வெள்ளி, 20 ஜூலை, 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்



ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


போஹா எனும் அவல்....
உதய்பூரிலிருந்து....
 
இரவு உணவினை எடுத்துக் கொண்ட பிறகு சிறிது நேரம் நண்பர்களோடு அளவளாவிய பிறகு உறக்கம் கொண்டேன். அதிகாலையிலேயே விழித்துக் கொண்டு உதய்பூர் நகரில் ஒரு வலம் வரலாம் என வெளியே சென்றேன். தங்குமிடத்தில் அனைவரும் உறக்கத்தில் இருக்க, தேநீரும் கிடைக்காது என்பது தெரிந்தது. தங்குமிடம் இருக்கும் இடம் பணக்காரர்கள் அதிகம் இருக்கும் இடம் போல இருக்கிறது. ஆள் அரவமே இல்லை. வீட்டை விட்டு யாருமே வெளியே வரவில்லை. அதே தெருவில் ஒரு கடை திறந்திருந்தது. அங்கே ஒரு பெண்மணி தான் இருந்தார். சரி முகச்சவரம் செய்து கொள்ள ரேசர் வேண்டுமெனக் கேட்டால், என்னை மேலும் கீழும் பார்த்து விழித்தார். ஒரு வேளை நான் பேசிய ஹிந்தி புரியவில்லை போலும், என சைகை காண்பித்து ரேஜர் என்ற பிறகு எடுத்துக் கொடுத்தார்! ஆங்கில Z வரும் வார்த்தைகள் எல்லாமே ஹிந்தியில் ஜ தான்! – எழில்மலை என்ற பெயரை எஜில்மலை என்றும், கனிமொழி எனும் பெயரை கனிமொஜி என்றும் தான் படிப்பார்கள் இங்கே!


 மாண்டனா ஓவியம்....
உதய்பூரிலிருந்து....

இரண்டு மூன்று கடைகள் தள்ளி ஒரு கடையில் தேநீரும், ராஜஸ்தானியர்களின் பாரம்பர்ய காலை உணவான போஹாவும் தயாராகிக் கொண்டிருந்தது. போஹா என்பது நம் ஊர் அவல் தான். ராஜஸ்தான், குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் காலை உணவில் போஹா வைத்து செய்யும் உப்புமா போன்ற ஒன்றைச் சேர்த்துக் கொள்வது வழக்கம். மணிலா எனும் வேர்க்கட்லை சேர்த்து செய்வார்கள். நன்றாகவே இருக்கும். நானும் சாப்பிட்டதுண்டு. தயாராக வைத்திருந்த போஹா பார்க்கவே நன்றாக இருந்தது – படம் எடுக்க, கையில் கேமரா இல்லை! தேநீர் அருந்திய பிறகு தங்குமிடம் நோக்கி திரும்புகையில் எதிரே, இரண்டு நண்பர்கள் வந்து கொண்டிருந்தார்கள் – தேநீர் குடிப்பதற்காக!


மாண்டனா ஓவியம்....
உதய்பூரிலிருந்து....
 
அவர்களுடன் சேர்ந்து மீண்டும் ஒரு நடை – ஏற்கனவே முதல் கடையில் தேநீர் குடித்துவிட்டதால், அங்கே வேண்டாம் எனச் சொல்லி வேறு இடத்திற்கு நடந்தோம். ஒரு தள்ளு வண்டியில் தேநீரும் காலை உணவும் தயாராகிக் கொண்டிருக்க, அவர்களிடம் தேநீர் வாங்கிக் குடித்தோம். நன்றாகவே இருந்தது. அப்படியே உதய்பூர் நகரத்தின் சாலைகளில் அளவளாவியபடி, வேடிக்கை பார்த்தபடி நடந்து கொண்டிருந்தோம். பல வீடுகளில் மக்கள் உறக்கம் கலைந்து எழுந்திருக்கவில்லை. வடக்கின் பல மாநில மக்கள் மெதுவாகத்தான் எழுந்திருப்பார்கள். இரவு நீண்ட நேரம் விழித்திருப்பார்கள். ஒரு சிலரைத் தவிர சாலைகளில் யாரையும் பார்க்க முடியவில்லை. வீடுகளின் வெளியே இருந்த சுவர்களில் அழகிய ஓவியங்களைத் தீட்டி இருந்தார்கள்.


