திங்கள், 23 ஜூலை, 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சாஜன்கட்[ர்] உயிரியல் பூங்கா



ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 9

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


கொட்டாவி விடுகிறதா... இல்லை உள்ளே வந்தா.. என சாப்பிட்டுடுவேன் என்று சொல்கிறதா?
உதய்பூர் - சாஜன்கட் உயிரியல் பூங்காவில்....


நடை பழகுகிறேன்... என்னை டிஸ்டர்ப் பண்ணாதே சொல்லிட்டேன்....
உதய்பூர் - சாஜன்கட் உயிரியல் பூங்காவில்....

உதய்பூரில் இருக்கும் நண்பர்கள் அவர்களது வண்டியை எங்கள் தங்குமிடத்தில் விட்டு, எங்கள் வண்டியிலேயே வந்தார்கள் – பெரிய வண்டி என்பதால் இடம் இன்னும் இருந்தது ஒரு வசதியாகப் போயிற்று. பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே இருக்கிறது – ஒவ்வொன்றிலும் நிறைய நேரம் எடுக்கலாம் எனவே முடிந்த அளவு பார்க்கலாம் என்று நினைத்தோம். உதய்பூர் முழுவதும் ஒரு நாளில் பார்க்க முடியாது என்பதை அங்கே சென்ற பிறகு தான் புரிந்து கொள்ள முடிந்தது. நேரடியாக எங்கள் வாகனம் சென்று சேர்ந்த இடம் சாஜன்கட்[ர்] எனும் இடம். அங்கே அழகிய உயிரியல் பூங்கா ஒன்று இருக்கிறது. பெரிய பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அந்த பூங்காவில் நிறைய வகையான மிருகங்களும் பெரிய அளவு கூண்டுகளில் முடிந்த அளவு இயற்கைச் சூழலில் வைத்திருக்கிறார்கள்.


எவ்வளவு நீட்டு கழுத்து! நேரா நின்னா நாலு அடி இருக்கும் போல!
உதய்பூர் - சாஜன்கட் உயிரியல் பூங்காவில்....


பேட்டரி கார் பயணம்....
உதய்பூர் - சாஜன்கட் உயிரியல் பூங்காவில்....

தினமும் காலை ஒன்பது மணி முதல் மாலை 04.30 மணி வரை திறந்திருக்கும் [செவ்வாய் அன்று விடுமுறை!] இந்தப் பூங்காவிற்கான நுழைவுக் கட்டணம் இந்தியர்களுக்கு 30 ரூபாய். வெளி நாட்டவர்களாக இருந்தால் 300 ரூபாய்! பத்து மடங்கு! கேமராவிற்கும் கட்டணம் உண்டு – 80 ரூபாய். வீடியோ கேமராவாக இருந்தால் 200 ரூபாய். ஓட்டுனர் ஜோதி வண்டியிலேயே இருப்பதாகச் சொல்லி விட்டதால், பதினைந்து பேருக்கான நுழைவுச் சீட்டும் இரண்டு கேமராக்களுக்கான அனுமதிச் சீட்டுகளும் வாங்கிக் கொண்டேன். நானும் உதய்பூர் நண்பர் கஜேந்திர ராதோட்-ம் நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டிருந்த போது பேசியதை வைத்து நுழைவுச் சீட்டு தந்த பெண்மணி, ”தலைநகர் தில்லியிலிருந்தா இங்கே வந்திருக்கிறீர்கள்? நாங்க வந்தா உங்களைப் முடியுமா?” என்று கேட்டார்! அவருக்கு புன்னகையை விடையாக்கி நன்றி சொல்லி அங்கிருந்து வெளியேறினேன்.


வெண் புலி... ஓய்வு எடுத்தபடி ஒரு பார்வை......
உதய்பூர் - சாஜன்கட் உயிரியல் பூங்காவில்....


இயற்கைச் சூழலில் விலங்கின் இருப்பிடம்....
உதய்பூர் - சாஜன்கட் உயிரியல் பூங்காவில்....

