புதன், 11 ஜூலை, 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்மாவுக்கு ஒரே கோவில் – மனைவியின் சாபம்





பிரஹ்மா கோவில் - கடை வீதியிலிருந்து எடுத்த படம்
புஷ்கர் நகரத்திலிருந்து....
 
பிரஹ்ம சரோவரிலிருந்து புறப்பட்டு அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் பிரஹ்மாவிற்கான கோவில். கடைவீதியிலிருந்து பார்க்கும்போதே பிரம்மாண்டமாகத் தெரியும் கோவில் – ஜகத் பிதா பிரஹ்மா கோவில் என்ற பளிங்குக் கல் அறிவிப்பும் உங்களுக்குக் காணக் கிடைக்கும் – ஹிந்தி மொழியில் தான்! ராஜஸ்தானில் நிறைய மார்பிள் கற்கள் கிடைக்கிறது என்பதாலோ என்னவோ, படிக்கட்டுகள் அனைத்திலும் வழவழவென கற்களைப் பதித்து இருக்கிறார்கள் – இப்போதெல்லாம் நம் ஊர் கோவில்களிலேயே வழவழ கற்களைப் பதிக்கும்போது, அவை கிடைக்கும் இடமான ராஜஸ்தானில் போடாமல் இருப்பார்களா என்ன? வழவழவென்ற கற்கள் – மழையும் பெய்து படிக்கட்டுகளில் தண்ணீர், கால்பாதங்களிலிருந்து உண்டாகும் மண்ணும் சேர்ந்து வழுக்கல் ரொம்பவே அதிகம்! 


பிரஹ்மாவும் காயத்ரி தேவியும் - பிரஹ்மா கோவில்
புஷ்கர் நகரத்திலிருந்து....

கொஞ்சம் அஜாக்கிரதையாகவோ, வேகமாகவோ நடந்தால் படைக்கும் கடவுளான பிரஹ்மாவின் கோவிலுக்குச் செல்லும் போதே கபால மோக்ஷம் சம்பவிக்கலாம்! இளைஞர்களுக்கே கடினம் எனும்போது வயதானவர்கள் என்ன செய்வார்கள் – இதையெல்லாம் கல் பதிப்பவர்கள் யோசிப்பதே இல்லை! எல்லாம் அவன் பார்த்துப்பான், அப்படி நடக்கணும்னு இருந்தா தடுக்கவா முடியும் என்று சமாளித்துக் கொள்ள வேண்டியது தான்! கோவில்களுக்குச் செல்லும்போது மனிதர்கள் புராணம் எதற்கு? கடவுளைப் பார்க்கலாம் – பார்த்துப் பொறுமையாக படியேறி வாருங்கள்.  இந்தக் கோவிலில் இன்னுமொரு விஷயம் – அலைபேசி, கேமரா போன்றவற்றிற்கு அனுமதி இல்லை! அதனால் கீழே இருக்கும் கடைகளில் நீங்கள் டோக்கன் பெற்றுக் கொண்டு வைத்துச் செல்லலாம்.



கடை வீதியில் ஒரு முதியவர்....
புஷ்கர் நகரத்திலிருந்து....

ஆனால் கேமராவினை அங்கே வைத்துச் செல்ல எனக்கு இஷ்டமில்லை. நண்பர்கள் அனைவரையும் பிரஹ்மா கோவிலுக்குச் சென்று வரும்படிச் சொல்லி கீழே காத்திருந்தேன். அவர்களில் ஒருவர் திரும்பி வந்த பிறகு கேமரா பையைக் கொடுத்து விட்டு கோவிலுக்குச் செல்ல வேண்டும். இந்தியர்கள் அல்லாது பல வெளிநாட்டவர்களும் இங்கே வருகிறார்கள். அவர்களும் இப்படியான கடைகளில் விலையுயர்ந்த பொருட்களை வைத்துச் செல்ல விரும்பாமல் ஒருவர் நின்று கொள்ள மற்றவர்கள் சென்று வருகிறார்கள். டோக்கன் தவறினால், கிடைப்பவரிடம் உங்கள் பொருட்கள் போய்விடக் கூடும். கோவிலுக்குச் சென்று பிரஹ்மாவைத் தரிசித்த பின் குழுவில் ஒருவர் திரும்ப, அவரிடம் என் உடைமைகளைக் கொடுத்து விட்டு வேகவேகமாக படியேறினேன் – தரையின் வழுக்கல்களை சமாளித்தபடியே தான்!


கடைவீதியில் வந்து கொண்டிருந்த ஒருவர்..
புஷ்கர் நகரத்திலிருந்து....

