வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – கண்முன் விபத்து – பக்தியின் உச்சம் – பாபா ராம்தேவ்



ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 19

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


இந்த வண்டியில் எத்தனை பேர் என்று சொன்னால், இதே வண்டியில் ஒரு இடம் உங்களுக்குப் பரிசு....

 
பஞ்ச துவாரகை ஸ்தலங்களில் ஒன்றான நாத்துவாரிலிருந்து எங்கள் அடுத்த இலக்கான ஜோத்பூர் நகரம் சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சீரான வேகத்தில் சென்றால் மூன்றரை - நான்கு மணி நேரத்தில் சென்று அடைந்து விட முடியும். ராஜ்சமந்த் – பாலி மாவட்டங்கள் வழியே ஜோத்பூரை சென்றடையலாம். தேசிய நெடுஞ்சாலையிலும், மாநில நெடுஞ்சாலையிலும் பயணித்தாலும், சில இடங்களில் குறுகிய சாலைகள் என்பதால் சற்றே அதிக நேரம் எடுக்கலாம். சாலைகள் தவிர்த்து நாங்கள் சென்ற சமயத்தில் ஜோத்பூர் அருகே இருக்கும் ஒரு கோவிலுக்கு, பக்தர்கள் நடைப்பயணம் செல்லும் சமயம். கூட்டம் கூட்டமாக, கிராமம் கிராமமாக, பக்தர்கள், நடந்தும், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பயணித்தும் கோவிலுக்குச் செல்வார்கள் என்பதால், சராசரி வேகத்தினை விடக் குறைவான வேகத்திலேயே பயணிக்க முடிந்தது.


முதல் கேள்வி - பரிசு இதற்கும் பொருந்தும்... 


நடந்தே செல்லும் பக்தர்கள் குழு....

ஜோத்பூர் அருகே இருக்கும் ஒரு கோவில் பாபா ராம்தேவ்ரா கோவில் – பாபா ராம்தேவ் என்றும் அழைப்பதுண்டு என்றாலும் இந்த ராம்தேவ் இப்போது இருக்கும் ராம்தேவ் அல்ல! 14-15-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுபவர் – ஒரு சிறு குன்றின் மேல் அமைந்திருக்கும் ராம்தேவ்ரா கோவிலுக்கு பல மைல் தூரங்கள் நடந்து வந்து பக்தி கொள்ளும் பக்தர்களும், தொண்டர்களும் இங்கே உண்டு. அவர்கள் செல்லும் வழியெங்கும் பந்தல்களும், தண்ணீர்-உணவு அளிக்க ஏற்பாடுகளும் செய்து தரவும் மக்கள் இருக்கிறார்கள். பத்து பதினைந்து நாட்கள் நடந்து வந்து இங்கே தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்களது கிராமத்திலிருந்து புறப்பட்டு, கோவிலுக்கு நடந்தே வந்து தரிசனம் செய்து கிராமம் திரும்புவார்கள்.


தலைப்பாகைக்குள் அரிப்பு போல!

சிலரிடம் விசாரித்தபோது அவர்கள் சொன்ன இடம் ஜோத்பூரிலிருந்து கிட்டத்தட்ட 350 கிலோமீட்டர். மொத்தமாக 700 கிலோமீட்டர் நடந்து வருகிறார்கள்! அவர்களது பக்தியை என்ன சொல்ல. வழியெங்கும் இந்தப் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக இருக்க, வேகமாக பயணிப்பது என்பது முடியாத கார்யமாக இருந்தது. இவர்கள் பல நாட்களாக நடக்கிறார்கள் – வழியில் தான் எல்லாம் – ஆங்காங்கே இருக்கும் நீர்நிலைகளில் குளியல் மற்ற வேலைகளை முடித்துக் கொள்கிறார்கள். வியர்வை மழையில் நனைந்து – அதுவும் அவர்கள் அணிந்திருக்கும் உடை, தலைப்பாகை எல்லாம் வியர்வை மழை தான்! அதனால் எங்களுக்கு என்ன கஷ்டம் என்பதை பிறகு சொல்கிறேன்! சில நீர்நிலைகளைக் கடந்த போது பலரும் குளிப்பதும், துணி காய வைப்பதுமாக இருந்தார்கள் – அனைத்தும் சாலையோரத்தில்!


நல்லா புடிச்சுக்கோங்க பெரியவரே.... வண்டி அதிவேகமாப் போயிட்டு இருக்கு! 


வழியெங்கும் பக்தர்கள் கூட்டம்....

