புதன், 18 ஜூலை, 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு



ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


வழியில் பார்த்த ஒரு நீர்நிலை...
சில்லென்ற காற்று வந்ததே....
உதய்பூர் செல்லும் வழியில்....

 

உதய்பூர் செல்லும் வழியில்....

புஷ்கர் நகரிலிருந்து புறப்பட்ட எங்கள் வாகனம் வழியில் மதிய உணவுக்காக மட்டுமே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பயணித்து உதய்பூர் வந்தடைந்த போது மாலையாகிவிட்டது. நாங்கள் தங்குவதற்காக மத்திய அரசின் ஒரு தங்குமிடத்தில் முன்பதிவு செய்து வைத்திருந்தோம். எப்படி இருக்கப் போகிறதோ என்ற எண்ணம் எனக்குள் – சில தங்குமிடங்கள் மிக மோசமாக, பராமரிப்பே இல்லாமல் இருக்கும் – இங்கே எப்படி இருக்கப் போகிறதோ என்ற எண்ணம் தான் எனக்குள் இருந்தது. அலுவல் நிமித்தம் பயணிக்கும்போது தங்குவதற்கும், இப்படி சொந்த பயணத்தில் தங்குவதற்கும் சில வித்தியாசங்கள் உண்டு. அலுவல் சம்பந்தமான பயணங்களின் போது நம்மை அழைத்துச் செல்ல தேவையான ஏற்பாடுகளை உள்ளூர் அலுவலகம் பார்த்துக் கொள்ளும். இது சொந்தப் பயணம் என்பதால், முன்பதிவு செய்த தங்குமிடம் எங்கே இருக்கிறது என்பதை, நாமே தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.


என்னையாவது விட்டு வைப்பார்களா? 
உதய்பூர் செல்லும் வழியில்....


இது போன்ற பெரிய லாரிகளில் தான் 
மார்பிள் கற்களை எடுத்துச் செல்கிறார்கள்.....
உதய்பூர் செல்லும் வழியில்....

அலைபேசியில் GPS ஆன் செய்து, அங்கே செல்வதற்கான வழியை கூகிளாண்டவரிடம் கேட்க, அவர் சொன்ன வழியாகவே சென்றோம். பல சமயங்களில் இந்த கூகிள் GPS படுத்தி விடும். கொஞ்சம் ஏமாந்தால் வேறு எங்காவது சென்று விடக்கூடும் – குறிப்பாக சிற்றூர்களில். உதய்பூர் கொஞ்சம் பெரிய ஊர் என்பதால் சரியாகவே வழி காண்பித்தது. முன்பெல்லாம் வாயிலிருக்கிறது வழி என்று சொல்வார்கள் – இப்போது கையிலிருக்கிறது வழி! உதய்பூர் வந்ததிலிருந்து வழி சொல்லி சரியாக இருக்குமிடத்திற்கு அருகே வந்து விட்டோம். அங்கே நின்று கொண்டிருந்த பெண் காவலர்களிடம் கேட்டபோது விழி அதிர, விழித்தார்கள். சில நொடிகளுக்குப் பிறகு தெரியாது என்று சொன்னார்கள்.


ஆட்டம், பாட்டம் கொடியுடன் 
கோவிலுக்குச் செல்லும் ராஜஸ்தானி மக்கள்....
உதய்பூர் செல்லும் வழியில்....

வாகனத்திலிருந்து கீழே இறங்கி சுற்றிப் பார்த்தால் எதிரே ஒரு பதாகையில் தங்குமிடத்திற்கான பெயர் போட்டிருந்தது. பெண் காவலர்களிடம் நன்றி சொல்லி, எதிரே தான் இருக்கிறது பாருங்கள் என்றும் சொல்லி விட்டு [அடுத்த முறை யாராவது கேட்டால் சொல்வார்கள் என நம்புவோம்!] வாகனத்தில் ஏறிக் கொண்டு தங்குமிடத்தினைச் சென்று சேர்ந்தோம். இந்தத் தங்குமிடம் அரசுத் துறையில் பணிபுரிபவர்கள்/பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கானது. இணையம் வழி முன்பதிவு செய்து கொள்ளலாம். கட்டணமும் குறைவு தான். ஆறு அறைகளை [இரண்டு நான்கு படுக்கை கொண்ட அறைகளும், நான்கு இரண்டு படுக்கை கொண்ட அறைகளும்] முன் பதிவு செய்திருந்தோம்.



