ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

பறக்கும் காவடி – தைப்பூசம் – புகைப்படம் மற்றும் காணொளி



பறக்கும் காவடி...
தைப்பூசம் - 2018 - திருவரங்கத்திலிருந்து...

நெய்வேலி வாழ்க்கையில் மறக்க முடியாத பல விஷயங்கள் – அவற்றில் ஒன்று பங்குனி உத்திரம் சமயத்தில் காவடி பார்க்கப் போவது – நெய்வேலி நகரில் உள்ள வில்லுடையான்பட்டி முருகன் கோவிலுக்கு நகரில் உள்ள அத்தனை கோவில்களிலிருந்தும் காவடி எடுத்து வருவார்கள். ஒவ்வொரு கோவிலிலிருந்தும் 108, 1008 போன்ற எண்ணிக்கைகளில் காவடிகள் ஊர்வலமாக வந்து கோவிலுக்குச் செல்ல, நெய்வேலி நகரமே திருவிழா கோலம் கொண்டிருக்கும். பத்து நாட்களுக்கும் மேலாக திருவிழா நடக்கும் என்றாலும் பங்குனி உத்திரம் அன்று எடுக்கப்படும் காவடி பார்க்க அத்தனை ஆனந்தம். வீட்டிலிருந்து ஆறரை மணிக்குள் குளித்து, புறப்பட்டு எட்டு ரோடு என அழைக்கப்படும் சந்திப்பிற்கு சென்று விடுவோம்.


அந்தச் சந்திப்பின் வழியே தான் பெரும்பாலான கோவில்களிலிருந்து வரும் காவடிகள் வரும். பால் குடம், விதம் விதமான காவடிகள், அலகு குத்திக் கொண்டு வருபவர்கள் என பார்க்கப் பார்க்கப் பரவசம் தான். ஒரு சிலர் சாமி வந்து ஆடுவார்கள். பக்தர்களின் கால்கள் சுடக்கூடாது என்பதற்காக, நெய்வேலி நிறுவனத்தின் தண்ணீர் லாரிகள் மூலம் சாலையில் அவ்வப்போது தண்ணீர் வீட்டுக்கொண்டே செல்வார்கள். வழியெங்கும் நீர் மோர், பானகம் விநியோகம் செய்யும் பந்தல்கள், உணவு வழங்கும் பந்தல்கள் என அமர்க்களமாக இருக்கும். ஒவ்வொரு வருடமும் பார்த்தாலும், அங்கே இருந்தவரை அலுக்காமல், சலிக்காமல் காவடி பார்க்கச் செல்வது எங்களுக்கு வழக்கமாக இருந்தது.

எந்த கோவில் காவடி எனக்கேட்டுக் கேட்டு, அடுத்தது இந்த கோவில் காவடி என எதிர்பார்த்துக் காத்திருந்து, மதியம் பன்னிரெண்டு மணி வரை கூட அந்த இடத்தில் நின்று வரும் எல்லா காவடிகளையும் பார்த்தபிறகு, காவடிகள் கூடவே நடந்து சென்று வில்லுடையான்பட்டி கோவில் வரை செல்வதுண்டு. எத்தனை தூரம் நடந்திருக்கிறோம் என இப்போது நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. கோவில் வரை நடந்து சென்று வீடு திரும்புவதும் நடைப்பயணமாகவே தான் இருக்கும். மோர், பானகம் என கிடைப்பதெல்லாம் குடித்து வீட்டுக்குத் திரும்புவோம். மாலை வேளைகளில் கோவில் அருகே நிறைய கடைகள், கண்காட்சிகள் இருக்கும்.

மனிதத் தலை-பாம்பு உடல் என விளம்பரம் செய்திருக்கும் கடையில், தலைக்கு ஐம்பது பைசா கொடுத்து அதிசயமாகப் பார்த்திருக்கிறோம்! இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது! ஆனால் அப்போது கொஞ்சம் பயந்துகொண்டே தான் பார்த்திருக்கிறோம். நம் உடலை குண்டாகவோ, ஒல்லியாகவோ காண்பிக்கும் Concave, Convex வகை கண்ணாடிகள், மரணக்கிணறு, விதம் விதமான ராட்டினங்கள், தின்பண்டங்கள் என கோலாகலம் தான். பக்கத்து கிராமங்களிலிருந்தெல்லாம் வண்டி கட்டிக்கொண்டு வந்து விடுவார்கள். பத்து நாட்களுக்கு மேல் நடக்கும் திருவிழாவில் எங்களுக்கெல்லாம் அப்படி ஒரு மகிழ்ச்சி.  தலைநகர் வந்த பிறகு இந்த காவடி சமாச்சாரமெல்லாம் பார்க்க முடிவதில்லை!