ஜீப் போன்ற வாகனங்களில் எத்தனை பேர் செல்ல முடியும்? நம் கணக்கில் ஏழு அல்லது எட்டு பேர் – இங்கே சென்ற வாகனங்களில் இருக்கும் மக்களை எண்ண முடிந்தால் தானே… அடைத்துக் கொண்டு போகிறார்கள். உட்கார்ந்தபடியும், நின்றபடியும், தொங்கியபடியும் பயணிக்கும் அவர்களைப் பார்த்தால் நமக்கு பயமாக இருக்கிறது. இத்தனை மனிதர்களோடு அந்த ஜீப் ஓட்டும் வாகன ஓட்டி, காட்டு வேகத்தில் ஓட்டுகிறார் – வாகனத்திலிருந்து யாராவது விழுந்தால் கூட, உடனே அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை. பின்னால் இருப்பவர் யாராவது கத்தினால் கூட அவருக்குத் தெரிவதற்குள் கொஞ்சம் தூரம் சென்றிருப்பார். அத்தனை வேகம், அதுவும் இத்தனை மனிதர்களோடு. விபத்துகள் பற்றி வடக்கே இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு எந்த வித பயமும் இருப்பதில்லை.


பாரம்பரிய உடையில் ஒரு பெரியவர்... 

நாங்கள் பயணித்தபோதும் எங்கள் கண் முன்னரே ஒரு விபத்து. சீரான வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த எங்களை முந்திக் கொண்டு ஒரு ஜீப் – குறைந்தது 25 பேராவது அந்த வாகனத்தில் இருக்கலாம். அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அதன் பின்னர் சற்று இடைவெளி விட்டு எங்கள் வாகனம் சென்று கொண்டிருந்தது. எங்கள் முந்திச் சென்ற வாகனத்தினை ஓட்டியது ஒரு இளைஞர். சில நிமிடங்கள் கழித்து பார்த்தால், எதிரே பைக்கில் வந்த தலைப்பாகைக்காரர் ஒருவரை ஜீப் இடித்தது. வண்டி கீழே விழ தலைப்பாகை அணிந்தவர் கீழே கிடக்கிறார் – விழுந்தவரிடம் அசைவே இல்லை! சாலையோரத்தில் இருப்பவர்கள் ஓடி வருகிறார்கள். அவரை இடித்துச் சென்ற வாகனம் இன்னும் வேகமாகச் செல்கிறது. நாங்களும் அங்கே வாகனத்தினை நிறுத்தாமல் செல்கிறோம். அத்தனையும் ஒரு சில நொடிகளில் நடந்து விட்டது.


நடையாய் நடந்து.....
ராம்தேவ்ரா கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள்....

ஒரு கிலோமீட்டர் பயணித்த பிறகு, முன்னால் சென்ற வாகனம் நிற்கிறது. ஓட்டுனர் மாறிவிடுகிறார். அதன் பிறகு அப்படி ஒரு வேகத்தில் பயணித்து – எங்கள் கண்களை விட்டு மறைகிறது அந்த ஜீப்! தான் இடித்தது தெரிந்ததால் உடனே ஆள் மாறாட்டம்! பின்னால் யாராவது துரத்திக் கொண்டு வருகிறார்களா என்ற ஒரு பார்வை வேறு. ஜீப்பில் பயணித்த ஒருவருக்குமே தாங்கள் வந்த வண்டி ஒரு விபத்தினை ஏற்படுத்தி விட்டதே என்ற எண்ணம் வந்தமாதிரி தெரியவில்லை. சர்வ சாதாரணமாக ஓட்டுனர் மாற்றி, இன்னும் வேகமாகப் பயணிக்கிறது - பறக்கிறது அந்த வண்டி. இத்தனைக்கும் அந்த சாலையில் பக்தர்கள் கூட்டம் நடந்து படியே இருக்கிறது. விபத்து நடந்த இடத்தில் எங்கள் வாகனம் நிறுத்தாமல் வந்தது எனக்கு உறுத்தியது என்றாலும் ஓட்டுனர் ஜோதி சொன்ன காரணம் – தெரியாத ஊரில் இப்படி நிறுத்துவது சரியல்ல!


பக்தர்களுக்கான தற்காலிக தங்குமிடம்...


இவர் தான் பாபா ராம்தேவ்ரா [எ] ராம்தேவ்..
படம்: இணையத்திலிருந்து..... 

