திங்கள், 5 மார்ச், 2018

குஜராத் போகலாம் வாங்க – பூங்கா வாடகை எவ்வளவு – ஹோட்கா கிராமத்துக்குள்….



இரு மாநில பயணம் – பகுதி – 14

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


மூத்தவரின் மனைவி....

நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கான வாடகை எவ்வளவு என்று சென்ற பதிவில் நெல்லைத் தமிழன் கேட்டிருந்தார். நாங்கள் அங்கு செல்வதற்கு முன்னரே இணையம் வழியே தான் இந்த Rann Visamo Village Stay என்ற இடத்தினைத் தேர்ந்தெடுத்தோம். இணையத்தில் சொல்லி இருக்கும் கட்டணம் சற்றே அதிகமாகத் தெரிய, திரு Gகgகன் அவர்களுக்கு நேரடியாக அலைபேசி மூலம் அழைத்துப் பேசியதில் நல்ல வழி கிடைத்தது. இங்கே மூன்று விதமான தங்கும் வசதிகள் – Bபூங்கா, காட்டேஜ் மற்றும் டெண்ட் கொட்டகைகள். பூங்காவிற்கான கட்டணம் இருப்பதிலேயே அதிகம். மற்றவை அதை விடக் குறைவு. நாங்கள் ஒரு பூங்காவிற்கு மூவாயிரம் ரூபாய் வீதம் கொடுத்தோம் – அதில் மூன்று வேளை உணவும் அடக்கம். ஆறாயிரம் ரூபாயில் மூன்று வேளை உணவும், ஒரு நாள் தங்கவும் – ஐந்து பேருக்கு!   


மாசக் கடைசியில் பிரித்து எடுத்துக் கொள்ளலாம்!....


சுவற்றில் கண்ணாடி அலங்காரங்கள்......


பாத்திரங்கள் அடுக்க ஒரு வசதி -  ஆனாலும் பெரும்பாலானவை தட்டுகளே!....

இங்கே பார்த்த இன்னுமொரு விஷயம் – டிப்ஸ்! தங்குமிடத்தில் இருக்கும் உழைப்பாளிகள் அனைவருக்கும் நீங்கள் டிப்ஸ் தர நினைத்தால் தனித்தனியாக தர வேண்டியதில்லை – அங்கே ஒரு மரத்தினால் ஆன அழகிய பெட்டியை வைத்திருக்கிறார்கள். பூட்டு போட்டு! அதில் நீங்கள் கொடுக்க நினைப்பதைப் போட்டு விடலாம். மாதம் முழுவதும் அதைத் திறப்பதில்லை. மாதத்தின் கடைசி நாளில் பெட்டியைத் திறந்து அதில் சேர்ந்திருக்கும் பணத்தினை அனைத்து உழைப்பாளிகளும் சேர்ந்து பிரித்துக் கொள்கிறார்கள். ஒரு சேமிப்பாகவும் இருக்குமே. அன்றே சம்பளமும் கிடைத்து விடுகிறது என்பதால், கூடுதலான பணமும் சேர்ந்து கிடைக்கும். நாங்கள் கொடுக்க நினைத்ததையும் அந்தப் பெட்டியில் போட்டு, வாகனத்தில் கிராமம் நோக்கிப் பயணித்தோம்.


அக்காவும் தம்பியும்....


வீடும் வீட்டில் நானும்!....


காது மூக்கு அனைத்திலும் இந்த வயதிலேயே குத்திவிடுகிறார்கள்!....

முள் செடிகளும், மண் பாதைகளும் நிறைந்த கிராமம். கிராமத்தினர் யாராவது வந்தால் தான் நமக்கு வழி தெரியும். இல்லையெனில் சிரமம் தான். எங்களுடன் அந்த தங்குமிடத்தினை நடத்தும் குடும்பத்தின் மூத்தவர் வந்ததால் சுலபமாக அவர்கள் வீட்டுக்குச் செல்ல முடிந்தது. அழகிய மண் குடிசைகள். எல்லோருமே தனித்தனி குடிசைகள் கட்டிக் கொண்டிருந்தாலும், அனைவருக்குமான சமையலறை ஒன்று தான். அங்கே தான் விதம் விதமான கட்ச் சமையல் நடக்கிறது. வித்தியாசமான சமையலறை. மூத்தவர் தனது மனைவியை அறிமுகம் செய்து வைத்தார். அவர் முகத்தில் ஏதோ ஒரு சோகம். சிரிக்கவே மாட்டோரோ என நினைத்துக் கொண்டேன். புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா? என மூத்தவரிடம் கேட்டு அவர்களையும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். கொஞ்சம் புன்னகைக்க வைத்தோம்!