கீழே காத்திருந்த போது சாலையில் நிறைய படங்கள் எடுக்க முடிந்தது – காவி உடையில் இருந்த ஒரு முதியவரை அவருக்குத் தெரியாமல் எடுக்க ரொம்பவே கஷ்டப் பட வேண்டியிருந்தது. படைக்கும் கடவுளான பிரஹ்மாவினை புஷ்கர் கோவிலில் திவ்யமாக தரிசித்து கீழே இறங்கினேன். கோவில் – வழக்கமான வடக்கத்திய பாணி கோவில் – பளிங்குச் சிலைகள் தான். என்னதான் கூட்டம் அதிகம் இருந்தாலும் நின்று நிதானித்து தரிசிக்க முடிந்தது.  நான் இறங்கி வருவதற்கும் மற்ற குழுவினர்கள் தரிசனம் முடித்து வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது. என்னால் யாரும் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. ஒருவருக்காக, குழுவினர் அனைவரும் காத்திருப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் – குழுவாகப் பயணிக்கும்போது இப்படி நடப்பதைத் தவிர்த்தல் நலம்.


கடை வீதியில் உலவிய மாடு......
புஷ்கர் நகரத்திலிருந்து....

சரி பிரஹ்மா கோவில் இங்கே மட்டும் தான் என ஏன் சொல்கிறார்கள் [தமிழகத்திலும் இப்படி பிரஹ்மா கோவில்கள் – திருச்சியிலேயே கூட மும்மூர்த்திகள் ஸ்தலத்தில் பிரஹ்மாவிற்குக் கோவில் உண்டு!] எனப் பார்க்கலாமா? அதற்கான கதையை இங்கே பார்க்கலாம்! ஒரு விஷயம் – கடவுளே ஆனாலும் தவறு செய்தால் மனைவியிடமிருந்து தப்பிக்க முடியாது என்று சிலர் சொன்னாலும் சொல்லலாம்! கதை அப்படி இருக்கு! என்ன கதை பார்க்கலாமா…. பிரஹ்மா, தனது இல்லத்தரசி சாவித்ரியுடன் புஷ்கர் நகரில் ஒரு யாகம் வளர்க்க ஆசைப்படுகிறார். நகரைச் சுற்றிலும் மலைகளை உருவாக்கி ஒவ்வொரு திக்கிலும் காவலுக்கு சிலரை நியமித்து யாகம் வளர்க்கிறார்.  யாகம் நடக்க வேண்டும்.


வாய் நிறைய குட்காவுடன்....
புஷ்கர் நகரத்திலிருந்து....

சரியான சமயத்தில் சாவித்ரி தனது தோழிகளான பார்வதி, லக்ஷ்மி, இந்திராணி ஆகியோரை அழைத்து வர வெளியே சென்று விடுகிறார். நல்ல நேரம் போய்க்கொண்டே இருக்கிறது! என்ன செய்ய, மனைவி இல்லாமல் யாகம் நடத்த முடியாது. உடனே இந்திரனிடம் தனக்கு ஒரு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யச் சொல்கிறார். இந்திரனும் காயத்ரி எனும் பெண்ணை உருவாக்க, பிரஹ்மாவுக்கும் காயத்ரிக்கும் திருமணம் நடக்கிறது. பிரஹ்மா-காயத்ரி உடன் சேர்ந்து யாகம் நடத்துகிறார். அச்சமயத்தில் தோழிகளுடன் யாக சாலைக்கு வந்த சாவித்ரி அதிர்ச்சியில்…. மனைவியான நான் இருக்கும்போது, இரண்டாவது திருமணமா, அதுவும் என் அனுமதியில்லாமல்…..  இந்தா பிடி சாபம் – உனக்கு இந்த ஊர் தவிர வேறு எங்குமே கோவில் அமையாது. இங்கே தவிர வேறு எங்கும் உனக்கு பூஜை கிடையாது என சாபம் கொடுத்தது மட்டுமின்றி, இனி இங்கே எனக்கு இடமில்லை! நான் போகிறேன் எனத் தனிக்கோவில் கொள்கிறார்.


மம்தா ம்யூஜிக் செண்டர் - கடையருகே காத்திருக்கும் நண்பர்கள்...
புஷ்கர் நகரத்திலிருந்து....

