சனி, 14 ஜூலை, 2018

போலா ராம் – உத்திரப் பிரதேசத்து உழைப்பாளி – தமிழகத்தில்…




மேலே கொடுத்திருக்கும் படம் சில நாட்கள் முன்னர் புகைப்படப் பகிர்விலும் பகிர்ந்து கொண்டது நினைவிருக்கலாம்! [B]போலா ராம்! உத்திரப் பிரதேசத்தின் அலிகர்[ட்] பகுதியைச் சேர்ந்தவர் எனச் சொன்னாலும் எனக்கென்னமோ அவரைப் பார்க்கும்போது பீஹார் மாநிலத்தினைச் சேர்ந்தவர் எனத் தோன்றியது. இப்போதெல்லாம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் – தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் சிறு சிறு வேலைகள் செய்பவர்கள், விற்பனையாளர்கள் என அனைவருமே பீஹார் மாநிலத்தினராக இருக்கிறார்கள். இந்தியாவின் பல மாநிலங்களில் இவர்கள் பல்கிப் பெருகி, பரவி, உழைப்பாளிகளாக இருக்கிறார்கள். சமீபத்திய பயணங்களில் பல இடங்களில் பீஹார் மாநில மக்களைப் பார்த்திருக்கிறேன்.



எங்கே பார்த்தாலும் இவர்கள் இருக்கிறார்கள் – திருச்சியின் பல பகுதிகளில் பத்து பத்து ரூபாய்க்கு விற்கும் பொருட்களை வைத்துக் கொண்டு விற்பனை செய்பவர்களாக பீஹார் மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள். அல்லது பஞ்சு மிட்டாய் விற்பவராக, பானி பூரி விற்பவராக, என சின்னச் சின்னதாய் வேலைகள் செய்து கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் பீஹார் மாநிலத்தினைச் சேர்ந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். முன்பெல்லாம், தலைநகரிலிருந்து தமிழத்திற்கு வரும் இரயில்களில் தமிழர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும். இப்போது பார்த்தால் நிறைய பீஹாரிகள் – அதுவும் குறிப்பாக இரண்டாம் வகுப்பில் நிறைய பீஹாரிகள் தான் இருக்கிறார்கள்.



பாண்டிச்சேரிக்கு சமீபத்தில் சென்றிருந்த போது, ஒரு சாலை சந்திப்பில் எங்கள் வண்டி நிற்க, பக்கத்தில் ஒருவர் கார் கண்ணாடிகளில் வைக்ககூடிய Shades விற்றுக் கொண்டிருந்தார். பார்த்தாலே தெரிந்து விட்டது இவர் பீஹாரி என. எங்கள் ஓட்டுனர் கார்த்திக், Shades வேண்டுமெனக் கேட்க, அந்த மனிதர் ”நூறு, இரநூரு” என்று சொல்லியதிலிருந்து அவர் நிச்சயம் வெளிமாநிலத்தவர் என்று புரிந்தது. ஹிந்தியில் பேச, அவர் பீஹார் மாநிலத்திலிருந்து வந்ததைச் சொன்னார். “கௌன் ஜில்லா?” என்று அவர்கள் பாணியிலேயே கேட்க, அவர் புன்னகையோடு ”தட்பங்கா” [Darbhanga] என்று சொன்னார். வாகனம் பச்சை விளக்குக்காக காத்திருக்கையில் அவரிடம் ஹிந்தி பேசி ஓட்டுனர் கார்த்திக்கு Shades வாங்கிக் கொடுத்தேன்.



எந்த மாநிலத்திலும் சென்று உழைக்கத் தயாராக இருக்கிறார்கள் – பாஷை தெரிகிறதோ இல்லையோ எங்கும் சென்று விடத் தயாராக இருக்கிறார்கள். [B]போலா ராம்-இடம் பேசிய போது, ஆறு மாதத்திற்கு ஒரு முறை தில்லி வழியே அலிகட் சென்று குடும்பத்தினரைச் சந்தித்து வருவேன் என்று சொன்னார். சத்திரம் பேருந்து நிலையத்தின் கல்யாணி கவரிங் அருகே கட்டிடம் ஒன்றில் அறை எடுத்துத் தங்கி இருக்கிறாராம். காலையிலேயே சப்பாத்தி-சப்ஜி செய்து சாப்பிட்டு நாள் முழுவதும் சுற்றி அலைந்து தன்னிடம் இருக்கும் பொருட்களை விற்பனை செய்வாராம். பகல் சாப்பாடு உணவகங்களில் சாப்பிட பிடிப்பதில்லை என்று சொல்லும் அவர், இரவு அறைக்குத் திரும்பி சமைத்து சாப்பிடுவேன் என்றும் சொன்னார்.



