எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, April 11, 2018

குஜராத் போகலாம் வாங்க – விஸ்கி – ஜலதோஷத்திற்கு மருந்து – அம்பானியின் கிராமம்

இரு மாநில பயணம் – பகுதி – 24

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!பயணித்த பாதை..... 

காந்திஜி பிறந்த மண்ணான போர்பந்தரிலிருந்து புறப்பட்ட எங்கள் வாகனம் அடுத்த இலக்கான சோம்நாத் நோக்கிச் சீறிப்பாய்ந்து சென்று கொண்டிருந்தது. இந்தப் பயணமும் தேசிய நெடுஞ்சாலை வழி இல்லாது மாநில நெடுஞ்சாலை வழி தான். வழியில் இருக்கும் கிராமங்கள், கிராமிய மனிதர்கள் எனப் பார்த்தபடியே வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். பெரும்பாலும் ஒட்டுனருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து தான் நான் பயணிப்பது வழக்கம் – என் உயரம் அதிகமென்பதால் அந்த இருக்கை தான் கால்களை நீட்டிக்கொள்ள வசதி – வேறு சில தொல்லைகள் இருந்தாலும், இந்த முன்னிருக்கையில் இருக்கும் இன்னுமொரு பயன் – பயணித்தபடியே படங்கள் எடுப்பது சுலபம்! எனது பயணங்களில் இப்படி எடுத்த புகைப்படங்கள் சில வெகுவும் சிறப்பாக அமைந்ததுண்டு.


பயணித்த பாதைகளில் தென்னந்தோப்பு..... 

முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டு ஓட்டுனரிடம் பேசிக்கொண்டே போவதிலும் ஒரு வசதி – அவரை பேச விட்டு, நிறைய கதைகள் கேட்டுக்கொள்ளலாம். முகேஷ் ராஜஸ்தான் மாநிலத்தினைச் சேர்ந்தவர் – பணிபுரிவது குஜராத் மாநிலத்தில் என்றாலும் ராஜஸ்தானி! குஜராத்தி, ராஜஸ்தானி, ஹிந்தி என இரண்டு மூன்று மொழிகள் தெரிந்து வைத்திருக்கிறார். இப்படியான டூரிஸ்ட் ஓட்டுனர்களுக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்கின்றன. அதைக் கேட்க எனக்கும் ஸ்வாரஸ்யம் உண்டு. பல விஷயங்களை, அவரைப் பேசவைத்து, கேட்டுக் கொண்டே வருவதில் ஒரு ஸ்வாரஸ்யம். பின் இருக்கையில் இருந்த மலையாள நண்பர், “விக்ஸ்” வேண்டுமென்று கேட்க, பேச்சு ஜலதோஷம் பற்றித் திரும்பியது!


உழைப்பாளி..... 


பயணித்த பாதையில்..... 

இதுக்கு நல்ல மருந்து விஸ்கி தான் என்றார் ஓட்டுனர் முகேஷ். அதுவும் சாதாரண விஸ்கி அல்ல! டிக்ரி என அழைக்கப்படும் மண் பானையின் ஒரு சிறு துண்டை எடுத்துக் கொள்ள வேண்டும், அதனை நெருப்பில் காட்டி, நன்கு சிவந்ததும் [Red Hot!], அந்தத் துண்டை ஒரு இடுக்கியில் பிடித்து எடுத்து, கொஞ்சமாக டம்ளரில் ஊற்றி வைத்திருக்கும் விஸ்கியில் ஒரு முக்கு! டிக்ரியை எடுத்து வீசி விட்டு, அந்த விஸ்கியைக் குடித்தால் ஜலதோஷம் போகும் – “மாயமில்லை, மந்திரமில்லை! போயே போச்சு, போயிந்தி, இட்ஸ் கான்!” என்று உற்சாகக் குரல் கொடுக்கலாம்! எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குக் கூட இப்படியான மருத்துவம் – விஸ்கி அளவு மட்டும் குறையும் – செய்வதுண்டு என்றார் முகேஷ்! நல்ல மருத்துவம்!   


பயணித்த பாதை..... 
திருபாய் அம்பானியின் வீடு - பின்புறம்.... 

