எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, May 21, 2018

குஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா – எங்கே தங்குவது
இரு மாநில பயணம் – பகுதி – 41

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!சென்ற பதிவில் சொன்னது போல, கேரள நண்பர்கள் அசைவ உணவு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு [இரண்டு நாட்கள் முன்னர் தான் தியுவில் சாப்பிட்டார்கள் - இரண்டு நாளே ரொம்ப நாள் அவர்களுக்கு!] என்று குறைபட்டுக்கொள்ள ஆம்தாவாத் நகரின் எல்லையில் இருந்த ஒரு பெரிய உணவகத்தில் – உணவகத்தின் பெயரே கொஞ்சம் கார சாரமாக இருந்தது – மிர்ச் மசாலா என்பது தான் உணவகத்தின் பெயர்! மிர்ச் என்றால் மிளகாய்! – வாகனத்தினை நிறுத்தினார். அவரையும் சாப்பிட அழைக்க, இல்லை எல்லை நான் வீட்டுக்குச் சென்று என் மனைவியின் கையால் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டார். வெளி உணவு அடிக்கடி சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்குதான் வீட்டு உணவின் அருமை தெரியும்!
 
மிர்ச் மசாலா – கொஞ்சம் அல்ல நிறையவே மக்கள் நடமாட்டம் இருந்தது. இருக்கைக்குக் காத்திருக்க வேண்டியிருக்கும் அளவுக்குக் கூட்டம். கொஞ்சம் High End Restaurant போல! மெல்லிய ஒளியில் – Candle Light Dinner Effect – சூழல் – ஹிந்தி பாடல்களின் BGM பின்னணியில் இசைக்க அசைவப் பிரியர்கள் புகுந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கு இடம் கிடைக்க அமர்ந்து கொண்டோம். தண்ணீர் கொண்டு வைத்து மெனு கார்ட் வந்தது. சைவம் அசைவம் என இரண்டும் கலந்த மெனு. சைவத்திலும் விதம் விதமான பெயர்கள் – என்ன உணவு அது, எப்படி இருக்கும் என்று புரிந்து கொள்ள சிரமப் பட வேண்டும்! அசைவம் சாப்பிட வேண்டியவர்கள் விலைப்பட்டியலைப் பார்த்து கொஞ்சம் அதிர்ந்தார்கள்.சரி அங்கிருந்து வெளியே வேறு உணவகத்திற்குச் செல்லலாம் என்றால் ஏற்கனவே வெகு நேரம் ஆகிவிட்டது – இதற்குப் பிறகு உணவகம் தேடி சாப்பிட்டு, பிறகு தங்குமிடம் வேறு தேட வேண்டும் – நீண்ட நேரம் ஆகிவிடும் – 7 மணி நேரத்திற்கும் மேல் பயணம் செய்த அலுப்பு வேறு – சரி அங்கேயே சாப்பிட்டு விடலாம் என முடிவு எடுத்தோம். பட்டர் ரொட்டி, மட்டர் மஷ்ரூம் மசாலா, அசைவத்தில் – தந்தூரி முர்க்g [தந்தூரி கோழி] – ஃபுல், முர்க் தவே கா பட்டியாலா ஷாஹி, மினரல் வாட்டர் இவ்வளவு தான் நாங்கள் சொன்னது. மொத்த பில் 1797/- [1695 + 102 – வரிகள்!]. அத்தனை விலை கொடுத்து வாங்கிய உணவு அப்படி ஒன்றும் நன்றாக இல்லை என்பது தான் எல்லோருடைய எண்ணமுமாக இருந்தது.உணவகத்தில் சாப்பிட்டு முடித்த பின் ஆம்தாவாத் நகரம் நோக்கி பயணித்தோம். முகேஷ் Rudra என்ற ஒரு தங்குமிடத்தில் கொண்டு எங்களை விட, அங்கே அறைகள் இருந்தாலும் அதற்கான கட்டணம் ரொம்பவே அதிகமாக இருந்தது. ஆம்தாவாத் நகரில் இரு இரவுகள் தங்க வேண்டியிருந்தது – இரண்டு நாட்களுக்கும் சேர்தால் பத்தாயிரத்திற்கு மேல் ஆகும் என்பதால் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருந்தது. சரி ஓயோ ரூம்ஸ் தளத்தில் தேடிப்பார்க்கலாம் எனத் தேட, நாங்கள் நின்றிருந்த இடத்தின் அருகிலேயே ஒரு தங்குமிடம் கிடைத்தது – தங்குவதற்கும் With Complimentary Breakfast and Free WiFi உடன் குறைந்த கட்டணத்தில் தங்குமிடம் கிடைத்தது. சரி அங்கே தங்குவதற்கு இணையம் வழி முன்பதிவு செய்து கொண்டு அங்கே சென்றோம்.

