எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, June 1, 2018

குஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம்இரு மாநில பயணம் – பகுதி – 46

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!Dastan Auto World – விண்டேஜ் வில்லேஜ் கார்கள் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியான விண்டேஜ் வில்லேஜ்-லியே சாப்பிடலாம் எனச் சொன்னதற்கு “விலை அதிகம்” என்று கேரள நண்பர்கள் சொல்ல, மீண்டும் நகரத்திற்குள் வந்து முதல் நாள் சாப்பிட்ட அதே உணவகத்திலேயே சாப்பிட்டோம். தொடர்ந்து ஒரு வாரத்தில் மூன்று நான்கு முறை இங்கே வந்து விட்டதால், சிப்பந்திகளுக்குக் கூட எங்களை அடையாளம் தெரிந்து விட்டது! ஏதோ கொஞ்சம் சப்பாத்தி, இரண்டு சப்ஜி, ராய்தா, சாலdட், பாப்பட் [அப்பளம்], Chசாச்ch என சாப்பிட்டதற்கே 1800 ரூபாய் ஆனது – விண்டேஜ் வில்லேஜ் சாப்பாட்டுக்கான தொகையை [ஒருவருக்கு 240/-] விட இங்கே அதிகம்! கண் கெட்ட பிறகு சூரிய உதயம் – நண்பர்கள் உணவுக்கான Bill பார்த்த போது – அங்கேயே சாப்பிட்டு இருக்கலாம் என்றார்கள்! சரி பரவாயில்லை – அடுத்து எங்கே!அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் வல்லபாய் படேல் அவர்களின் நினைவு இல்லம் – அருங்காட்சியகம் – மிகவும் சிறப்பாக அமைத்திருக்கிறார்கள் – உள்ளே எல்லாமே டெக்னாலஜி மயம் – நபர்கள் நடந்தால் தானாக எரியும் விளக்கு, ஒவ்வொரு இடத்திலும் அந்த இடம் பற்றிய தகவல் தெரிந்து கொள்ள ஹெட்ஃபோன், கணினி மூலம் தகவல் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு என சிறப்பாக அமைத்திருக்கிறார்கள்.  பெரிய இடம் – இரும்பு மனிதர் படேல் அவர்களின் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களையும் இங்கே பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். 3டி ஒளி-ஒலி காட்சி இங்கே மிகவும் சிறப்பு – சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் மாலை 7 மணிக்கு நடக்கிறது. இந்த இடத்தில் அப்படி ஒரு அமைதி. சபர்மதி ஆஸ்ரமம் அளவுக்கு இங்கே சுற்றுலாப் பயணிகள் வருவது இல்லை என்று தோன்றியது.இத்தனைக்கும் விஸ்தாரமான இடத்தில் தான் இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கிறது – அமைதியான சூழல் – நிறைய விஷயங்களை அங்கே பார்க்கவும், கேட்கவும் முடிந்தது. இருக்கும் சிப்பந்திகளும் விஷயங்களை கேட்டால் சொல்கிறார்கள். இந்த அருங்காட்சியகத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை! வெளியே மட்டும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். லங்கூர் என அழைக்கப்படும் சிங்க வால் குரங்குகள் இங்கே நிறையவே உலாவிக் கொண்டிருந்தன. நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடியும் – நமது சுதந்திர பற்றிய வரலாற்றுத் தகவல்கள் தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் தவற விடக்கூடாத அருங்காட்சியகம் இது. இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கும் இடமும் சரித்திரப் புகழ் வாய்ந்த இடம்!