மேகக் கூட்டங்கள் வரவேற்கின்றன.....
உதய்பூர் செல்லும் வழியில்....


வடா பாவ் சாப்பிடலாம் வாங்க....

முன்பதிவு செய்ததற்கான ஆவணங்களைக் காட்டி, எங்கள் அடையாள அட்டைகளின் நகலையும் கொடுத்து, அங்கே வைத்திருந்த பதிவேட்டில் பதிவு செய்தோம். பிறகு எங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு அவரவர்களுக்கான அறைக்குச் சென்றோம். சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, எங்கள் தங்குமிடத்தின் அருகே இருந்த சாலைகளில் உலவப் புறப்பட்டோம். பக்கத்திலிருந்த சாலை ஒன்றில், ஒருவொருக்கொருவர் பேசியபடியே நெடுந்தூரம் நடந்தோம். சாலையோரக் கடை ஒன்றில் வடா பாவ் விற்க, அவற்றை சிலர் ருசி பார்த்தனர். எனக்கு வடா பாவ் அவ்வளவாக பிடிப்பதில்லை என்பதால் அதைச் சாப்பிடவில்லை. நன்கு நடந்து கால்கள் கெஞ்ச, தங்குமிடம் திரும்பினோம்.





தங்குமிடத்தில் தோட்டம்/பூக்கள்....


Dining Hall-ல் காத்திருக்கும் நண்பர்....

தங்குமிடத்திலேயே உணவும் கிடைக்கும் – ஆனால் முன்னரே சொல்லி விட வேண்டும். நாங்கள் வெளியே உலாவச் செல்லும்போதே இரவு உணவு வேண்டும் என்று சொல்லி விட்டதால், அறைக்குத் திரும்பி சில நிமிடங்கள் கழித்து Dining Hall-க்கு அவரவர் அறைகளிலிருந்து சென்று சேர்ந்தோம். நாங்கள் இருந்தது முதல் மாடி, Dining Hall இருந்தது இரண்டாம் மாடி – நிறைய வழிகள் இருப்பதால் கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது. ஆனால் அதுவும் நல்ல விளையாட்டாக இருந்தது. இரவு உணவாக தவா ரொட்டி, தால், சாதம் மற்றும் சலாட், தயிர் சொல்லி இருந்தோம். அவரவருக்குத் தேவையான அளவு உணவு உண்டு அங்கிருந்து வெளியேறினோம். தங்குமிடத்திலேயே உணவகம் இருப்பது நல்ல வசதி. உணவுக்கான கட்டணத்தினை கடைசியில் கொடுத்தால் போதுமானது என்று குறித்துக் கொண்டார்கள். அங்கே இருக்கும் வரை உணவு உண்டு, அறைகளைக் காலி செய்யும்போது உணவுக்கான கட்டணம் கொடுத்தால் போதும். அறைக்கான கட்டணம் முன்பதிவு செய்யும்போதே கட்டி விட்டோம்.


உதய்பூரில் நாங்கள் தங்கிய இடம்....

பதிவின் ஆரம்பத்தில், முன்பதிவு செய்திருக்கும் தங்குமிடம் எப்படி இருக்குமோ என்ற எண்ணம் இருந்ததாகச் சொன்னேன் அல்லவா? ரொம்பவே நன்றாக இருந்தது. நாங்கள் பதிவு செய்த அறைகள் அனைத்துமே குளிரூட்டப்பட்டவை – பெரிய அறைகளாக இருந்தது. தேவையான அனைத்து Furniture-உம் இருந்தன. அறையில் ஒரு Balcony கூட உண்டு. அங்கிருந்து பார்த்தால் மலைச்சிகரங்கள் தெரிந்தன. மலைச்சிகரங்கள் என்று சொல்லும்போதே இன்னும் ஒரு விஷயமும் சொல்லிவிடுகிறேன். இந்த உதய்பூர் நகரம் ஒரு கட்டோரி [கிண்ணம்] வடிவத்தில் இருக்கிறது – சுற்றிலும் மலைகள் – நடுவே நகரம் என்பதால் கட்டோரி நகரம் என்று கூட சிலர் சொல்வதுண்டு! நிறைய நீர்நிலைகளும் இருப்பதால் பெரும்பாலும் குளிர்ந்த பிரதேசமாகவே இருக்கிறது. நாங்கள் சென்றிருந்த ஆகஸ்ட் மாதத்திலும் கூட அத்தனை சூடு இல்லை. நன்றாகவே இருந்தது. 


