திங்கள், 29 அக்டோபர், 2018

கதை மாந்தர்கள் – தாடி சுயம்பு அண்ணன் மற்றும் ஈச்சு மாமா - பத்மநாபன்



இவர் அவரல்ல....  
படம்: இணையத்திலிருந்து....

எனது நண்பர் சிவாவின் மகளின் திருமண அழைப்பிதழை வாட்ஸ் ஆப்பில் அனுப்பி தொலைபேசியிலும் அழைத்திருந்தார். சென்னையில் திருமணம்.

எங்கள் ஊர் திருமணம் என்றதும் எனக்கு உடனே நினைவுக்கு வருவது இரண்டு பேர். முதலில் திருவாளர் தாடி சுயம்பு அண்ணன் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுபவர். இரண்டாமவர் எங்கள் பாசமான ஈச்சு மாமா அவர்கள்.
 
முதலில் குறிப்பிட்ட தாடி சுயம்பு அண்ணன் அவர்கள் தாடியை பராமரிப்பதே சுவாரசியமாக இருக்கும். அதைப் பார்த்திருந்ததால் தில்லியில் சர்தார்மார்களின் தாடி பராமரிப்பு அளப்பறைகள் வித்தியாசமாகத் தெரியவில்லை. இவர் சுத்தமான விவசாயி. தீவிர எம்ஜிஆர் ரசிகர். சமூக அக்கறையும் நிறைய உண்டு. எந்த பிரதிபலனும் பார்க்காமல் திருமண ஏற்பாடுகள் செய்வதை தவமாய் செய்து வந்தார். எங்கள் ஊரின் தொண்ணூறு சதவீதம் திருமணங்கள் இவரது ஏற்பாடாகத்தான் இருக்கும். பயலுகளுக்கு ஒரு இருவது இருபத்தஞ்சு வயசு ஆனாப்போதும் இவரு கண்ணுல படுவது போல நடமாட ஆரம்பித்து விடுவார்கள். இவனுக்கெல்லாம் எங்கடா கல்யாணம் ஆகப்போகிறது என்று கைவிட்ட பார்ட்டிக்கு கூட பக்காவாக ஒரு ஜோடியை கொண்டு வந்து விடுவார். அவர் ஏற்பாட்டில் நடந்த திருமணங்கள் அனைத்தும் வெற்றித் திருமணங்களாக எம்ஜிஆர் திரைப்படங்களைப் போல வெள்ளிவிழா வருடங்கள் கொண்டாடும். அப்படி ராசியான கைராசிக்காரர்.

இரண்டாமவர் ஈச்சு மாமா. இவரை நான் சோர்ந்த முகத்துடன் பார்த்ததே இல்லை. எப்போதும் முகத்தில் மலர்ச்சி. காலையில் குளித்து ஒரு பட்டையைப் போடுவார் பாருங்கள். அதன் அழகே தனி. அப்படியே விபூதியை அள்ளி நெத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக பூசி மேல் நோக்கி பாதி உச்சந்தலை வரை பூசுவார்.

என்ன மாமா! நடுமண்டை வரைக்கும் விபூதி பூசுக.

மக்களே, அது நெத்தியில்லா. மாமாவுக்கு கொஞ்சம் பெரிய நெத்தியில்லா.

நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊரின் ஆஸ்தான மளிகைக் கடை ஈச்சு மாமாவுடையதுதான். சரியான செக்போஸ்ட் மாதிரியான இடம். என்ன மக்கா, இன்னைக்கு பள்ளிக்குடத்துக்கு போல்லியா? என்னது, வயித்துவலியா. வா! ஒரு மடக்கு ஓமத்திரவம், கோமூத்திரம் இல்லடே, ஓமத்திரவம் தாரேன் கண்ண மூடிக்கிட்டு குடி. இன்னா போறேன்னுக்கிட்டு வயித்துவலி ஓடிரும் பாரு. அந்த ஓமத்திரவத்துக்கு கணக்கும் கிடையாது வழக்கும் கிடையாது.

மாமா மாதாந்திர ஏலச்சீட்டும் வைத்திருந்தார். அவரது கடையில் சீட்டு ஏலம் நடக்கும் நாள் பார்க்கணுமய்யா கொண்டாட்டத்தை. மொத்தம் ரண்டு மூணு சீட்டு நடத்தியதால் ஒரு பத்து பதினைந்து பெண்களாவது கூடியிருப்பார்கள். நானும் என் அம்மாவின் கொடுக்கை பிடித்து கொண்டே வேடிக்கைப் பார்க்கச் செல்வேன். அத்தனை பெண்களையும் ஈச்சு மாமாவும் கணவதி அத்தையும் சமாளிக்கும் விதம் இருக்கே. ஆஹா. யக்கா! அங்க என்ன குசு குசுன்னுகிட்டு. வேணும்னா கேளு.  நான் ஏலத்த முடிக்கப்போறன். பதிநாலு ஒருதரம். அது யாரது பதிமூணைரை கேட்டது. நம்ம கமலமா. பதிமூணரை. ஒரு தரம். ஏ!  தாணம்மா! கேட்கப் போறயா! சீக்கிரம் கேளு. பதிமூணரை ஒருதரம். பதிமூணரை ரண்டு தரம். யண்ணே, பதிமூணு. அப்படிப்போடு. யாரு பப்பனமா. பத்மாவதிதான் எங்க ஊருல பப்பனம். பதிமூணு ஒரு தரம், பதிமூணு ரண்டு தரம். பதிமூணு மூணுதரம். அந்த ஏலத்தை ஈச்சு மாமா நடத்தும் ஸ்டைலே தனி.

