வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் கோட்டை – தௌலத் கானா



ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 25

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


நுணுக்கமான வேலைப்பாடு...
மெஹ்ரான்கட் கோட்டை ஜோத்பூர்



பல்லக்கு ஒன்று...

மெஹ்ரான்கட் கோட்டை ஜோத்பூர்


ஹாத்தி ஹௌடாக்களையும் பல்லக்குகளையும் பார்த்த பிறகு நாங்கள் அடுத்ததாய்ச் சென்ற இடம் DHதௌலத் KHகானா! சென்ற பகுதியில் சொன்னது போல, DHதௌலத் KHகானா என்பது சொத்துகளைச் சேகரித்து வைக்கும் இடம். அந்த காலத்தில் இருந்த ராஜாக்கள் தங்களிடம் இருந்த சொத்துகளைப் பாதுகாக்கவே பெரிய அறைகள் கட்டி இருந்தார்கள் – அந்த அளவிற்குச் சொத்துகள் இருந்திருக்கின்றன. இன்றைக்கு அவற்றில் பல நம்மிடம் இல்லை – இருப்பவையும் ராஜாக்களின் பரம்பரையினர் கைகளில் அல்லது அவர்கள் நிர்வகிக்கும் ட்ரஸ்ட்-களின் கைகளில். இப்போது அந்த DHதௌலத் KHகானாவில் இருக்கும் பொருட்கள் வெகுவும் குறைவு.


மூங்கில்களால் செய்யப்பட்ட CHசிக்...

மெஹ்ரான்கட் கோட்டை ஜோத்பூர்




தோரண்...

மெஹ்ரான்கட் கோட்டை ஜோத்பூர் 

இப்போது DHதௌலத் KHகானா-வில் இருக்கும் பொருட்கள் – ஆயுதங்கள், துணிகள், ஓவியங்கள், அலங்காரப் பொருட்கள், அந்தக் காலத்தின் ஏடுகள்/சுவடுகள், தலைப்பாகைகள் மற்றும் சில பொருட்கள்.  இங்கே இருப்பதில் இப்போது மிக முக்கியமான இடத்தினைப் பெறுவது முகலாயப் பேரரசர் அக்பரின் வாள்! கிட்டத்தட்ட 500 வருடங்கள் மார்வார் – ராத்தோட் – மேவார் ராஜாக்களின் வரலாறு இங்கே பார்க்க முடியும் என்று வெளியே இருக்கும் பதாகை சொல்கிறது. ”CHசிக்” என்ற ஹிந்தி வார்த்தையை நீங்கள் கேட்டதுண்டா? தற்போது வீடுகள்/அலுவலகங்களில் பயன்படுத்தும் Blinds-க்கு முன்னோடி இந்த CHசிக் சிக் தான். மூங்கில் கொண்டு செய்யப்பட்ட கலைநயம் மிக்க CHசிக் சிலவற்றையும் இங்கே பார்க்க முடியும்.


ஓவியம்...
மெஹ்ரான்கட் கோட்டை ஜோத்பூர் 


வெள்ளியில் ஹூக்கா...
மெஹ்ரான்கட் கோட்டை ஜோத்பூர்

தோரண் என அழைக்கப்படும் வாயில்கள், வெள்ளியில் ஹூக்கா, ஓவியங்கள், ராஜாக்கள் போர் சமயத்தில் பயன்படுத்திய இரும்பு உடைகள், அலங்கரிக்கப்பட்ட ராஜா/ராணிகளின் அறைகள் என எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தோம். அறையில் இருந்தவற்றை படம் எடுப்பது ரொம்பவே சிரமமாக இருந்தது. சில பதிவுகளுக்கு முன்னர் பார்த்த ராம்தேவ்ரா பக்தர்கள் நூற்றுக் கணக்கில் இங்கேயும் சுற்றிப் பார்க்க வந்திருந்தார்கள். எங்கே பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக அவர்கள் – ஆண்களும், பெண்களும் - இருக்கையில் அவர்களைத் தவிர்த்து படம் எடுப்பது ரொம்பவே கஷ்டமாக இருக்க, தனித்தனியாக படங்கள் எடுக்க முடியவில்லை. அந்த அறையில் இருந்த ஒரு தலைப்பாகைக் காரரின் மீசை ரொம்பவே அழகாக இருந்தது. அவரிடம் படம் எடுத்துக் கொள்ளவா எனக் கேட்க, மீசையை முறுக்கி முறைத்தார். சற்று தள்ளிச் சென்று Zoom செய்து எடுத்தாலும் திருப்தி இல்லை!