நுழைவுச் சீட்டுகளைக் காண்பித்து பூங்காவின் பெரிய கதவு வழியே உள்ளே செல்ல, கஜேந்திரா, ஒரு தகவலைச் சொன்னார். இந்தப் பூங்காவினை நடந்து பார்க்கலாம், இல்லை என்றால் இங்கே இருக்கும் பேட்டரி கார் மூலம் செல்லலாம் – ஆங்காங்கே நிறுத்தி நம்மை, விலங்குகள் பார்க்க அனுமதிப்பார்கள் என்று சொல்ல, நடப்பதை விட இப்படி வண்டியில் பயணித்தால் கொஞ்சம் நேரம் சேமிக்கலாம் என வண்டியில் செல்ல முடிவு செய்தோம். இந்த வண்டியில் பயணிக்க ஒரு நபருக்கு ஐம்பது ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார்கள். அனைவருக்குமான சீட்டுகளை வாங்கிக் கொண்டு இரண்டு பேட்டரி கார்களில் பயணித்தோம். மெதுவாகச் செல்லும் அந்த வாகனத்தில் பயணிப்பது சுகமாகவே இருந்தது. ஒவ்வொரு இடமாக நிறுத்தி, நிதானமாக எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. ஒரு ட்ரிப் என்பது ஒன்றரை மணி நேரம் மட்டுமே. அதற்குள் முழு பூங்காவினையும் சுற்றிக் காண்பித்து விடுகிறார்கள்.


உன்னைப் பார்க்க மாட்டேன் போ....
உதய்பூர் - சாஜன்கட் உயிரியல் பூங்காவில்....


பூங்காவிலிருந்து ஒரு காட்சி....
உதய்பூர் - சாஜன்கட் உயிரியல் பூங்காவில்.... 

ஓநாய், நரி, கரடி, சிங்கம், சிறுத்தை, மான்கள் முதல் நெருப்புக் கோழி, ஆமைகள், முதலைகள் வரை பல விலங்குகள், பறவைகள் இங்கே நீங்கள் பார்க்க முடியும். கூடவே அடர்ந்த காட்டுக்குள் இருப்பது போலவே இங்கேயும் நிறைய மரங்களும். Bபன்ஸ்dhதாரா மலையடிவாரத்தில் இருப்பதால் நிறையவே மரங்கள் இங்கே இருக்கின்றன. அதனால் நிஜமான காட்டுக்குள் இருப்பது போன்ற சூழல் – இருந்தாலும் சற்றே பெரிய கூண்டுக்குள் அடைபட்ட விலங்குகளைப் பார்க்கும் போது – அதுவும் பரந்து விரிந்த காட்டுக்குள் தனக்கென்று எல்லையில்லாது இருந்த மிருகங்களை, இப்படி சிறு எல்லைக்குள் அடைத்து வைத்திருப்பதைப் பார்க்கும் போது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது.


கலர்ஃபுல் தலைப்பாகையுடன் ஒரு முதியவர்....
உதய்பூர் - சாஜன்கட் உயிரியல் பூங்காவில்....


உதய்பூர் நண்பர்களுடன் - ஒரு மகிழ்ச்சியான தருணத்தில்....
உதய்பூர் - சாஜன்கட் உயிரியல் பூங்காவில்....

ஒன்றரை மணி நேரம் பூங்காவில் பேட்டரி கார் மூலம் சுற்றிப் பார்த்த போது கிடைத்த அனுபவங்கள் சுவையானவை – ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டும், சிறுத்தையோடு செல்ஃபி எடுக்க முயன்றதும், எங்கள் குழுவில் இருந்த ஒருவரை மற்றவர் சிறுத்தையுடன் படம் எடுக்க முயன்றது – அதை நான் படம் எடுத்தது என குதூகலமாகவே சென்றது நேரம். பூங்காவில் எங்களைப் பார்த்த மற்ற சுற்றுலாப் பயணிகள் நாங்கள் அடித்த லூட்டியில் கொஞ்சம் பயந்து தான் போனார்கள்! ராஜஸ்தானி தலைப்பாகையுடனும், பெண்மணிகள் அவர்களது பாரம்பரிய உடையான போஷக் எனும் உடையிலும் இருந்தார்கள். அவர்களை படம் எடுக்க முயற்சி செய்யவில்லை. தலைப்பாகையுடன் இருந்த ஒரு முதியவரை அவருக்குத் தெரியாமல் எடுக்க முடிந்தது.