அது இருக்கட்டும். திருமணம் என்றதும் ஈச்சு மாமா ஏன் எனது நினைவுக்கு வந்தார் என்றுதானே கேட்கிறீர்கள். அப்போதெல்லாம் இப்பத்தமாதிரி மண்டபம் புக் பண்ணி கல்யாணம் பண்ணுவதெல்லாம் கிடையாது. வீட்டு முன்னால் பந்தல் போட்டு, வாழைக்குலையும், கூந்தப்பனையும் கட்டி ஸீரியல் செட்டு போட்டு அலங்கரித்து, ஸ்பீக்கர் செட் போட்டு விநாயகனே வினை தீர்ப்பவனேன்னு ஆரம்பிச்சா ஊரே களை கட்டுமுல்லா. மறுநாள் திருமணத்திற்கு சமையல் மணியண்ணன் தன் படைபட்டாளத்துடன் இரவே வந்து சமையலுக்குரிய முஸ்தீபில் இறங்கி விடுவார். ஒரு செட் ஊர்க்காரர்கள் வடசேரி கனகமூலம் சந்தையில இருந்து காய்கறி கொண்டு வந்து குவிக்க, தேங்காய் துருவவும், காய்கறி வெட்டவும் ஆறு ஏழு பேர் குழுமி வேலையை ஆரம்பிப்பார்கள்.  அப்போதான் ராத்திரி பதினோரு மணிவாக்கில ஈச்சு மாமா ஃப்ரஷ்ஷாக வந்து உட்காருவாரு. என்ன மருமகனே! தேங்காயா திருகுக. அதென்னது, அய்யரு வீட்டுப் புள்ள அயிரமீனு பிடிச்ச மாதிரி தடவிக்கிட்டு இருக்க. கொண்டா இப்படி என்று திருவலக்குத்தியை வாங்கி தேங்காய் திருவிக் கொண்டே ஊர்க்கதை சொல்ல ஆரம்பிப்பார். அதுவரை மெளனராகமாக இருந்த பேச்சுக் கச்சேரி ஆனந்தராகமாக களைகட்டும் பாருங்கள். மனசு ஏங்கத்தான் செய்கிறது. இனி அந்த நாட்கள் வருமா என.

இவர்கள் மட்டுமல்ல இன்னும் பல நல்ல உள்ளங்கள் எங்கள் ஊரில். அவர்களையும் எங்கள் ஊர் திருமணத்தையும் எங்கள் ஊர் மொழிநடையில் விவரிக்க   முகப்புத்தகத்தில் எழுதி வரும் என் மைத்துனன் ராஜேஷ் சங்கரப்பிள்ளையால்தான் முடியும்.

இந்தச் சமயம் இன்னொன்றும் ஞாபகம் வருகிறது. ஈச்சு மாமா கடை இருந்த முக்கில்தான் எவ்வளவு நிகழ்வுகள். குடும்பக்கட்டுப்பாடு சினிமாவும் அங்குதான் போடுவார்கள். அரசியல் பிரச்சார சினிமாவும் அங்கு உண்டு. இது மட்டுமா. வாரத்துக்கு ஒருநாள் அஞ்சாறு பொம்பளப் புள்ளைகளக் கூட்டிக்கிட்டு ரண்டு மூணு பெரிய மனுசனுங்க டொங்கு டொங்குன்னு தட்டிக்கிட்டே ஏசுப் பாட்டு பாட வந்துருவாங்க. அது யாருடே.  வெந்தயக்கோஸோ மாங்காக்கோஸோ என்னவோ சொல்லுவால்லாடே. என்னடே அது. என்னது, பெந்தகோஸ்த்தா. என்னவோ ஒரு கோஸு. ஆனா ஒண்ணு. அந்த புள்ளைக    காதுல மூக்குல ஒண்ணும் போடாட்டாலும் ஒவ்வொண்ணும் கிளி மாதிரி இருக்கும் பாத்துக்கோ. என்னது, கிளிமாதிரி இருக்கா. அன்னா உங்க அப்பா கண்ணப்ப நாயனாரு வாராரு. அவருகிட்ட சொல்லு, ரண்டு கிளி புடிச்சுத் தருவாரு. ஒருத்தன் நம்மள ஓட்டுவான்.  எல்லாக் கிளியும் சேர்ந்து கோரஸ் பாடும் பாரு, பாத்துக்கிட்டே இருக்கலாம். வாலிப வயோதிக அன்பர்கள் எல்லோரும் அந்த நேரத்துக்கு அட்டென்டன்ஸ் போட்டுருவாங்க.   ஆனா என்னவோ தெரியலை, மண்டைக்காட்டு கலவரத்துக்கு அப்புறம் யாரும் வர்ரதில்லை. நிறைய பயலுகளுக்கு கொஞ்சம் வருத்தந்தான். ஹூம்.