இரும்புக் கவசம்...
மெஹ்ரான்கட் கோட்டை ஜோத்பூர்


ஓவியம்...
மெஹ்ரான்கட் கோட்டை ஜோத்பூர்

அறைக்குள் எங்கு பார்த்தாலும் ராம்தேவ்ரா பக்தர்கள் – பல நாட்களாக நடந்தும் கிடைத்த இடத்தில் குளித்துத் தோய்த்த அவர்களிடமிருந்து வந்த வாசம் எங்கள் அனைவரையும் ரொம்பவே படுத்தியது – வேகவேகமாக அவர்களை விட்டு விலகியே நடக்க வைத்தது – ஆனாலும் எங்கெங்கும் அவர்கள் இருக்க அந்த வாடை எங்கள் மீதே அடிப்பது போல ஒரு உணர்வு. அவர்கள் தலைப்பாகையினை வாங்கிக் கொண்டு வந்து நமக்குப் பிடிக்காதவர்கள் மூக்கருகே கொண்டு வைத்தால் மயங்கி விடுவார் என கொஞ்சம் கொஞ்சமாக அந்த வாடை பற்றியே பேச்சு வந்து கொண்டிருந்தது – நாங்கள் தமிழில் பேசிச் சிரிக்கையில் அவர்களும் எங்களைப் பார்த்து புன்னகை புரிந்தார்கள். நாங்கள் சிரித்ததற்கான காரணம் தெரிந்திருந்தால் காட்சி வேறு மாதிரி இருந்திருக்கும்! நல்ல வேளை அவர்களுக்குத் தமிழ் புரியவில்லை.


தொட்டில்...
மெஹ்ரான்கட் கோட்டை ஜோத்பூர்


ஓவியம்...
மெஹ்ரான்கட் கோட்டை ஜோத்பூர்

குளிரூட்டப்பட்ட அறைக்குள் இப்படி இருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான். எங்கே போனாலும் அதே வாடை வருவதாகவே தெரிந்தது. மூக்கு அந்த வாடைக்கு பழக்கப்பட்டுவிட்டாலும் தாங்க முடியாததாகவே இருந்தது. எங்கள் குழுவில் இருந்த பெண்கள் மூக்கை கைக்குட்டையால் மூடியபடியே வந்தார்கள். சரி கொஞ்சம் வேகமாக நடந்து பார்க்க முடிந்ததை பார்த்து திறந்த வெளிக்கு வருவோம் என வேக நடை போட்டோம். எப்படியும் படங்கள் எடுக்க வாய்ப்பில்லை. ஆண்கள் மட்டும் இருந்தாலாவாது படங்கள் எடுக்க முயற்சி செய்திருக்கலாம். பெண்களும் இருக்கும்போது அவர்களைத் தவிர்த்து படம் எடுக்க முடியவில்லை. சிலரிடம் பேச்சுக் கொடுத்து எங்கே இருந்து வந்திருக்கிறார்கள் என்று கேட்க, ஜெய்சல்மேர் அருகே உள்ள கிராமத்திலிருந்து வந்திருப்பதாக – அதுவும் நடந்தே வந்திருப்பதாகச் சொன்னார்கள். கிட்டத்தட்ட 300 கிலோமீட்டர் தொலைவு! திரும்பவும் நடந்தே செல்வார்களாம்.


அடியேன்...
மெஹ்ரான்கட் கோட்டை ஜோத்பூர் 


மீசையை முறுக்கிய ஊழியர்...
மெஹ்ரான்கட் கோட்டை ஜோத்பூர்

அறைகளிலிருந்து வெளியே வரும்போது ஒரு இடத்தில் – “ஜாக்கிரதை – நீங்கள் பல ஜோடி கண்களால் கவனிக்கப்படுகிறீர்கள்” என எழுதி வைத்திருக்கிறார்கள். ஓஹோ CCTV Camera தானே என நினைத்தால் அது தான் இல்லை. அந்தப் பகுதியின் விட்டத்தில் பல வௌவால்கள் தங்கள் கூடுகளை அமைத்துக்கொண்டு அங்கேயே தங்கியிருக்கின்றன. அண்ணாந்து பாருங்கள் – உங்களைப் பார்க்கும் கண்களை நீங்கள் கண்டுபிடிக்கலாம் என எழுதி இருக்கிறார்கள். வௌவால்கள் அங்கே இருக்கின்றன எனத் தெரிந்த பிறகு எப்படி அண்ணாந்து பார்ப்பது – மேலே பார்த்து வாயைத் திறந்தால் என்னாவது! அதனால் மேலே பார்க்கவும் இல்லை – இருட்டு என்பதால் படம் பிடிக்கவும் இல்லை! ஆண் வௌவால்கள் தங்களது எச்சிலை பசை போல பயன்படுத்தி இலைகள், வைக்கோல் போன்றவற்றை விட்டத்தில் ஒட்டி கூடு போல அமைக்குமாம்.