மாண்டனா ஓவியம் வரையும் பெண்மணி...
உதய்பூரிலிருந்து....
 
உதய்பூர் நகரின் பெரும்பாலான வீடுகள், அலுவலகங்கள், ஆகியவற்றின் சுவர்களில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. முற்காலங்களில் மண் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களை இப்போதும் சிமெண்ட் சுவர்களில் வரைகிறார்கள். இந்த ஓவியங்களுக்குப் பெயர் மாண்டனா ஓவியங்கள். ஜியாமெட்ரிக் வடிவங்கள் கொண்டு வரையப்படும் இந்த ஓவியங்கள் பெரும்பாலும் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணத்தில் தான் இருக்கின்றன. பிள்ளையார் படமும் பல வீடுகளின் சுவர்களில் வரைந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. அதைப் போலவே துளசியை பூஜிப்பவர்கள் இவர்கள். எல்லா வீடுகளிலும் அழகிய துளசி மாடங்களைப் பார்க்க முடிந்தது. துளசி மாடங்களிலும் இந்த மாண்டனா ஓவியங்கள் வரையப்பட்டு இருக்கிறது. துளசி மாடங்கள் கூட மார்பிள் கற்களால் வடிவமைக்கப்பட்டு இருப்பதையும் பார்க்கலாம்!


 துளசி பூஜா செய்யும் ராஜஸ்தானி பெண்கள்.....
உதய்பூரிலிருந்து....

இப்படியாக காட்சிகள் அனைத்தையும் பார்த்தபடியே நடந்தோம். நீண்ட நடைக்குப் பிறகு தங்குமிடம் வந்து சேர்ந்தோம். அவரவர் அறைக்குச் சென்று குளித்து தயாரானோம். காலை உணவாக பூரி சப்ஜி சொல்லி இருந்தோம். அவர்கள் அதைத் தயார் செய்வதற்குள் கொஞ்சம் ஃபோட்டோ செஷன்! வளைத்து வளைத்து அனைவரும் படங்கள் எடுத்துக் கொண்டோம். பூக்களுக்கு அருகே, மலைச்சிகரத்தினை பின்புலமாக வைத்து, சிறு சிறு குழுக்களாக, பெண்கள் தனியே, தனித் தனி குடும்பமாக என நிறையவே படங்கள். எத்தனை படங்கள் எடுத்திருக்கிறோம் என்று பிறகு பார்த்தபோது மயக்கமே வந்தது – அனைவரும் எடுத்த படங்கள் நூற்றுக் கணக்கில்! அதுவும் அலைபேசியில், கேமராக்களில் என எல்லாவற்றிலும் எடுத்துத் தள்ளி இருந்தோம்!


காலை உணவாக பூரி சப்ஜி...
உதய்பூரிலிருந்து....
 
படம் எடுப்பது அலுக்கும் வரை, பூரி வரும் வரை படங்கள் எடுத்திருக்க, அதைப் பார்த்து தங்குமிடத்தில் இருந்த வேறு சிலரும் படங்கள் எடுத்துக் கொண்டார்கள். பூரியும் தயாராக, பூரி-சப்ஜி, தேநீர் என காலை உணவுக் கடை முடிந்தது. திருப்தியாக இருந்தது – Simple and Good Breakfast! செய்து கொடுத்த சிப்பந்திகளுக்கு நன்றி சொல்லி, உதய்பூர் நகரில் இருந்த ஒரு நண்பருக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தார் எங்கள் குழுவில் இருந்த நண்பர். நாங்கள் இருக்கும் இடத்தினைச் சொல்ல, உதய்பூர் நண்பர், அவருடைய பால்ய கால சிநேகிதரோடு எங்கள் தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தார். அன்றைய பொழுது எங்கே செல்ல முடியும், என்னென்ன பார்க்க இருக்கிறது என்பதை எல்லாம் சொல்லி, எங்களுடன் புறப்பட்டார்கள்.


தில்லி நண்பரும், உதய்பூர் நண்பர்களும்....
உதய்பூரிலிருந்து....