என்னையா படம் பிடிச்சிருக்க.......


மனைவியின் கைவண்ணத்தில் உருவான படுக்கைவிரிப்பை காண்பிக்கத் தயாராகும் பெரியவர்....


தம்பதி சமேதராக....

மூத்தவரின் மனைவியும் தனது கைவண்ணத்தில் உருவான படுக்கை விரிப்புகள், மற்ற கலைப்பொருட்களைக் காண்பித்தார். படுக்கை விரிப்புகளின் விலை ஆயிரத்தில் ஆரம்பித்தது! அழகான வேலைப்பாடுகள் நிறைந்தவை என்பதால் இந்த விலை. கொஞ்சம் பேசினால் குறைத்துத் தருவாராக இருக்கும் என நண்பர் சொல்ல, “இன்னும் பயணம் இருக்கிறது, எடுத்துக் கொண்டு செல்வது கடினமாக இருக்குமே எனத் தோன்றியது” அங்கிருந்து நேராக தில்லி செல்வதாக இருந்தால் வாங்கி இருக்கலாம்! இந்த இடத்திலிருந்து இன்னும் ஐந்து நாட்களுக்கு மேலான பயணம் உண்டு என்பதால் வாங்க வில்லை. அவர்களிடம் வேறு சில சிறு பொருட்களை வாங்கிக் கொண்டோம்.


மூக்கில் ட்ரேட்மார்க் மூக்குத்தி....


ஏனிந்த கோபமோ?....


சிறு வயதிலேயே நூலை வைத்து ஏதோ செய்கிறார்!.... 


போட்டிருக்கும் உடையில் கூட என் டிசைன் தான்.... - 
எப்படி இருக்கு நான் போட்ட டிசைன் என்ற கேள்வி அப்பெண்ணிடமிருந்து வந்தது....

தங்குமிடத்தில் பார்த்த பெண்களைத் தவிர அவர்களை விட பெரியவர்களும், அங்கே இருந்தார்கள். அனைவருமே தத்தமது கைகளால் உருவாக்கிய பொருட்களை வாங்கிக் கொள்ளும் படி கேட்க, நண்பர்கள் அனைவருமாக ஒவ்வொருவரிடமிருந்தும் ஏதோ ஒரு பொருளை வாங்கிக் கொண்டோம்.  நிறைய புகைபபடங்கள் எடுத்துக் கொள்ள முடிந்தது. வீடுகளையும், அவர்களது வாழ்க்கை முறையையும் பேசித் தெரிந்து கொள்ள முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அங்கே இருந்திருப்போம். வீடு வீடாக அழைத்துக் கொண்டுக் காண்பித்தார்கள் அந்த சிறுமிகளும் சிறுவர்களும். ஊர்வலம் போவது போல இருந்தது எங்களுக்கு. அனைத்து சிறார்களின் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி. அவர்களுக்கு மகிழ்ச்சி என்றால் நமக்கும் மகிழ்ச்சி. இது தானே நமக்கும் தேவையாக இருக்கிறது.


மூத்தவரும் அவர் மனைவியும்....


ஏனோ ஒரு சோகம்....


இன்னுமொரு சிறுமி....

நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த கிராமத்தில் இருக்கிறார்களாம். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஐந்து குழந்தைகள்! வரிசையாக குழந்தைகள் இருப்பதைப் பார்ப்பதும் ஒரு வித குதூகலம் தான் – நாமும் குழந்தைகளாக மாறி விடுகிறோம்! வீடுகளின் உள்ளேயும் சுவர்களில் அழகிய கண்ணாடி வேலைப்பாடுகள். பாத்திரங்களை வைப்பதற்கு ஒரு அமைப்பு – வரிசையாக அடுக்கி வைத்திருப்பதே ஒரு அழகு! வீட்டுக்குள் எங்களை அனுமதித்து புகைப்படங்களும் எடுத்துக் கொள்ளச் சொன்னார் முதியவர். சிலர் வீடுகளில் புகைப்படம் எடுக்க வேண்டாம் என நாங்களே எடுக்காமல் இருந்தோம். மொத்தத்தில் இந்த ஹோட்கா கிராமத்து வீடுகளுக்குச் சென்றது நல்லதோர் அனுபவம். 


இயற்கை அழகுடன் ஒரு சிறுமி.... 