பல்லக்கின் மேற்கூரையும் வெல்வெட்டில்...
மெஹ்ரான்கட் கோட்டை ஜோத்பூர்

அறைகளிலிருந்து வெளியே வந்தால் கொஞ்சம் திறந்தவெளி – கொஞ்சம் வெளிக்காற்று பட்டதில் சுகமாக இருந்தது. அந்த இடத்திலும் மாளிகையின் வெளிப்புறத்தில் நிறைய வேலைப்பாடுகள். சில மண்டபங்களும் அங்கே தான் இருந்தன. அதே இடத்தில் தான் Rest Room வசதிகளும் இருக்க, தேவைப்பட்டவர்கள் அங்கே சென்று வந்தோம். பரவாயில்லை – சுத்தமாகவே வைத்திருந்தார்கள். சில பல படங்களை திறந்தவெளியில் எடுத்துக் கொண்டோம். அங்கிருந்த கட்டிட வேலைப்பாடுகள் ரொம்பவே அழகாய் இருந்தன. அங்கிருந்து வெளியேறினால் ஒரு சிறு கோவில். பக்கத்திலேயே மார்க்கெட் – சில கடைகள் – கோட்டை பராமரிக்கும் ட்ரஸ்ட் நடத்தும் கடையும் உண்டு. மெஹ்ரான்கட் கோட்டை அருங்காட்சியகத்திற்கு இணையதளத்தில் கடையும் உண்டு!

இந்த இரண்டு மக் விலை 980/-...
மெஹ்ரான்கட் கோட்டை ஜோத்பூர்

அந்த இணையதளத்தில் இருக்கும் பொருட்களைப் பார்த்தால் வாங்கத் தோன்றவில்லை – விலை அப்படி! உதாரணத்திற்கு மேலே கொடுத்திருக்கும் இரண்டு Royal Jodhpur Mug – விலை – அதிகம் இல்லை – ரூபாய் 980/- மட்டும்! ஒரு குடையின் விலை 1450/- மட்டும்! கோட்டைக்குள்ளும் இவர்களின் கடை உண்டு. வெளியிலிருந்து – Window shopping செய்து நகர்ந்தோம். கோவிலுக்கு அருகே இருந்த கடைகளில் நிறைய பொருட்கள் இருந்தன. ஒட்டகத்தின் எலும்புகள் கொண்டு செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் நிறையவே இருந்தன. அந்தப் பொருட்களின் புகைப்படங்களை ஏற்கனவே ஒரு ஞாயிறில் புகைப்பட உலாவாக வெளியிட்டிருக்கிறேன். பார்க்காதவர்கள் – ஒட்டக எலும்பில் ஆபரணங்கள் – என்ற பதிவில் பார்க்கலாம்.


ஓவியம்...
மெஹ்ரான்கட் கோட்டை ஜோத்பூர்


ஓவியம்...
மெஹ்ரான்கட் கோட்டை ஜோத்பூர்

கோட்டையில் இன்னும் பார்க்க என்ன இருக்கிறது, கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை அடுத்த பதிவிலும் தொடர்கிறேன். இந்தக் கோட்டை பார்க்க விரும்புவர்கள் இங்கே அதிக நேரம் இருப்பதுபோல் திட்டமிட்டுக் கொள்வது நல்லது. ஏனெனில் ஒவ்வொன்றுமே ரசித்துப் பார்க்க வேண்டிய இடங்கள். அடுத்த பகுதியில் கோட்டை சம்பந்தமான இன்னும் சில விஷயங்களைப் பார்க்கலாம்!

பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

32 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட்.. படங்களையும் பதிவையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. 980 ரூபாய் கொடுத்து மக்கா? அநியாயம்!! வவ்வால்களை படம் எடுத்திருக்கலாம்! (ஹிஹிஹி....)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அநியாயம் தான். வாங்கவே தோன்றாது இல்லையா....