அன்றைய நாள் முழுவதுமே எங்களுடனேயே இருந்து உதய்பூரில் பார்க்க வேண்டிய அனைத்து இடங்களையும் சுற்றிக் காண்பித்தார்கள் அந்த நண்பர்கள். இத்தனைக்கும் அவர்களுக்கு அன்றைக்கு வேலை நாள்! ஆனாலும், தங்களது வேலைகளை விட்டு விட்டு சுற்றிக் காண்பித்த நல்ல உள்ளம் கொண்டவர்கள். அன்றைக்கு தான் அவர்களை நான் காண்கிறேன் என்றாலும், அவர்கள் என்னுடனும், நான் அவர்களுடன் வெகு நாட்கள் பழகியது போல பேசிக் கொண்டோம். இப்போதும் அவர்களிடம் தொடர்பில் இருக்கிறேன் – அவ்வப்போது பேசுவதுண்டு – இல்லை எனில் WhatsApp மூலம்! அவர்கள் இருவரும் இருந்தது எங்களுக்கு ரொம்பவே உதவியாக இருந்தது. என்ன இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள், என்னென்ன பார்த்தோம் என்பதை எல்லாம் வரும் பதிவுகளில் சொல்கிறேன்.

பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

குறிப்பு: இந்தப் பகுதியில் உள்ள படங்கள் - நண்பர்கள் படம், மற்றும் பூரி படம் தவிர்த்து அனைத்தும் இணையத்திலிருந்து.....

30 கருத்துகள்:

  1. ஓவியம் வரைகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இப்படி நிறைய வீடுகளில் ஓவியம் வரைந்து வைத்திருந்ததைப் பார்க்கும்போதே மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. மாண்டனா ஓவியம் அழகு ஜி தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான ஓவியங்கள் மட்டுமல்ல, எளிமையான ஓவியங்களும் கூட!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  3. போஹாவைப் பார்த்தால் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட எலுமிச்சம் பழ சாதம் போல இருக்கிறது. கவர்ச்சியான நிறம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... மஞ்சளாக இருப்பதால் அப்படித் தோன்றுகிறது....

      அவர்கள் இந்த போஹாவை வைத்திருக்கும் விதமே அழகு தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. சுவரில் அழகிய ஓவியங்கள் நல்ல பழக்கம். நாமும் செய்யலாமோ... மதுரையில் தொடங்கி இருக்கிறார்கள் போல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மதுரையில் தொடங்கி இருக்கிறார்கள் போல!//

      சில மாநகராட்சிகள் சுவர் ஓவியங்கள் உண்டு என்றாலும் சில மணி நேரத்திற்குள் ஒரு சினிமா போஸ்டரோ, அரசியல் கட்சிகளின் போஸ்டரோ ஒட்டப்பட்டு விடுகிறது என்பது தான் சோகம்! போஸ்டர் அட்ராசிட்டிஸ் நம் ஊரில் ரொம்பவே அதிகம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. அதைப் பார்த்தால் பூரி போலவே இல்லையே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆறிய பூரி! நம் ஊர் போல உப்பி இருக்காது. இங்கே பூரி கொஞ்சம் தடிமனாக தான் இருக்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  6. சுவரில் வரையும் ஓவியம் மிக அழகு.. வீட்டில் கோலம் போடுவதைப்போல சுவரில் கோஒலம்:).

    போகா பார்க்க நன்றாக இருக்கு.. உறைப்புப் போகா அவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறைப்பு போஹா.... பார்க்க மட்டுமல்ல, சாப்பிடவும் நன்றாகவே இருக்கும் அதிரா....

