்றுண்டிகளை ஒரு கை பார்த்தேன்.  அரை மணி நேரத்திற்குள் மீண்டும் எதிர் வீட்டு நண்பர் – கைகளில் தட்டுடன் வர, “அடடா எதற்கு இவ்வளவு சிரமம் உங்களுக்கு?” என்று சொல்ல, ”நண்பரின் நண்பர், எனக்கும் நண்பர்… உங்களுக்கு உணவு அளிப்பதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி மட்டுமே, எந்த விதமான தொந்தரவும் இல்லை!” என்று சொல்லியபடி இரண்டு ஆலூ பராட்டா, தொட்டுக்கொள்ள காலா நமக் சேர்த்த தயிர், ஊறுகாய், சுண்டா என நிறைய, மற்றும் தேநீர்! இத்தனையும் சாப்பிட்டால் என்ன ஆகும் என்ற யோசனை, கூடவே இத்தனை பாசத்தோடு கொடுத்த உணவை வீணடிக்கக் கூடாது என்ற உணர்வும்!

ஆம்தாவாத் சென்று சேர்ந்த சில மணி நேரங்களில் இத்தனை உணவு சாப்பிட்டால் என்ன ஆகும்? நல்ல உறக்கம் வரும்! – அது தான் எனக்கும் நேர்ந்தது! சாப்பிட்டு முடித்து அவர்கள் கொடுத்த தட்டு, தேநீர் கோப்பை, ஸ்பூன் அனைத்தையும் சுத்தம் செய்து, தேய்த்து வைக்க, எதிர் வீட்டு நண்பரின் மகன் வந்து அவற்றை வாங்கிக் கொண்டு போனார் – “வேறு எதுவும் வேண்டுமா?” என்று அவரும் கேட்க, வேண்டாமென்று அலறினேன் – Literally! அவர் சென்ற பிறகு மீண்டும் எதிர் வீட்டு நண்பர் வந்து, “அலுவலகத்திற்குப் புறப்பட வேண்டும், உங்கள் குஜராத் பயணம் நல்லபடியாக அமைய எனது வாழ்த்துகள்” என்று சொல்லி புறப்பட்டார். காலை இரண்டு மணிக்கே எழுந்து புறப்பட்டது வேறு சேர்ந்து கொள்ள, உறக்கம் கண்களை அசத்த, நண்பரின் வீட்டில் உறங்கிவிட்டேன் – முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக, அலைபேசியில் அலாரம் வைத்துக் கொண்டு!

சற்றே ஓய்வெடுத்த பிறகு திருவனந்தபுரத்தில் இருந்து வரும் நண்பர்களை வரவேற்கத் தயாரானேன்.  ஓட்டுனர் முகேஷ்-உம் சரியான நேரத்தில் அழைத்து விமானம் வரும் நேரம் ஆகப் போகிறது – விமான நிலையத்திற்குச் செல்லலாமா எனக் கேட்க, நண்பரின் வீட்டைப் பூட்டி சாவியை எதிர் வீட்டில் கொடுத்து விட்டு, என் உடமைகளோடு வாகனத்தில் விமான நிலையம் சென்று காத்திருந்தேன். சில நிமிடங்களில் விமானம் வந்து சேர்ந்து, நண்பர்களும் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தார்கள். இந்தப் பயணத்தில் கேரளத்திலிருந்து வந்தவர்களில் நண்பர் பிரமோத் தவிர மற்ற அனைவருமே புதியவர்கள்! இவர்களுடனான பயணம் எப்படி இருக்கப் போகிறதோ என்ற நினைவுடனே அவர்களை வரவேற்றேன்.

உடைமைகளை எடுத்துக் கொண்ட பிறகு நண்பர்கள் மதிய உணவை முடித்துக் கொண்டு நம் பயணத்தினை துவங்கலாம் எனச் சொல்ல மதிய உணவிற்காக நல்ல உணவகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என முகேஷிடம் சொன்னேன். அவர் எங்கே அழைத்துச் சென்றார், அங்கே என்ன சாப்பிட்டோம், அங்கே என்ன நடந்தது என்பதை வரும் பதிவில் சொல்லட்டா?
  
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

30 comments:

 1. Replies
  1. தொடர்வதற்கு நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. Replies
  1. என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 3. குஜராத்தை காண நானும் குஜாலுடன்...