கடைத்தெரு கடை முன்பு பொம்மைகள்...
கீழே விழுந்துவிடக்கூடாது என கழுத்தில் சுருக்குப் போட்டிருக்கிறார்கள்....

அன்றைய தினம் நல்லபடியாக முடிந்ததற்கு நன்றி சொல்லி அவரவர் அறைக்குத் திரும்பினோம். அன்றைய கணக்கு வழக்குகளை எழுதி வைத்த பிறகு உறக்கத்தினைத் தழுவினேன். காலையில் எழுந்து உதய்பூர் நகரை உலா வர வேண்டும். நீங்களும் காத்திருங்கள் - உதய்பூர் நகரை உலா வர! எங்கே சென்றோம், என்னென்ன பார்த்தோம், கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை வரும் பதிவுகளில் பார்க்கலாம்!

பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

28 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி

    என்னையாவது விட்டு வைப்பார்களா// அந்த குன்று அழகா இருக்கு...எப்படி வெட்ட மனம் வரும்?!!!

    மீதியும் படித்துவிட்டு வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ஜி!.

      எப்படி வெட்ட மனம் வரும். வருகிறது.... வெட்டிக் கொண்டே தான் இருக்கிறார்கள் ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. கீழே விழுந்துவிடக் கூடாது என்று கழுத்தில் சுருக்கு போட்டிருப்பது பொம்மையே ஆனாலும் என்னவோ கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சமல்ல நிறையவே கஷ்டமாகத் தான் இருந்தது. கடைக்காரரிடம் சொல்லலாம் என நினைத்தால் நான்கு ஐந்து வாடிக்கையாளர்கள் இருக்க அந்த நேரத்தில் சொல்வது சரியல்ல என விலகி விட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. குட்மார்னிங் வெங்கட். அலுவல் நிமித்த(மு)ம் பயணிப்பீர்கள் என்றால் ஆடிட் டில் இருக்கிறீர்களோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆடிட் - இல்லை. இப்போதைய அலுவலகத்தில் பயணங்கள் இல்லை. முன்னர் இருந்த இடத்தில் நிறைய பயணித்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. நம்மூர்ல மணல் அள்ளுவது போல அங்கு மார்பிள் கொள்ளை போலும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணல் - மார்பிள் - கொள்ளை தான். அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. தங்குமிடம் அழகாக இருக்கிறது ஜி. ஜிபிஎஸ் சில சமயங்களில் படுத்திவிடும்...

    வாயில வழி..இப்ப கையில ஜிபிஎஸ் வழி///ஹா ஹா ஹா ஹா சரிதான்...

    ஆமாம் ஜி அருகிலேயே இருக்கும் ஆனால் அங்கிருப்பவர்களுக்குச் சொல்லத் தெரிவதில்லை....

    படங்கள் எல்லாம் அழகு...தொடர்கிறோம் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி.பி.எஸ். சில சமயங்களில் படுத்தும் - உண்மை.

      கையில் வழி! வாயில் வழி பல இடங்களில் சரிவருவதில்லை. கேட்டால் தெரியாது என்று விலகி விடுகிறார்கள் இப்போதெல்லாம். முன்பு கேட்டால் கொண்டு விட்டு வருபவர்களைப் பார்த்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. தங்குமியத்திலேயே உணவு கிடைப்பது ஒருவிதத்தில் சௌகர்யம். இன்னொரு விதத்தில் வெளியே கிடைக்கும் வகைவகையான, அந்த ஊர் ஸ்பெஷல்களைச் சாப்பிட முடியாமல் போகுமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளியிடத்தில் கிடைக்கும் உணவு பற்றி தெரிந்து கொண்டுவிட்டால் நல்லது. இல்லை எனில் உடலுக்குக் கெடுதல் - பயணத்தில் தடங்கல்கள் வருவதுண்டு. சில இடங்களில் வெளி இடங்களில் சாப்பிட்டு அவதிப்பட்டதுண்டு.