போர்பந்தரிலிருந்து நாங்கள் புறப்பட்டபோது மணி 02.40. வழியில் ஓரிடத்தில் நிறுத்தி ஹானஸ்ட் என்ற உணவகத்தில் தேநீர் அருந்தினோம். அந்த உணவகத்திலிருந்து புறப்பட்டு கிராமங்கள் வழியாகவே சோம்நாத் சென்றடைய வேண்டும். செல்லும் வழியில் ஒரு சிற்றூர் – பெயர் chசோர்வாட்d! ரொம்பவும் சிறிய ஊராக இருந்தாலும், இந்த இடம் மிகவும் புகழ்பெற்ற பிஸினெஸ் மேக்னெட்-ஆக உயர்ந்த திருபாய் அம்பானியின் ஊர்! இப்போதும் இங்கே அவர்களுடைய ஒரு வீடு இருக்கிறது. இங்கே தான் திருபாய் அம்பானி பிறந்து வளர்ந்தார். நாங்கள் சென்ற சாலை மாளிகையின் பின்புறம். முன்புறம் சென்றால் அவரது பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவிடம் இருக்கிறது. வெளியிலிருந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என நண்பர்கள் அங்கே இறங்கி புகைப்படம் எடுத்தார்கள். எனக்கென்னமோ எடுக்கப் பிடிக்கவில்லை. அதனால் நான் வாகனத்திலேயே இருந்தேன்.பாரம்பரிய உடையில் மூதாட்டி..... 


பயணித்த பாதை - ஒரு காணொளி..... 

சோர்வாட் கிராமத்தினையும் கடந்து, சோம்நாத் சென்றடைந்த போது மாலை நேரம். அத்தனை கூட்டம் இல்லை. நிம்மதியான தரிசனம் கிடைக்கும் என்ற ஆசையுடன் வாகன நிறுத்தத்தில் வாகனத்தினை நிறுத்தினோம். இந்தக் கோவிலில் கேமரா, மொபைல், தோல் பொருட்கள் [பெல்ட் போன்றவை] ஆகியவற்றே உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. வாகனத்திலேயே வைக்க வேண்டும், இல்லை எனில் அதற்கான பாதுகாப்பு அறையில் வைக்க வேண்டும். நாங்கள் வாகனத்திலேயே வைத்து விட்டுக் கோவிலை நோக்கிச் சென்றோம். ஆனால் புகைப்படம் எடுக்க வேண்டுமே. அதனால் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்த பிறகு மீண்டும் ஒரு முறை கேமராவுடன் கோயில் வாசலுக்கு வர வேண்டும்.


கேடியா உடையில் முதியவர்..... 

பன்னிரெண்டு ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்களுக்குள் முதலாம் இடம்பெறுவது சோம்நாத். அரபிக்கடலின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இக்கோவில் இயற்கைச் சீற்றங்களினாலும் அன்னிய படையெடுப்புகளினாலும் பல முறை சிதைக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது.  பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இக்கோவிலின் தற்போதைய வடிவம் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் முயற்சியால் சீரமைக்கப்பட்டது. சோம்நாத் கோவில் தரிசனம் எப்படி இருந்தது, அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதைப் பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

22 comments:

 1. வேறு சில தொல்லைகள் இருந்தாலும், இந்த முன்னிருக்கையில் இருக்கும் இன்னுமொரு பயன் – பயணித்தபடியே படங்கள் எடுப்பது சுலபம்!//

  ஆமாம் ஜி எனக்கும் முன் இருக்கை ரொம்பப் பிடிக்கும். படம் எடுப்பது ப்ளஸ் ஓட்டுநருடன் பேசுவது...சில சமயம் தான் எனக்கு முன் இருக்கை கிடைக்கும் குழுவைப் பொருத்து..ஹாஅ ஹா ஹா ஹா..

  அம்பானி....நானும் புகைப்படம் எடுத்திருக்க மாட்டேன்...

  அந்தக் காணொளி....ரூட் செமையா இருக்கு மரங்களால் ஒரு டனல் போல இருக்கு...ரொம்ப அழகு ஜி! இப்படி மரங்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

  இங்கு ஈசிஆர் சாலையில் மஹாபலிபுரம் தாண்டிச்க் செல்லும் போது ஒரே ஒரு இடத்தில் மட்டும் இப்படி இருபுறமும் மரங்கள் அடர்ந்து தூராதிலிருந்து பார்க்கும் போது டனல் போல ..நடுவில் சாலை நேர்க்கோடு போல ரொம்ப அழகாக இருக்கும் ஜி...