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் நண்பரே பயணிப்போம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 4. டபுள் ட்ரீட்!!!! ஆஹா.....

  ReplyDelete
  Replies
  1. டபுள் ட்ரீட் - ஆமாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 5. பயணங்கள் தொடரட்டும்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 6. அடுத்த பயணத் தொடர் நல்ல உணவுடன் தொடங்கிவிட்டதா...தொடர்கிறோம் ஜி...

  கீதா: வெங்கட் ஜி!!! ஆஹா கான்ட்வி, டோக்ளா....அப்புறம் பராட்டா வித் சுண்டா வாவ்.....உங்கள் வீட்டுச் ச்சுண்டா பார்க்கவே சுவை அள்ளுதே.....

  பயணங்கள் இனிக்கும் எப்பவுமெ...தொடர்கிறோம் ஜி உங்கள் அனுபவங்களையும் இடங்களையும் அறிந்து கொள்ள...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தொடங்கிவிட்டது - இரண்டாம் பகுதி இது....

   சுண்டா பார்க்கவே சுவை அள்ளுது! நன்றி - ஆதி தரப்பிலிருந்து!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 7. ரசித்த பதிவு. நண்பரின் நண்பர் எனக்கும்தான் நண்பர். என்னவொரு நல்ல சிந்தனை.

  காண்ட்வி, டோக்ளா - இரண்டும் எனக்குப் பிடித்தது. அதுக்காகவே த.ம.

  ஆம்கா சுண்டா படத்தைப் பார்த்தவுடனே எனக்கு பலாப்பழ அல்வா நினைவுதான் வந்தது.

  ReplyDelete
  Replies
  1. பலாப்பழ அல்வா.... சுவைத்ததில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 8. காண்ட்வி சென்ற வருடம் அம்பேரிக்கா போனப்போ பையர் வாங்கிட்டு வந்தார். குஜராத்தில் இருக்கிறச்சே சாப்பிடறதை விட அங்கேருந்து வந்த பின்னரே அதிகம் சாப்பிட முடியுது! :)

  ReplyDelete
  Replies
  1. காண்ட்வி - தில்லியில் கூட கிடைக்கிறது என்றாலும் சுவை அங்கே கிடைப்பது போல இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 9. ஆம் கா சுண்டா இங்கே போணி ஆகாது! :) சாப்பாடுன்னதும் உடனே ஓடி வந்துடறேன்! :)

  ReplyDelete
  Replies
  1. ஆம் கா சுண்டா போணி ஆகாது - ஒரு சிலருக்கு பிடிக்காது தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 10. டோக்கலா காணவே அருமையாக உள்ளது!

  ReplyDelete
  Replies
  1. சாப்பிடவும் நன்றாக இருக்கும் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 11. குஜராத் பயணக் கட்டுரை நன்றாக இருக்கிறது .தொடர்கிறேன் . டோக்ளா நானும் செய்வேன் . அது என்ன உங்கள் வீட்டில் செய்தது ?சுவீட் என்பது தெரிகிறது .பேர் புரியவில்லை .

  ReplyDelete
  Replies
  1. ஆம் கா Chசுண்டா - மாங்காயில் செய்த இனிப்பு ஊறுகாய்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 12. உங்களுக்கு மட்டும் பயணங்கள் முடிவதே இல்லை போல

  ReplyDelete
  Replies
  1. பயணங்கள் முடிவதில்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 13. பயணம் இந்த முறை அமர்க்களமான உணவுடன் தொட்ங்கியிருக்கிறது!!இனிமையாக சுவாரஸ்யமாக தொடரட்டும்! அது என்ன இனிப்பு? சரியான ஸ்பெல்லிங் என்ன?

  ReplyDelete
  Replies
  1. ஆம் கா chசுண்டா ! மாங்காயில் செய்யும் ஒரு இனிப்பு ஊறுகாய்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோம்மா....

   Delete
 14. பயணங்களில் முக்கியமாக தேவைப்படுவது உணவும் பயணத்துக்கு ஊர்திகளும்தான் நீங்கள் கொடுத்து வத்தவர்

  ReplyDelete
  Replies
  1. பயணத்துக்கு முக்கியமாக தேவைப்படுவது உணவும் ஊர்திகளும்.... உண்மை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   Delete
 15. குஜராத் பயணம்: உங்கள் வலைப்பதிவில் உங்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து வருவது அறிந்து மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....