சரி இந்த ராம்தேவ்ரா கதை என்ன எனக் கொஞ்சம் பார்க்கலாம். பதினான்காம் நூற்றாண்டு. தற்போதைய ராஜஸ்தானின் மேக்வால் பகுதியை ஆண்டுவந்தார் ராஜா அஜ்மல் – அவரது பட்டத்தரசி மானவதி. ராஜாவுக்கு இருந்த ஒரே குறை தனக்கடுத்து அந்த ராஜாங்கத்தினை ஆள ஒரு வாரிசு இல்லாதது. வேண்டாத தெய்வமில்லை. வாரிசு தான் இல்லாமல் இருந்தது. அப்பகுதியில் இருந்த கோவிலுக்குச் சென்று இறைவனிடம் மன்றாடியும் குழந்தை வரம் மட்டும் கிடைக்கவில்லை. கோபத்தில் தன்னுடைய ஆயுதத்தால் இறைவனின் சிலை தலையில் ஓங்கி ஒரு அடி! அங்கே இருந்த பூஜாரி இங்கே அடித்து என்ன செய்ய, இறைவன் கடலுக்குள் நிம்மதியாக ஆதிசேஷன் மீது படுத்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்ல, கடலுக்குள் குதித்து விட்டாராம்!


சாலை முழுவதும் பக்தர்கள் கூட்டம்... 


பாபா ராம்தேவ்ரா - இன்னுமொரு படம்....
இணையத்திலிருந்து....

அங்கே பார்த்தால் விஷ்ணுபகவானின் தலையில் கட்டு! என்ன என்று கேட்க, என் பக்தன் என்னைத் தலையில் அடித்து விட்டார் என்று சொன்னாராம் விஷ்ணுபகவான். இறைவனிடம் மன்னித்தருளக் கேட்டு, தன் ஆதங்கத்தினை வெளிப்படுத்தினாராம் ராஜா. கவலைப்படாதே, இன்னும் ஒரு வருடத்திற்குள் நானே வந்து உனக்கு மகனாகப் பிறப்பேன் என்று அருள் பாலித்தாராம். அப்படிப் பிறந்தவர் தான் ராம்தேவ்ரா என மக்கள் போற்றும் ராஜா. தனது ஆட்சிக் காலத்தில் சிறப்பான பணிகளைச் செய்த ராஜா ராம்தேவ் தான் பாபா ராம்தேவ்ரா/பாபா ராம்தேவ் என போற்றிப் பூஜிக்கப் படுகிறார். பிரதான கோவில் ராஜஸ்தானின் போக்ரான் அருகே இருக்கிறது என்றாலும் மாநிலம் முழுவதும் பாபா ராம்தேவ்ரா கோவில் இருக்கிறது. ஜோத்பூருக்கு அருகேயும் உண்டு.


செல்லும் வழியில் ஒரு நீர்நிலை.... 

ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் ராம்தேவ்ரா கோவிலில் விசேஷ பூஜைகள், திருவிழாக்கள் நடக்கும். அந்தச் சமயத்தில் ராஜஸ்தானின் எல்லா பகுதிகளிலிருந்தும் மேக்வால் மக்களும் மற்றவர்களும் அங்கே பயணித்து பாபா ராம்தேவ்ராவின் ஆசியைப் பெறுகிறார்கள். ஒரு பக்தரிடம் பேசியபோது ஜெய்சல்மேரிலிருந்து நடந்தே வருவதாகச் சொன்னார் – ஜெய்சல்மேர் ஜோத்பூரிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் என்பதை இங்கே உங்களுக்கு நினைவூட்டுகிறேன்! ஜோத்பூர் வரை வந்து மீண்டும் நடந்தே திரும்புவார்களாம்! பத்து பதினைந்து நாட்கள் நடை – வழியில் தங்குவதெல்லாம் பக்தர்களாக அமைந்திருக்கும் தற்காலிக கொட்டகைகளில் – உணவும் அப்படியே – குளியல் மற்ற வேலைகள் எல்லாம் வழியில் நீர் நிலைகளுக்கு அருகே! பக்தியின் உச்சம் – வேறென்ன சொல்ல!

இந்தப் பயணம் பற்றி தொடர்ந்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

26 கருத்துகள்:

  1. குட் மார்னிங் வெங்கட். முதல் வண்டியில் 31 பேர்கள். இரண்டாவது வண்டியில் 27 பேர்கள். இல்லை என்று நீங்கள் சொன்னால் அவர்களை இறக்கி விட்டு நிரூபிக்க வேண்டும்!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம். ஹாஹா.... சமயோசிதமான பதில் தான்! உங்களுக்கு இடம் கன்ஃப்ர்ம்ட்.... :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. எந்த இடம் என்று சொல்லாததால் நான் பதில் சொல்லலை. நீங்க பாட்டுக்கு டிரைவர் உட்காரும் சீட் என்று சொல்லிவிட்டால் என்னாவது?