  ரசித்தேன்...

  படங்கள் எல்லாம் அழகு..தொடர்கிறேன் ஜி..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 2. பயணித்த பாதையின் படம் மிக அருமை. பொதுவாகவே பயணித்த பாதையில் எடுக்கப்பட்டிருக்கும் படங்கள் நன்றாக இருக்கின்றன. ஜலதோஷ மருந்து நாலுபேருக்கு (உதவும் என்றால் தப்பில்லை என்று) நானும் சொல்கிறேன்! முகேஷ் நல்ல வேகத்தில் வண்டி ஓட்டுகிறார், முன்னாள் செல்லும் காரை ஓவர்டேக் செய்துவிடுவார் என்று பாத்தாள் அவர் இவரைவிட வேகத்தில் சென்று மறைகிறார்!! சோம்நாத் அனுபவங்களுக்காகக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. ஜலதோஷம் புதுமையான தகவல்தான் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 4. பயணக் காட்சிகளும் பகிர்வும் அருமை.

  மருந்தாக அளவாகப் பயன்படுத்துவது நன்றே.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 5. குழந்தைகளுக்கு சளி, இருமல் இருந்தா கொஞ்சூண்டு சரக்கு கொடுக்கும் பழக்கம் எங்க ஊர்லயும் இருக்கு.

  ட்ரைவர் சீட் பக்கம் உக்காந்தா தூங்க முடியாதே!

  ReplyDelete
  Replies
  1. தூங்க முடியாது தான். ஒன்றை விட்டால் தான் இன்னொன்று கிடைக்கும்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 6. விஸ்கி மருத்துவம் - அட ராமா... நான் 'நீயா நானா'வில் பல வருடங்களுக்கு முன் பார்த்தது ஞாபகத்தில் வந்தது. (ஒரு மனைவி, கணவன் கடுமையாக உழைக்கிறாரே என்று எண்ணி, வற்புறுத்தி கொஞ்சம் டாஸ்மாக் இரவு சாப்பிடச் சொல்கிறார். சில வருடங்களில் கணவன் குடிபோதையில் மீளமுடியாமல் ஆழ்ந்துவிடுகிறார். அந்தப் பெண், தான் செய்த தவறை ஓபனாகச் சொன்னார்)

  பயணக் காட்சிகளை எப்போதும்போல் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. சிலர் பழகிய பிறகு விட முடியாமல் தவிப்பதுண்டு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 7. படங்களுடன் பயணமும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. அருமையான காணொளி மரக்கூடாரத்தில்(மரகுகை என்றும் வைத்துக் கொள்ளலாம்) கார் போவது அழகு.

  விஸ்கி மருந்தாய் குடித்து நிரந்தரமாய் மருந்து தேவைபடுவது போல் ஆகாமல் இருந்தால் சரிதான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 9. வணக்கம் சகோதரரே

  பயணமும் படங்களும் அருமை. ஜலதோஷத்திற்கு நல்ல மருந்துதான். நன்றாக உறக்கம் வந்து ஜலதோஷத்தின் சிரமங்களை குறைக்குமென நினைக்கிறேன். காணொளியும் அருமையாக இருந்தது. சோம்நாத் இறைவனை தரிசிக்க காத்திருக்கிறேன்.
  பகிர்வுக்கு நன்றி..

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 10. கிராமத்துப் படங்கள் மிக அழகாக இருக்கின்றன. சாலைகளும் கூட அழகாக இருக்கின்றன.

  ஜலதோஷத்திற்கு விஸ்கி ஹா ஹா ஹா ஹா..ஆனால் அபப்டி மருந்து போலக் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. மரங்கள் குகை போல ரொம்ப அழகாக இருக்கின்றது போகும் வழி. நல்ல பயணம் அருமை தொடர்கிறோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 11. விஸ்கி பழக்கம் ஏற்பட்டு விடாமல் இருந்தால் சரி. அம்பானி வீடு சோம்நாத் செல்லும் வழியா? தெரியாது!

  ReplyDelete
  Replies
  1. பழக்கமாக இருந்தால் சரி.

   ஆமாம் - சோம்நாத் அருகே இருக்கும் சோர்வாட் எனும் ஊர்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....