திங்கள், 15 அக்டோபர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – காலை உணவு – நார்கண்டா நோக்கி – ஆப்பிள் தோட்டங்கள்



ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 11

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


சூரியன் உதிக்கத் தயாரான போது...
ஷிம்லா நகரிலிருந்து...

ஷிம்லா நகரில் முதல் நாள் இரவு மால் ரோடு பகுதியில் சுற்றி முடித்து இரவு உணவிற்குப் பிறகு அறைக்குத் திரும்பினோம். நல்ல குளிர். கேரளத்திலிருந்து வந்திருந்த நண்பர்கள் – முதல் முறையாக இந்தக் குளிரை அனுபவிப்பதால் கொஞ்சம் கஷ்டப்பட்டார்கள். அறையில் ரூம் ஹீட்டர்கள் இருந்ததால் கொஞ்சம் தப்பித்தார்கள். அன்றைய கணக்கு வழக்குகளை எழுதி முடித்து உறக்கத்தினைத் தழுவினோம். சில நிமிடங்கள் வரை குரங்குகள் தகர மேற்கூரையில் குதித்து ஓடுவது கேட்டுக் கொண்டிருந்தது! பிறகு அவையும் தூங்கி விட்டன போலும். நாங்களும் உறங்க முடிந்தது. விடியற்காலையில் எழுந்து ஒவ்வொருவராக தயார் ஆனோம். முதல் நாள் மாலை சூரிய அஸ்தமனம் கண்டோம் என்றால் இரண்டாம் நாள் காலை சூரிய உதயம். சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.


ஷிம்லா நகரிலிருந்து நார்கண்டா நோக்கி ஒரு பயணம்...



ஷிம்லா நகரிலிருந்து நார்கண்டா - காணொளி - 1

ஓட்டுனர் ரஞ்சித் சிங் அவர்களை அழைத்து சொன்னபடி வரச் சொல்லி ஒரு ரிமைண்டர் கால்! கவலை வேண்டாம் சொன்னபடி வருவேன் என அவர் பதில்! கைகளில் கேமரா பைகளோடு எங்கள் இரண்டாம் நாள் பயணம் துவங்கியது. இரண்டாம் நாள் நாங்கள் செல்ல திட்டமிட்டது நார்க்கண்டா என்ற ஒரு இடத்திற்கு! ஷிம்லா நகரிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது நார்கண்டா.  வழியில் குஃப்ரி நகரம். போகும் வழியில் குஃப்ரியில் காலை உணவை சாப்பிடலாம் என்று சொன்னார் ரஞ்சித் சிங். ஷிம்லா நகரிலிருந்து குஃப்ரி 18 கிலோ மீட்டர் தொலைவில். சரி காலை உணவை அங்கே முடித்துக் கொண்ட பிறகு நேராக நார்கண்டா சென்று விடலாம். திரும்பி வரும் வழியில் குஃப்ரி பார்க்கலாம் என்பது திட்டம்.


உணவகத்திலிருந்து இயற்கைக் காட்சிகள்...


குஃப்ரி நகரில் ஒரு உணவகத்தில் நிறுத்தினார் ஓட்டுனர். அனுபவம் நிறைந்த ஓட்டுனர்களுக்கு எந்த இடத்தில் உணவு நன்றாக இருக்கும் என்பது தெரியும். அடிக்கடி அந்தப் பாதையில் பயணித்திருக்கும் ஓட்டுனர் என்றால் அவரிடமே உணவகம் தேர்ந்தெடுக்கும் பணியை விட்டுவிடுவது நல்லது – நல்ல உணவகமாகப் பார்த்து நிறுத்தச் சொன்னால் போதுமானது! அப்படித்தான் நாங்கள் உணவகப் பொறுப்பினை ரஞ்சித் சிங்-இடம் கொடுத்து விட்டோம்! ஒரு வேலை மிச்சம்! அவர் எங்களை அழைத்துச் சென்று விட்ட இடம் நன்றாகவே இருந்தது – முதலில் ஒரு அறை – பிறகு ஒரு தடுப்பு – அதன் பின்னர் இன்னுமொரு அறை. பின் புற அறைக்குச் சென்று அமர்ந்து கொள்ளுங்கள் என்றார் சிங்! அங்கே சென்றால் வாவ்! அறையின் முடிவில் பெரிய கண்ணாடிச் சுவர் – அந்தப் பக்கம் இயற்கை – மலைகளும் சிகரங்களும்!


 பராட்டாவும் ஊறுகாயும்...



தோசா - சட்னி, சாம்பார்...
வழக்கம் போல நான் பராட்டா சொல்ல, கேரள நண்பர்கள் “தோசா” – தென்னிந்திய உணவுக்கு ஆசை வந்து விட்டது – வந்த சில நாட்களிலேயே! – நன்றாக இருக்காது என்று தெரிந்ததால், சுமாராகத்தான் இருக்கும் என்ற தகவலைச் சொன்னேன். ஆனால் விதி வலியது – தோசை மட்டுமே வேண்டும் என அவர்கள் சொல்ல, ஆலு பராட்டா, ப்யாஜ் பராட்டா மற்றும் தோசை என ஆர்டர் கொடுத்தோம். அதன் பிறகு, உணவு வரும் வரை அறையிலிருந்து இயற்கைக் காட்சிகளை ரசிப்பதும், நிழற்படங்கள் எடுப்பதுமாகக் கழிந்தது. உணவும் வந்தது – நானும் நண்பர் பிரமோத்-உம் பராட்டா சாப்பிட மற்ற நண்பர்கள் தோசை சாப்பிட்டார்கள். ஒரு விள்ளல் உள்ளே போனதும் முகம் கோணலானது! சுவை அப்படி! வட இந்தியர்களுக்கு இன்னும் தோசை செய்யும் பக்குவம் கைவரவில்லை.