நெய்வேலியில் இருந்த போது எங்களிடம் கேமராவெல்லாம் கிடையாது. கண்களால் பார்த்து ரசித்ததோடு சரி.  இப்போது கேமரா இருந்தாலும், நெய்வேலியில் பங்குனி உத்திரம் சமயத்தில் போக முடிவதில்லை! இந்த முறை தைப்பூசம் அன்று திருவரங்கத்தில் காவடி எடுத்துக் கொண்டு வர, ஆர்வத்துடன் பார்த்தேன். நெய்வேலி அளவுக்கு இல்லை என்றாலும், பல வருடங்கள் கழித்து பார்த்ததால் கொஞ்சம் மகிழ்ச்சி. திருவரங்கத்தில் காவடிகளுடன் பேண்ட் வாத்தியம், தாரை தப்பட்டை போன்றனவும் இருந்தன.  இவை நெய்வேலியில் இருந்த நினைவில்லை. திருவரங்கம் காவடி பார்த்தபோது எடுத்த சில புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இந்த ஞாயிறில் இதோ உங்களுக்காக…..


அலகு செட்...

தைப்பூசம் - 2018 - திருவரங்கத்திலிருந்து...



அலகுக்காவடிக்கு மேலும் முருகன்...

தைப்பூசம் - 2018 - திருவரங்கத்திலிருந்து...



துணையுடன் வீதி உலா வந்த முருகப்பெருமான்...

தைப்பூசம் - 2018 - திருவரங்கத்திலிருந்து...



பிஞ்சுப்பாதங்களில் அடி எடுத்து வந்த பாலமுருகன்....

தைப்பூசம் - 2018 - திருவரங்கத்திலிருந்து...



ரிப்பன் மூலம் இசை...

தைப்பூசம் - 2018 - திருவரங்கத்திலிருந்து...




அலகு செட்...

தைப்பூசம் - 2018 - திருவரங்கத்திலிருந்து... 


அட நமக்குத் தெரிந்த பையன்...

தைப்பூசம் - 2018 - திருவரங்கத்திலிருந்து...



வீதி உலா - இன்னுமொரு புகைப்படம்..

தைப்பூசம் - 2018 - திருவரங்கத்திலிருந்து...




பேண்ட் வாத்தியத்தில் “குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்” பாடல் – நடுவில் குதித்து நடனமாடும் இளைஞரும் சிறுவர்களும்!


என்னவொரு திறமை… ரிப்பன் வைத்து ட்ரம்மில் இசை….


பறக்கும் காவடி….

உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லலாமே!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

20 கருத்துகள்:

  1. திருவிழா என்றாலே கலகலாதான்..... சமீபத்தில் கல்யாணமாகாதேவியில் ஒரு கிராமத்துத் திருவிழா கண்டு திரும்பினேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிராமத்துத் திருவிழா பார்க்க ஆசையுண்டு. இது வரை வாய்ப்பு தான் கிடைக்கவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஆடிவரும் காவடி சுவாரஸ்யம். ஆனால் அலகு குத்தி வரும் காவடி பார்க்க அலர்ஜி. பார்க்காமல் திரும்பிக்கொண்டு விடுவேன். முருகன் இதை எல்லாம் எதிர்பாப்பதில்லை. சமீபத்தில் பெங்களூரு ரமணி அம்மாள் பாடல் ஒன்று கேட்டபோது உற்சாகமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலகு குத்தி வரும் காவடி - எனக்கும் கொஞ்சம் பயம் உண்டு. முருகன் இதை எந்தக் கடவுளும் பக்தர்கள் தன்னைத்தானே இப்படி செய்துகொள்ள எதிர்பார்ப்பதில்லை. பக்தி/நம்பிக்கை கண்களை மறைக்கிறது. தீமீதி கூட எனக்கு என்னவோ தன்னைத்தானே கஷ்டப்படுத்திக் கொள்வதாகத் தான் தோன்றும்.