வீர நடை போட்டுக் கொண்டிருந்தவர்....
உதய்பூர் - சாஜன்கட் உயிரியல் பூங்காவில்....


பூங்காவினுள் பாதை........
உதய்பூர் - சாஜன்கட் உயிரியல் பூங்காவில்....

இயற்கைச் சூழலில் இருந்த உயிரியல் பூங்காவில், கொஞ்சம் மகிழ்ச்சியாகத் தான் இருந்தோம். எங்கள் குழுவில் இருந்த சிலர், விலங்குகளைப் பார்ப்பது தவிர, அங்கே வளர்ந்திருந்த செடிகளையும் பார்த்துக் கொண்டே வந்தார்கள் – இந்தச் செடி இந்த நோயைக் குணப்படுத்தவல்லது, இந்த இலையில் இந்த சமையல் செய்யலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இயற்கையான முறையில் வளரும் பல செடிகளும் அதன் இலைகளும் சமைக்க முடியும் என்றாலும், தற்போது அதனை அறிந்தவர்கள் மிகவும் குறைவு. எங்கள் குழுவில் இப்படியான செடிகளை அறிந்த இருவர் இருந்தார்கள். அவர்கள் இருவரும் அந்தந்த செடிகள் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லிக் கொண்டு வந்தார்கள். உயிரியல் பூங்காவில் எங்களுக்கும் பாடம் எடுத்தது போல இருந்தது!


நான் வாயைத் திறந்துப்பேனாம்.... 
நீங்களா வந்து வாய்க்குள்ள போயிடுவீங்களாம்...
உதய்பூர் - சாஜன்கட் உயிரியல் பூங்காவில்....

ஒவ்வொரு இடத்திலும் படங்கள் எடுத்துக் கொண்டு, மீண்டும் பேட்டரி காரில் பயணித்து அடுத்த இடம், அங்கே காட்சிகளைக் கண்டு, படம் எடுத்து என ஒன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை. எல்லா இடங்களிலும் திருப்தியாக பார்த்தாலும், நின்று நிதானித்து, இன்னும் நிறைய நேரம் எடுத்துப் பார்க்க வேண்டுமென்றால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதற்கு நடந்து செல்வது தான் செல்வது! 90 நிமிடத்திற்குப் பிறகு எந்த இடத்தில் ஏறிக்கொண்டோமா அதே இடத்தில் கொண்டு விட்டார்கள். பேட்டரி கார் ஓட்டுனர்கள் இருவருக்கும் கொஞ்சம் இனாம் கொடுத்து வாயில் நோக்கி நடந்தோம். என்னதான் தனித்தனியாக படம் எடுத்துக் கொண்டாலும், குழுவினர் அனைவருமாக படம் எடுத்துக் கொள்ள முடியாமல் இருந்தது. பூங்கா வாயிலில் சில படங்கள் எடுத்துக் கொண்டு அடுத்தது என்ன என்று நண்பர் கஜேந்திராவைக் கேட்க, இங்கே கொஞ்சம் காத்திருங்கள் என்று சொல்லி அவரது நண்பருடன் சென்றார்.

அடுத்ததாக எங்கே செல்லப் போகிறோம், அதற்கு என்ன செலவுகள் என்பதெல்லாம் வரும் பகுதியில் சொல்கிறேன். அதுவும் ஸ்வாரஸ்யமான இடம் தான். 

பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

34 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட்... உள்ளே வந்தால் சாப்பிடுவேன் என்கிறதா? இல்லை, இல்லை.. "ஆ... வெங்கட்டா..? வாங்க.. வாங்க... உங்கள் வரவு நல்வரவாகுக" என்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் 🙏.

      உங்கள் வரவு நல்வரவாகுக என்று சொல்கிறது எனவும் கொள்ளலாம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. "நடை பழகுகிறேன்.." எனக்கு கேட்கும் அதன் மைண்ட்வாய்ஸ்.. "காலைல எழுந்து கொல்லைப்பக்கம் போகக்கூட விடாம போட்டோ புடிக்கிறாங்கப்பா...!"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொல்லைப் பக்கம் போகக்கூட விடாம ஃபோட்டோ புடிக்கிறாங்கப்பா....

      ஹாஹா... மைண்ட்வாய்ஸ் உங்களுக்குக் கேட்டுடுச்சா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. வெண் புலி.. - 'வெண்' என்று வந்தாலே மூளை அடுத்த வார்த்தையை புரவி என்று முடிக்கிறது!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெண் என்று வந்தாலே புரவி! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. //நான் வாயைத் திறந்துப்பேனாம்.... நீங்களா வந்து வாய்க்குள்ள போயிடுவீங்களாம்...//

    ஹா... ஹா... ஹா...

    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி...சாப்பாடைக் கண்டதும் சாப்பாட்டுக்குப் போய்ட்டேன் அதான் இங்கு லேட் பாதி பந்தியிலே எழுந்து இங்கு வந்து ஆஜர் வைச்சுட்டுப் போகலாம்னு ஹா ஹா ஹா

    ஆஹா செல்லங்கள் அழகா இருக்கே இதோ வரேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா ஜி!. திங்கறது முக்கியம்! ஹாஹா...

      செல்லங்கள்.... :) அழகு தான் எப்போதுமே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பாட்டரி கார் இப்போ வந்திருக்கோ? நாங்க போனப்போ நடந்து தான் போனோம். குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியலை! :)))) புலி நீங்க படம் எடுப்பது தெரிந்தே போஸ் கொடுத்திருக்கு போல! முதலையாரும் வாயைத் திறந்து வைச்சுக் கொண்டிருக்கார். பார்க்க பயம்மாத் தான் இருக்கு! உண்மையாகவே அங்கே காடுகள் பராமரிப்பு நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இந்த பேட்டரி கார் இருப்பது வயதானவர்களுக்கு நல்ல வசதி - நேரம் சேமிக்கவும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  7. செடி, கொடிகள், இலைகள் பத்தி எனக்கும் ஓரளவுக்குத் தெரிஞ்சாலும் என் மாமியார், நம்ம ரங்க்ஸ் இரண்டு பேரும் இதில் நிபுணர்கள்! சட்டுனு சொல்லுவாங்க! அதிலும் மாமியாரின் நினைவுத் திறன்! வாய்ப்பே இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா, பெரியம்மா இருவரும் அப்படித்தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  8. ஒவ்வொரு இடத்திலும் சரியாக படம் எடுத்துள்ளீர்கள்... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. மகிழ்ச்சி இத்தனை தெரியும்படி வெகு நல்ல இடம்தான். ரொம்ப சாது மிருகங்கள் போல இருக்கிறது.. நாங்களும் கரடி உலகத்துக்குப் போனோம் காரை
    விட்டு இறங்கவே இல்லை. படங்களும் அதற்கெற்ற காப்ஷன் களும் மிக அருமை.
    மிக நன்றி வெங்கட். அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரடி உலகம் - ஆஹா.... ஒரு முறை விலங்குகள் சரணாலயத்தில் கரடிகள் ரொம்பவே விளையாட அங்கே நிறைய நேரம் செலவிட்டேன் - அது நினைவுக்கு வந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா..