இரண்டு அறைகள் அப்போது தான் முன்பதிவு செய்திருந்ததால், அறைகளைச் சுத்தம் செய்யும் வரை கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஒரு நாளுக்கான கட்டணத்தினை முன்பணமாகக் கொடுத்து விட்டு, தங்குமிட தகவல் புத்தகத்தில் பெயர் மற்றும் விவரங்களை எழுதிக் கொடுத்தோம். அறைக்குச் சென்று ஒரு குளியல் போட்டு அன்றைய கணக்கு வழக்குகளை முடித்து விட்டு, ஆம்தாவாத் நகரில் இருக்கும் நண்பர் குரு அவர்களுக்கு அலைபேசி மூலம் வந்து சேர்ந்ததைத் தெரிவித்தேன். அடுத்த நாள் பார்க்கலாம் என்று சொல்ல, அதற்கான நேரத்தினை அவரையே சொல்லிவிடச் சொன்னேன். நீங்கள் முதலில் வரும்போதே உங்களைச் சந்திக்க முடியவில்லை, அதனால் நாளை கண்டிப்பாக சந்திக்கிறேன் என்று சொன்னார். அடுத்த நாள் அவரைச் சந்தித்தோம் – அந்த விவரங்கள் பிறகு!

எங்களை தங்குமிடத்தில் விட்டுவிட்டு ஓட்டுனர் முகேஷ் அவரது இல்லத்திற்குச் சென்றார். மனைவி பாசத்துடன் செய்த உணவை உண்டு அவர் மகிழ்ந்திருக்கட்டும் எனச் சொல்லி, அடுத்த நாள் காலை வரச் சொல்லி அனுப்பி வைத்தோம். நாங்களும் உறக்கத்தினைத் தழுவினோம். அடுத்த நாள் எங்கே சென்றோம், என்னென்ன அனுபவங்கள் கிடைத்தன என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்.    

தொடர்ந்து பயணிப்போம்.
 
நட்புடன்

வெங்கட்
தமிழகத்திலிருந்து....

26 comments:

 1. குட்மார்னிங் வெங்கட். இன்று உங்கள் ப்ளாக் மட்டுமல்ல, எங்கள் ப்ளாக்கும் திறக்கவில்லை. தினமலர் உள்ளிட்ட சில செய்தி நிறுவன பக்கங்களும் திறக்கவில்லை. உங்கள் பக்கத்துக்கு வழக்கம் போல முகநூல் சுவரேறி வந்து விட்டேன்!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா... எப்படியாவது வந்து சேர்ந்து கருத்துகளை வழங்கும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி!

   சில நாட்களாகவே Blogger-ல் சில பிரச்சனைகள்! ஏதோ மாற்றங்கள் செய்கிறார்களாம். அதனால் பதிவுக்கான கருத்துகள் நம் மின்னஞ்சலுக்கு வருவதில்லை. வலைப்பூவையோ அல்லது Blogger பக்கத்திலோ கருத்துகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. விரைவில் சரியாகும் என நம்பிக்கை இருக்கிறது! பார்க்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. சைவ / அசைவ உணவாக அனுபவங்கள் கொடுமை. தொடர்கிறேன். 10 ரொட்டி நாற்பது ரூபாய் என்பது மட்டும்தான் சீப் போல!!!

  ReplyDelete
  Replies
  1. உணவு சரியாக கிடைக்காவிட்டால் கொடுமை தான். 10 ரொட்டி நாற்பது ரூபாய் அல்ல! ஒரு ரொட்டி 40 ரூபாய். பத்து ரொட்டிக்கு 400 ரூபாய்! பில் பாருங்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. அடுத்தநாள் நிகழ்வுகள் அறிய தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 4. பயணங்களில் தங்குமிடம் செலவுதான் அதிகம். நல்ல வசதி வேணும் என்றால் வேற வழி இல்லை பாருங்க....

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். பயணத்தில் சில விஷயங்கள் தவிர்க்க முடியாதவை - குறிப்பாக தங்குமிட செலவுகள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 5. இப்போ மார்ச் மாதம் நாங்க போயிருந்தப்போ டாக்சி ஓட்டுநர் இப்படித் தான் அதிகம் விலை உள்ள ஓர் தங்குமிடத்தில் கொண்டு விட்டு விட்டார். இரவு ஒன்பது மணி ஆகவே வேறு வழியில்லாமல் இனிமேல் தேடிக் கொண்டு செல்ல முடியாது என அங்கேயே தங்கினோம். :(

  ReplyDelete
  Replies
  1. சில சமயம் இப்படியும் ஆவதுண்டு. எனக்கும் அப்படி அனுபவங்கள் உண்டு கீதாம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 6. டெம்ப்ளேட் மாத்தி இருக்கீங்க போல! சரியா இல்லை என் வரை! :(

  ReplyDelete
  Replies
  1. ஒரு மாற்றமும் செய்யவில்லை கீதாம்மா... அப்படியே தான் இருக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 7. பயண அனுபவங்கள் இனி போகிறவர்களுக்கு பயன் அடையலாம்.
  உணவு சில நேரங்களில் இப்படித்தான் ஆகி விடுகிறது பயணத்தில் அதிகவிலை ருசி குறைவு.