இது எங்க கம்யூனிட்டி கிச்சன்! எல்லோரும் இங்கே சமைத்துக் கொள்வோம்!...


டாடா பை....  வழியனுப்பிய சிறுவர்கள்....

அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு ஹோட்கா கிராமத்திலிருந்து புறப்பட்டோம். அங்கிருந்து அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் என்ன, அங்கே என்ன அனுபவங்கள் எங்களுக்காகக் காத்திருந்தது என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

38 கருத்துகள்:

  1. அழகான படங்கள் இன்னும் சுவாரசியம். தகவல்களுக்கு சுவை சேர்த்துக் கொண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  2. டிப்ஸ் அல்லது பொருட்களை மாதக்கடைசியில் எல்லோருமாய்ப் பிரித்துக் கொள்வதை சமீபத்தில் கர்மஸ்தலாவிலும் கேள்விப்பட்டேன். இங்கு இதைப் படித்ததும் அது சும்மா நினைவு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்மஸ்தலா - ? இது எங்கே இருக்கிறது?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. தர்மஸ்தலா, கர்னாடகா - அதைச் சொல்கிறாரோ ஸ்ரீராம்?

      நீக்கு
    3. இருக்கலாம். எனக்கு தரம்ஷாலா என்று தோன்றியது! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. வீட்டின் அமைப்பு நன்றாய் இருக்கிறது. விஸ்தாரமான இடம். நீங்க நிற்பது உற்றுப் பார்த்தால் தெரிகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உற்றுப் பார்த்தால் தெரிகிறது! :) தூரத்திலிருந்து எடுக்கப்பட்ட படம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. மூத்தவரைவிட, அவர் மனைவி மூத்தவர் போலத் தெரிகிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்கள் வயது முதிர்வது கொஞ்சம் சீக்கிரம் தானே... பாவம் எத்தனை உழைப்பு. சுருக்கங்கள் அழகு சேர்க்கிறது என்பது என் எண்ணம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. // போட்டிருக்கும் உடையில் கூட என் டிசைன்தான் //

    அதென்ன உங்கள் டிசைன்? அபுரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் இருக்கும் பெண்ணே செய்த டிசைன்.... இப்போது புரியும்படி மாற்றி விட்டேன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் அது அந்தப் புகைப்படத்தில் உள்ள குழந்தை பேசுவது போல வெங்கட்ஜி கொடுத்திருக்கார்....இல்லையா ஜி!!

      கீதா

      நீக்கு
    3. ஓ!! நான் அப்போவே கொடுத்த கமென்ட்....ஸ்ரீராமுக்கு...இப்ப வெங்கட்ஜியே கமென்ட் கொடுத்திருக்கார் இப்பத்தான் தெரியுது...

      கீதா

      நீக்கு
    4. ஆமாம் கீதா ஜி. படத்தில் இருக்கும் பெண் சொல்வது போல எழுதி இருந்தேன். அது அபுரி-ஆகிவிட்டது! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    5. காலையில் கொஞ்சம் நேரம் இருந்ததால் உடனே பதில் எழுதி விட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. // வீடுகளையும், அவர்களது வாழ்க்கை முறையையும் பேசித் தெரிந்து கொள்ள முடிந்தது. //

    அவர்கள் வாழ்க்கைமுறை பற்றி கொஞ்சம் எழுதி இருக்கலாமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வாழ்க்கை முறை பற்றி எழுதி இருக்கலாமோ?// லாம்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. அனைத்து படங்களும் செம...முதல் படமே ரொம்ப ஈர்க்கிறது

    டிப்ஸ் பாக்ஸ் அருமையான ஐடியா...பாக்ஸும் செம கை வேலைப்பாடு...

    அவங்க உடை கூட என்ன கலை நயம் ஆஹா....

    அவர்கள் வாழ்க்கை முறை பற்றி பதிவு வருமா ஜி?!!!

    பாத்திரங்கள் எல்லாம் வெகு உயரத்தில் வைத்திருக்காங்களே!!! என்னை நினைத்துக் கொண்டேன் ஆ ஆ ஆ ஆ என்று தோன்றியது ஹா ஹா ஹா..

    ரொம்ப அழகா இருக்கு வீடுகள், சிறுவர்கள்...அவர்கள் முகத்தில் தெரியும் அந்த சிரிப்பு....எல்லாமே சிம்பிள் லைஃப்!!! ரொம்ப ஸ்வாரஸ்யமான விஷயங்கள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // வாழ்க்கை முறை பற்றி பதிவு வருமா? // வரலாம்! :) இப்போதைக்கு எழுதி வைக்கவில்லை!