      நீக்கு
  10. வழக்கம்போல அனைத்து புகைப்படங்களும் அருமை. இயற்கைச்சூழலில் விலங்குகளின் இருப்பிடம். மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. மகிழ்ச்சியுடன் விளையாடி களித்து படங்களையும் எடுத்து தந்து விட்டீர்கள். பாட்டரி கார் வசதிதான்.
    எல்லா படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  13. எனக்கு ஒருஆச்சரியம் டெல்லியில் பணியில் இருந்துகொண்டு தானே சமையல் செய்துசாப்பிட்டு நண்பர்களை சந்தித்து வலைப் பதிவிலெழுதி இந்தியா பூரா சுற்றும் உங்களால் எப்படி முடிகிறது பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... ஒரே நாளில் அனைத்தும் செய்வதில்லையே!

      கடைசியாக செய்த பயணம் - சென்ற அக்டோபரில்! அதன் பிறகு பயணிக்க வில்லை. இதுவரை ஓடிக்கொண்டிருக்கிறது. முடியாமல் போனால் - ஓட்டம் நின்று விடும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  14. அந்தச் சிங்கம் ஆ!! வந்துட்டார் வெங்கட்ஜி...படம் புடிக்க...நான் இன்னும் ரெடியாகலையேனு நினைக்குதோ..ஹா ஹா ஹாஹ் ஆ

    வெண்புலியின் நடை செம....அந்தச் சிங்கம் மாதிரி நான் இல்லை வீர நடை போட்டு உங்களுக்கு எல்லாம் காட்டுவேனாக்கும் என்று நடந்திருக்கும்...

    //ஒன்றரை மணி நேரம் பூங்காவில் பேட்டரி கார் மூலம் சுற்றிப் பார்த்த போது கிடைத்த அனுபவங்கள் சுவையானவை – ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டும், சிறுத்தையோடு செல்ஃபி எடுக்க முயன்றதும், எங்கள் குழுவில் இருந்த ஒருவரை மற்றவர் சிறுத்தையுடன் படம் எடுக்க முயன்றது – அதை நான் படம் எடுத்தது என குதூகலமாகவே சென்றது நேரம். பூங்காவில் எங்களைப் பார்த்த மற்ற சுற்றுலாப் பயணிகள் நாங்கள் அடித்த லூட்டியில் கொஞ்சம் பயந்து தான் போனார்கள்! //

    என்ன சந்தோஷமான மொமென்ட்ஸ்...இல்லையா வெங்கட்ஜி!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்கம் - ஹாஹா....

      சந்தோஷ தருணங்கள் இருப்பது தானே மகிழ்ச்சி. இருக்கும் வரை சந்தோஷமாக இருப்போமே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  15. முதலைக்கான கமென்ட் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...

    சூப்பர் படங்கள் ஜி இம்முறை பெயரில்லாத படங்கள் நீங்கள் எடுத்ததா? எல்லா படங்களுமே அருமை

    ஆமாம் ஜி பாவம் காட்டில் ஃப்ரீயாக இருக்க வேண்டியவை கூண்டிற்குள் கஷ்டம்தான் நம்மை இப்படி அடைத்துப் போட்டால் எப்படி இருக்கும் இல்லையா...ம்ம்ம் என்ன சொல்ல...

    அடுத்த இடம் என்ன என்று அறிய ஆவல்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரிடாத படங்கள் - எல்லாப் படத்திலும் பெயர் இருக்கிறது! தெரியும்படி இல்லை! :)

      காட்டில் இருந்தால் ஃப்ரீயாக இருக்கலாம்... பாவம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  16. உங்கள் தளம் ஒரு சுற்றுலாத் தலமாக மாறியிருக்கு.. அழகிய படங்கள்.. ரசிக்கும்படியாக எழுதுறீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுற்றுலாத் தலம்! ஹாஹா... இங்கே நிறைய சுற்றுலா தொடர்கள் உண்டு அதிரா... வலப்பக்கத்தில் சுட்டிகள் உண்டு. முடிந்தபோது படியுங்கள். சில மின்னூல்களும் உண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  17. உங்கள் பயணப்பதிவுடன் நாங்களும் பயணிக்கிறோம்,
    தொடருங்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....