அஹ்மதாபாத் நகரின் ஷாஹிபாக்G பகுதியில் இருக்கும் மோத்தி ஷாஹி மஹல் எனும் கட்டிடத்தில் தான் அமைந்திருக்கிறது இந்த அருங்காட்சியகம். 1618-1622 ஆண்டுகளில் ஷாஜஹான் அவர்களுக்காக கட்டப்பட்ட இந்த இடத்தில் பின்னர் ஆங்கிலேய வைஸ்ராய்கள் தங்கினர். பிறகு 1878-ஆம் ஆண்டு ரபீந்த்ரநாத் தாகூர் தனது 18 வயதில் இங்கே தங்கி The Hungry Stones எனும் புத்தகத்தினை எழுதினார். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு 1960 முதல் 1978-ஆம் ஆண்டு வரை குஜராத் மாநிலத்தின் ஆளுனர் மாளிகையாக இந்த இடம் இருந்தது. அதன் பிறகு தான் 1978-ஆம் ஆண்டு இந்த இடம் சர்தார் வல்லபாய் படேல் அவர்களுக்கான நினைவிடமாகவும் அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டது.  அருங்காட்சியகம் வாரத்தில் திங்கள் கிழமை தவிர ஆறு நாட்களில் காலை 09.30 முதல் மாலை 05.00 மணி வரை செயல்படுகிறது. நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு 20 ரூபாய், சிறுவர்களுக்கு 10 ரூபாய். ஏற்கனவே சொன்னது போல கேமராவிற்கு அனுமதி இல்லை. நிறைய விஷயங்கள் இங்கே பார்க்க முடியும் என்பதால் அஹ்மதாபாத் சென்றால் தவற விடக்கூடாத இடங்களில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம். புகைப்படம் எடுக்க அனுமதித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் – ஆனால் ஏனோ அனுமதிப்பது இல்லை.  ஒவ்வொரு இடமாகச் சுற்றிப் பார்த்து விட்டு வெளியே வந்தோம்.


எங்களுக்காக ஓட்டுனர் முகேஷ் காத்திருந்தார். கொஞ்சம் படபடப்பாக இருந்தார் – என்ன விஷயம் என்று கேட்டால் சொல்ல வில்லை. சரி அடுத்து எங்கே போக வேண்டும் எனக் கேட்க, நண்பர்களுக்கு கொஞ்சம் பர்சேஸ் செய்ய வேண்டும் எனச் சொன்னார்கள் – இந்தப் பயணத்தின் கடைசி நாள் அந்த நாள் – அதனால் அடுத்த நாள் வீட்டுக்குச் செல்லும்போது வீட்டினருக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு போக வேண்டுமே! எந்தப் பயணமுமே பர்ச்சேஸ் இல்லாமல் முடிப்பதில்லையே! – அதிலும் ஒரு நண்பர் சுற்றுலா வருவதாகச் சொல்லாமல் அலுவலக வேலையாக வந்திருப்பதாகச் சொல்லி வந்திருந்தார்! மனைவியிடம் இப்படி சுற்றுலா போவதை ஏன் மறைக்க வேண்டும் என்பது எனக்கு புரியாத விஷயம்!

அதனால் நேராக நாங்கள் சென்ற இடம் ஒரு ரிலையன்ஸ் மெகா மார்ட். அங்கே என்ன செய்தோம், ஏன் ஓட்டுனர் முகேஷ் படபடப்பாக இருந்தார் என்பதற்கான காரணம் ஆகியவற்றை அடுத்த பதிவில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்.
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

40 comments:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி...

  கீதா

  ReplyDelete
 2. அருமையான இடம் போல் தெரிகிறது!

  லங்கூர் ரொம்பவே அழகாக இருக்கிறார். ...

  ஸஸ்பென்ஸ் வைச்சு முடிச்சுட்டீங்களே ஜி!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அழகான இடம் தான் கீதா ஜி!. லங்கூர் அழகு! உண்மை. கருப்பாக இருந்தாலும் ஒரு வித அழகு!

   சஸ்பென்ஸ் - திங்களன்று விலகும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 3. குட்மார்னிங் வெங்கட். சில நேரங்களில் முதல்முறை மனம் சொல்வதை ஏற்றுக்கொண்டுவிட வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   சில நேரங்களில் மட்டுமல்ல, பல நேரங்களில் இப்படித்தான் - பிறகு வருந்தி என்ன ஆகப் போகிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 4. முதல் படம் அழகாக இருக்கிறது. காந்தி, பட்டேல், நேரு மூவரும் சேர்ந்திருப்பது...