பராட்டாவுக்குக் காத்திருந்த வேளையில்...

”கொள்ளாம்” என்று வெளியே சொன்னாலும், ருசித்து சாப்பிடவில்லை! குளிர் காலத்தில் நல்ல பசி எடுக்கும். அந்த ஒரு தோசை எந்த மூலைக்கு! வேறு என்ன வேண்டும் எனக் கேட்க ‘ஆலு பராட்டா’ என்றார்கள் இருவரும் கோரஸாக! நாங்கள் எங்களுக்கும் சொல்ல இரண்டாவது ரவுண்ட் பராட்டக்களுக்குக் காத்திருந்தோம். காலையில் ஒன்று அல்லது இரண்டு பராட்டாக்களுக்கு மேல் சாப்பிட முடியாது. கூடவே தேநீரும் வந்தது. நான்கு பேரும் சாப்பிட்டு முடிந்த பின் பில் வந்தது – மொத்தமாக – சிப்பந்திக்கான டிப்ஸ் சேர்த்து ரூபாய் 550 மட்டும்! பணத்தைக் கொடுத்த பின் வெளியே வந்து வாகனத்தில் – இன்று வேறு வாகனம் கொண்டு வந்திருந்தார் – அமர்ந்தோம். நார்க்கண்டா தான் இனிமேல் நிற்கும்!


மலை முழுக்க வீடு கட்டாம விட மாட்டோம்ல!
நார்கண்டா செல்லும் வழியெங்கும் ஓரங்களில் ஆப்பிள் தோட்டங்கள். பூ விட்டு காய்க்க ஆரம்பிக்கவில்லை. பூக்கள் இனிமேல் தான் வரும். மொட்டையாக இருந்த மரங்களை பயணித்தபடியே பார்த்துக் கொண்டோம். காய்க்கும் சமயமாக இருந்தால் நிறுத்தி ஆப்பிள் தோட்டத்தினைப் பார்த்திருக்கலாம். வழியெங்கும் இயற்கைக் காட்சிகள் – ரொம்பவே அழகு. குறுகிய மலைப்பாதையிலும் நல்ல வேகத்தில் ஓட்டிச் செல்கிறார் ரஞ்சித் சிங். அவரிடம் பேசியபடியே வந்தோம். ஹிமாச்சலப் பிரதேசத்தின் பல சுற்றுலாத் தலங்களுக்கும் பலமுறை சென்றிருப்பதாகச் சொன்னார். எங்களுக்கு ஹிமாச்சலப் பிரதேசத்தின் சில விடுபட்ட தலங்களுக்குச் செல்லும் திட்டம் இருந்ததால் அவரிடம் விசாரித்துக் கொண்டிருந்தோம்.


வீடுகள் வீடுகள்.....


ஷிம்லா நகரிலிருந்து நார்கண்டா - காணொளி - 2

ஹிமாச்சலப் பிரதேசத்தில் Tribal Circuit என்றழைக்கப்படும் இடங்களுக்கு பயணிக்க வேண்டும் என்பது நண்பர் பிரமோத் மற்றும் என்னுடைய ஆசை. அதற்கு எத்தனை நாட்கள் ஆகும், எப்படி வழி என்ற தகவல் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தோம். அவரும் தில்லியிலிருந்து ஷிம்லா வரை வந்து விடுங்கள், நான் உங்களை எல்லா இடத்திற்கும் அழைத்துச் செல்கிறேன் – கட்டணம் எல்லாம் அப்போது பேசிக் கொள்ளலாம் – எல்லா இடங்களுக்கும் நான் பயணித்த அனுபவம் உண்டு என்று சொல்லிக் கொண்டு வந்தார். அவரிடம் விவரங்கள் கேட்டுக்கொண்டோம். திட்டமிட வேண்டும் – ஜூன் ஜூலை மாதங்களில் செல்லலாம் என்ற திட்டம் – ஆனால் இந்த வருடம் செல்ல முடியவில்லை!

விவரங்களைக் கேட்டுக்கொண்ட படியே எங்கள் பயணம் தொடர்ந்தது. நார்கண்டா பகுதிக்கு வந்து சேர்ந்திருந்தோம். நார்கண்டாவில் என்ன பார்த்தோம், என்ன பார்க்கவில்லை என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து...

10 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். தோசை பார்க்க நன்றாயிருக்கிறது. மாவில் அவர்களால் என்ன கெடுத்திருக்க முடியும் என்று ஆச்சர்யமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல நாள் மாவு - டீப் ஃப்ரீசரில் வைத்தது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. மலைப்பாதை ஜோர். முன்னால் செல்லும் கார் இரண்டு காணொளிகளிலும் ஒன்றுதான் போல....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்று தான். சில நிமிட இடைவேளையில் எடுத்த காணொளிகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. இதுவே சிறப்பான பயணம் என்று நினைக்கிறேன்...

    காணொளி (2) சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. காணொளி நன்றாக இருந்தது உடன் பயணித்த அனுபவம் கிடைத்தது.
    படங்கள் இயற்கை அழகை சொல்லுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  5. நாம தோசைக்கடை போட்டுடலாமா அங்க?!

    பரோட்டாக்கூட நம்ம ஊர் மாதிரி இருக்காதுப்போல! தொட்டுக்க ஊறுகாய் வேற! நமக்குலாம் ஒரு பரோட்டாவுக்கு நாலு கரண்டி குருமா வேணுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம ஊர் பரோட்டா மைதாவில் செய்வது.... இங்கே செய்வது கோதுமை மாவில். நம்ம ஊர் பரோட்டாவுக்கு சால்னா... இங்கே செய்வது பராட்டா - ஸ்டஃப்ட் பராட்டா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....