      பெங்களூரு ரமணி அம்மாள் பாடல் - சில நாட்கள் “பொம்ம பொம்மதா தைய தைய” பாட்டை ரிங் டோனாக வைத்திருந்தேன் - ஃபோன் வந்தால் எல்லோரும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு இருக்க, மாற்றினேன்! எனக்கும் பிடிக்கும் அவரது பாடல்கள் - நேற்று கூட யூவில் கேட்டுக் கொண்டிருந்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. வீதி உலா வரும் முருகப்பெருமானை படம் எடுக்கும் உங்களையே உற்றுப் பார்க்கிறார் முன்னால் வரும் சிவப்புச் சட்டைக்காரர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”நல்லா எடுங்க சார்!” என்று சொல்லிவிட்டு உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரைத் தான் எடுக்கிறேன் என ஒரு உணர்வு அவருக்கு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. படங்கள் நல்லாருக்கு. கீசா மேடத்தை இங்க காணோம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம் - இப்பதான் முந்திய பதிவுகளுக்கு கருத்து எழுதிக் கொண்டிருக்கிறார். வருவார்.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. உடல் முழுதும் அலகு குத்திக் கொள்ளும்படி எந்த நூலில் சொல்லப்பட்டிருக்கின்றது என்று தெரியவில்லை...

    காவடியைப் பற்றி கூட திருப்புகழில் எந்த தகவலும் இல்லை என்கின்றார்கள்..

    இருப்பினும் முருக தரிசனம் அருமை..

    கந்தனுக்கு அரோகரா..
    கடம்பனுக்கு அரோகரா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடல் முழுதும் அலகு குத்திக்கொள்ளும்படி எந்த நூலில்.... நம்பிக்கையும் பக்தியும் மட்டுமே காரணமாக இருக்க முடியும் இல்லையா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    காவடியை பற்றி விரிவாக சொன்னமைக்கு நன்றி.நெய்வேலி நினைவுகளை பகிர்ந்திருப்பதும் சுவாரஸ்யம். எனக்கு கூட அலகு குத்திய நிலையில் கோவில்களில் பக்தர்களை காணும் போது சற்றே பயமாகத்தான் இருக்கும். காவடி படங்கள் காணொளி அனைத்தும் ரசித்தேன். முருகப்பெருமானின் தரிசனம் பார்க்க கிடைத்தமைக்கு நன்றி.கோவிலுக்கு சென்று வந்த திருப்தி கிடைத்தது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிலுக்கு வந்த திருப்தி - நன்றி.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  7. நம் உடலை குண்டாகவோ, ஒல்லியாகவோ காண்பிக்கும் Concave, Convex வகை கண்ணாடிகள், மரணக்கிணறு, விதம் விதமான ராட்டினங்கள், தின்பண்டங்கள் என கோலாகலம் தான். பக்கத்து கிராமங்களிலிருந்தெல்லாம் வண்டி கட்டிக்கொண்டு வந்து விடுவார்கள். பத்து நாட்களுக்கு மேல் நடக்கும் திருவிழாவில் எங்களுக்கெல்லாம் அப்படி ஒரு மகிழ்ச்சி. //

    ஆம் வெங்கட்ஜி! எங்கள் கிராமத்தில் கோயிலில் நடை பெறும் சித்திரைத் திருநாள் தேரோட்டம் எல்லாம் அப்படிக் களித்திருக்கிறோம்...ஆனை உலா எல்லாம் அப்படி நன்றாக இருக்கும்.

    இங்கு சென்னையிலும் தைப்பூசம், மற்றும் அம்மன் கோயில் திருவிழாக்களில் காவடி மற்றும் அலகு குத்தல் பார்க்கிறேன். அலகு குத்தல் மற்றும் ஏனோ ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அதுவும் முதுகில் குத்திக் கொண்டு ஆஞ்சனேயர் போல பறப்பது போல் தொங்குவார்கள். பார்க்கவே மனம் என்னவோ செய்யும். அதனால் தவிர்த்துவிடுவேன்.

    படங்கள் எல்லாம் வழக்கம்போல் நன்றாக இருக்கிறது ஜி. முருகன் அழகுதான்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகன் அழகு தான்! :) கிராமத்து திருவிழா - எப்போதாவது சென்று பார்க்க வேண்டும். திருவரங்கத்தின் அருகே சில கிராமங்கள் உண்டு - அங்கே விழா அறிவிப்பு இருந்தால் பார்க்கத் தோன்றும் - யாரையும் தெரியாதே என போகாமல் விட்டுவிடுவேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  8. கீதாக்கா உங்கள் பதிவில் இட்லி சுட்டுக் கொண்டிருக்கிறதாக ஸ்ரீராம் எபி யில் காலையில் சொன்னாரே...அது எங்கே? முந்தைய பதிவிலா?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அதுவும் துணி போட்டு! முந்தைய கதம்பம் பதிவில்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  9. படங்களும் பகிர்வும் மிக அருமை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  10. திருவிழாக்கள் என்றால் சந்தோஷம்தான்...
    அதுவும் காவடி ஆட்டம் பார்ப்பது சிறப்பு...
    மேள் ஓலிக்கு நம்மை ஆட வைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேள ஒலி நம்மையும் ஆட வைக்கும் என்பது உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....