இப்போதும் புஷ்கர் நகரில் இருக்கும் பிரஹ்மாவின் கோவிலில் பிரஹ்மாவிற்குத் துணையாக இருப்பது காயத்ரி தான். சாவித்ரியின் கோவில் அருகே உள்ள மலையுச்சியில் தான் இருக்கிறது. சாவித்ரியின் தனிக்கோவிலுக்கும் நாங்கள் சென்று வந்தோம். அந்த கதை அடுத்த பகுதியில். பிரஹ்மாவின் தரிசனம் முடித்துக் கொண்டு கடைவீதி வழியே நடந்து அங்கே இருந்த ஒரு காவலரிடம் சாவித்ரி தேவி கோவிலுக்குச் செல்ல வழி கேட்க, ஃபட்ஃபட் சேவா எனப்படும் ஆட்டோவில் செல்வது தான் சிறந்தது எனச் சொல்லி அனுப்பினார். ஒரு கடை அருகே ஒரே ஒரு ஆட்டோ இருக்க, முதலில் சிலரை ஏற்றிக் கொண்டு சென்றார் அந்த ஆட்டோ ஓட்டுனர். நானும் சில நண்பர்களும் ஆட்டோவிற்குக் காத்திருந்தோம்.


காத்திருந்த போது தலைப்பாகையுடன் எடுத்த படம்...
புஷ்கர் நகரத்திலிருந்து....


இஞ்சி-ஏலக்காய் இடிக்கப் பயன்படும் பாத்திரம் - 
ஹிந்தியில் மம்ஜாஸ் எனப் பெயர்....
புஷ்கர் நகரத்திலிருந்து....


காத்திருந்த வேளையில் ஒரு கடையில் இருந்த ராஜஸ்தான் தலைப்பாகையை வைத்துப் பார்த்து படங்கள் எடுத்துக் கொண்டோம். கடைக்காரர் வாய் நிறைய குட்காவுடன் என்ன சொல்கிறார் என்று புரியாமல் ஏதோ பேசினார் – தலைப்பாகை வைத்துப் பாருங்கள் என்று சொல்கிறாராம்! பெரும்பாலானவர்கள் இப்போதெல்லாம் இந்த குட்காவுக்கு அடிமையாகிவிட்டார்கள். தயாரிப்பதை நிறுத்தாமல், பயன்படுத்த வேண்டாம் என்று சொல்வதே வாடிக்கையாகி விட்டது. தினம் தினம் புதிது புதியதாய் குட்கா நிறுவனங்கள் ஆரம்பித்து கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார்கள். பயன்படுத்துபவர் எண்ணிக்கையும் கோடிக் கணக்கில் பெருகிக் கொண்டிருக்கிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டோ திரும்பி வர நாங்கள் அதில் ஏறிக் கொண்டோம். அடிவாரம் வரை அவர் கொண்டு விட்டார். அங்கேயே காத்திருப்பதாகவும் சொல்ல, நாங்கள் புறப்பட்டோம்.


இங்கே தான் போகப் போகிறோம்...
புஷ்கர் நகரத்திலிருந்து....

சாவித்ரி தேவியின் கோவிலுக்கு எப்படிச் சென்றோம், அங்கே பார்த்த விஷயங்கள் என்ன என்பதையெல்லாம் அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

26 கருத்துகள்:

  1. குட்கா தயாரிப்பதை நிறுத்த முடியாத அரசு மக்களுக்கு புத்தி சொல்கிறது.

    சாவித்ரி தேவியின் கோவிலைக்காண ஆவலுடன் தொடர்கிறேன் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட்கா தயாரிப்பதை நிறுத்த முடியாத அரசு - புகையிலை பயிரிடும் விவசாயிகள் கொடுக்கும் விளம்பரங்களைப் பாருங்கள் கில்லர்ஜி...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. குட்மார்னிங் வெங்கட். உள்ளே படம் எடுக்க்க் கூடாது. சரி. வழுக்கும் அந்தப் படிக்கட்டுகளை ஒரு படம் எடுத்திருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழுக்கும் படிக்கட்டுகளை படம் எடுத்திருக்கலாமோ? லாம்... நிறைய மக்கள் கூட்டம் இருந்ததால் எடுக்கவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. உடனே "இந்தா பிடி சாபம்" என்று அவர்களுக்கு கோபம் வந்து விடுகிறது! தன் சக்தியை இப்படி அவர்கள் விரயம் செய்யச் செய்ய அவர்கள் தவபலன் குறையும் என்றும் சொல்வார்கள்! இதற்குதான் இந்த சக்தியை எல்லாம் நாம் கையில் வைத்துக்கொண்டிருக்கக் கூடாது என்பது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டென பிடி சாபம் என்று கொடுக்கும் தெய்வங்களால் "இவ்வுலகம் முப்போகமும் விளையட்டும்" என்று அருள் பாவிக்க முடியாதா ?