தமிழகத்து மக்களிடம் பொருட்களை விற்பதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கிறது – ரொம்பவே பேரம் பேசுகிறார்கள் – அதனால் விலையை ஏற்றி, குறைக்க வேண்டியிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் தமிழ் கற்றுக் கொண்டு சமாளிக்கிறேன் என்றாலும் எனக்குத் தெரிந்த ஹிந்தியில் பேச முடியாதது கொஞ்சம் வருத்தம் தருகிறது என்கிறார்! கொண்டு வரும் பொருட்களை விற்பனை செய்து முடித்துவிட்டால் விரைவில் வீடு சென்று குடும்பத்தினருடம் சில நாட்கள் இருந்து பின்னர் பொருட்களை மீண்டும் வாங்கிக் கொண்டு வர முடியும். அலிகர் நகரம் பூட்டுகளுக்குப் பெயர் போனது – அங்கிருந்து பூட்டுகளையும், தலைநகர் தில்லியில் மற்ற பொருட்களையும் மொத்த விலைக்கு வாங்கி இங்கே விற்பனை செய்வதில் லாபம் பார்க்க முடிகிறது.  



எங்கள் வாழ்க்கையும் ஓடிக் கொண்டிருக்கிறது – ஊரிலேயே இருந்து உழைக்கலாம் என்றால் அதற்கான வாய்ப்புகள் இல்லை – பெரும்பாலான பீஹார்/உத்திரப் பிரதேச மாநிலத்தவர்களின் பிரச்சனையே இது தான். சொந்த மாநிலத்தில் வேலைவாய்ப்புகள் இல்லை – அரசியல்வாதிகள் தங்கள் ஆதாயத்தினை மட்டுமே பார்த்துக் கொள்கிறார்கள் என்பதால் மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை என்று சொல்கிறார். சில நிமிடங்கள் அவருடன் ஹிந்தியில் அளவளாவியதில் அவருக்கு ரொம்பவே மகிழ்ச்சி. உங்களை ஒரு படம் எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்ல, தலையசைத்தார். விரைவில் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவரிடமிருந்து விடைபெற்றேன்.

To end the post, on an interesting note – தலைநகர் திரும்பிய பிறகு எங்கள் வீட்டின் அருகே மின்சாரத்துறையினர் சாலை ஓரத்தில் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். மின்கம்பிகளைப் பதிக்க ஏதோ தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அந்தப் பணியைச் செய்து கொண்டிருந்த பணியாளர்களில் சிலர் பேசிக் கொண்டிருந்த மொழி – தமிழ்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

16 கருத்துகள்:

  1. உழைப்பாளிகள் உயர்வு நாட்டின் உயர்வு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன்.

      நீக்கு
  2. இந்திய மக்கள் எங்கும் பரவலாக வாழ்வது தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. // விரைவில் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவரிடமிருந்து விடைபெற்றேன்.//

    இந்தி படித்தால்தான் வேலை என்ற நிலைமை மாறி, தமிழ் படித்தால் தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் பிழைத்துக் கொள்ளலாம் என்று காலம் மாறி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் மாறிக் கொண்டே இருக்கிறது.... உண்மை தான் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  5. துளசி: நார்த் ஆர் சௌத் இந்தியா இஸ் ஒன் ஆகி வருகிறதோ.

    கீதா: அட வட இந்தியர் இங்கு....நம் தமிழ்க்காரர்கள் அங்கு! கங்கை நதிப்புறத்துக் கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம்!! என்பது இப்போது இப்படி மாறுகொள்வோம் என்பதாயிருக்கோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கங்கை நதிப்புறத்துக் கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  6. உழைப்பாளிகள் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வார்கள் என்றாலும் சொந்த மாநிலத்தை விட்டு வருகிறார்கள் என்பது வருத்தமாக இருக்கிறது. பிறக்க ஓரிடம், பிழைக்க ஓரிடம் என்று பராசக்தியில கலைஞர் எழுதிய வசனம் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறக்க ஓரிடம், பிழைக்க ஓரிடம்.... இது தான் இப்போது எல்லா இடத்திலும் நடக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. ஆஹா.... உழைப்பாளிகள் exchange programஆ... மகிழ்ச்சி... ஆனால் புதியவர்களில் ஒருசிலர் தவறானவர்களாக இருந்தால் மொத்த கம்யூனிட்டிக்கும் பிரச்சனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலர் தவறானவர்களாக இருப்பதால் மொத்த கம்யூனிட்டிக்கும் பிரச்சனை - உண்மை தான். திருடுவதற்காகவே செல்லும் சிலரும் உண்டு. நல்லவர்களும் கெட்டவர்களும் கொண்ட உலகம்... என்ன சொல்ல!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. கற்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு இருக்கோ இல்லியோ! உழைப்பவருக்கு எல்லா இடத்திலும் சிறப்புண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....