  ஸ்ரீராம் இன்னும் எட்டிப் பார்க்கலை போல....அருங்காட்சியகத்தில் ஆளே இல்லையே என்று கொஞ்சம் கூட்டம் சேரட்டும் என்று இருக்கிறார் போல..ஸ்ரீராம் வாங்க லங்கூர் இருக்கார் துணைக்கு சுற்றிப் பார்த்துட்டு வரலாம்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வந்துட்டேனே... அப்பவே வந்துட்டேன் கீதா. நான் வந்தபோது உங்கள் ல் கமெண்ட் இருந்தது. படித்து விட்டு மொத்தமாக மழை பொழியலாம் என்று கடமையே கண்ணானேன்!

   Delete
  2. // உங்கள் ல் கமெண்ட் இருந்தது.//

   ஹிஹிஹி... வழக்கம் போல அவசரம்... அது என்னன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்!!!!

   Delete
  3. ல்//

   கண்டுபிடித்துவிட்டேன்....ஹிஹிஹிஹி பெரிய ரகசியம்!!!

   கீதா

   Delete
  4. வாங்க லங்கூர் இருக்கார் சுத்திப் பார்த்துட்டு வரலாம் - ஆஹா நல்ல துணை தான்! :)

   மூவர் இருக்கும் படம் எனக்கும் பிடித்த படம்.

   நன்றி கீதாஜி.

   Delete
  5. கடமை ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் ஸ்ரீராம். :) சரியான விஷயம் கூட.

   நன்றி ஸ்ரீராம்.

   Delete
  6. வழக்கமான அவசரம் ஹாஹா. என்னன்னு நானும் கண்டுபிடிச்சிட்டேன் ஆனா சொல்ல மாட்டேனே!

   நன்றி ஸ்ரீராம்.

   Delete
  7. பெரிய ரகசியம்..... ஹாஹா நல்ல பதில் கீதாஜி.

   Delete
 5. சிங்கம் போன்ற ஒருவரின் அருங்காட்சியகத்தில் சிங்க வால் குரங்குகள் உலாவுவதில் ஆச்சர்யமில்லைதானே!! ஹிஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம் ரசித்தேன் இந்த கமென்டை!!! சூப்பர்!!! அதானே!!

   கீதா

   Delete
  2. சிங்கம் போன்ற ஒருவரின்.... உண்மை. அவர் போன்றவர் இப்போது இல்லை.

   நன்றி ஸ்ரீராம்.

   Delete
  3. நானும் ஸ்ரீராம்-இன் கருத்தை ரசித்தேன் கீதாஜி.

   நன்றி.

   Delete
 6. ஓட்டுநர் முகேஷ் மனைவிக்கு உடல் நலமில்லாமல் இருந்திருக்கும் சரியா?

  ஆமாம், உங்கள் நண்பர் ஏன் சாதாரண விஷயங்களை மனைவியிடமிருந்து மறைக்கிறாரோ!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம் சில ஆண்களுக்கு இப்படியான பிரச்சனைகள் உண்டு. எனக்குத் தெரிந்தே இருக்கிறார்கள் அப்படியான ஆண்கள். எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பவர்கள் என்றால் அல்லது செலவு செய்வது என்பது போன்ற சுதந்திரம் இல்லாமல் இருக்கலாம்....

   கீதா

   Delete
  2. ஓட்டுனரின் மனைவி நலமாகவே இருந்தார் ஸ்ரீராம். இது வேறு விஷயம். திங்களன்று சொல்கிறேன்.

   மனைவியிடம் பலரும் பல விஷயங்களை மறைத்து விடுகிறார்கள். ஏனோ புரிவதில்லை!

   நன்றி ஸ்ரீராம்.

   Delete
  3. செலவு செய்யும் சுதந்திரம்- அதுவும் ஒரு காரணியாக இருக்கலாம் கீதாஜி. நன்றி.

   Delete
 7. அந்த உணவகத்தில் சாப்பிட்டிருக்கலாமோ...புதிய உணவகம் சுவையும் பார்த்திருக்கலாமோ......அப்புறம் சாப்பிட்டது..ஏற்கனவே சாப்பிட்ட உணவகம் இல்லைஅய...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஏற்கனவே சாப்பிட்ட உணவகம் தான். வேறு உணவகத்தில் சாப்பிட அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை.