      சுவர்களைப் போல தரையிலும் இந்த ஓவியம் வரைவதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  7. அங்கே சின்னக் குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரை கைவேலைப்பாடுகளில் சிறந்தவர்களாக இருப்பார்கள். ஆச்சரியமா இருக்கும். சின்னக் குழந்தை கூட அநாயாசமாக ஓவியம் வரையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் இப்படியான கைவேலைகள் திறமை பிறக்கும்போதே வந்து விடும் போலும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    தல்லதொரு இனிமையான பயணம் அழகான ஓவியங்கள். பேரைப் போலவே ஓவியமும் அழகு. போகா அவல் உப்புமா நல்ல கலராக பார்க்கவே சுவையானதாக இருக்கும் போல் இருக்கிறது. பூரி கிழங்கு படமும் அருமை. தொடருங்கள்.. தொடர்ந்து பயனிக்கிறோம். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போஹா நன்றாகவே இருக்கும். சில சமயங்களில் நானும் இப்படிச் செய்வதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  9. என் மூத்தமகன் வீட்டுக்குச் சென்றிருந்தபோது காலை என்ன உணவு என்று கேட்டேன் போஹா என்று மருமகள் சொன்னாள் முதலில் புரியவில்லை உணவைப் பார்த்தபோதுதான் புரிந்தது போஹா என்றால் அவல் என்று அவல் உப்புமா என்று சொல்வதை விட போஹா என்பது ஃபாஷனாகத் தோன்று கிறதோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவலின் பெயரே போஹாதான்! ஆகவே போஹா என்றே வட மாநிலங்களில் சொல்வார்கள். இதில் சோளத்தில் வரும் கார்ன் ஃப்ளேக்ஸ் மக்கே கி போஹா என்பவர்களும் உண்டு. ஆனால் இப்படிச் சொல்பவர்கள் பெரும்பாலும் வயதானவங்களா இருப்பாங்க! ஆங்கிலத்தில் அவலை ரைஸ்ஃப்ளேக்ஸ் என்பதில்லையா அது போல ஹிந்தியில் போஹா என்றால் அவல் என்று அர்த்தம்!

      நீக்கு
    2. போஹா என்பது ஃபாஷனாகத் தோன்றுகிறதோ?

      இல்லை. அவல் என்பதற்கு ஹிந்தி வார்த்தை போஹா. இப்போது நிறைய பேர் அவலை போஹா என்று தான் அழைக்கிறார்கள் - வாணலி கடாய் ஆகிவிட்டது போல!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
    3. சோளத்தில் வரும் ஃப்ளேக்ஸ் - மக்கே கி போஹா. சில இடங்களில் மட்டுமே இவை கிடைக்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  10. அருமை நண்பரே ...
    நான் பயணங்கள் செய்ததில்லை,
    இனிமேல் முயல்கிறேன் நண்பரே...
    உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள். ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணங்கள் நமக்கு பல அனுபவங்களைத் தருபவை. ஆதலினால் பயணம் செய்யுங்கள் நண்பரே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பயணம் இனிமை.

    போஹா பார்க்க அழகு, சுவையும் நன்றாக இருப்பதாய் சொல்கிறீர்கள். டோக்ளா கலர்.
    சுவர் ஓவியம் அழகு.

    புதிய நண்பர்களுடன் பயணம் அனுபவங்களை படிக்க தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டோக்ளா கலர் - ஆமாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  12. போஹா ரொம்பப் பிடிக்கும் எனக்கு.

    ஓவியங்கள் மிக அழகாக இருக்கின்றன. பொதுவாகவே அங்குள்ள சின்னக் குழந்தைகள் கூட வரைவது என்றில்லை கைவேலை செய்வதில் நல்ல திறமை சாலிகளாக இருப்பதைப் பார்க்கலாம். அது போல வீட்டு வேலைகள் செய்வதிலும். குறிப்பாக குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில்....

    அடுத்து என்ன என்பதை அறிய தொடர்கிறோம் ஜி..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போஹா - சுலபமாக செய்யக்கூடியது, சுவையானது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  13. போஹா எனும் அவல். அவலில் செய்யப்படும் இந்த போஹாவும் பூரியும் தான் எங்கள் நார்த் இந்திய கஸ்டமர்களுக்கு உதய் பூர் சமையல் காரரால் தயாரிக்க்கபப்ட்டு பிரேக்பாஸ்ட் பாக்கெட் முறையில் அவர்கள் தங்கும் ஹோட்டல்களுக்கு அனுப்புகின்றோம். தயாரிப்புச் செலவும் நேரமும் குறைவு தான். நான் இதுவரை சுவைத்து பார்த்ததில்லை உங்கள் பதிவு கண்டபின் சுவைத்து பார்க்க ஆர்வம் வந்திருக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உதய்பூர் சமையல்காரர் ஆயிற்றே.... ராஜஸ்தான் ஸ்பெஷல் என்பதால் அவர் செய்வது நன்றாகவே இருக்கலாம். சுவைத்துப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....