      பாத்திரங்கள் எல்லாம் வெகு உயரத்தில்! - :)) ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  8. >>> அனைத்து சிறார்களின் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி. அவர்களுக்கு மகிழ்ச்சி என்றால் நமக்கும் மகிழ்ச்சி. இது தானே நமக்கும் தேவை...<<<

    அருமை.. அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  9. வணக்கம் வெங்கட்
    உங்கள் பதிவுகள் மட்டும் அல்ல உங்கள் மகள் ,மனைவி பதிவுகள் படிப்பேன் .உங்கள்எ.உங்கள் தமிழ் எழுத்து நடை எங்களை போன்ற ஈழ தமிழர்களுக்கு படிப்பதற்கு இலகுவாக இருக்கிறது எல்லா பயண கட்டுரைகளையும் படித்திருக்கிறேன் .குறிப்பாக உங்கள் பதிவுகளில் வரும் படங்கள் அருமை .

    இன்னுமொரு பிரபல பதிவரின் பதிவுகளை என்னால் படிக்க முடிவதில்லை ஏனெனில் அவரின் எழுத்து நடை .நான் இரண்டாயிரத்து நாலாம் ஆண்டில் இருந்து இங்கு இருக்கிறேன் .இருந்தாலும் இன்றுதான் உங்களின் தளத்தில் கருத்து இடுகிறேன் என் நினைக்கிறேன் .தொடர்ந்து எழுதுங்கள் .

    நானும் சில காலம் திருச்சியில் வசித்து இருக்கிறேன் ,சிறிரங்க தெருக்களில் நடந்திருக்கிறேன்.திருச்சி பதிவர்கள் என்றால ஒரு வகையான பாசம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி கரிகாலன். முடிந்த போது பதிவுகள் பற்றிய உங்கள் கருத்துகளையும் எழுதுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரிகாலன்.

      நீக்கு
  10. உடைகள் மாறுபட்டதாகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  11. பெண் குழந்தைகளில் மூக்குத்திகள்..பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போலுள்ளது. உங்களின் ரசனைக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகளைப் பார்க்கும்போது நமக்கும் ஒரு குதூகலம் தானே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  12. டிப்ஸ் பெட்டி அழகு.
    மாதகடைசியில் பிரித்து கொள்வது நல்ல கொள்கை.
    குழந்தைகள், பெரியவர்கள், வீடு எல்லாம் அழகு.
    பொது சமையல் அறை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  13. கிராமத்து அனுபவங்கள் நினைத்துப் பார்க்கும் போது மகிழ்ச்சி ஏற்படுத்துமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் மகிழ்ச்சி தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  14. ஆஹா.. இப்படங்களைப் பார்வையிடும் போதே மனசில் உவகை பூக்கிறது.. உங்கள் சுற்றுப்பயண தாத்பரியம் உயர்பானது. அமெரிக்கா போன்ற மேல் நாடுகளில் மட்டுமே பார்க்க முடிகிற ரசனையை உங்களில் கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ஒவ்வொரு சுற்றுப்பயணத்தையும் ஆல்பமாக, அல்லது PDF-ஆக ஆவணமாக்குங்கள்.
    'இவர் இந்த நேரத்தில் இதைச் செய்தார்' என்பது தான் நமக்காக வாழக்கூடிய ஒன்று.

    மனங்கனிந்த வாழ்த்துக்கள், வெங்கட்ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுற்றுலா எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. வாழ்நாளில், இந்தியாவில் மட்டுமாவது கொஞ்சம் இடங்களையாவது பார்த்து விட வேண்டும் என்ற துடிப்பு உண்டு.

      எனது பயணக் கட்டுரைகள் சில மின்புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். மற்றவையும் செய்ய வேண்டும். விரைவில் ஒவ்வொன்றாக வெளியிடுவேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.

      நீக்கு
  15. உங்கள் பயண விவரத்தை ஆவலுடன் படிக்கிறேன். சில சமயம் கருத்திடமுடியாமல் போகிறது. இப்படிப்பட்ட மனிதர்கள், இடங்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளமுடிகிறது. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சில சமயம் கருத்திடமுடியாமல் போகிறது!// நேரம் கிடைக்க வேண்டுமே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  16. ஒரு கிராமத்தில் தங்களுக்கு நேர்ந்த சுவையான பயண அனுபவம் பற்றிய பதிவு பிடித்திருக்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....