   நன்றி கீதாஜி.

   Delete
 8. இதுபோன்ற நினைவகங்களில்புகைப்படம் எடுக்க ஏன் அனுமதி மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை.
  கர்மவீரர் காமராசர் இல்லத்திற்குச் சென்றபொழுது, புகைப்படம் எடுக்கக் கூடாது என்று, காவலர் எங்களைச் சுற்றி சுற்றியே வந்தார்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் இந்த விஷயம் ஒரு புரியாத புதிர் தான் ஐயா. பல இடங்களில் இப்படியான அனுபவங்கள் - ஏன் என்று தெரிந்து கொள்ள முடியாமலே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 9. வல்லபாய் படேல் பார்க்கலைனே நினைக்கிறேன். அகமதாபாதில் (புராதன நகரில்) துணிக்கடைகள் பிரபலம். அதுவும் பருத்திப் புடைவைகள் மிக அருமை! சில்க் மாதிரி இருக்கும். நாங்க இருந்த 90 களிலேயே ப்ளவுஸுடன் புடைவைகள் வந்து விட்டன. கட்டினால் கசங்காது! ஆனால் உங்க நண்பர்கள் மற்றும் உங்கள் பர்ச்சேஸ் எப்படியோ தெரியலை! :)))

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதாக்கா அஹமதாபாத் காட்டன் மெட்டீரியலும் நன்றாக இருக்கும் ஃபேமஸ். சாரிகளும்.

   கீதா

   Delete
  2. பருத்திப் புடவைகள் - நாங்கள் ஏதும் வாங்கவில்லை. குஜராத் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இப்படி துணி விற்பனை உண்டு என்றாலும் நாங்கள் ஏதும் வாங்கவில்லை. நான் அங்கே எதுவும் வாங்கவில்லை. நண்பர்களும் தங்களுக்கு மட்டுமே ஜீன்ஸ் வாங்கிக் கொண்டார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
  3. ஆமாம் கீதா ஜி! அங்கே புடவைகள் நிறைய வகைகளில் கிடைக்கிறது. நான் வாங்கவில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 10. ஷாப்பிங்க் போகாம பயணம் முடியாதா?! உங்க மாப்பிள்ளை என்னை ஏமாத்துறார்ண்ணா. இதுமாதிரியான இடங்களில் விலை அதிகமா இருக்கும்ன்னு சொல்வார்.

  ReplyDelete
  Replies
  1. மாப்பிள்ளை சொல்வதும் உண்மை தான் - பல சுற்றுலாத் தலங்களில் விலை அதிகம் வைத்து விற்பனை செய்வதுண்டு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 11. அடுத்து...

  ஆவலுடன் காத்திருக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. விரைவில் சொல்கிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 12. இந்தியாவின் இரும்பு மனிதரின் நினைவு இல்லம் பற்றி தெரிந்துகொண்டோம் வெங்கட்ஜி. விவரங்கள் வழக்கம் போல் சிறப்பு. தொடர்கிறோம் ஜி

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 13. வணக்கம் சகோதரரே

  தங்கள் பதிவின் மூலம் நாங்களும் சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம் சுற்றி வந்தோம்.அருமையாக இருக்கிறது.அதன் விபரங்களைப் பற்றி கூறியமைக்கு நன்றி.

  தலைவர்கள் மூவரும் சேர்ந்திருந்த முதல் படம் நன்றாக உள்ளது.
  சிங்க வால் குரங்குகள் படங்கள் நல்ல தெளிவு. அடுத்து என்னவென்று அறியும் ஆவலில் நாங்களும் உங்களுடன் தொடர்கிறோம்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. மூவரும் சேர்ந்து இருக்கும் படம் எனக்கும் பிடித்தது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 14. வல்லபாய் படேலின் நினைவு இல்லம், ஷாஜஹானுக்காகக் கட்டப்பட்டதா? பயண விவரங்கள் அருமை. தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....