      வவ்வால்களை படம் எடுத்திருக்கலாம் - ஹிஹிஹி... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. இன்று பிளாக்கர் டாட்காமிலிருந்து ஒரு மெயில். உங்கள் தளத்துக்கு உங்கள் மெயில் பாக்ஸுக்கு மெயில் வருவதை தொடர விரும்புகிறீர்களா என்று கேட்டு.

    நம்ம ஏரியா, எங்கள் ப்ளாக் இரண்டு தளங்களுக்கும் வந்திருந்தது. தொடர விரும்புகிறேன் என்று பதில் க்ளிக் செய்தேன். டிக் போடாமலேயே மெயில் பாக்ஸுக்கு பின்னூட்டங்கள் வர ஆரம்பித்து விட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இதுவரை மின்னஞ்சல் வரவில்லை. வசதி திரும்பக் கிடைத்தால் நல்லது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. ஹூட்கா உபயோகம் அரபு நாடுகளில் இன்றும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹூக்கா - இப்போதும் ஹரியானா, ராஜஸ்தான் பகுதிகளில் பயன்படுத்துகிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. பயணம் போக ஆசை வருகிறது பகிர்வை படிக்கையில்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் நல்லது.... ஆதலினால் பயணம் செய்வீர்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. அன்புடையீர் ,உங்கள் பதிவுகளை நான் போன் மூலம் படித்து இருக்கிறேன். ஆனால், போன் மூலம் டைப் பண்ணி கருத்து சொல்வது கடினம். அதனால் இது வரை செய்தது இல்லை. இனிமேல் நேரம்கிடைக்கும் போது வந்து படித்து கருத்து சொல்கிறேன் இப்போது நான் ஒரு புதிய லேப் டாப் வாங்கி இருக்கிறேன் அதன் மூலம் என் உயிர் தமிழா https://enuyirthamizha.blogspot.com/ என்ற வலைத்தளத்தை ஆரம்பித்து இருக்கிறேன். என்னையும் உங்களில் ஒருவனாக நினைத்து ஆதரவு தாருங்கள், நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வலைப்பூவிற்கும் வந்து பார்க்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குத்தூசி ஜி!

      நீக்கு
  9. அத்தனை ஓவியங்களும் மிக அருமை! இவற்றையெல்லாம் வெளியிட்டு நாங்கள் பார்ப்பதற்கு உதவி செய்த தங்களுக்கு அன்பு நன்றி!!

    விரைவில் ராஜஸ்தான் பிரயாணம் செய்யலாம் என்ற எண்ணம் இருக்கிறது. அப்போது உங்கள் தகவல்கள் அனைத்தும் மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் நிறைய ஓவியங்கள் உண்டு. முடிந்த போது பகிர்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  10. படங்கள் எல்லாம் அழகு.
    ஓவியம் ஒன்றுக்கு கதவு வைத்து இருக்கே!
    பார்க்காத நேரத்தில் மூடி வைப்பார்கள் போலும் அதை. (ஜன்னல் கதவு போல் இருக்கிறதே )
    பலஜோடி கண்களை மேலே அண்ணந்துப் பார்த்து படம் எடுத்து இருக்கலாம் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதற்காக அந்த ஜன்னல் கதவுக்குள் ஓவியம் என தெரியவில்லை. வித்தியாசமாக இருந்ததாலேயே படம் எடுத்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

      நீக்கு
  12. தொட்டில், இரும்புக்கவசம், தோரணை என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகு. ரசித்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  13. முன்பே சொல்லி இருந்தது போல் ராஜஸ்தானில் ஜெய்பூர் தவிர வெறு இடங்களைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்க வில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் உங்களுக்கு வாய்ப்பு அமையட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  14. உங்கள் பதிவை நமது வலைத்தளத்தில் பதிந்துள்ளேன்.
    சிகரம்
    சிறப்பு. தொடருங்கள், தொடர்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... இதோ பார்க்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.

      நீக்கு
  15. பொதுவா வட நாட்டுக்காரங்க அதிகம் சுத்தமில்லாதவங்கன்னு என் அம்மா சொல்வாங்க. அவங்கதான் மூணு முறை காசி டூர் போய் வந்தாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில பகுதிகள் கொஞ்சம் அழுக்கு தான்! :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  16. அவசரமாய் ஒரு பார்வை! மறுபடிவரணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசரப் பார்வை - முடிந்த போது முழுமையாகப் படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....