  ReplyDelete
  Replies
  1. பல இடங்களில் விலை அதிகம் என்றாலும் ருசி இருப்பதில்லை. சில சிறிய ஊர்களில் குறைவான விலையில் சிற்ந்த உணவு கிடைத்ததுண்டு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 8. வணக்கம் சகோதரரே

  எங்கு போனாலும் உணவும், தங்குமிடமுந்தான் சிரமத்தை உண்டாக்குகிறது. நம் அனுபவிக்காத பெயரில் இருக்கிறதே என விலையும் அதிகமான உணவை ஆர்டர் பண்ணி அது வந்ததும், வாயில் வைக்கவே விளங்காது. எதுவம் கிடைக்காது என்ற நிலையும், அதிக பணமும் பயமுறுத்த எப்படியோ சீப்பிட்டு வைப்போம்.

  தங்குமிடங்கள் சுற்றும் போது சமயத்தில் சரிவர கிடைப்பதில்லை. இரவு உறக்கத்திற்குப்பின் அடுத்ததாக செல்லுமிடங்களில், பார்த்தவிடங்கள் அறிய ஆவலுடன் உள்ளேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலும் தங்குமிடம்/உணவு பற்றிய சிந்தனை பயணத்தினை திட்டமிடும்போதே தொடங்கிவிடும். சில சமயங்களில் இம்மாதிரி அனுபவங்கள் அடுத்த பயணத்தின் போது நம்மை சரியாகத் திட்டமிட வைக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 9. சாப்பிட்டு என வந்திருக்க வேண்டும். தட்டச்சுப்பிழை..

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லை. சில சமயங்களில் தட்டச்சு பிழை வருவது சகஜம் தான் கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 10. உணவகம் கண்டுபிடித்தும் விலை மிக அதிகமா? சுவை வேறு இல்லை என்று சொல்லிவிட்டீர்கள்.

  ஆன்லைனில் ரூம் புக் பண்ணுவது இப்போதெல்லாம் மிக எளிதாகிவிட்டது. தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆன்லைன் மூலம் தங்குமிடம் தேர்ந்தெடுப்பது வசதியாக இருந்தாலும், சில சமயங்களில் இணையத்தில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 11. தினமும் அசைவம் சாப்பிடுறவங்களும் இருக்காங்களே!

  ReplyDelete
  Replies
  1. மூன்று வேளையும் அசைவம் சாப்பிடுபவர்களும் உண்டு ராஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 12. அனுபவங்களைப் பகிர்வது என்றாலே சிறப்பு தான். அதிலும் பயண அனுபவங்கள் இன்னும் சிறப்பு. உங்கள் எழுத்துக்களோடு நாங்களும் பயணம் செய்தபடியிருக்கிறோம்.


  உச்சக் கட்டத்தில் ஐ.பி.எல் - அரையிறுதியில் பலப்பரீட்சை!
  https://newsigaram.blogspot.com/2018/05/IPL2018-Semi-final-Battle.html
  #ஐபிஎல் #ஐபிஎல்2018 #IPL #IPL2018 #VIVOIPL #VIVOIPL2018 #CSK #SRH #KKR #RR #MSD #MSDHONI #SIGARAM #SIGARAMCO #சிகரம் #சிகரம்பாரதி

  ReplyDelete
  Replies
  1. உடன் தாங்களும் பயணிப்பது அறிந்து மகிழ்ச்சி சிகரம் பாரதி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 13. சாப்பாட்டின் விலை ரொம்பவே அதிகமாகத் தெரிகிறது. நன்றாகவும் இல்லை என்று சொல்லியிருக்கிறீர்களே. (துளசி: எங்கள் ஊர்க்காரர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால் தினமும் அசைவம் வேண்டும். நானும் அசைவம் சாப்பிடுபவன் தான் என்றாலும் தினமும் எல்லாம் வேண்டாம். ஆனால் எங்கள் வீட்டிலுள்ளோர் தினமும் சாப்பிடுவதை விரும்புவர்.)

  உணவகத்தின் படமே சொல்லுகிறது கொஞ்சம் விலை கூடுதலாகத்தான் இருக்குமோ என்று

  ReplyDelete
  Replies
  1. தினம் அசைவம்.... சிலருக்கு அப்படி பழகிவிட்டது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....