மீண்டும் ச(சி)ந்திப்போம்....

இரா.ஈ. பத்மநாபன்
புது தில்லி.

குறிப்பு: சற்றே இடைவெளிக்குப் பிறகு எனது வலைப்பூவில் ஒரு பதிவு! ஷிம்லா ஸ்பெஷல் தொடரின் அடுத்த பகுதிகள் நாளையிலிருந்து..

24 கருத்துகள்:

  1. இனிய காலைவணக்கம் வெங்கட்ஜி!

    வந்தாச்சு.....வாசித்துவிட்டு அப்புறமா வருகிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... வாங்க கீதாஜி. புது இடத்தில் எல்லாம் சௌகர்யமாக இருக்கிறதா?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
    2. வெங்கட்ஜி புது இடம் நன்றாகவே சௌகர்யமாக இருக்கிறது. போஸ்டும் போட்டாச்சு..!!!

      கீதா

      நீக்கு
    3. பதிவு போட்டாச்சா.... இன்னும் பார்க்கவில்லை. பார்க்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  2. குட்மார்னிங் வெங்கட். நினைவோடை பிரமாதம். சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் 🙏 ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பத்மநாபன் அவர்களின் கதை மாந்தர் கண்ணில் தெரிந்தார்.
    அனைத்தும் காட்சியாக காணமுடிகிறது. அருமையான எழுத்து நடை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. ஒவ்வொரு ஊரிலும் சிலர் இப்படித்தான் இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. ஆஹாஆஹா.இரண்டு கதாபாத்திரங்களையும் சூழலையும் அப்படியே மனதில் பதியவைத்துவிட்டீர்கள் அற்புதமான நடை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி நண்பர் பத்மநாபன் அவர்கள் எனது வலைப்பூவில் எழுதிய ஒரு பகிர்வு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. /இவரை நான் சோர்ந்த முகத்துடன் பார்த்ததே இல்லை. எப்போதும் முகத்தில் மலர்ச்சி//

    இதுதான் ஜி இறைவனின் அருட்கொடை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  8. சாவியின் கேரக்ட்டரை ஜெயமோகன் எழுதுவது போன்று உள்ளது. நாஞ்சில் நாட்டு மலையாளம் கலந்த தமிழே தனி சிறப்பு .
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. இவர்கள் போன்றவர்கள் குறைந்து வரும் காலம் இது. சுமார் இருபத்தி ஐந்து வருடம் முன்பு இவர்கள் தாம் Event managers at free of cost

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

      நீக்கு
  10. வெங்கட்ஜி! பத்மநாபன் அவர்கள் பதிவு வரும் போதெல்லாம் எங்கள் ஊர் மொழி நடை கேட்டு அப்படியே ஊருக்கு மனது போய்விடுகிறது. அதுவும் இந்தப் பதிவில் நிறையவே அந்த நடை மற்றும் வடசேரி சந்தை பற்றி குறிப்பிட்டிருக்கிறாரே அந்தச் சந்தைக்குத்தான் ஞாயிறு என்றால் வீட்டிலுள்ள நாங்கள் குழந்தைகள் அத்தனை பேரும் 7 பேர் நாங்கள் பாட்டியுடன் சென்றே ஆக வேண்டும். எல்லோரும் காய் சுமந்து கொண்டு குறிப்பாக மத்தளம் போல் இருக்கும் தடியங்காய்/இளவன் காய் (வெள்ளை பூஷணிதான் அது ஒரு வெரைட்டி) சுமக்க முடியாமல் இடுப்பில் குழந்தை போன்று வைத்துக் கொண்டு சுமந்து கொண்டு அது ஒரு பக்கம் இடுப்பில் என்றால் மற்றொரு கையில் ஒரு பை என்று வடசேரி முதல் ஒழுகினசெரி வரை நடந்து வந்து பஸ் பிடித்து ஊருக்குப் போவோம். அது ஒரு காலம்...என் பெரிய மாமா பெண்ணின் முதல் பெண்ணின் கல்யாணம் கூட எங்கள் வீட்டிலும் இப்படித்தான் வாசலில் பந்தல் போட்டு ஆளுக்கொரு வேலை செய்து...முறுக்கு சுற்றல் என்று எல்லா பலகாரங்களும் வீட்டிலேயே செய்து சீர் பலகாரம் முதல்...எல்லா நினைவுகளும் வந்தது...அப்படி இருந்த கிராமம் இப்போது நன்றாகவே வளர்ந்து விட்டது...

    அருமையான நினைவலைகள் பத்மநாபன் அவர்களுக்கு...ஆமாம் எல்லாம் இப்ப மிஸ்ஸின் தான்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணாச்சி பதிவு உங்கள் நினைவலைகளை மீட்பதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  11. வாய்ப்பளித்த தங்களுக்கும் படித்து ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....