      அந்த ஊர் ஸ்பெஷல் - கேட்டு சாப்பிட்டதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. பொம்மைகள் கழுத்தில் சுருக்கு பாவம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவம் தான். பார்க்கும்போதே கஷ்டமாக இருந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  8. வழியில் உள்ள காட்சிகள் மிக அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  9. பொதுவாக மத்திய அரசு தங்குமிடங்கள் நன்றாகவே இருக்கின்றன. அமிர்தசரில் நாங்கள் தங்கியதும் மாநில அரசு சுற்றுலா மாளிகை! சாப்பாடும் அங்கேயே! நன்றாகவே இருந்தது, பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய அறை! :) இங்கேயும் நன்றாக இருந்தது குறித்து மகிழ்ச்சி! அடுத்து உதய்பூரில் நீங்கள் பார்த்த இடங்களுக்காகக் காத்திருக்கேன். பொம்மைகள் கழுத்தில் சுருக்கு மாட்டி இருப்பது கொஞ்சம் எப்படியோ இருக்கு! :( நானாக இருந்தால் அந்தக் கடைக்காரரிடம் சொல்லிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டு வந்திருப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பெரிய அறைகளாக இருக்கும்.

      கடைக்காரரிடம் சொல்லிட்டு வாங்கிக் கட்டிக்கொண்டு வந்திருப்பேன். ஹாஹா.... நானும் சொல்லப் போய், திரும்பினேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  10. கீழ விழக்கூடாதுன்னு கயிறை கழுத்தில் கட்டி இருக்காங்களா?! அறிவாளிக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிவாளிக! ஹாஹா... கொஞ்சம் பாவமாத் தான் இருக்கு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  11. பயணங்கள் தொடரட்டும் நண்பரே...
    வேலை காரணமாக நண்பர்களின் தளம்
    செல்வதே இல்லை, இனி நான் தொடரும்
    தளங்களுக்கெல்லாம் உலா வருவேன்...

    நட்புடன் நான் அஜய்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது வாருங்கள் அஜய....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. உதய்ப்பூர் செல்லாத பார்க்காத இடம் தொடருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  13. அந்தப்பூ செம்பருத்தி வகைதான்...

    கட்டோரி நகரம்// என் நெருங்கிய உறவினர் உதய்பூரில்தான் பல வருடங்கள் இருந்தார்கள். மாடரெட் வெதர் ஆனால் சம்மரில் சூடாகவே இருக்கும். மற்றபடி நன்றாக இருக்கும். மழை பெய்தால் ரொம்பவே ஹ்யூமிட் ஆக இருக்குமாம். நீங்கள் சென்ற போது நன்றாகவே இருந்திருக்கிறது போல...

    நாங்களும் உங்களுடன் சுற்ற ரெடியாகிறோம்..ஜி

    காலையில் போட்ட கமென்ட் போகாமலேயே இருந்தது...இப்போது துளசியின் கமென்ட் போட வந்தால் அது அப்படியே இருந்தது. தளமும் நான் மூடாமல் வைத்திருந்திருக்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா உங்கள் உறவினர் அங்கே இருந்தார்களா....

      போட்ட கமெண்ட் வராமல்! சில சமயங்களில் இப்படித்தான் ஆகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  14. பூ படம், மலை படங்கள் எல்லாமே அழகாக இருக்கின்றன. தங்குமிடம் மிக அழகாக இருக்கிறதே கார்டன் எல்லாம் பச்சையாக.

    அந்த மலையும் வெட்டிவிடுவார்களோ. இப்படி எத்தனை இயற்கை இடங்கள் அழிகின்றது!

    அங்கேயே உணவும் கிடைப்பது நலல்துதான்.

    உதய்பூர் வடிவம் அழகாக இருக்கும் போல இருக்கு. உங்களுடன் சுற்ற காத்திருக்கிறோம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ஊர். வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....