      நீக்கு
    3. ஹாஹா... ட்ரைவர் சீட்டு - நல்லது! இடம் ஒழுங்காக் கிடைக்கும். மற்றவை - தொங்கல் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  2. விபத்தைப் பற்றிக் கவலைப்படாமல் செல்கிறார்களே.... இவர்கள் சாமியைக் கும்பிட்டு என்ன பயன்? மனிதாபிமானம் இல்லாதவர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நின்றால் அடி பின்னி விடுவார்கள் என்பது தான் பெரும்பாலான ஓட்டுனர்களின் வாதம் ஸ்ரீராம். எங்கள் ஓட்டுனர் கூட அதைத் தான் சொன்னார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வியர்வையில் குளித்திருக்கும் அவர்களால் உங்களுக்கு என்ன தொல்லை என்று அப்புறம் சொல்கிறேன் என்றிருக்கிறீர்கள்.... "நறுமணம்"தானே பிரச்னை!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் னு நினைக்கிறேன். குமட்டும் இல்ல! :))))))

      நீக்கு
    2. ஹாஹா.... சொல்கிறேன் - விவரமாக!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  4. ராஜஸ்தானில் இப்படிப் பயணம் செய்வதை நானும் கண்டிருக்கேன். ஆனால் இப்போவும் மாறவில்லை என்பது ஆச்சரியம் தான். விபத்தில் மாட்டிக் கொண்ட மனிதர் என்ன ஆனாரோ? பாவம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் - இப்படியான பயணங்கள் இன்னமும் தொடர்கிறது. ராம்தேவ்ரா கோவில் ராஜஸ்தான் மட்டுமல்லாது, குஜராத் மற்றும் தொட்டடுத்த மற்ற மாநிலங்களிலும் கட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

      அந்த மனிதர் என்ன ஆனாரோ? எனக்கும் அவ்வப்போது அந்த எண்ணம் வந்து போகும். என்ன ஆனாரோ பாவம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  5. விபத்தினை ஏற்படுத்தி விட்டு கண்டுகொள்ளாமல் செல்வது வேதனைதான் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேதனை தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பயணத்தின் ஊடே நடந்த அந்த விபத்தினைப் படித்தபோது சற்றே கனத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ஐயா. விபத்துகள் என்னையும் பாதிக்கும் விஷயம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. பயணத்தில் எங்களையும் கூட்டிப்போய்விட்டீர்கள். இவ்வளவு வேகமாக வண்டியை ஓட்டி என்னத்தைச் சாதிக்கப் போகிறார்கள்? பக்தியில் அர்த்தம் வேண்டாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னத்தைச் சாதிக்கப் போகிறார்கள்.... ஒன்றுமில்லை. ஆனாலும் வேகம் பிடித்திருக்கிறது பலருக்கும். இரண்டு நாட்கள் முன்னர் ஒரு செய்தி 320-கிமீ வேகத்தில் போகக் கூடிய ஒரு பைக் ஓட்டிச் சென்ற ஒரு இளைஞனின் மரணம் - என்ன சாதித்து விட்டார் வேகத்தினால்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. விபத்துகள் நிகழ்வதும் சிலர் உதவி காப்பாற்றுவதும், சிலர் அதுதலைவிதி என்று நினைத்துப்போவதும் சகஜந்தானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  10. வட இந்திய ஆட்களுக்கு சுத்தம் சுத்தமா இல்லன்னு ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்தில் பலமுறை கண்டதுண்டு. அதிவேக பயணம் ஆபத்து. அங்க இருக்கும் வெயில்தான் அவங்க குணத்துக்கு காரணமோ!! ராம்தேவ் கதையை இப்பதான் அறிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுத்தம் இல்லாமல் இருப்பது எல்லா இடங்களிலும் உண்டு ராஜி. இங்கே கொஞ்சம் அதிகம்! :)

      ராம்தேவ்ரா கதை - நானும் இந்தப் பயணத்தின் போது தான் தெரிந்து கொண்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    கண்மண் தெரியாத வேகம், ஒர் உயிரை மதிக்காமல் செல்லும் வேகம் எதற்கு? அப்படி போய் பக்தியுடன் தரிசனம் செய்தாலும், செய்த பாவம் பின் தொடராது போய் விடுமா? மனித நேயத்தை விடவா பக்தி..

    ராம் தேவ்ரா கதை நன்றாக உள்ளது.
    தலைப்பாகை இவ்வளவு பெரிதாக கட்டியிருப்பதே காற்றோற்றம் இல்லாமல் உடலில் வேர்வை வரவழைக்குமே... செய்திகள் படங்கள் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி. தொடருங்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண் மண் தெரியாத வேகம் - அவர்களுக்கு அதில் ஒரு த்ரில். சொன்னால் காதில் ஏறுவதில்லை.

      தலைப்பாகை - அவர்கள் எதற்காகக் கட்டிக் கொள்கிறார்கள் என்பதைக் கேட்க வேண்டும். கேட்டுச் சொல்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....