      நீக்கு
    2. கில்லர்ஜி.... உலகின் ஒழுங்கில் அவர்கள் தலையிடமுடியாது (தேவையில்லாமல்). நாம சுற்றுச்சூழலைப் பாழ்படுத்திட்டு தெய்வங்கள் வந்து நேர் செய்யக்கூடாதா என்று கேட்கலாமா? (உடனே ஏசியைக் கண்டுபிடித்தவர், கண்டுபிடித்த உடனேயே வெளியில் அறிவிப்பதற்கு முன்னால், அந்த டீமையே கொன்றிருக்கக்கூடாதா, தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவுடன்...' இப்படி நிறையக் கேள்விகள் வரப்போகிறது, பலரிடமிருந்து.. ஹா ஹா ஹா)

      முயற்சி இல்லாமல் முப்போகம் விளைந்தால், அரசுக்கு மிகவும் நல்லது. டாஸ்மாக் வருமானம் மிகவும் அதிகமாகும்.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    4. கொடுப்பதும் அவர்கள் தானே.... கில்லர்ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    5. முயற்சி இல்லாமல் முப்போகம் விளைந்தால் - ஹாஹா... அதானே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. கவனத்துடன் செல்ல வேண்டிய கோயில் என்று புரிகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறிப்பாக மழைக்காலங்களில்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. பல இடங்கள் பல கதைகள் எல்லாம் நினைவில் நிற்குமா இதே கதையை பிறிதொரு சமயம்வாசிக்கும் போது அல்லது கேட்கும் போது எங்கோ படித்திருக்கிறோமே என்று தோன்றலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல இடங்கள்... பல கதைகள்.... உண்மை தான். அனைத்தையும் ரசிப்போம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  6. வாசப்படில டைல்ஸ் பதிப்பதே ஆபத்து. இதுல மார்பிள் கற்களா?! வெளங்கிடும்...

    பய உணர்ச்சியை இறைவன் குறைப்பான்னு பார்த்தால், கோவிலுக்கு போறதுக்கே பயப்படனும்போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  7. படங்கள் நல்லா இருக்கு. மாட்டுக்கு ரத்தத்தையும் சேர்த்து கறந்துட்டாங்க போலிருக்கு. ரொம்ப வத்திப்போய் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாட்டுக்கு ரத்தத்தையும் சேர்த்து கறந்துட்டாங்க போல.... இவை வளர்க்கும் மாடுகளல்ல.... கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட மாடுகள். அதனால் கிடைத்ததைச் சாப்பிட்டு வளர்பவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. இடமும் படங்களும் அழகாக இருக்கின்றன. கதைகளும். ஒவ்வொரு இடத்திற்கும் எத்தனை கதைகள்.!

    கீதா: கதைகள் வியப்பாக இருக்கின்றன ஜி. பிரம்மாவின் மனைவி பெயர் சாவித்ரியா....சரஸ்வதி இல்லையா? அப்புறம் காயத்ரியுமா...அறிந்ததில்லை. எதற்கெடுத்தாலும் ஏன் இப்படிக் கோபம் வருகிறதோ. புராணங்கள் தத்துவங்கள் சொல்லுவதென்னவோ கோபத்தை அடக்கு. அது முனிவர் தேவர் எல்லோருக்கும் பொருந்தும்தானே...என்றாலும் மித்தாலஜி கதைகள் ஸ்வாரஸ்யம்தான். படங்கள் செமையா இருக்கு. அதுவும் சாவித்ரி கோயில் அந்த மலை அழகு...அதைப் பற்றி அறியவும் ஆவல்..தொடர்கிறோம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரஸ்வதி, சாவித்ரி என இறைவிக்கு பல பெயர்கள். இந்த ஊரில் சாவித்ரி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  9. வெங்கட் டீசர்ட் போடாமல் வேறு நல்ல சர்ட் போட்டு தலைப்பாகையுடன் இருந்தால் மாப்பிள்ளை மாதிரி இருந்திருப்பிங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  10. புஷ்கர் நகரம் – பிரஹ்மாவுக்கு ஒரே கோவில் ...பார்த்தும் படித்தும் ரசித்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  11. இந்த பதிவுக்கு முன்பே நான் வந்திருக்கேன்:-)

    பிரம்மாவுக்கு தனிக்கோவில் இல்லாம போக அண்ணாமலையார் சாபமே காரணம்ன்னு திருவண்ணாமலை தலப்புராணத்தில் சொல்லப்படுது.


    எதுன்னு அந்த பிரம்மனுக்கே வெளிச்சம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரம்மனுக்கே வெளிச்சம். உண்மையான கருத்து.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....